துருக்கி மீதான மேற்கின் பொருளாதாரத் தடையும் மீளமைக்கப்படும் இஸ்ரேல் - துருக்கிய உறவும் | தினகரன் வாரமஞ்சரி

துருக்கி மீதான மேற்கின் பொருளாதாரத் தடையும் மீளமைக்கப்படும் இஸ்ரேல் - துருக்கிய உறவும்

உலகளாவிய அரசியலில் அதிகம் பேசப்படும் பிராந்தியமாக மேற்காசியா காணப்படுகிறது. அதிலும் ஈரானின் முக்கியத்துவத்தைப் போன்றே துருக்கியின் நிலை ஏற்பட்டு வருகிறது. ஐரோப்பாவின் துயர் என அழைக்கப்பட்ட துருக்கியின் தற்போதைய போக்கு மேற்கு நாடுகளுடன் அதிக முரண்பாட்டை ஏற்படுத்திவருகிறது.

ஓட்டமன் சாம்ராச்சியத்தின் மையமான துருக்கி மேற்குலகத்தினதும் நேட்டோவினதும் உறவு நிலைக்குள் உட்பட்டிருந்தது. தற்போது அதில் ஏற்பட்ட அமெரிக்காவுடனான குழப்பமானது மேற்குலகத்திற்கு எதிரான கொள்கைகளையும் பாதுகாப்பு சார்ந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கான நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக கிரேக்கத்துடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் துருக்கி ஏற்படுத்தியிருக்கும் அரசியல் நகர்வுகளையும் அதன் விளைவுகளையும் தேடுவதே இக்கட்டுரை அமையவுள்ளது.

ஒன்று, மத்திய தரைக்கடலில் எண்ணெய் வளத்தினை அகழ்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ள துருக்கி கிரேக்கத்துடன் முரண்பட்டுக் கொள்ள வேண்டிய நிலைக்குள் இருகிறது. குறிப்பாக கிரேக்கத்தின் கடலை அண்டிய பகுதியில் இவ் எண்ணெய் வளம் இருப்பதனால் கிரேக்கம் தனக்கும் இவ்வளத்தில் உரிமையுள்ளதாகத் தெரிவித்து வருகிறது. ஆனால் அதனை நிராகரித்துள்ள துருக்கி அதன் முழுவததையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எத்தனத்துடன் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் கிரேக்கம் ஐரோப்பிய நாடுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் முறையிட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்துள்ள ஐரோப்பிய நாடுகள் துருக்கி மீது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தவும் அரசியல் ரீதியில் அச்சுறுத்தலை உருவாக்கவும் திட்டமிட்டுவருகின்றது.

இரண்டாவது, சிரியா ஈராக் மற்றும் மேற்காசிய நாடுகளிலிருந்து வெளியேறிய அகதிகளை தடுத்து தனது எல்லைக்குள் நிறுத்திவைத்திருக்கும் துருக்கி அவர்களை ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப் போவதாக எச்சரித்துள்ளது. அவ்வாறு அகதிகள் மேற்கு ஐரோப்பாவுக்குள் நுழையும் சூழல் ஏற்படுமாக இருந்தால் ஐரோப்பாவின் அரசியல் பொருளாதார நெருக்கடியொன்றுக்கான வாய்ப்பு உருவாகும் என்ற அச்சம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ளது. ஆனால் அத்தகைய அகதிகளை பராமரிப்பதற்கான உதவிகளையும் கொடைகளையும் ஐரோப்பிய நாடுகள் துருக்கிக்கு வழங்கி வருகின்றதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனால் அகதிகள் தொடர்பான கொள்கையில் துருக்கி பின்பற்றும் நடைமுறைகள் தவறானவை என ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் துருக்கிய ஜனாதிபதி எட்டோகன் மீள மீள ஐரோப்பிய நாடுகளை எச்சரிப்பதோடு அகதிகளை ஐரோப்பாவுக்குள் நுழைய விடுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது, ஏற்கனவே ரஷ்யாவிடமிருந்து துருக்கி கொள்வனவு செய்த எஸ்-400 வகை ஏவுகணை தொடர்பில் மேற்குக்கு ஏற்பட்ட முரண்பாட்டின் தாக்கங்கள் அமெரிக்க -துருக்கிய உறவைப் பாதித்ததுடன் அது ஐரோப்பாவையும் துருக்கியுடனான உறவை சீர்குலைத்துள்ளது என கருத முடியும். ஐரோப்பிய -ரஷ்ய முரண்பாட்டின் பின்புலத்திலேயே அதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே இத்தகைய நெருக்கடிகளால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்து துருக்கி மீதான பொருளாதாரத் தடையை பலமானதாக

மாற்றுவதற்கு திட்டமிட்டு வருகின்றன. இது பாரிய பொருளாதார நெருக்கடியை துருக்கிக்கு ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியுடன் கூடுதலாக கொவிட்-19 இன் தாக்கமானது பாரிய நெருக்கடியை துருக்கி எதிர்கொண்டுவருகிறது. ஆனால் துருக்கிய ஜனாதிபதியின் நகர்வுகள் தனித்துவம் மிக்கதாக மாறிவருகிறது. அதனை நோக்குவது அவசியமானதாகும்.

ஏறக்குறைய இரண்டரை வருடங்களுக்கு பின்பு இஸ்ரேலுக்கான துருக்கிய தூதுவராக Ufuk Ulitas என்பவரை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்க இராஜதந்திர நகர்வாகவே தெரிகிறது. இவரது நியமனம் மேற்கு நாடுகளை அதிகம் அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ளது. துருக்கிய ஜனாதிபதியும் இது ஒரு பொருளாதார அடிப்படையிலானது. இராஜாங்க உறவு என்பதை தெரிவித்துள்ளமை மட்டுமன்றி கடந்த காலப்பகுதியில் இரு நாட்டுக்குமான பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளின் தகவல்களைப் பார்க்கும் போது அதன் முக்கியத்துவம் தெளிவாகிறது. அதாவது துருக்கிய -இஸ்ரேல் வர்த்தகமானது கடந்த எட்டு வருடங்களாக 4.5 பில்லியனுக்கும் 6 பில்லியன் அ.டொ இடைப்பட்டதாக அமைந்திருந்தமையும் முடிந்த இந்த ஆண்டு  பத்து மாதங்களில் ஏற்பட்ட வர்த்தகம் 5 பில்லியன் அ.டொ என்பதையும் பார்க்கும் போது அதன் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.

ஏறக்குறைய கடந்த 2010 ஆண்டுக்குப் பின்பு துருக்கிய பாதுகாப்புப் பிரிவினர் பாலஸ்தீன எல்லைப்பகுதியில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு துருக்கிய பிரஜைகள் கொல்லப்பட்டமையை அடுத்து இரு நாட்டுக்குமான உறவு முறிவடைந்தது. 2018 இஸ்ரேலியத் தரப்பு அத்தகைய தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை வழங்க முன்வந்ததை அடுத்து உறவு படிப்படியாக சுமூகமடைய ஆரம்பித்தது. இதன் இன்னோர் கட்டமாகவே தற்போதைய நகர்வு அமைந்துள்ளது. அது மட்டுமன்றி துருக்கியும் இஸ்ரேலும் மேற்குலகத்தின் நலன்பேணும் அரசுகள் என்பதுடன் 1949 இல் இஸ்ரேலை அங்கீகரித்த முதல் முஸ்லிம் நாடாக துருக்கி காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் துருக்கிக்கு 2006 இல் துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் அரச முறைப்பணம் மேற்கொண்டிருந்தார் என்பதுவும் கவனிக்கத்தக்க விடயமாகும்.

இதனை ஒரு பொருளாதார உறவாகவும் இரு நாட்டுக்குமான இராஜீக நட்புறவாக கருதினாலும் அடிப்படையில் சன்னி முஸ்லிம் நாடுகளுடனான உறவை இஸ்ரேல் பலப்படுத்துவதாகவே விமர்சனம் எழுந்துள்ளது. ஏற்கனவே அத்தகைய நட்புறவை மேற்காசியாவுக்குள் வளர்த்துவரும் அமெரிக்க -இஸரேல் கூட்டின் உத்தியாகக் கூட அமைய வாய்ப்புள்ளது. இதனால் மேற்காசியாவுக்குள் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தி ஷியா சன்னி பகைப்புலத்தை நிரந்தரமானதாக மாற்றி பிராந்திய அரசியலை கையாள மேற்கு இஸ்ரேல் கூட்டு திட்டமி-ட்டு நகர்த்தி வருகிறது. இதற்குள் துருக்கி அகப்படும் நிலை ஏற்பட்டுள்ளதா அல்லது எர்டோகனின் தந்திரம் வெற்றியளிக்குமா என்பது முக்கிய கேள்வியாகும். பொதுவாக ஒரு அவதானிப்பினைக் கொண்டால் துருக்கிய இஸ்ரேல் உறவு எப்போதும் ஒரே மாதிரியானதாக அமைந்திருக்கவில்லை.

இரு தரப்புக்கும் ஏற்ற இறுக்கமான உறவு நிலை காணப்பட்டிருந்தது. அதில் இரு தரப்பும் மாறி மாறி நன்மையும் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளன. இதிலும் துருக்கி அத்தகைய நிலையையே அடையும் என்ற மதிப்பீடு காணப்படுகிறது.

அதனை ஆதாரப்படுத்தும் விதத்திலேயே துருக்கியும் நகர்ந்துவருகிறது. குறிப்பாக மேற்குலகத்தின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இத்தகைய இராஜீக முயற்சிகள் தவிர்க்க முடியாதவைகளாகவே தெரிகிறது. அதனைத் துருக்கி மேற்கொண்டு வருகிறது. அதே நேரம் ரஷ்யாவுடனான இராணுவ உறவையும் சீனாவுடனான பொருளாதார உறவையும் துருக்கி தொடர்ந்தும் பாதுகாத்து வருகிறது. அது மட்டுமன்றி நேட்டோ அங்கத்துவத்தைக் கொண்டுள்ள துருக்கி புதிய அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்பார்த்து செயல்படும் போக்கினையும் கொண்டுள்ளது. இதில் இஸ்ரேலினது நடவடிக்கையும் ஜோ பைடனின் நடவடிக்கையை அதிகம் மையப்படுத்தியதாக அமைந்திருப்பதனால் துருக்கி மீதான நகர்வுகளை இஸ்ரேல் மென்மையானதாகவே பின்பற்ற விளையும். அத்தகைய நிலையும் துருக்கிக்கு இலவசகரமானதாக அமையும்.

எனவே, துருக்கி மீதான மேற்குலகத்தின் பொருளாதாரத் தடைகளைத் தகர்க்க இஸ்ரேலிய நட்பினைப் பலப்படுத்த முனையும் துருக்கியின் நகர்வுகள் ஆரோக்கியமான விளைவை ஏற்படுத்தும் என்றே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்களும் துருக்கிய. இஸ்ரேலிய கடந்த கால உறவில் அவதானிக்க முடிகிறது. இது ஒரு இராஜதந்திர நகர்வாகவே தெரிகிறது. இதன் வெற்றியிலேயே ஈரான் மட்டுமல்ல மேற்காசியாவின் அரசியலில் இஸ்ரேலின் பலம் தீர்மானிக்கப்படும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்

Comments