![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/01/03/a15.jpg?itok=9JLrueFE)
உலகளாவிய அரசியலை கையாளும் பிரதான நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் தமக்கிடையே இராஜதந்திர நகர்வுகளை முதன்மையானதாக பின்பற்றுகின்றன.
அமெரிக்காவின் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் காலதாமதமனாலும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தற்போது பைடனுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். அவ்வாறே அமெரிக்க ஜனாதிபதியும் உலகத் தலைவர்களுடன் சேர்ந்து இயங்குவது தொடர்பில் அதிக விருப்புத் தெரிவித்துள்ளமை கவனிக்கத்தக்கது.
இக்கட்டுரையும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் உறவினையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் ரஷ்யாவுடனான உறவு சுமூகமானதாகவும் உலக சமாதானத்தை நோக்கியதாகவும் அமைதல் வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பில் மேலும் ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
பலம்பொருந்திய வல்லரசுகள் ஒன்று சேர்ந்து அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் உலகத்தின் அமைதியை இராணுவ பலத்தினாலும், இராணுவ வல்லமையினாலும் மேற்கொள்வது அவசியமென வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தகவல் ரஷ்யாவின் எதிர்கால திட்டமிடலையும் அமெரிக்காவின் புதிய ஆட்சி ஏற்படுத்தப்போகும் அணுகுமுறையையும் முன்கூட்டியே அடையாளப்படுத்துவதாக உள்ளது.
இருநாடுகளும் இராணுவ ரீதியில் வலிமையானவை என்பதை அடையாளப்படுத்துவதோடு ஆயுத உற்பத்தியையும் அவற்றின் தொழில்நுட்ப வல்லமையையும் பெருக்குவதற்கு முயற்சித்து வருகின்றன. அதிலும் ரஷ்யா அண்மைக்காலங்களில் அண்டவெளி தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பெருக்கத்தையும் அணுவாயுத பெருக்கத்தையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனை வெற்றி கொள்ளும் விதத்தில் அமெரிக்காவும் செயற்கைகோளை பயன்படுத்தி ஆளில்லாத விமானங்களையும், நீண்டதூர தாக்குதல் உத்திகளையும் பாரிய அளவில் விருத்தி செய்து வருகின்றது. இயந்திரங்களால் போர்புரிகின்ற ஒரு கட்டமைப்பை தயார் செய்து வருகின்றது. மேற்காசியா அதற்கான மிகச்சிறந்த களமாக காணப்படுகிறது.
எனவே ஜோ பைடன் ஆட்சியானது ரஷ்யாவுக்கு மட்டுமன்றி உலகத்துக்கே மீளவும் பராக் ஒபாமா நிர்வாகத்தை நினைவுபடுத்துமென கருதுகின்ற சூழலில் ரஷ்ய ஜனாதிபதி புடின் அவரது ஆட்சி முறை தனித்துவமானதாகவும் உலக இயங்குதிறனை வடிவமைக்க கூடியதாக அமையுமெனவும் கருதுகின்றார். தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட ஜோ பைடனின் ஆட்சி ரஷ்யாவின் உலக ஆதிக்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குமென கணிப்பீடுகள் இருந்தாலும் புடினை பொறுத்தவரை சமவலுவோடு அமெரிக்காவோடு இணைந்து உலக பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் கையாள முடியுமென கருதுவதையே வெளிப்படுத்துகிறது. ஆனாலும் அமெரிக்கா மீதான ஒரு எச்சரிக்கையும் கண்காணிப்பும் ரஷ்யாவுக்கு உண்டு என்பதை புடினின் தகவல் வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமன்றி இரு நாட்டினதும் புலனாய்வு துறைகள் பின்பற்றுகின்ற வழிமுறைகளை அவதானிக்கும் போது தொடர்ந்தும் இரு வல்லரசுகளும் எதிர் எதிர் முனையில் பயணம் செய்ய கொள்கையுடன் செயற்படுவதைக் காணலாம். குறிப்பாக மிக அண்மையில் நடந்த இரு சம்பவங்கள் இரு நாட்டுக்கான போட்டி இன்னும் நிகழுகின்றது என்பதையும், உலகின் இருதய நிலம் ரஷ்யா என்பதையும் கோடிட்டு காட்ட உதவுகின்றன.
ஒன்று, ரஷ்யா தனது நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை மட்டும் செயற்கையான அனர்த்தங்களிலிருந்து தப்பித்து கொள்ள தயாரித்து தயார் நிலையில் நிறுத்தப்பட்ட விமானப் பாகங்களை அது அண்மையில் இழந்துள்ளது. அது தொடர்பான தகவல்களை திரட்டுகின்ற போது அமெரிக்காவினுடைய சி.ஐ.ஏ அல்லது அமெரிக்காவிற்காக இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட் அத்தகைய தொழில்நுட்ப திறனை திருடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 1990களில் மொசாட் அமைப்பு பிரித்தானியாவுக்காக ரஷ்ய விமானம் ஒன்றை கடத்தியுள்ளமை குறிப்பிடக்கூடிய செய்தியாகும். அதனால் அண்மைய சம்பவத்தையும் மேற்குறித்த ஏதொவொரு உளவுத்துறை மேற்கொண்டிருக்க வாய்ப்புண்டென ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு, அமெரிக்காவின் பாதுகாப்பு, நிதி மற்றும் வர்த்தக மையங்களை நோக்கி ரஷ்யாவின் சைபர் தாக்குதல் நீண்ட நாட்களாக நிகழ்ந்து வருவதாக அமெரிக்க அரச அதிகாரிகள் கடந்த வாரத்தில் கண்டறிந்துள்ளனர். அமெரிக்க அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ரஷ்ய சைபர்களின் பிரதான இலக்காக அமைந்துள்ளது. ரஷ்யாவின் இத்தகைய சைபர் தாக்குதலை தடுப்பது என்பது மிகவும் சிக்கலானதெனவும் அமெரிக்காவின் சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. ரஷ்யா இதனை மறுத்திருப்பதுடன் மிகநுட்பமான தொடர் தாக்குதல் என்றே அமெரிக்காவின் உளவு பிரிவான சி.ஐ.ஏ குற்றம் சாட்டியுள்ளது. இத்தாக்குதல் குறைந்தபட்சம் மார்ச் 2020 ஆரம்பித்திருக்கலாமெனவும் இதன் விளைவுகள் மிக அபாயகரமானதெனவும் திருடப்பட்ட விளைவுகள் எத்தகையவை எனத் தெரியாதெனவும் சி.ஐ.ஏ மேலும் தெரிவித்துள்ளது.
இதேநேரம் ஜோ பைடன் இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சைபர் தாக்குதலை மேற்கொள்ளும் எதிரி நாடுகளை தடுப்பதுடன் ஏனைய நட்பு நாடுகளுடன் இணைந்து இத்தகைய தாக்குதலை மேற்கொள்ளும் நாடுகள் மீது அபராதம் விதிக்க வேண்டுமெனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இவ்வகை அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது அமெரிக்கா ரஷ்யா போன்ற இரு நாடுகளும் தொழில்நுட்ப ஆயுதங்களை நோக்கி உலகத்தின் எல்லைகளை விஸ்தரிக்க திட்டமிடுகின்றன என்றும் அதனூடாக உலகத்தின் இராணுவ பலத்துக்காக போட்டியிடுவதுடன் உலகை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனைகின்றன என்பதையும் தெளிவாக உணர்த்துகிறது. இதன் மறுபக்கம் உலகம் மேலுமொரு ஆயுத குவிப்புக்கு, ஆயுத போட்டிக்கு தயாராவதுடன் ஏற்கனவே பலமடைந்திருந்த ஆயுதப்போர்கள் புதிய வடிவத்தில் உலகத்தை ஆக்கிரமிக்க போகின்றன என்பதையும் அடையாளப்படுத்துகிறது. இதனால் பொருளாதார இருப்பு வல்லரசு பிடிக்குள் தொடர்வதோடு உலகளாவிய அரசியல் போக்கை அமெரிக்காவும் ரஷ்யாவும் மற்றும் சீனாவும் பங்கு போடுவதைக் காணுவதற்கான வாய்ப்பு உருவாகிறது. இதில் சீனா பொருளாதார வாய்ப்புக்களுக்கான முனைப்பை கொண்டிருந்தாலும் பாதுகாப்பைப் பொறுத்து இராணுவ வலுவை படிப்படியாக பலப்படுத்தி வருகிறது. அதேநேரம் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பும் சீன ரஷ்ய கூட்டின் பலமும் உலப்போக்கில் அரசியல், பொருளாதார, இராணுவத்தை ஆதிக்கத்தில் வைத்திருக்க முயலும் போக்கை காணக்கூடியதாக உள்ளது.
மறுபக்கத்தில் அமெரிக்காவில் புதிதாக ஆட்சியமைக்க இருக்கின்ற ஜோ பைடன் நிர்வாமும் ரஷ்ய சீன உத்திகளுக்கு முன் பலமான இருப்பை உலகிற்கு வழங்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஜோ பைடனின் இயல்பான போக்கும் அவர் வெளிப்படுத்துகின்ற உடல் மொழியும் உபாயங்களும் அமெரிக்க நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் உலகளாவிய பலவீனங்களும் ஒன்றுசேர்ந்து ஆரோக்கியமான போட்டித்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாக அமையாது என்ற வாதம் வலுவடைந்து வருகிறது. எனவே வெளிப்படையாக அமெரிக்க உலக ஆதிக்க முறையிலிருந்து ட்ரம்ப் காலத்தில் வெளிப்படுத்திய உணர்ச்சிகர போக்கினை கூட கையாள முடியாத நிலைக்கு ஜோ பைடன் காலம் அமைந்து விடும் என்ற விமர்சனம் தவிர்க்க முடியாததாகும். ஒபாமாவினுடைய வாக்களிக்கப்பட்ட நிலம் என்ற நூலில் குறிப்பிட்டது போன்று உலக ஆதிக்கத்தை சீனர்களும் ரஷ்யர்களும் பங்குபோட்டு கொண்டனர் என்ற வாதம் சரியானது என்ற முடிவை ஜோ பைடனுடைய ஆட்சி காலம் மேலும் உறுதிப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் உள்ளன.
எனவே புடின் - பைடன் கூட்டாக உலகத்தை ஆளுதல் என்பது கடினமானதாகவே அமையப்போகிறது. ஜோ பைடனுடன் புடினும் வெளிப்படுத்தியுள்ள இணக்கமானது அதிக முரண்பாடுகளை கொண்டது. அமெரிக்கர்களுக்கு எதிராக ரஷ்யர்களும், ரஷ்யர்களுக்கு எதிராக அமெரிக்கர்களும் அணி திரட்டப்பட்ட அரசியல் கலாசாரமே கடந்த 70 ஆண்டு அரசியலாகும். இதிலிலுந்து விடுபட்டு புடின் - ட்ரம்பினால் கூட புதிய அரசியல் கலாசாரத்தை அடைய முடியவில்லை.
இத்தகைய சூழலில் புடின் - பைடன் ஒன்றிணைந்து உலக சமாதானத்தை அரசியல் இராணுவ பலத்தால் பாதுகாத்தல் என்பது பிராந்திய ரீதியிலும், பூகோள ரிதியிலும், புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையிலும் சத்தியமாகாத விடயமாகும். மேற்காசிய களம் இதற்கான சரியான புரிதலை தரக்கூடிய பிராந்தியமாகும். எனவே ஒன்றிணைவுக்கான புடினின் வார்த்தைகள் அரசியல் ரீதியில் பொய்ப்பிக்கப்படும் கருதுகோளாகவே காணப்படுகிறது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்