அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ட்ரம்ப் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க ஜனநாயகத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்ட ட்ரம்ப்

அமெரிக்க புலனாய்வுத் துறையின் தகவலின் படி ஜோ பைடன் பதவியேற்கும் தினத்தில் ஆயுதப் போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள ட்ரம்பின் ஆதாரவாளர்கள் தயாராவதாக புலனாய்வுத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு உறுதிப்படுத்தியுள்ளனர். அதனை ஏற்றுக் கொள்ளும் விதத்திலேயே கடந்த பாராளுமன்றத் தாக்குதல் அமைந்திருந்தது. அமெரிக்க ஜனநாயகத்தின் அச்சமூட்டும் அத்தகைய நிகழ்வானது 1860 களிலும் 1874 களிலும் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளதன் தொடராகவே அமைந்துள்ளது. அது மட்டுமல்ல அமெரிக்காவின் உலகளாவிய அணுகுமுறையானது ஆக்கிரமிப்பு அரசியல் கலாசாரத்தையே கொண்டிருந்தது. இக்கட்டுரையானது  ட்ரம்ப் பதவிக்காலம் அமெரிக்காவிலும் உலகளாவிய ரீதியிலும் ஏற்படுத்திய தாக்கங்களை தேடுவதாக உள்ளது.

முதலாவது ட்ரம்பின் அரசியல் கொள்கைகள் முன்னுக்கு பின் முரண்பாடுடையதாக அமைந்திருந்தது. குறிப்பாக சீனாவைப் பொறுத்து ஆரம்பத்தில் அல்லது தேர்தல் காலத்தில் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய ட்ரம்ப் சீனாவுக்கு விஜயம் செய்ததுடன் தலைகீழாக மாறினார். மீளவும் சீனாவுடன் வர்த்தக ரீதியில் மோதிக் கொள்ள ஆரம்பித்த போது முற்றாக நிராகரிக்கும் அணுகுமுறையை உருவாக்கினார்.
இது அவரது இயல்பான போக்காக இருந்தாலும் அமெரிக்காவின் ஜனாதிபதி என்பவர் உலகளாவிய ரீதியில் முதல்தர மனிதனாகவே கணிக்கப்படுகிறவர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அத்தகைய முதல் தர மனிதனுக்கு நிகரான அணுகுமுறை எதனையும் ட்ரம்ப் கொண்டிருக்காதவராகக் காணப்பட்டார். அதனையே ரஷ்யாவுடனும் அயல் நாடுகளுடனும் கடைப்பிடித்தார். வடகொரியாவுடனான போக்கிலும் அதனையே காணமுடிகின்றது.

இரண்டாவது ட்ரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் இலாப நட்டக் கணக்கறிக்கை போன்றே காணப்பட்டது. ஒர் உலக வல்லரசு என்ற கணக்கினைக் கருத்தில் கொள்ளாது தனியார் கம்பனிக்கான கொள்கை போன்றே அமைந்திருந்தது. உலகளாவிய ரீதியில் நன்கொடைகளையும் கடன்களையும் மேற்கொள்ளும் போது அமெரிக்க வல்லரசு என்ற எண்ணத்தைக் கருத்தில் கொள்ளாது ஆபிரிக்க நாடு கடன் கொடுப்பது போன்ற அணுகுமுறையைப் பின்பற்றியிருந்தார். இது பெருமளவுக்கு அமெரிக்க பொருளாதார சிந்தனையை பலவீனப்படுத்துவதாகவே அமைந்தது. அது மட்டுமன்றி முறைகேடான விதத்தில் கடனையும் நன்கொடையையும் உக்ரேயினுக்கு வழங்கி தனது பதவியை தக்கவைக்க முயற்றதாக அமெரிக்க புலனாய்வுத் துறையே கண்டறிந்திருந்தது. இவ்வாறு ஒரு தவறான பொருளாதார கொள்கையினால் அமெரிக்காவை தேற்கடித்துள்ளதுடன் அமெரிக்கா பொருளாதாரத்தில் தலைமை தாங்கிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமையத்தை கலாவதியாக்கியமை உலக வர்த்தக மையத்தில் குழப்பம் ஏற்படுத்தியமை ஜி-7 நாடுகளுக்கிடையே ரஷ்யாவை முன்னிறுத்தி முரண்பட்டமை போன்றன அவரது தவறான கொள்கைகளால் பாதிப்படைந்தது.

மூன்றாவது உலகளாவிய சுற்றுச்சூழல் மகாநாட்டிலிருந்து வெளியேறியமை அதிக அதிர்வலைகளை தந்தது. தலைமைத்துவ நாடே வெளியேறியதனால் சீனா அதற்கு தலைமை தாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. பாரீஸ் மகாநாடு அமெரிக்காவின் கொள்கைகளுக்கு விரோதமானதாக அமைந்தாலும் அதற்கு தலைமை தாங்க வேண்டிய சக்தியாக அமெரிக்கா காணப்பட்டது. குறிப்பாக கொப்பன்ஹேகன் மகாநாடு ஒபாமாவின் தலைமைத்துவத்தின் கீழ் சரியான கையாளுகையாக அமைந்திருந்த போதும் அதனை சீர்குலைக்கும் போக்கினை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார் என்பது கவனத்திற்கு உரியதாகும். இயற்கையும் சுற்றுச்சூழலுமே மனித சமூகத்தின் அடுத்த பிரதான சவால் என்ற அடிப்படையில் செயல்படாத போக்கு அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு வழியமைப்பதாகவே தெரிந்தது.

நான்காவது மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியமை வரலாற்றில் அதிக பாதிப்பினை தந்துள்ளது. மனித உரிமை என்பது அமெரிக்காவைப் பொறுத்தவரை  ஓர் அரசியலாகும். அதனை முதன்மைப்படுத்தியே அமெரிக்கா உலக நாடுகளை கட்டுப்படுத்தியது. ஒரு வகையில் கூறுவதானால் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாட்டுத் தலைமைகளை அமெரிக்காவின் கட்டுப்பாட்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு மனித உரிமை எனும் ஆயுதமே பிரதானமாக அமைந்திருந்தது. மனித உரிமைகள் ஆட்சியாளரையும் அதிகாரத்தின் பலத்தையும் அமெரிக்காவுடனான உறவையும் தீர்மானிப்பதில் கரிசனை கொண்டிருந்தது. அதனால் அமெரிக்காவின் அரசியல் மீதான அச்சமும் நெருக்கடியும் மனித உரிமையை மீறும் தலைவர்களிடம் காணப்பட்டது. தற்போது அத்தகைய நிலை முற்றாகவே தகர்ந்து போனது. மறுவளமாகப் பார்த்தால் உலகத்தை வேறு சக்திகள் தமக்குரிய திசைக்கு இழுத்துச் செல்ல வழியமைத்துள்ளதாகவே தெரிகிறது. அதன் ஆபத்தினை உலகம் உணர ஆரம்பித்துள்ளது.

ஐந்தாவது அமெரிக்க இராஜதந்திரத்தின் தோல்விகள் அதிகமானவையாக தெரிகிறது. ஈரான், வடகொரியா மெஸ்சிக்கோ கியூபா போன்ற நாடுகளை கையாளுவதில் அதிக பலவீனத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தியிருந்தார். வெளிப்படையாக மோதி வெற்றி கொள்ள முடியாதவற்றை இரகசியமாகவும் உத்திகளுடனும் எதிர்கொள்வதே இராஜதந்திரமாகும். அனைத்து நாடுகளுடனும் ஒபாமா நிர்வாகம் இரகசியமாகவே மோதிக் கொண்டிருந்தது. வெளிப்படையாக நட்புறவு கொண்டியங்கியது. அதனை தகர்த்து வெளிப்படையாக மோதிவிட்டு பின்பு இரகசியமாக நகர முயன்று தோற்றுப் போன வரலாற்றையே ட்ரம்ப் விட்டுச் செல்கிறார். அது மட்டுமல்ல இஸ்ரேலுக்காக ஈரானின் இராணுவத் தளபதியை கொலை செய்தமை மற்றும் ஈரானுடன் அதீத மோதல் போக்கினை வெளிப்படுத்தியமை துருக்கியுடன் பகைத்துக் கொண்டமை என்பன இராஜதந்திரத் தவறாகவே தெரிகிறது. அதிலும் சுலைமானியைக் கொலை செய்ததற்கு உரிமை கோரியபோதே அமெரிக்க யுகம் அஸ்தமிக்க வழிவகுத்தது எனலாம்.

உலகளாவிய ரீதியில் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைகளின் கொலைகளுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்த போதும் அதனை ஒரு போதும் வெளிப்படையாக தெரிவிக்க முன்வரவில்லை. ஆனால் அந்தக் கொலைகளின் வடிவங்கள் சொல்லும் தகவலே அதனை எந்த நாடு எந்த நாட்டின் புலனாய்வுத் துறை மேற்கொண்டதென்பதை. தெரியப்படுத்தியது.

எந்த அமெரிக்க தலைவரும் அத்தகைய அநாகரிகத்தை வெளிப்படுத்துவதில்லை.ஆறாவது அமெரிக்காவின் அரசியல் கலாசாரத்தில் கட்சி வேறுபாடென்பது பெரிதான விடயமாக அமையாத போக்கொன்றை கடந்த காலம் முழுவதும் அவதானிக்க முடிந்தது. ஆனால் ட்ரம்ப்  பராக் ஒபாமாவினதும் ஜனநாயகக் கட்சியினதும் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட போக்கினை கடைப்பிடித்ததை காணமுடிந்தது. வடகொரியா, ஈரான், சிரியா மற்றும் சீனாவுடனான அமெரிக்க கொள்கையில் ஒபாமாவுக்கு விரோதமான போக்கினை கடைப்பித்தார் ட்ரம்ப். அதனை வெளிப்படையாகவே தெரிவித்துமிருந்தார். பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமையத்தினை மாற்றி இந்தோ-பசுபிக் தந்திரோபாயம் என வகுத்ததுடன் அதனை முழுமையாக அரசியல் தந்திரேபாயமாக மாற்றிய பெறுகை ட்ரம்ப்பைச்  சாரும். அதுவும் தற்போது நெருக்கடிக்குரியதாக மாறிவருகிறது.

ஏழாவது ஐஎஸ் ஆப்கானிஸ்தான் போராளிக் குழுக்கள் குர்த்திஸ் போராளிகள் அமைப்பு மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் எனும் எதிர்ப்பு வாதத்தை அமெரிக்கா முற்றாக கைவிட ட்ரம்ப் காரணமானவராக உள்ளார். அவரது அணுகுமுறைகள் எதிர்த்தரப்பு நாடுகளால் தோற்கடிக்கப்படுவதுடன் அத்தகைய அரசியல் உபாயத்தை அமெரிக்கா முன்னிறுத்த முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்கா தற்போது பலவீனமற்ற எதிர்ப்பு வாதங்களையே கொண்டியங்குகிறது.

அதனால் உலகளாவிய ஆதிக்கத்தையோ இருப்பினையோ பின்பற்ற முடியாது.

எட்டாவது ட்ரம்ப்பின் தோல்விக்கு முக்கிய காரணமான விடயம் ஆலோசனைகளையும் கொள்கை வகுப்பாளரது கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதாகும். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளர்களது எந்தக் கருத்தையும் உள்வாங்கத் தவறியதன் விளைவே அவரது ஆசிய ஆபிரிக்க நாடுகளுடனான அமெரிக்க கொள்கைகள் தோற்றுப் போனதாக முன்னாள் தேசியபாதுகாப்பு ஆலோசகர் சார்ள்ஸ் மில்லர் குறிப்பிடுகின்றார்.

எனவே விடைபெறும் ட்ரம்ப்ன் அரசியல் பொருளாதார இராணுவ கொள்கைகள் அனைத்துமே அமெரிக்காவுக்கு ஆபத்தானதாகவே அமைந்துள்ளது. தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தையும் தக்கவைக்க முடியாதவராகவும் அமெரிக்காவின் சரிவை தடுக்க முடியாதவராகவும் ஜனநாயக விரோதியாகவும் விடைபெறும் துயரத்தை அனுபவமாக உலகத்திற்கு விட்டுச் செல்கிறார்.

அமெரிக்கர்கள் மட்டுமல்ல உலகத்தவரும் மிக மோசமான தலைவராக கணித்துள்ளனர். அதிலும் தென்பூகோள நாடுகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் அமெரிக்க ஆதிக்கமோ ஏகாதிபத்தியத்திற்கான நீட்சியோ சாத்தியமற்ற சூழலை ஏற்படுத்துவதன் பங்காளராக ட்ரம்ப் காணப்படுகிறார் என்ற செய்தியை விட்டுச் செல்கிறார். ஆனால் அதன் விளைவாக எழப்போகும் புதிய ஆதிக்க சக்தியின் தெரிவுகள் அமெரிக்காவை விட மோசமானதாக அமைய வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இருந்தாலும் பராக் ஒபாமா தனது வாக்களிக்கப்பட்ட நிலம் எனும் நூலில் குறிப்பிட்டது போல் உலக அரசியலில் ரஷ்யா சீனாவினது செல்வாக்கு அதிகரித்துள்ளது என்ற வாதம் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் வலுப்பெற்றுள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments