![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/01/10/a18.jpg?itok=VJwGBdtO)
கடந்த ஆறாம் திகதி புதன்கிழமை முழு உலகுமே புருவத்தை உயர்த்தி அமெரிக்காவைப் ஏளனமாகப் பார்த்தது. முன்னொரு போதும் நிகழாத அமெரிக்காவின் கறுப்பு நாள் என இப்போது அமெரிக்கத் தலைவர்கள் வர்ணிக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் திராணியற்று தமது ஆதரவாளர்களான குண்டர்களை ஏவி தனது அரசாங்கத்தின் மீதே வன்முறைத் தாக்குதல் நடத்திய மிகக் கேவலமான சம்பவம் அன்று இடம் பெற்றது.
அமெரிக்க காங்கிரஸில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்தி அறிவிக்கும் உத்தியோகபூர்வ கூட்டம் நடைபெறுவதைத் தடுக்க தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவுடன் ஆயுதம் தாங்கிய குண்டர்கள் கெப்பிடல் (Capitol) என அழைக்கப்படும் காங்கிரஸ் கட்டடத்திற்குள் போலிஸ் பாதுகாப்பு வேலியைத் தகர்த்து கதவு ஜன்னல்களை உடைத்து உள்நுழைந்து அலுவலகங்களைத் துவம்சம் செய்தனர். துப்பாக்கிப் பிரயோகங்களில் நான்கைந்து பேர் உயிரிழந்தனர். உள்ளே இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களையும் செனட்டர்களையும் சிரமத்தின் மத்தியில் பாதுகாப்பான இடங்களில் அலுவலர்கள் வைத்திருந்தனர். அமெரிக்க ஜனநாயகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட உள்ளூர் வன்முறைத் தாக்குதலாக இதனைக் கருதுகின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புத் தரப்பினரை அனுப்ப ட்ரம்ப் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
அத்துடன் அமெரிக்க அதிபரே தனது ஆதரவாளர்களின் வன்முறைகளை ஊக்குவிக்கும் விதமாக ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளை இட்டதனால் இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்க அதிபரின் கணக்குகளை முடக்கி விட்டன. வன்முறைகளை அவர் மேலும் தூண்டலாம் என்பதனாலே அவரது கணக்குகளை முடக்குவதாக ட்விட்டர் அறிவித்தது. டுவிட்டர் கணக்கைப் பயன்படுத்தியே அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தார். இப்போது அது நீக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அமெரிக்க அணுவாயுதங்கள் தொடர்பில் கட்டளை வழங்கும் அதிகாரம் அவரிடம் உள்ளது. பொறுப்புக்கூறும் தன்மையில்லாத ஒரு நபரிடம் அத்தகைய அதிகாரம் உள்ளமை ஆபத்தானது எனக் கூறப்படுகிறது. இதனால் துணை ஜனாதிபதி முன்வந்து அதிபர் தனது கடமைகளை செய்யும் தகுதியில் இல்லை எனப் பிரகடனப்படுத்தினால் நான்கு நாட்கள் அவர் கடமை புரியலாம் எனவும் அதன் பின்னர் ட்ரம்பை பதவி நீக்கும் நடவடிக்கையை ஆரம்பிக்கலாம் எனவும் அதற்கிடையில் 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவுள்ள ஜோ பைடன் பதவியேற்று விடலாம் எனவும் கருதப்படுகிறது. ஆனால் துணை ஜனாதிபதி அதனைச் செய்வாரா என்று தெரியவில்லை. ஆனால் நாளை திங்கட்கிழமை அமெரிக்க அதிபர் மீது நம்பிக்கை இல்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற பல வாரங்களுக்கு முன்னரே ட்ரம்ப் நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகளில் தனக்கு நம்பிக்கையில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தார். தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்னரே தாமே வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார். ஓவ்வொரு மாநிலமாக தேர்தல் முடிவுகள் வெளிவந்து எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட போது தாமே வெற்றி பெற்றதாகவும் தமது வெற்றி சட்டபூர்வமற்ற வாக்குகளால் சட்டவிரோதமாகக் களவாடப்பட்டு தட்டிப்பறிக்கப்பட்டதாகவும் தொடர்ச்சியாகக் கூறிவந்தார். நாடு பூராகவும் நீதிமன்றங்களில் தேர்தலில் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளதாகவும் வாக்குகள் மீள எண்ணப்பட உத்தரவிடுமாறும் கூறி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஆயினும் ஒவ்வொரு வழக்கிலும் போதிய நம்பகரமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க ட்ரம்ப் தரப்பு தவறிவிட்டது.
ட்ரம்பின் கற்பனையின் அடிப்படையிலேயே வழக்குகள் பதியப்பட்டன. வழக்குகளை விசாரித்த நீதிபதிகளில் பலர் ட்ரம்பினால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க தமக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கக்கூடும் என அவர் நம்பியிருக்கலாம்.
ஆயினும் அவ்வாறான ஒன்று இடம்பெறவில்லை என்பது அமெரிக்க நீதித்துறை நியாயமாகச் செயற்படுகிறது என்னும் நம்பிக்கையை ஊட்டுகிறது.
இந்நிலையிலேயே தேர்தல் முடிவுகளை அமெரிக்கக் காங்கிரஸ் அங்கீகரிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு கடந்த ஆறாந்திகதி நிகழ ஏற்பாடாகி இருந்தது. அதற்கு முன்தினம் தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த பெருங்கூடட்டத்தில் பேசிய அவர் தமது வெற்றி தட்டிப்பறிக்கபட்டுள்ளதால் அதற்கெதிராகத் தொடர்ந்து செயற்படப்போவதாக அறிவித்தார்.
அத்துடன் தேர்தல் முடிவுகளை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தி அறிவிக்கும் நிகழ்வை நடத்தக் கூடாதென அமெரிக்கக் காங்கிரஸ் அதிகாரிகளுக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
தமது கட்சியைச் சார்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகளை உறுதிசெய்யும் நிகழ்வை நடத்த ஒத்துழைக்கக் கூடாது எனவும் கூறியிருந்தார். ஆயினும் துணை ஜனாதிபதி உள்ளிட்ட அவரது கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களில் பலர் அதற்கு தயாராக இருக்கவில்லை.
இந்நிலையில் கெப்பிடல் எனப்படும் காங்கிரஸ் கட்டடத்தை ஆக்கிரமித்து நிகழ்வைத் தடுக்கப்போவதாக ட்ரம்பின் ஆதரவாளர்கள் சமூக வளைத்தளப்பதிவுகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு அதற்காக ஒன்று திரண்டிருந்தனர். எனவே கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச்சம்பவம் தற்செயலாக எதிர்பாரா விதமாக இடம்பெற்ற ஒன்றாக நிச்சயமாகக் கருதப்பட முடியாது. அது நன்கு திட்டமிடப்பட்டு பதவியிலிருக்கும் அமெரிக்க அதிபரின் பூரண ஆசீர்வாதத்துடன் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு வன்முறைத் தாக்குதலாகவே பார்க்கப்பட வேண்டும். தமது சொந்த அரசாங்கத்தின் மீதே வன்முறைத் தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபராக டோனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் பதியப்படுவார். தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்ட போது பாதுகாப்புக் கடமையில் இருந்தோர் செயற்பட்ட விதம் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோபைடன் நீதித்துறைக்கான புதிய நியமனங்களை மேற்கொண்டு உரையாற்றியபோது கெப்பிடல் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கறுப்பினத்தவர்களாக இருந்திருந்தால் பாதுகாப்புத் தரப்பினரின் நடவடிக்கைகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
அமெரிக்காவில் கறுப்பு உயிர்கள் முக்கியம் (black lives matter) என்னும் போராட்டத்தின் போது பாதுகாப்புத் தரப்பினர் நடந்து கொண்ட விதம் அதனால் பலியான உயிர்களின் எண்ணிக்கை என்பன வரலாற்றுப் பதிவுகளாகியுள்ள நிலையில் கெப்பிடல் தாக்குதலில் வெள்ளையின ஆதிக்கவாதம் தெளிவான வகையில் வெளிப்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. எதிர்வரும் இருபதாம் திகதி அமெரிக்க அதிபர் பதவியேற்பு நிகழவுள்ள நிலையில் பதினேழாந்திகதி புதிய தாக்குதல்கள் இடம்பெறலாமென சில தரப்புகள் கூறுகின்றன. கெப்பிடல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் தலைமைக் கட்டளையிடும் அதிகாரியே குற்றவாளிக் கூண்டில் நிற்பதால் என்ன செய்யலாமென திகைத்து நிற்கிறது அமெரிக்க ஜனநாயகம்.
உலக நாடுகள் அமெரிக்க சம்பவங்கள் குறித்து தமது கரிசனைகளையும் கவலைகளையும் வெளிப்படுத்தி வருகின்றன. நிலையற்ற நடத்தையுடன் நோய்வாய்ப்பட்ட மனநிலையில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளதாக கவலை தெரிவிக்கப்படுகிறது. சீனாவுடனான வர்த்தகப் போர், கொரோனா நோயைக் கையாண்ட விதம், தற்போது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவரது மனோநிலை என்பன அமெரிக்காவுக்கும் ஏனைய உலகநாடுகளுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சீனாவுடனான வர்த்தகப் போர் பொருளாதார ரீதியில் எல்லா நாடுகளையும் பாதித்துள்ளது.
உலகப்பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தமைக்கு அமெரிக்க அதிபரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளும் ஒரு முக்கிய காரணம்.
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் தான் என்ன செய்கிறோம் என்ன பேசுகிறோம் என்பது பற்றிய சுரணையோ பொறுப்புகூறல் பற்றிய அறிவோ இன்றி நடந்து கொள்வது அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, முழு உலகுக்கும் ஆபத்தானது. ஜனவரி இருபதாம் திகதி வரையில் அந்த ஆபத்தை சமாளிக்க வேண்டியிருக்கும். தேர்தல் தோல்வியின் பின்னர் பதவிவிலக மறுத்து வன்முறையின் ஊடாக அதிகாரத்தில் நீடித்திருக்க முயலும் தற்போதைய அமெரிக்க அதிபரின் மோசமான முன்னுதாரணத்தை ஏனைய உலகநாடுகளில் தலைவர்களாக உள்ள முரட்டு அரசியல்வாதிகளும் நிச்சயமாக பின்பற்றுவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம். சர்வதேச பொலிஸ்காரனாக அமெரிக்கா அவற்றுக்கெதிராக கரிசனை கொள்ளவோ கருத்துச் சொல்லவோ முடியாமல் போகும். அதனால் அமெரிக்கா இப்போது ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுசெய்ய முழுவீச்சில் செயற்பட்டாக வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் தமது செயல்களுக்கான பலனை நிச்சயம் அனுபவிக்க வேண்டியிருக்கும். முரட்டு அதிபரின் மோசமான முன்னுதாரணம்
கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்