ஜனநாயக சின்னத்தையே அவமதித்த டிரம்ப் ஆதரவாளர்கள் | தினகரன் வாரமஞ்சரி

ஜனநாயக சின்னத்தையே அவமதித்த டிரம்ப் ஆதரவாளர்கள்

உலக அரசியல் போக்கில் அதிக தீர்மானங்களையும் அதன் விளைவான போர்களையும்  சமாதானத்தையும் தந்த வெள்ளைமாளிகை பின்தங்கிய நாடுகளுக்கு நிகரான அரசியலை  06.01.2021 இல் வெளிப்படுத்த ஆரம்பித்தது. 1860களில்  ஜனநாயகத்திற்கு புதிய வடிவம் கொடுத்த ஆபிகாம் லிங்கனின் நினைவுகளை சுமந்த  பாராளுமன்றக் கட்டடத் தொகுதி ஜனாதிபதி ட்ரம்ப் இன் ஆதரவாளர்களால்  அவமதிக்கப்பட்டுள்ளது. அதிக அபாயத்தை வெள்ளைமாளிகை உலகத்திற்கு தந்தாலும்  உலகத்தை சமநிலையில்  இயக்கும்  பணியையும் ஆற்றியது என்ற அடிப்படையில் உலக  வரலாற்றில் தனித்துவமான கட்டடத் தொகுதியாக அது பார்க்கப்படுகிறது.  உலகத்திற்கு ஜனநாயகத்தை போதிக்கும் தேசம் தனது ஜனநாயகச் சின்னத்தையே  அவமானமாக்கும் துயரத்தை உலக வரலாற்றில் பதிந்துள்ளது. இக்கட்டுரையும்  அமெரிக்க ஜனநாயக (நாகரீக) அரசியல் கலாசாரத்தின் போக்குகளை  அடையாளப்படுத்துவதாக அமையவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை அடுத்து எழுந்த இழுபறியின் இறுதிக்கட்டமாகவே  தற்போதைய ஆர்ப்பாட்டச் சூழல் அரங்கேறியுள்ளது. அத்தகைய நிலையை தூண்டியதில்  ஜனாதிபதி ட்ரம்ப்க்கு பங்குண்டு என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஜோ பைடன் இச்செயல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட  அவமதிப்பெனவும் அமெரிக்க வரலாற்றில் இருள்சூழ்ந்துள்ள காலம் எனவும் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை தூண்டும் விதத்தில் நிகழ்வுக்கு  வெளியே ஜனாதிபதி ட்ரம்ப் உரையாற்றியதுடன் தனது டூவிட்டர் பக்கத்திலும் ஆர்ப்பாட்டக்காரரை உற்சாகப்படுத்தும் சொற்களை  பயன்படுத்தியிருந்தார். ஆர்ப்பாட்டக்காரரது நடவடிக்கைகள் வன்முறையை  திட்டமிட்டு தூண்டுவதாக அமைந்திருந்ததுடன் காங்கிரஸ் கட்டிடத் தொகுதியை  அடித்து நொருக்கிய வண்ணமே சபையை நோக்கி நகர்ந்தார்கள்  இதனை அவதானிக்கும்  போது மனித சமூகத்தின் ஏற்றுக் கொள்ள முடியாத அரசியல் கலாசாரத்தை  வெளிப்படுத்துவதாக தெரிகிறது. ஆசிய ஆபிக்க நாடுகள் மீது அதிக அவச்சொற்களை  பிரயோகித்த அமெரிக்கர்களது நடவடிக்கைகள் அதனை விட அவமானமாகவே தெரிகிறது.  இத்தாக்குதலில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதுடன் இதுவரை இருபதுக்கும்  மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரரை  அடக்குவதற்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இத்தகைய தாக்குதலை அடுத்து உலகத் தலைவர்கள் கடும் அதிருப்தி  வெளியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஜனாதிபதி ட்ரம்ப்பின் மிக நெருக்கமான  நண்பர்கள் என்பது கவனிக்கத் தக்க விடயமாகும். குறிப்பாக பிரிட்டன் பிரதமர்   பொறிஸ் ஜோன்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அதிருப்தியை  வெளிப்படுத்தியிருந்தனர். இவர்கள் இருவரும் ட்ரம்ப்ன் மிக நெருக்கமான  நண்பர்களாகவும் இரு நாடுகளும் அமெரிக்காவுடன் சேர்ந்து இயங்கும் நிலையையும்  காணமுடிந்தது. ஆனால் தற்போது இருவரும் இந்த நடவடிக்கையை ஜனநாயகத்திற்கு  ஏற்பட்ட அவமானமாகவே வெளிப்படுத்தியுள்ளனர். இந்தகைய வன்முறைகள் உலக  அரசியலில் ஏற்படுத்தவுள்ள நெருக்கடிகள் அதிகமானவை. 

ஒன்று, அமெரிக்க அரசியலமைப்பு வன்முறையை கட்டி வளர்கிறது என்ற செய்தியை  மறைமுகமாக வெளிப்படுத்துவதை காட்டுகிறது. காரணம் ஒரு நாட்டின் அரசியல்  கலாசாரம் அந்த நாட்டின் அரசியல் அமைப்பு சார்ந்தது. அத்தகைய அரசியலமைப்பு  மீது மக்கள் கொள்கின்ற எண்ணம் அல்லது மனோநிலையே அரசியல் கலாசாரம் என  அமெரிக்க  அரசியல் சிந்தனையாளர்கள் உலகத்திற்கு தந்துள்ளனர். ஆகவே அதனடிப்படையில் அவதானித்தால் 1779 முதல் உலகத்திற்கு நிலைத்திருக்கும்  அரசியலமைப்பாகவும் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு  உரியதாகவும்  வரையப்பட்டதென்ற பெருமைக்குரியதாக காணப்பட்டது. ஆனால் அதன் ஆயுட்காலமும்  நிலைத்திருப்பும் மட்டும் முக்கியமானதல்ல மாறாக அதன் விளைவுகள்  ஆரோக்கியமானதாகவும் மக்களது இயல்பான வாழ்வையும் அவர்களது பாதுகாப்பையும்  சமமான நீதியையும் இன்னொரு மனிதனை பாதிக்காத சுதந்திரத்தையும் கொண்டிருப்பதே  அந்த அரசியலமைப்புக்கான வலிமையும் சிறப்புமாகும். அதனை ஏற்படுத்துவதில்  தொடர்ச்சியான முரண்பாட்டை அமெரிக்க அரசியலமைப்பு தருகிறது. குறிப்பாக உலக  நாடுகளை ஆக்கிரமிப்பதும் பொருளாதார நலன்களுக்காக ஆட்சிகளை கவிழ்ப்பதும்  நாடுளில் பொம்மை அரசாங்கங்களை உருவாக்குவதும் உலகத்தை முழுமையாக  கண்காணிப்பதுவும் அதற்காக செனற் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களைப்  பயன்படுத்துவதும் அமெரிக்க புலனாய்வுத் துறையினரை பயன்படுத்தி அமெரிக்க  நலன்களை முதன்மைப்படுத்துவதையும் அமெரிக்க அரசியலமைப்பு கொண்டுள்ளது. இதனால்  கட்டிவளர்க்கப்பட்ட மரபையே அமெரிக்க மக்களும் ஆட்சியாளரும் பெற்றுள்ளனர்.  அமெரிக்க அரசியலமைப்பு மேலாதிக்க யாப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.  நிறைவேற்று ஜனாதிபதி முறைமை என்பது வரையறைகளையும் வரப்புகளையும்  சமநிலைகளையும் தலையீட்டையும் கொண்டிருந்த போதும் நடைமுறையில் ஆதிக்க  மனோநிலையையே வெளிப்படுத்துகிறது. அதன் அவதாரமாகவே ஜனாதிபதி ட்ரம்ப்  காணப்படுகின்றார்.

இரண்டு, அமெரிக்காவில் வன்முறை ஒரு தொடர்ச்சியான பதிவாகவே அமைந்துள்ளது.  குறிப்பாக கறுப்பர் மீதான தாக்குதல்கள் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில்  ஆயுதக் கலாச்சாரத்தின் வாயிலாக எழுந்துள்ள தாக்குதல்கள் பாடசாலைகளிலும்  பல்கலைக்கழகங்களிலும் மற்றும் உயர் நிறுவனங்களிலும் அதிகளவான பதிவுகளை  தருகிறது. இத்தகைய தாக்குதல்களுக்குப் பின்னால் அரசியல் கலாசாரமே பிரதான  காரணமாகும். அரசியல் நிறுவனங்களது போக்குகளும் அதன் முடிபுகளும் சமூக  இருப்பினையும் மக்களது வாழ்க்கையையும் தீர்மானிக்கும் திறனுடையதாகவே  அமைந்துள்ளது. இத்தகைய தாக்குதல்களுக்கு காரணமானவர்களில் அனேகமானவர்களை   மனோ ரீதியில் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம்  அரசாங்கங்கள் தப்பிக் கொள்ள முயலுகின்றன. ஆனால் அவை ஒவ்வொன்றும்  ஆட்சியாளரது தவறான கொள்கை வகுப்பினாலும் தவறான திட்டமிடலாலும்  நிகழ்பவை என்பதை ஏற்க மறுக்கின்றனர். அரசியல் சட்டங்கள்  மட்டுமல்ல அதனை பின்பற்றும் தலைமைகளும் அதற்கு பொறுப்புடையவர்களாக  விளங்கும் போது மட்டுமே விளைவுகள் சாதகமானதாக அமையும். 

மூன்று, உலகளாவிய ரீதியில் அமெரிக்காவின் அங்கீகாரம் அருகி வருவதுடன்  இத்தகைய தாக்குதல்கள் அபாயமான எதிர்காலத்தை அமெரிக்காவுக்கு  ஏற்படுத்திவிடும். அமெரிக்க ஜனநாயகத்தின் எச்சங்கள் உலகத்திற்கு  முன்னுதாரணமாக அடையாளப்படுத்திய யுகம் காணாமல் போவதற்கான வாய்ப்பினை இது  உருவாக்கிவிட்டது. உலக நாடுகள், அரசாங்கங்களுக்கு அமெரிக்கா விரிவுரை  எடுக்க முடியாத நிலை ஒன்றினைத் தந்துள்ளது. மேலாதிக்கம் செய்யவும் கட்டளை  பிறப்பிக்கவும் கட்டுப்பாடு விதிக்கவும் முடியாத நிலையொன்றுக்கான பதிவாக  அமைந்துள்ளது. 

நான்கு, உலக நாடுகளுக்கு மட்டுமல்லாது அமெரிக்க மாநிலங்களுக்கே தற்போதைய  சம்பவம் முன்னுதாரணமாக அமைந்துவிட வாய்ப்புள்ளது. ஆட்சி மாற்றங்களும்  அதிகார கைமாற்றலும் இனிவரும் காலத்தில் அதிக நெருக்கடி மிக்கதாக அமைய  வாய்ப்புள்ளது. அமெரிக்க ஆட்சித்துறைக்குரிய ஆளுமைகளைக் கண்டறியும் திறனை  மட்டுமே கொண்டிருந்த நிலை மாறி ஆட்சியாளரின் பலவீனங்களையும்  வரைபுகளையும் நடைமுறை பிரயோகங்களையும் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம்  ஏற்பட்டுள்ளது. அல்லது தற்போதைய காலப்பகுதியை அமெரிக்கா கடந்தாலும்  எதிர்காலத்தில் இதே நெருக்கடியொன்றுக்கான சூழல் தவிர்க்க முடியாததாக  அமையும்.  ஐந்து அமெரிக்க அரசியலமைப்பு முழுமையாக ஜனாதிபதி பதவியை ஆளுமையாக  மட்டுமே அளவிட்டதே அன்றி அதனை தேசத்தின் அடையாளமாகக் கொள்ளத் தவறியது. அந்த  மக்கள் எண்ணங்களில் பலமான ஆளுமைமிக்க தலைமையாக தெரிவு அமையவேண்டும்  என்பதோடு தேர்தல்  கல்லூரி ஒரு பலவீனமான அறமற்ற வேட்பாளரை தேர்ந்தெடுப்பது  பற்றிய எந்த வியாக்கியானத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆளுமை என்பது  தேசத்தின் அடையாளம் என்பதையும் கருத்தில் கொள்ளத் தவறியது.
ஆறு, அமெரிக்கத் தேர்தல் கல்லூரியின் முடிபும் மக்களின் முடிபும் கடந்த  காலங்களை விட ட்ரம்ப் தெரிவான போது அதிக முதன்மைப்படுத்தப்பட்டது.

அத்தகைய  முதன்மைப்படுத்தலானது இயல்பாகவே மக்களையும் காங்கிரசையும்  தனிமைப்படுத்தியும் முரண்பாடடைய வைத்திருந்ததையும் காணமுடிகிறது. இதன்  வளர்ச்சிப் போக்கின் தாக்கமே ட்ரம்ப் ஆதரவாளர்கள் காங்கிரஸ்  கட்டடத்திற்குள் வன்முறை மூலம் நுழைவதற்கு வழிவகுத்திருந்தது. 

ஏழு, அமெரிக்க மக்களுக்கு ஆட்சியாளர் மீதும் அரசியலமைப்பு மீதும் இருந்த  நம்பிக்கை தகர்ந்து போகும் அளவுக்கு ஆட்சியின் போக்கு  அமைந்துள்ளது. மேல்தட்டுவர்க்கத்தின் நலன்களும் மத்தியதர வர்க்கத்தின்  நலன்களையும் தரகர்களதும்  வர்த்தகர்களதும் தனியார் பல்தேசியக் கம்பனிகளது  ஆதிக்கத்திற்கும் கட்டுப்பட்ட ஆட்சியினால் சாதாரண மக்கள் பெரியளவில்  பாதிப்புக்கு உள்ளாகியதைக் காணமுடிகிறது.

இத்தகைய பொறிமுறை அமெரிக்காவில்  மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திடமும் காணப்படுகின்ற விடயமாகத் தெரிகிறது.  அதிலும் கொவிட்-19க்குப்  பின்னரான காலப்பகுதி இத்தகைய இடைவெளியை அதிகரித்துக்  கொண்டு செல்கிறது. இதன் வளர்ச்சி 1860 ஐப் போன்ற ஒரு நிலையை அமெரிக்காவுக்கு  எதிர்காலத்தில் ஏற்படுத்திவிடுமா என்ற அச்சத்தினைத் தந்துள்ளது.

எனவே அமெரிக்க ஜனநாயகத்தின் காவலர்களே அமெரிக்க ஜனாநாயகத்தை  தோற்கடிக்கும் துயரம் ஏற்பட்டுள்ளது. எதை அமெரிக்க ஜனநாயகம் என்று  உலகத்திற்கு அமெரிக்கா உணர்த்தியதோ அது தற்போது கேள்விக்குறியாகி விட்டது.  அதன் அரசியலமைப்பும் ஆட்சி முறைமைக்கான தெரிவும் மீளமைக்கப்பட வேண்டும் என்ற  செய்தியைத் தந்துள்ளது.

அமெரிக்க கெப்பிட்டல் கட்டடத்தில் 207 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த  வன்முறை 

அங்கு  ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  டிரம்பின் ஆதரவாளர்களால் அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் நிகழ்ந்த  வன்முறைதான் உலகம் முழுக்க வியாழக்கிழமை தலைப்புச் செய்திகளாகின.

இந்த  சம்பவத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும்  மூன்று பேர் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என செய்திகள்  வெளியாகியிருக்கின்றன.

உலகின்  மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவில் ஆட்சியை விட்டுக் கொடுக்க மனமில்லாத ஜனாதிபதியின் ஆதரவாளர்கள தீவிர வன்முறையில் இறங்கிய சம்பவம், நூறாண்டுக்கு  முன்பும் நடந்திருக்கிறது.

1812ஆம்  ஆண்டில் நடந்த அச்சம்பவத்துக்குப் பிறகு, இப்போது தான் அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தின் பாதுகாப்பை மீறி அதிபரின் ஆதரவாளர்கள் அதனுள்ளே  நுழைந்திருக்கிறார்கள் என அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்தின் வரலாற்று  நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முதலாவதாக  1812ஆம் ஆண்டில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் படைகள் மோதலுக்கு தயாராகின.  அதன் தொடர்ச்சியாக, துணை அட்மிரல் அலெக்சாண்டர் காக்பர்ன் மற்றும் மேஜர்  ஜெனரல் ராபர்ட் ராஸ் தலைமையிலான பிரிட்டிஷ் படை, 1814ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம்,
அப்போது  கட்டப்பட்டுக் கொண்டிருந்த பாராளுமன்ற கட்டடத்தை தீயிட்டுக்  கொளுத்தினார்கள். அப்போது பெய்த பெருமழையால் கெப்பிடல் என்றழைக்கப்பட்டு  வரும் பாராளுமன்ற கட்டடம் தப்பித்தது. இந்த தாக்குதல் காரணமாக அமெரிக்க கெப்பிடல் கட்டடத்தை ஃபிலடெல்ஃபியாவுக்கு மாற்றுமாறு அமெரிக்க நாடாளுமன்ற  உறுப்பினர்கள் கோரினார்கள். ஆனால், ஃபிடெல்ஃபியா பேரவை கட்டுமானத்தில்  ஈடுபட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து  அந்த பேரவையை 1783ஆம் ஆண்டில் முற்றுகையிட்ட சம்பவத்தாலேயே அங்கு  நாடாளுமன்ற கட்டடம் நிறுவப்படாமல் வாஷிங்டன் டிசியில் அமைக்கப்பட்டது.

1814ஆம்  ஆண்டு சம்பவத்துக்கு ஓராண்டுக்கு முன்பு, மேலை கனடாவின் தலைநகராக இருந்த யோர்க் நகரை அமெரிக்கா தீக்கிரையாக்கியது. அதற்கு பதில் நடவடிக்கையாகவே  பிரிட்டிஷ் படையினர், வெள்ளை மாளிகை உட்பட வொஷிங்டன் டி சி நகரின் பல  பகுதிகளை எரித்தனர்.

அந்த காலகட்டத்தில் கனடா என ஒரு தனி நாடாக உருவாகவில்லை. அப்போது கனடா ஒரு பிரிட்டிஷ் காலனியாக இருந்தது.

"அமெரிக்காவின் பாராளுமன்ற கட்டடம் வெறுமனே ஒரு கட்டடம் அல்ல. அது அமெரிக்க ஜனநாயகத்தின்  சின்னம். அது வாழும் வாழ்க்கை முறையின் அடையாளம். நாம் சட்டத்தினால் உருவான  தேசம். அமைதியாக அதிகாரம் கைமாறுவது நம் குடியரசின் அரசியலமைப்பின்  அடிப்படைச் சிறப்புகளில் ஒன்று" என இந்த வன்முறை சம்பவத்துக்குப் பிறகு  வரலாற்றுச் சமூகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
பாராளுமன்ற கட்டடத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 52 பேரைக் கைது செய்திருக்கிறது அமெரிக்க காவல் துறை.

முன்னாள்  அமெரிக்க ஜனாதிபதி ​ேஜார்ப் டபிள்யூ புஷ், மிட்ச் மெக்கொனெல், மைக் பென்ஸ்  உட்பட குடியரசு கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் புதன்கிழமை தாக்குதலுக்கு  தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.
டிரம்பின்  அரசில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் மேட் பாட்டிங்கர், துணை ஊடக செயலர்  சாரா மேத்யூஸ், மெலானியா டிரம்பின் முதன்மை அதிகாரி ஸ்டெஃபன் க்ரிசம்,  வெள்ளை மாளிகையின் சமூக செயலர் ரிக்கி நிசெடா என பல அதிகாரிகள் இந்த  வன்முறை சம்பவத்துக்குப் பிறகு தங்களின் பதவியை ராஜினாமா  செய்திருக்கிறார்கள்.

இத்தகைய  சூழலில்தான் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இணையை, அடுத்த அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ்  சான்றளித்திருக்கிறது.

அதிபர்  டொனால்ட் டிரம்ப் வாக்கு எண்ணிக்கை குறித்து மீண்டும் ஆதாரமில்லாமல்  பேசியது மற்றும் பொதுமக்கள் ஒருமைப்பாட்டுக் கொள்கைகளை கடுமையாக மீறும்  விதத்தில் இருக்கும் டிரம்பின் மூன்று ட்விட்டுகள் நீக்கப்படும் வரை,  அவரின் கணக்கு முடக்கி வைக்கப்படும் என ட்விட்டர் தரப்பில்  கூறியிருக்கிறார்கள்.

மேலும் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட விதி மீறல்கள்  நடந்தால், அவரது கணக்கு நிரந்தரமாக ரத்து செய்யப்படலாம் எனவும் ட்விட்டர்  எச்சரித்திருக்கிறது.

டிரம்பின்  பேஸ்புக் ,  இன்ஸ்டாகிராம் பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. யூட்யூப் சமூக ஊடக பக்கமும் டிரம்பின்  வாக்கு மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான காணொளியை விதிமீறல் எனக்கூறி   நீக்கியிருக்கிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்

Comments