'விளக்கேற்றல்' என்பது நாட்டின் அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாகக் காணப்பட்ட விடயமாகும். நவம்பர் மாதம் என்பது ஒவ்வொரு வருடமும் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தும் மாதமாகவே மாறி விட்டது எனக் கூறலாம். யுத்த காலத்தில் உயிரிழந்த தமது உறுப்பினர்களை நினைவு கூரும் மாவீரர் வாரத்தை எல்.ரி.ரி.ஈயினர் வருடம் தோறும் நவம்பர் மாதத்தில் அனுஷ்டித்து வந்தனர்.
2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இதனை அனுஷ்டிப்பதற்கு வடக்கில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் அரசியல் அரங்கத்தை சலசலப்புக்கு உள்ளாக்கி வருகின்றன. குறிப்பாக தென்னிலங்கை அரசியல்வாதிகளும், வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் வாதப்பிரதிவாதங்களுடன் முரண்பட்டுக் கொள்ளும் விடயமாகவும் இது மாறியுள்ளது.
இது விடயத்தில் இருதரப்பு அரசியல்வாதிகளும் ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு மேலாக முரண்பட்டுக் கொண்டே வருகின்றனர். உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு இருக்கும் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது என்ற கேள்வி தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் அதேவேளையில், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை எவ்வாறு நினைவு கூர முடியும் என்ற கேள்வி தென்னிலங்கை அரசியல் தரப்பினரால் முன்வைக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியுமா என்பதற்கு அப்பால் கள யதார்த்தம் எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம்.
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மூன்று தசாப்த கால யுத்தம் 2009 இல் முடிவடைந்ததிலிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்தவர்கள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் விடயத்தை கெடுபிடியான வகையிலேயே கையாண்டுள்ளனர் என்பதைக் காணக் கூடியதாகவிருந்தது. நவம்பர் மாதமாகும் போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரித்திருக்கும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் கூட நவம்பர் மாதத்தில் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுக்கு கெடுபிடிகள் இருக்கத்தான் செய்தன.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைமுகமான ஆதரவுடன் ஆட்சியை நடத்திச் சென்ற கடந்த நல்லாட்சி அரசாங்கம், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் விடயத்தில் சிறியதொரு தளர்வுப் போக்கைக் காண்பித்திருந்தாலும் அரசாங்கத்தில் அங்கம் வகித்த தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சரி, அப்போது எதிர்க்கட்சியிலிருந்து செயற்பட்ட அரசியல்வாதிகளும் சரி இதற்கு கடுமையான எதிர்ப்புக்களை வெளிக்காட்டியே வந்தனர்.
இவ்வாறான நிலையில், 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பொதுஜன பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்தது. மாவீரர் வார அனுஷ்டிப்பு விவகாரத்தில் அவர்கள் இப்போது கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதைக் காண முடிகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பான அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இந்த விவகாரத்தில் கடுமையான எதிர்ப்பினை பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தெரிவித்திருந்தார். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு இறந்தவர்களை நினைவு கூருவதற்கு இடமளிக்க முடியாது. நாட்டை துண்டாடுவதற்கு முயற்சித்தவர்கள் எவ்வாறு நினைவு கூரப்பட முடியும் என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் பாராளுமன்றத்தில் நேரடியாக அமைச்சர் சரத் வீரசேகரவுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படுவது தடுக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்ற உத்தரவுகளைப் பெற எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அது மாத்திரமன்றி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சிப் பகுதியில் மாவீரர் ஒருவரை நினைவு கூரும் நிகழ்வில் கலந்து கொண்டதாகவும், இது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் என்பதால் சுமந்திரனை பாராளுமன்ற பதவியிலிருந்து இடைநிறுத்த வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக இந்த விடயத்தை கூறி வருவதால் அவர்களது அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியிருந்தார்.
அமைச்சர் சரத் வீரசேகர மாத்திரமன்றி முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுக்கு எதிராக கருத்துகளை முன்வைத்திருந்தார். 2010 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த இவரை தமிழ் மக்கள் ஆதரித்திருந்தது மாத்திரமன்றி, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்பிலிருந்த அவருடன் இணைந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்பட்டிருந்தனர். இவர் கடந்த வருடங்களிலும் தனது எதிர்ப்பினை காண்பித்திருந்தார். தமிழ் உறுப்பினர்கள் மாவீரர் தின அனுஷடிப்புக்கள் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்ற முயற்சித்த ஒவ்வொரு தடவையும் சரத்வீரசேகர, சரத் பொன்சேகா ஆகியோர் மாத்திரமன்றி பெரும்பாலான பெரும்பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியே வந்தனர்.
இம்முறை ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று வந்துள்ள அரசாங்கமாகக் காணப்படும் நிலையில், அரசு தரப்பிலுள்ள கடும் போக்காளர்கள் சிலர் தமிழர் தரப்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களை மையப்படுத்தி அரசியல் செய்யும் முயற்சிகளையும் காணக் கூடியதாகவுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருந்தது. இதுபோன்று தொடர்ச்சியாக ஒவ்வொரு சிறிய விடயமும் அரசியல் பிரசாரமாகப் பார்க்கப்படும் நிலையில் நவம்பர் மாத மாவீரர் வார அனுஷ்டிப்புகளால் தமிழ் மக்கள் மீது தென்னிலங்கையின் எதிர்ப்புப் பார்வை மேலும் அதிகரிக்கிறது என்றே கூறலாம்.
தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சரி, தமிழர் தரப்பு அரசியல்வாதிகளும் சரி மக்களின் உணர்வுகளைத் தூண்டி அதிலிருந்து அரசியல் செய்யும் ஒரு நுட்பத்தைக் கையாள்வதாகவே தெரிகிறது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர வேண்டும் என்ற விடயம் ஒருபுறத்தில் இருந்த போதும், இவ்விடயத்தை ஒரு அரசியல் பேசுபொருளாக்கி, பரபரப்பொன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றிய மாற்றுக் கருத்துக்களும் இருக்கின்றன.
தற்பொழுது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கம் என்ற ரீதியில் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் முன்வைக்கும் கருத்துகள் அதன் ஆதரவாளர்களான மக்கள் மத்தியிலும் தாக்கத்தைச் செலுத்துவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
இதுபோன்ற செயற்பாடுகளால் இனங்களுக்கிடையில் தவறான புரிதல்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுடன் ஒட்டியதாக இந்துக்களின் கொண்டாட்டமான கார்த்திகை தீபத்துக்கும் தடங்கல் ஏற்பட்டமையைக் குறிப்பிட முடியும். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இந்துக்கள் தமது இல்லங்களுக்கு வெளியே தீபம் ஏற்றுவது பாரம்பரிய சமய கலாசாரமாகும். ஏற்கனவே இருந்த குழப்பங்களுடன் வடபகுதியில் பல இடங்களில் கார்த்திகை தீபங்களை பாதுகாப்புத் தரப்பினர் சேதமாக்கி விட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன. குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள சிவன் ஆலயத்தில் ஏற்றப்பட்ட தீபங்கள் பொலிஸாரின் தலையீட்டுடன் அகற்றப்பட்டன. மாவீரர் தின விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சூழ்நிலையிலேயே மதவழிபாட்டுக்கான தடங்கல்களும் ஏற்பட்டன.
தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் கௌரவம் மிக்க பிரஜைகளாக வாழ்வதற்கான தேவை காணப்படுகின்ற போதும், அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான தேவைகளே அதிகம் காணப்படுகின்றன. தமிழ் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதற்கு அப்பால், அதனை அரசியல்வாதிகள் சிலர் தமக்கு சாதகமானதாகவும், தமது இருப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் பயன்படுத்துவது குழப்பங்களுக்கே வழிவகுக்கும்.
பி.ஹர்ஷன்