![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/13/a26.jpg?itok=02ncu_V7)
தென்னாசியா சர்வதேச அரசியல் போட்டிக்குள் மட்டுமல்ல பிராந்திய அரசியல் போட்டிக்குள்ளும் அகப்பட்டுள்ளது. அதற்கு வலுவான காரணம் சீனா பிராந்தியத் தளத்திலும் சர்வதேசத் தளத்திலும் இயங்கும் நாடாகக் காணப்படுவதாகும். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா இந்தியா மட்டுமல்ல அவற்றின் அணி நாடுகளும் மோதிக்கொள்ளும் நிலையும் தென்னாசியா முக்கியத்துவம் பெறக் காரணமாகவுள்ளது.
அதிலும் தென்னாசியா இந்துசமுத்திரத்தால் சூழுப்பட்டுள்ளதால் அதன் முக்கியத்துவம் இரட்டிப்பானதாக அமைந்துள்ளது. இக்கட்டுரையும் சமகாலத்தில் இந்தியாவும் சீனாவும் தென்னாசிய நாடுகள் மீது செல்வாக்குச் செலுத்த மேற்கொள்ளும் உபாயங்களைத் தேடுவதாக அமையவுள்ளது.
முதலில் சீனாவின் அணுகுமுறையில் காணப்படும் போக்கினை அவதானிப்போம். குறிப்பாக சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமான இராணுவ உடன்படிக்கை 07.12.2020 அன்று இரு நாடுகளது இராணுவத் தலைமைகளால் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சரும் மக்கள் இராணுத்தின் ஜெனரலுமான வெய் பெங்கி மற்றும் பாகிஸ்தான இராணுவத் தளபதியான ஜெனரல் ஹமார் ஜவோத் பஜ்வா உடன் பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்தில் நிகழ்ந்த சந்திப்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் பாகிஸ்தான ஊடகங்கள் கருத்துத் தெரிவிக்கும் போது இரு நாடுகளுக்குமிடையிலான பலமானதும் ஆழமானதுமான இராணுவ உறவுப் பரிமாற்றம் ஒன்றினை பிராந்திய சர்வதேச நெருக்கடியின் மத்தியில் நிகழ்ந்துள்ளது. அத்துடன் இந்தகைய உடன்பாட்டில் இராணுவ ஆயுத தளபாடங்கள் மற்றும் இராணுவத் தொழிநுட்ப விடயங்களில் ஒத்துழைப்பினை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வாகவே எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2019) கைச்சாத்திடப்பட்ட இராணுவ உடன்படிக்கையின் திருத்திய வடிவம் எனவும் பாகிஸ்தான் இராணுவத்தின் திறனை வளர்த்தலை பிரதான நோக்கமாக கொண்டிருந்த உடன்படிக்கையின் தொடர்ச்சியே தற்போதைய புரிந்துணர்வு உடன்படிக்கை எனவும் அவ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அது மட்டுமன்றி சீனா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கான (Chian-Pakista nEconomci Corridor) பாதை தொடர்பில் உரையாடப்பட்டதுடன் பாகிஸ்தான இராணுவத்தின் வலுவையும் முக்கியத்துவத்தையும் அதரிகரிப்பது பற்றியும் உரையாடப்பட்டது. இது தொடர்பில் ஜெனரல் வெய் பாகிஸ்தானுக்கான சீனத் துாதுவரோடு உரையாடியதுடன் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ லெப். ஜெனரலான ஆசீம் சலீம் வஸ்யா (Lt.Ge.nAsmi Saleem) சீனப் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பாகிஸ்தான கூட்டுஇராணுவ தலைவர்களுள் ஒருவரான ஜெனரல் நடீம் ராசாவுடனும் பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீளாய்வு தொடர்பில் அதிக விடயங்களை உரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகைய சந்திப்பில் சீன, -பாகிஸ்தான் உறவை “Iron Brotherhood“ எனக் குறிப்பிட்டதாகவும் அத்தகவல்கள் தெளிவுபடுத்துகின்றன. 1980 களுக்கு பின்னர் இந்தியா “Big Brotherhood“ உருவாக்கியதென்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தமை நினைவுகூரத் தக்கதாகும்.
அது மட்டுமன்றி சீனப் பாதுகாப்பு அமைச்சர், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியையும் பிரதமர் இம்ரான் கானையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் பாகிஸ்தான் ஜனாதிபதி குறிப்பிடும் போது சீனா எதிர்கொண்டுவரும் பிணக்குகளுக்கு எடுத்துவரும் தீர்மானங்களை, குறிப்பாக தென்சீனக்கடல், தைவான், சின்ஜாங் மற்றும் தீபெத் உறுதியாக ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் குறிப்பிடும் போது சீனா-, பாகிஸ்தானுக்கிடையில் இராணுவத்திற்கான உயர்நிலையிலான உறவினை உருவாக்குவதே பிரதான நோக்கம் எனவும், பல்வேறு சவால்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துவரும் பாகிஸ்தானுக்கு பலமான பாதுகாப்பினையும் பாகிஸ்தானின் இறையாண்மையையும் தேசிய நலனையும் ஏற்படுத்துவதுடன் இருநாடுகளும் இணைந்து பிராந்திய அமைதியையும் உறுதிப்பாட்டினையும் பேணுவதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் இம்ரான்கான் இருநாட்டுக்குமான நெருக்கமான மூலோபாய ஒத்துழைப்பினை ஏற்படுத்த அழைப்பு விடுத்திருந்தார்.
பாகிஸ்தான் விஜயத்தை முடித்துக் கொண்டு நேபாளம் சென்ற சீனப் பாதுகாப்பு அமைச்சர் நேபாள-, சீன பாதுகாப்பு விடயங்களில் முக்கிய கவனம் செலுத்தினார். 2019 இல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விஜயத்திற்கு பின்னர் இவரது பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்போது கருத்து தெரிவித்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் சீனா, நேபாளத்தின் தேசிய சுதந்திரத்தையும் இறைமையையும் ஆள்புல ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்கும் எனவும், நேபாள இராணுவத்தின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக உதவும் எனவும் பிராந்திய அமைதிக்கு இரு நாடுகளும் சேர்ந்து உறுதிப்படுத்துமெனவும் தெரிவித்தார். இருநாட்டு இராணுவ ரீதியான உறவை பலப்படுத்தும் விதத்தில் 2019 இல் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட நேபாள பாதுகாப்பு அமைச்சர் போக்ரெல் 22.8 மில்லியன் அ.டொலர் பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தது நினைவு கொள்ளத்தக்கது. இதன் தொடர்ச்சியை சீனப் பாதுகாப்பு அமைச்சர் பலப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
இதேநேரம் இந்தியாவின் மூத்த அதிகாரிகள் இருவர் தென்னாசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டதுடன், முக்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு விடயங்களில் உரையாடியுள்ளனர். குறிப்பாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் டோவால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது விஜயத்தின் போது இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையையும் சந்திருந்தார். நவம்பர் 28,-29 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்த இந்தியாவின் தேசியப் பாதுகாப்புச் செயலாளர் அஜித் டோவால் இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவுக்கிடையிலான பாதுகாப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார்.
குறிப்பாக, இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்துவதோடு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைப்பதென உரையாடியுள்ளார். அது மட்டுமன்றி இலங்கையின் உட்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் அதன் விருத்தி தொடர்பில் உரையாடியதோடு இந்தியாவினுடைய பங்களிப்போடு அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்த வேண்டுமென இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. அவ்வாறே இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியா விரும்புவதாக இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாசிய பிராந்தியத்தில் பிற நாடுகளுடன் பொருளாதாரப் பலத்தை கட்டியெழுப்பவது மட்டுமன்றி அபிவிருத்தி நோக்கில் பயணிக்கும் மூலோபாயங்களைக் கண்டறிய வேண்டுமென அஜித் டோவால் தெரிவித்துள்ளார். அதற்கான ஒப்புதலை இலங்கைப் பிரதமர் அளித்தார். பிராந்திய மட்டத்தில் நாடுகளுக்கிடையிலான கருத்தாடல் ஒன்றைக் கட்டியெழுப்புதல் அவசியமென்றும் அதற்கான மூலோபாயப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டுமெனவும் இத்தகைய நகர்வுக்கு இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமை தாங்க வேண்டுமெனவும் டோவால் முன்மொழிந்துள்ளார். அதற்காக இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவையும் வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் ஒப்புதல் அளித்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட இலங்கைப் பிரதமர் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒப்பானதாக தென்னிலங்கைப் பகுதிகளிலும் மேற்கொள்வதற்கு ஆதரவைப் பெற்றுத் தருமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். நவீன இந்தியத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இலங்கையில் நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு இச் சந்திப்பின் போது இரு தலைவர்களாலும் உடன்பாடு எட்டப்பட்டது.
மறுபக்கத்தில் நேபாளத்துக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹரிஸ் சரிங்லா, கலாபாணி விடயத்தில் இரு நாட்டுக்குமான புரிதலை ஏற்படுத்தும் விதத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். இரு நாட்டுக்குமான எல்லை விடயத்திலும் ஏனைய அம்சங்களிலும் பலமான ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளார். பலவீனமான நிலையிலுள்ள இந்திய, -நேபாள உறவினை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே இந்திய சீனப் போட்டிக்குள் அகப்பட்டுள்ள தென்னாசிய நாடுகள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியில் உபாயங்களை வகுத்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவையும் இந்தியாவையும் முன் நிறுத்தி கொள்வதென்பது பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. அதே நேரம் இதனை ஓர் இராஜதந்திரமாகவே அணுகவேண்டிய நிலை காணப்படுகிறது.
கே.ரீ. கணேசலிங்கம்