![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/12/27/a11.jpg?itok=6tilzgyt)
மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகைளை மேற்கொள்ளுமாறு புதிய தேர்தல்கள் ஆணைக்குழுவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதேவேளை, அரசாங்கத்திற்குள் ஒரு பிரிவினர், அதுவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்களோ மாகாண சபைகளை ஒழிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கின்றார்கள்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதென்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து புதிய அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் கவலை வெளியிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பில் கருத்தொருமிப்பு காணப்படுவதற்கு முன்னதாக அவசரப்பட்டு மாகாண சபைகளுக்கு ஏன் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதே அவர்கள் முன்வைக்கின்ற கேள்வி ஆகும். மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மேலும் தாமதிக்கலாம் என்பது அரசாங்க சார்பு சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களின் நிலைப்படாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை, கொவிட்19 வைரஸ் தொற்று பரவியுள்ளதன் காரணமாக, நாடு பாரதூரமான பொதுச் சுகாதார நெருக்கடியொன்றை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் அவசரப்படுவதில் உள்ள ‘உள்நோக்கத்தனமான விவேகம்’ குறித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சில தினங்களுக்கு முன்னர் கேள்வியெழுப்பியிருப்பதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
பொதுமக்களுக்கு என்னதான் பாதிப்புகள் வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல் மாகாண சபைகளின் ஊடாக அரசாங்கம் தனது தரப்பு அதிகாரங்களை மேலும் வலுப்படுத்த முனைந்து நிற்கிறது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ் சாட்டியிருக்கிறார்.
'நல்லாட்சி' அரசாங்கம் உரிய காலத்தில் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தியிருந்தால், நாடும் மக்களும் பொதுச் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்ற நேரத்தில் இன்னொரு தேர்தலை நடத்தும் பேச்சுக்கே இடமிருந்திருக்காது என்பதை சஜித் பிரேமாசவுக்கும் எதிரணியினருக்கும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மைத்திரி- ரணில் தலைமையிலான ஆட்சிக் கால நிருவாகம் தேர்தல்களுக்கு முகங் கொடுப்பதற்கு பயந்து மாகாணசபைத் தேர்தல்களை காலவரையறையி்ன்றி பின்போடுவதற்கு வசதியாக மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தை திருத்தியது என்பதை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.
ஆனாலும் உள்ளூராட்சித் தேர்தல்களை அதற்கு மேலும் தாமதப்படுத்த முடியாது என்றதொரு கட்டம் வந்ததும் 2018 பெப்ரவரி 10ம் திகதி அந்தத் தேர்தல்களை நடத்தி படுதோல்வியை சந்தித்த அன்றைய நல்லாட்சி அரசாங்கம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக வேறு எந்தத் தேர்தலும் நடத்தப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கு அதனால் இயன்ற தந்திரோபாயங்களை எல்லாம் கையாண்டு பார்த்தது.
மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கு முன்னதாக புதிய கலப்பு தேல்தல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பிலான சில பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியவையாக இருக்கி்ன்றன என்பது உண்மையே. அது நீண்ட காலமாக பல தரப்பினராலும் முன்வைக்கப்படுகின்ற பிரச்சினையாக இருக்கின்றது.
ஆனால், அந்தப் பிரச்சினை கூட நல்லாட்சி அரசாங்கம் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கப் பயந்து மேற்கொண்ட திருகுதாளங்களின் விளைவாக உருவானதே ஆகும். தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பில் சிறிய கட்சிகளும் சிறுபான்மையினக் கட்சிகளும் தெரிவித்த ஆட்சேபனைகள் நியாயமானவையே என்பதை மறுப்பதற்கில்லை.
அது அவ்வாறிருக்க, இன்றைய அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கத்தின் மீதான எந்த காதலின் காரணமாகவும் மாகாணசபைத் தேர்தல்களுக்கு அவசரப்படவில்லை என்பது தெளிவாகப் புரிகின்றது.
மாகாண சபைகளுக்கு வழிவகுத்த 1987 ஆம் ஆண்டின் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு திரிசங்கு நிலையை எதிர்நோக்குகிறது என்பது உண்மை. சில அமைச்சர்கள் அந்த திருத்தம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பகிரங்கமாக மக்களிடம் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதேவேளை, மாகாணசபைகளை விரைவாக செயற்படுத்துமாறு அரசாங்கத்துக்கு புதுடில்லி கடுமையான நெருக்குதலை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய கட்டத்தில் நாடளாவிய ரீதியில் நடத்தப்படக் கூடிய இன்னொரு தேர்தல் தொற்றுநோயை வெகு தீவிரமாக மேலும் பரவ வைக்கும் என்பதை இன்றைய நிலையில் அரசாங்கம் நன்கு தெரிந்திருந்தும் கூட, தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்து விடுவதற்கு முன்னதாக மாகாணசபை தேர்தல்களை சந்திக்கவே விரும்புவதாகத் தெரிகிறது.
கொவிட்- 19 தொற்று பரவலின் முதலாவது அலையின் போது மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட பொருட்களும் பணமும் பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு நன்றாக உதவியதாக எதிரணியினர் அன்றைய வேளையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிலையில் மாகாணசபை தேர்தல்களின் போதும் மீண்டும் அவ்வாறு செய்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கும் என்று எதிரணி ஏற்கனவே குற்றஞ் சாட்டியிருப்பதையும் இங்கு நாம் கவனிக்கத் தவறக் கூடாது.
அதேவேளை, ஒரு முக்கியமான கேள்வியும் இன்றைய அரசியல் சூழலில் எழவே செய்கிறது. அரசியமைப்பு யோசனைகள் தொடர்பில் கருத்தொருமிப்பு எட்டப்படும் வரை, எவ்வளவு காலத்துக்குத்தான் மாகாணசபை தேர்தல்களை பின்போடுவது? புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் எப்போது சாத்தியமாகி முடிவுறும்?
புதிய அரசியலமைப்பு ஒன்றை வரைவதற்கான செயன்முறைகள் கடந்த இரு தசாப்த காலத்தில் எந்த இலட்சணத்தில் முன்னெடுக்கப்பட்டன என்பதை நேரடியாக பார்த்த அனுபவம் நாட்டு மக்களுக்கு இருக்கின்றதல்லவா?
2000ஆம் ஆண்டில் புதிய அரசியலைமைப்பு ஒன்றை கொண்டு வருவதற்கு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்ட முயற்சிகள் பாராளுமன்றத்திற்குள் ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி.க்கள் பற்ற வைத்த தீயில் பொசுங்கிப் போயின.
நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் வெற்றியளிக்க முடியாமல் போனமைக்கு அந்த அரசாங்கத்தின் இரு தலைவர்களுக்கிடையில் மூண்டிருந்த அதிகாரப் போட்டி மாத்திரமல்ல, ராஜபக்ஷ தரப்பினரின் தலைமையிலான தரப்பில் இருந்து வெளிக்காட்டப்பட்ட கடுமையான எதிர்ப்பும் முக்கிய காரணமாகும். அது ‘மலையைக் கல்லி எலியைப் பிடிக்க முயன்ற கதை’ ஆகிப் போனது.
புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தவர்கள் இறுதியில் சமர்ப்பித்த ஆவணத்துக்கு எவரும் உரிமை கொண்டாடவுமில்லை; எவரும் பொறுப்பேற்கவுமில்லை. இறுதியில் ‘இடைக்கால அறிக்கை’ என்ற பெயரில் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அதைச் சமர்ப்பித்தார். அதற்கு மேல் அது முன்னேற வாய்ப்பில்லை என்பது சமர்ப்பிக்கும் போதே அவருக்கு நன்கு தெரிந்திருக்கும்.
நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு அதில் இருந்து புதிய அரசியலமைப்பு வரைவை தொடருமாறு சமகி ஜன பலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி ) அரசாங்கத்தைக் கேட்டிருக்கிறது. ஆனால், 2019 ஜனவரியில் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையில், தனது அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரித்து விட்டது என்று கூறப்படுவதை அடியோடு நிராகரித்திருந்தார்.
"அவ்வாறான ஒரு வரைவு கூட இல்லை" என்று அவர் அடியோடு மறுத்திருந்தார். எனவே சஜித் பிரேமதாசவின் அணி கேட்டுக் கொண்டதைப் போன்று பழைய முயற்சியை அடிப்படையாகக் கொண்டு புதிய முயற்சியை முன்னெடுப்பதற்கு என்ன இருக்கிறது? அவர்கள்தான் இதற்கான பதிலைக் கூற வேண்டும்.
தற்போதைய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளின் வெற்றி என்பது அதிகாரப் பரவலாக்கத்துடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினைகளைக் கையாளுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் ஆற்றலிலேயே தங்கியிருக்கிறது. அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கி்ற அதேவேளை, மாகாணசபை தேர்தல்களை நடத்த முயற்சிப்பதாக பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தைக் குறை கூறும் தேசியவாத சக்திகள், மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டிய தேவையே எழாத வகையில் 13 வது திருத்தத்தை அரசாங்கம் புதைத்து விட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
மறுபுறத்தில், தமிழ்க் கட்சிகள் மாகாணங்களுக்கு மேலம் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று கோரி வருகின்றன. அதேசமயம் 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகின்றது.
இந்த முரண்பாடான கோரிக்கைகளுக்கு நடுவே ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு எவ்வாறு வர முடியும் என்று அரசாங்கம் சிந்திக்கிறது. இந்த பிரச்சினைகளையெல்லாம் பேசித் தீர்த்து புதிய அரசிரலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி எப்போதுதான் மாகாணசபை தேர்தல்களை நடத்துவது?
ஆளுநர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் மாகாணங்களின் நிர்வாகம் இப்போது இருப்பதைப் போன்று மேலும் தொடர விடுமாறு அரசாங்கத்தின் ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் விடுக்கும் கோரிக்கையை அரசாங்கம் செவிமடுக்குமா?
இவ்வாறான விடை தெரியாத வினாக்களே இப்போது எழுகின்றன.