![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/06/a19.jpg?itok=rNB_U7Ra)
ஈரான் மீதான தாக்குதல் உத்திகள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. குறிப்பாக ஈராக்கின் இராணுவ மற்றும் அணுவாயுத வல்லமையை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் நகர்வானது மீண்டும் ஒரு முழு நீள போருக்கு வழிவகுக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அத்தகைய தாக்குதல்கள் ஈரானின் எதிரி நாடுகளால் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றதே அன்றி ஈரானால் எத்தகைய பதில் தாக்குதலும் சம அழிவைத் தருமளவில் மேற்கொள்ள முடியாதுள்ளது என்பரையும் அவதானிக்க முடிகிறது.
இக்கட்டுரையும் கடந்த 27.11.2020 அன்று ஈரானின் அணுவிஞ்ஞானியும் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புக்கான அமைப்பின் தலைவருமான மொஹ்சென் பகிரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு ஈரான் எதிர் இஸ்ரேல்-, அமெரிக்க கூட்டு அரசியலை ஆராயவுள்ளது.
அணு விஞ்ஞானியின் படுகொலை தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் வெளியான தகவலின்படி 12 பேர் கொண்ட குழுவினர் இந்தப் படுகொலையை முன்னெடுத்தனர் என்றும் வெளிநாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் புலனாய்வுத் துறையினர் மூலம் அதியுச்சமான பயிற்சி வழங்கப்பட்ட 12 பேர் கொண்ட குழுவினர் ஈரானின் தலைநகரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அப்ஸார்ட் நகரில் காத்திருந்து தாக்குதல் நடத்தியதாகவும் 50 பேர் இக்கொலைக்கு வேண்டிய அவசியமான விநியோக நடவடிக்கையினை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. மின்சாரத்தை துண்டித்ததுடன் தயார் நிலையிலிருந்த நான்கு பேர் அடங்கிய அணியினர் தாக்குதலை தொடங்கியதாகவும் இறுதியில் குண்டு பொருத்தப்பட்ட நிசான் வகை வாகனம் வெடித்துச் சிதறியதாகவும் தெரியவருகிறது.
ஆனால் இன்னோர் செய்திச் சேவையின் தகவலின் படி செயற்கைக் கோளின் வழிகாட்டல் மூலம் பல மைல்களுக்கப்பால் இருந்து தாக்குதல் நிகழ்ந்ததாகவும் தொழிநுட்பத்தின் உதவியுடனே அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது. எதுவாயினும் ஈரானின் அணுவிஞ்ஞானியின் படுகொலை பாரிய நெருக்கடியை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளது.
இந்தகைய துணிகரமான படுகொலையை இஸ்ரேலும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுமே மேற்கொண்டுள்ளன என்றும் இது இஸ்ரேலின் பயங்கரவாதம் எனவும் ஈரானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அது மட்டுமன்றி இது ஒரு சர்வதேச மட்டத்திலான ஆக்கிரமிப்பு எனவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமட் ஜெவாட் ஷரீப் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலை கண்டித்த ஈரானிய ஆட்சியாளர்கள் பதிலுக்கு தாக்குதல் மேற்கொள்ளப் போவதாகவும் பழிவாங்கல் நிகழும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும் ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானியின் படுகொலைக்குப் பின்னரும் இவ்வாறு எச்சரிக்கை மேற்கொண்ட ஈரானிய ஆட்சியாளர்கள் அதற்கு நிகரான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது கவனத்திற்குரியதாகும். ஆனால் இந்த தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ஈரானின் அணு உடன்பாட்டிற்கு புதிய ஆரம்பம் ஒன்றினை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். இரு நாட்டுக்குமான இராஜதந்திர உறவுகள் மீள ஆரம்பிக்கப்படும் என பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் ஈரானிய பாராளுமன்றம் அணுவாயுத பரிசோதனைக்கான ஒப்புதலை கோருவதுடன் இரண்டு மாதகால அவகாசத்தை கொடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தித் தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும் பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தவும் கோரியதுடன் இவற்றை மேற்கொள்ள தவறுமாயின் ஈரான் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை தாண்டி யுரேனிய செறிவூட்டலை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்க புதிய நிர்வாகத்திடமும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக அனைத்து பொருளாதாரத் தடையையும் நீக்கினால் அணுவாயுத உடன்பாட்டுக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளது. எனவே அணுவிஞ்ஞானியின் படுகொலை மேற்காசியப் பிராந்திய அரசியலில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.
முதலாவது ஈரானின் அணுகுமுறையில் ஏற்பட்டுவரும் மாற்றம் அதன் பலவீனத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்தாலும் அணுவாயுதத்திற்கான முயற்சி பலமான அரசியலை ஏற்படுத்தக் கூடியதாக தெரிகிறது. ஈரானைப் பொறுத்தவரை அதன் அணுவாயுதமே பிரதான இலக்காக உள்ளது. 2025 இல் கலாவதியாகும் ஈரானுடனான அணுவாயுத உடன்பாட்டினை ஜோ பைடன் புதுப்பிக்க முயலுகிறார். ஆனால் பல நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளமை அதன் இலக்கு அணுவாயுதம் தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. மேற்காசிய அரசியலில் ஈரானின் அணுவாயுதம் நிரந்தரமான அரசியல் கொதிநிலையை தரக்கூடியதாக அமையவுள்ளது.
இரண்டாவது இஸ்ரேலை கட்டுப்படுத்தும் ஜோ பைடனின் ஆட்சிக்காக ஈரான் காத்திருப்பதன் மூலம் அதன் பலவீனம் தெரிகிறது. இஸ்ரேலைக் கட்டுப்படுத்தும் பலம் ஈரானிடமோ அல்லது மேற்காசிய நாடுகளிடமோ இல்லாதுள்ளமை ஈரானின் நகர்வில் தெரிகிறது. 2018 முதல் ஈரானின் அணுவிஞ்ஞானியை இஸ்ரேல் இலக்கு வைத்திருந்தது என்பது தற்போதுதான் ஈரானுக்கு தெரியவந்துள்ளது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பின்பு கூட அத்தகைய கொலைகளை தடுக்க முடியாதுள்ளமை ஈரானின் பலவீனமாகவே விளங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது.
மூன்றாவது ஈரானின் தகவலின் படி 12 பேர் கொண்ட குழு தாக்குதலுக்கு தயாராக இருந்தமையானது அதுவும் தெஹ்ரானிலிருந்து 50 கி.மீ.தொலைவில் எனபதுவும் ஈரானின் பாதுகாப்புக் கட்டமைப்பின் பலவீனத்தைக் காட்டுகிறது. அது மட்டுமல்ல குண்டு துளைக்காத மூன்று தொடருந்துகள் நகர்ந்த போது அணுவிஞ்ஞானியின் காரை இலக்குவைத்தமையானது ஈரானிய இராணுவக் கட்டமைப்புக்குள்ளேயே பலவீனம் உள்ளதைக் காட்டுகின்றது.
நான்காவது இஸ்ரேலிய- அமெரிக்க கூட்டின் இலக்கு அணுவாயுதத்தைக் கடந்து இராணுவ தலைமைகளையும் அணுவிஞ்ஞானிகளையும் நோக்கியதாக அமையும் போது ஒரு செய்தி வெளிவருகிறது. அதாவது ஈரானின் அணுவாயுதத்தை தடுக்கும் வலிமை குறைந்துவிட்டதென்பதே அது.
ஏறக்குறைய அணுவாயுதம் தயாரிக்கப்படும் நிலையம் மீதே இதுவரையான காலப்பகுதியில் இஸ்ரேலின் இலக்கு காணப்பட்டது. தற்போது அது மாறியுள்ளது. ஈரானியர் குறிப்பிடுவது போல் இஸ்ரேலின் செயல் ஒரு பயங்கரவாதச் செயலாகவே தெரிகிறது.
ஐந்தாவது இஸ்ரேல்- அமெரிக்க கூட்டின் நடவடிக்கைகளால் உலகம் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதாவது இவ்வகையான படுகொலைகள் மேற்குலகின் சட்டதிட்டத்திற்கும் வரைபுகளுக்கும் முற்றிலும் விரோதமானவையே. மேற்குலகத்தின் வாதங்கள் அனைத்தையும் அமெரிக்க, -இஸ்ரேல் கூட்டைத் தகர்த்துக் கொண்டு செல்வதைக் காணமுடிகிறது. இதனால் ஏற்படப் போகும் விளைவுகள் அனைத்தும் மேற்குலகத்தையே பாதிப்புக்குள் தள்ளும்.
ஆறாவது மேற்காசிய அரசியலில் தற்போது ரஷ்யா, சீனா என்பவை அதிக முக்கியத்துவம் பெற்ற நாடுகளாக காணப்படுகின்றன. இதன் நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நகர்வுகளை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ஏழாவது தொழிநுட்பத்திற்கான போர் ஒன்றினை ஈரான் மீதான நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சுலைமானி படுகொலையும் தற்போதைய தாக்குதலும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டமையானது அதிக மாற்றத்தை தரவல்லதாக அமையவுள்ளது. மேற்காசியா மட்டுமல்ல, உலகப் போர்களே இனி தொழிநுட்பப் போர்களாகவே அமைய வாய்ப்புள்ளது.
எனவே ஈரானிய அணுவிஞ்ஞானியின் படுகொலை அதிக அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வெளிப்படையாக ஈரானைப் பாதித்தாலும் அடிப்படையில் ஈரானின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்பினை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்