![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/02/28/a16.jpg?itok=k6dc5ee9)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் இலங்கை விவகாரம் முக்கிய பேசு பொருளாகியிருப்பதால் அனைவரது கவனமும் அங்கு குவிந்துள்ளது.
மனித உரிமை விடயங்களில் சர்வதேசத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றத் தவறி விட்டதாகக் கூறி இலங்கை அரசுக்கு எதிராக மீண்டுமொரு பிரேரணையொன்றைக் கொண்டுவருவதற்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் முனைப்புக் காட்டியுள்ளமை ஜெனீவா களத்தை இம்முறை சூடுபிடிக்கச் செய்துள்ளது.
இலங்கையின் நிலைமை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் பச்லட் அறிக்கையொன்றை முன்வைத்திருந்ததுடன், இதற்கு இலங்கை அரசாங்கம் பதிலும் வழங்கியிருந்தது.
கடந்த 22ஆம் திகதி கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் உரையாற்றியிருந்த போதும், இலங்கை குறித்தோ அல்லது எந்தவொரு நாட்டையுமோ தனிப்பட்ட ரீதியாகக் குறிப்பிட்டுக் கூறவில்லை. இது ஒரு தரப்பினருக்கு ஏமாற்றமாக இருந்த அதேசமயத்தில், கொவிட்19 தொற்றுநோய் சூழலைக் கட்டுப்படுத்தும் விடயம் குறித்த பொதுவான நிலைப்பாட்டை அவர் கூறியிருந்தார்.
இலங்கைக்கு எதிராகப் பிரேரணையொன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் தமிழ்த் தரப்புக்களும், அவ்வாறு கொண்டு வரப்படக் கூடிய பிரேரணையை எதிர்ப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் கடுமையான பிரயத்தனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்பொழுது உலகில் நிலவுகின்ற கொரோனா தொற்றுநோய் சூழல் காரணமாக, நேரடியாக ஜெனீவா செல்லாது ‘ஒன்லைன்’ மூலம் இணைந்து கொண்ட வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைத்திருந்தார்.
இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படக் கூடிய பிரேரணையை எதிர்ப்பதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தனது உரையில் முன்வைத்திருந்தார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தனது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
'இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையானது, கடந்த ஆண்டு இந்த சபையின் 43வது அமர்வில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகுவதாக அறிவித்த தீர்மானம் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து வெளிவருகின்றது.
சுயமரியாதை, இறையாண்மை கொண்ட நாட்டிற்கு, முக்கியமாக ஆட்சி தொடர்பான பல பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு விடயங்களை உள்ளடக்கி, நியாயமற்ற முறையில் தனது நோக்கத்தை விரிவுபடுத்தி ஆணையிட்டுள்ள உயர் ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது. இது ஐ.நா. சாசனத்தின் 2 (7) வது பிரிவான 'தற்போதைய சாசனத்தில் உள்ள எதுவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எந்தவொரு அரசினதும் உள்நாட்டு அதிகார எல்லைக்கு உட்பட்ட விடயங்களில் தலையீடு செய்வதற்கு அங்கீகாரம் அளிக்காது' ஐ முழுமையாக மீறும் செயலாகும்.
பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் தொடர்பாக வெளிவந்த பாதையானது, இலங்கைக்கு எதிராக இடைவிடாமல் தொடர்ந்த முன்கூட்டிய, அரசியல்மயப்படுத்தப்பட்ட மற்றும் பாரபட்சமற்ற சில கூறுகளின் நிகழ்ச்சி நிரலைப் பிரதிபலிக்கின்றது. இந்தப் பரிந்துரைகள் தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமைந்தவை. உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ள முடிவுகளையும், பரிந்துரைகளையும் இலங்கை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது.
முப்பது ஆண்டுகளாக வெளியிடப்படாத மற்றும் அவற்றுள் சில உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் தக்கவைக்கப்பட்டு, அணுகுவதற்கு மறுக்கப்பட்டிருந்த ஆதாரங்களின் அடிப்படையில், குறிப்பாக ஐ.நா மற்றும் அதன் பொறிமுறைகளுடன் தொடர்ச்சியாகவும் ஆக்கபூர்வமாகவும் ஈடுபட்டு வரும் இலங்கை போன்ற ஒரு நாடு தொடர்பாக, சொத்து முடக்கம், பயணத் தடைகள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிய குறிப்புக்கள் மற்றும் தனிப்பட்ட அரசுகள் உலகளாவிய அதிகார வரம்பைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கான அழைப்பானது, சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாகக் கவனிக்க வேண்டிய ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த ஆபத்தை சுட்டிக் காட்டுகின்றது.
சில நாடுகளின் இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவையும், மற்றும் இயற்கை நீதியின் கொள்கைகளை மீறுவதுமாகும்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்திற்கும் மேலதிகமாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தவறான தகவல்கள், தவறான கருத்துக்கள் மற்றும் தன்னிச்சையான மதிப்பீடுகள் குறித்து இலங்கை எழுத்துபூர்வ கருத்துகளை வழங்கியுள்ளது. உயர் ஸ்தானிகர் அலுவலகம் தனது அறிக்கையை முன்னெப்போதும் இல்லாத பிரசாரத்துடன் இணைந்து வெளியிட்டமை மற்றும் குறித்த அறிக்கை தொடர்பான எமது கருத்துகளை ஒரு துணை நிரலாக வெளியிட மறுத்தமை ஆகியன வருத்தமளிக்கின்றன. இது இலங்கையையும், அறிக்கை குறித்த இலங்கையின் கருத்துகளை சமமாகக் காணும் உறுப்பினர்களையும் இழந்துள்ளது.
அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக நாங்கள் வருந்துகின்றோம். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.'
இவ்வாறு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தார்.
தம் மீது அதாவது இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வெறுமனே அரசியல் நோக்கத்துக்காக முன்வைக்கப்படுகின்றன என்பதையே அமைச்சரின் இந்த உரை எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கை அரசாங்கம் தனக்கு ஆதரவாக ஏற்கனவே பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதுடன், இதுவரையில் 21 நாடுகளின் ஆதரவைப் பெற்றிருப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. அமைச்சரின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எதிர்ப்போம் என அந்த 18 நாடுகளும் உறுதியளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நாடுகளில் சீனாவும் உள்ளடங்குவதாகத் தெரியவருகிறது. இருந்த போதும் அயல் நாடான இந்தியா தனது நிலைப்பாட்டை இதுவரை திட்டவட்டமாகக் கூறவில்லை. எனினும், இலங்கை அரசாங்கத்துக்கு சார்பானதாக அதன் நிலைப்பாடு இருக்கும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாக இருக்கின்றது.
இவ்வாறானதொரு நிலையிலேயே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயம் அமைந்திருந்தது. அவரின் ஊடாக முஸ்லிம் நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு இலங்கை முயற்சிகளை எடுத்திருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம் காணப்படுகின்றன.
இலங்கை அரசாங்கம் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்தது மாத்திரமன்றி, தமக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ்த் தரப்புக்கள் அரசுக்கு எதிரான பிரேரணையை வலுப்படுத்துவதற்கான ஆதரவைத் திரட்டுகின்றன.
தமிழ் அரசியல் கட்சிகள் பல ஒன்றிணைந்து பிரேரணையொன்றைக் கோரி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தமை நாம் ஏற்கனவே அறிந்த விடயம். இது தவிரவும், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சிலர் தனியாகச் சென்று சந்தித்து ஆதரவு கோருகின்றனர்.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படவிருக்கும் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் அழுத்தமொன்றைக் கொடுப்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் தரப்பில் பகீரதப் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்படுகின்றமையையே இந்த சந்திப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
யுத்தம் முடிவடைந்து 11 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏதோவொரு வழியில் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்து சர்வதேசத்தின் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். அதனாலேயே 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் ஒவ்வொரு செப்டெம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் ஜெனீவாவின் மீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர்.
மக்களின் எதிர்பார்ப்பு இவ்வாறிருக்கையில், அங்கு நடக்கும் விடயங்களைப் பார்க்கும் போது சர்வதேச நாடுகளின் சதுரங்க ஆட்டம் போலவே ஊகிக்க முடிகின்றது. குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஏற்படுகின்ற ஆட்சி மாற்றங்களுக்கு அமைய ஜெனீவாவில் சர்வதேச நாடுகளின் பிடிகள் இறுகுவதையும், தளர்வதையும் அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.
‘நல்லாட்சி’ எனக் கூறிக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் நீதியைப் பெற்றுத் தருவதாகக் கூறியதால், அவர்கள் மீதான பிடியை சர்வதேசம் தளர்த்திக் கொண்டிருந்தது. இன்று இலங்கைக்கு எதிராகக் கடுமையான பிரேரணையொன்றைக் கொண்டு வர வேண்டும் எனக் கோரி சர்வதேச பிரதிநிதிகளைச் சந்திக்கும் தமிழ் அரசியல்வாதிகளே, நல்லாட்சிக் காலத்தில் அரசின் மீதான சர்வதேச பிடியைத் தளர்த்துவதற்காக சர்வதேச பிரதிநிதிகளைச் சந்தித்ததை தமிழ் மக்கள் மாத்திரமன்றி எவருமே இலகுவில் மறந்து விட முடியாது.
மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் உளமார்ந்த எண்ணமாக இருந்திருந்தால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு உரிய சர்வதேச அழுத்தத்தைக் கொடுத்து மக்களின் அபிலாஷைகளை அன்று நிறைவேற்றிக் கொடுத்திருக்க வேண்டும்.
எனினும், நல்லாட்சி அரசாங்கம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொடுப்பதற்கு வேளாவேளைக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுத்ததைத் தவிர எவ்வித தீர்வையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தமிழ் மக்களுக்கு அன்று பெற்றுக் கொடுக்கவில்லை.
இவ்வாறான அரசியல் பின்னணியிலேயே புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கத்துக்கு எதிரான சர்வதேச அழுத்தம் இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலைமை மீண்டும் இப்போது ஏற்பட்டுள்ளதைக் காண முடிகின்றது.
ஒவ்வொரு மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச ரீதியில் தீர்வொன்றைப் பெற்றுத் தந்து விடுவோம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்குவதைத் தவிர, தமிழ் தரப்புக்கள் வேறு எதனையும் சாதித்திருக்கவில்லை.
மறுபக்கத்தில் தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான சமிக்ஞைகளைக் காண்பிப்பதே சர்வதேசத்தின் அழுத்தத்தைக் குறைப்பதற்கு இவ்வேளையில் உறுதுணையாகவிருக்கும்.
சர்வதேச அழுத்தங்கள் மாத்திரமன்றி, நாட்டில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்த முயற்சிகள் பாரியதொரு உந்துசக்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.