சீனாவுக்கு எதிரான குவாட் நாடுகளது உரையாடல் இந்தோ-பசுபிக் உபாயத்தை வலுப்படுத்துமா? | தினகரன் வாரமஞ்சரி

சீனாவுக்கு எதிரான குவாட் நாடுகளது உரையாடல் இந்தோ-பசுபிக் உபாயத்தை வலுப்படுத்துமா?

அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்த பின்பு ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான், சிரியாவுக்கு எதிராக செயல்பாடு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதில் அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா, இந்தியா, தென் கொரியா ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் இணைந்துள்ளது. குறிப்பாக ரஷ்யா மீதான எதிர்ப்பு அரசியலை முதன்மைப்படுத்திக் கொள்ளும் அமெரிக்கா சீனாவுடன் இராஜதந்திர ரீதியாக செயல்பட ஆரம்பித்துள்ளது.

அலாஸ்காவில் சீனாவுடனான வர்த்தக உறவை மீளமைப்பது தொடர்பில் பேச்சுக்களை நிகழ்த்தும் அமெரிக்கா குவாட்  என அழைக்கப்படும் நாடுகளுடனான உரையாடல்  சீனாவுக்கு எதிரான திசையில் திரும்பியுள்ளது. அது மட்டுமன்றி பிரிட்டன் பிரதமர் இந்தியாவுக்கும் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஜப்பான் மற்றும் தென்கொரியாவுக்கும் அடுத்து வரும் வாரங்களில் விஜயம் செய்யவுள்ளமை கவனத்திற்குரியதாகும். இக்கட்டுரையும் அமெரிக்கா தலைமையிலான இந்தோ-பசுபிக் தந்திரேபாயத்திற்கான நகர்வுகளையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக உள்ளது.

ஆசியாவின் நேட்டோ என அழைக்கப்படும் குவாட் நாடுகளது காணெலி உரையாடல்  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் கடந்த 12.03.2021 இல் நிகழ்ந்துள்ளது. அத்தகைய சந்திப்பினை Quadrilateral Secretary Dialogic  எனும் வரைபின் கீழ் நிகழ்த்தியுள்ளன. ஜோ பைடன் பதிவியேற்ற பின்பு நிகழும் முதல் குவாட் நாடுகளது சந்திப்பு என்ற வகையில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக அமைந்துள்ளது. அதாவது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதில் ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஜப்பான் பிரதமர் ஜோசிகைட் சூகா அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டு உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள் சீனாவுக்கு எதிரானதாகவே உள்ளது. அதனை விரிவாக நோக்குவோம்.

ஒன்று, சீனாவினது பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்துவது. அதாவது கொவிட்-19 இன் பின்பான காலப்பகுதியில் சீனாவின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை அடைந்துவருகிறது. அதன் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு ஏற்றுமதியை முதன்மைப்படுத்தியுள்ளது. அதனால் அதன் தேசிய உற்பத்தியின் பெருக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதனை தடுத்து நிறுத்துவது அவசியமானது என்பதுடன் அதற்கான உத்திகள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது.

இரண்டு, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அரியவகை தாதுப் பொருட்களை மட்டுப்படுத்துவது பற்றியும் அந்த காணொலி ஊடான  சந்திப்பில் உரையாடப்பட்டுள்ளது. அதாவது இறக்குமதியின் அளவு மட்டுப்படுத்துவதுடன் அதன் முக்கிய இறக்குமதிகளை மட்டுப்படுத்தாது விட்டால் உலகம் முழுவதும் சீனாவின் சந்தையாக வாய்ப்புள்ளது என்ற விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மூன்று, இந்தியாவினது தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறையை அதிகரிப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக, சீனாவின் பொருட்களுக்கு நிகரான சந்தையை கைப்பற்றும் வலு இந்தியா சார்ந்தே உள்ளது எனவும் அதற்குதரிய தொழில்நுட்பத்தினை உருவாக்குவதன் வாயிலாக சீனாவின் சந்தைகளை கைப்பற்ற முடியும் எனவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

நான்கு, இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகளிடையே  பலதரப்பு உறவினை வளர்க்க வேண்டும் எனவும் இந்த நாடுகளுக்கிடையே மிக நெருக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஜோ பைடன் வலியுறுத்தியதுடன் அதற்கான நட்பு நாடுகளுக்கிடையிலான உறவினை பலப்படுத்தும் பொருளாதார வர்த்தக இராணுவ விடயங்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அத்தகைய சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

ஐந்து, கொவிட் -19 இன்  பின்பாக உலகம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி,  காலநிலை நெருக்கடி என்பன பற்றிய உரையாடல் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து விடுபடுவதற்கான விடயங்களையும் கலந்துரையாடியுள்ளனர்
ஆறாவது, சீனாவின் பாதுகாப்பு வளர்ச்சியை தடுப்பதுடன் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அச்சுறுத்தலை கையாள்வது தொடர்பிலும் குவாட் நாடுகள் கலந்துரையாடியுள்ளன.

குறிப்பாக இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் கடலாதிக்கமும் இராணுவ பிரசன்னமும் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்ட குவாட் நாடுகள் அதனை கூட்டாக எதிர் கொள்வதற்கான முயற்சிகளை அமெரிக்கா தலைமையில் எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளன. தென்சீனக்கடல் மற்றும் இந்திய எல்லைப்பகுதி என்பன முக்கியமான விடயங்களாக அமைந்ததுடன் தைவான் ஹொங்கொங் போன்ற பிராந்தியங்களது சீனாவின் நடவடிக்கைகளும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது..

இவ்விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விவாதிக்கப்பட்டபோது குவாட் நாட்டுத் தலைவர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களையும் நோக்குவது அவசியமானது. குறிப்பாக அவுஸ்ரேலியப் பிரதமர் இது ஒரு வரலாற்று நிகழ்வு என்றும் இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகளின் இறைமை மற்றும் சுதந்திரம் பற்றிய  பலமான செய்தியையும் ஒத்துழைப்பினையும் தந்துள்ளது என்கிறார். அவ்வாறே ஜப்பானியப் பிரதமர் குறிப்பிடும் போது தென் மற்றும் கிழக்கு சீனக்கடலின் தனியாதிக்கத்தை ஏற்படுத்த விளையும் சீனாவுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது என்கிறார். அதே போன்று இந்தியப் பிரதமர் தெரிவிக்கும் போது சுதந்திரமானதும் திறந்ததுமான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதற்கான பரிமாற்றங்களை நோக்கி முகாமை செய்வதனை இம்மகாநாடு சாத்தியப்படுத்தியுள்ளது என்றார்.

இது மட்டுமன்றி இந்தியா சீனாவுக்கு மாற்றீடான பொறிமுறையொன்றினை உருவாக்கி கொவிட் தொற்றுக்கான நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில் பிராந்திய நாடுகளிடையே தடுப்பூசியை வழங்கி அவற்றுடனான உறவை பலப்படுத்திவருகிறது. இதனால் பிராந்திய நாடுகளுடன் நெருக்கமான உறவையும் நட்பினையும் ஏற்படுத்திவருகிறது. அண்மையில் பாகிஸ்தானுக்கு தடுப்பூசியை இலவசமாக  வழங்க முன்வந்துள்ளதாக தெரியவருகிறது. இதனால் பிராந்திய நாடுகளுக்கிடையே தடுப்பூசி இராஜதந்திரத்தை  பிரயோகிப்பதில் வெற்றி கண்டுள்ளதாக தெரியவருகிறது. தனித்து பிராந்திய நாடுகள் மட்டுமல்ல தென்பூகோள நாடுகள் மத்தியிலும் உலகளாவிய ரீதியிலும் இந்தியாவினது மனிதாபிமான நடவடிக்கைகளை நாடுகளும் ஐ.நா. சபையும் கௌரவித்து வருகிறது. இந்தியாவின் அணுகுமுறையை குவாட் நாடுகள் அங்கீகரித்துள்ளதையும் குறிப்பிடுதல் அவசியமானது. அந்த வகையில் குவாட் நாடுகளது நகர்வுகள் வெளிப்படுத்தும் விடயங்களாக பல காணப்படுகின்றன.

முதலாவது, சீனாவிற்கு எதிரான அணி திரட்டலை மையப்படுத்தியே குவாட் நாடுகளது உரையாடல் அமைந்துள்ளது. சீனாவின் பொருளாதார எழுச்சியையும் இராணுவ வளர்ச்சியையும் பிராந்திய அடிப்படையிலும் சர்வதேச தளத்திலும் எதிர் கொள்ளும் உபாயமாகவே குவாட் சந்திப்பு அமைந்துள்ளது. அதனால் நாடுகளது பொருளாதார திட்டமிடல்களும் அதற்கான அணிகளும் அமைக்கப்பட்டதுடன் அதனை அடிப்படையாகக் கொண்டு இந்தோ-பசுபிக் நாடுகளது பாதுகாப்பினையும் பொருளாதாரத்தையும் உருவாக்க முனைகிறதைக் காணமுடிகிறது. அத்தகைய உருவாக்கம் என்பது சீனாவுடனான இந்தோ-பசுபிக் நாடுகளது நெருக்கத்தினை தகர்ப்பதாகவே தெரிகிறது

இரண்டாவது, தடுப்பூசி இராஜதந்திரத்தை இந்தியா மேற்கொண்டது போல் பொருளாதார மற்றும் இராணுவ விடயங்களில் குவாட் நாடுகளது நகர்வுகளை சீனாவுக்கு எதிரான கூட்டு இராஜதந்திர ரீதியில் செயல்படுத்த அமெரிக்கா திட்டமிடுகின்றது. அதற்கு அமைவாக இப்பிராந்திய நாடுகளது பொருளாதாரத்திலும் இராணுவத்திலும் கரிசனை கொள்ள ஆரம்பித்துள்ளது. கடந்த வாரங்களில் தென் சீனக் கடலிலும் ஈரான் வான்பரப்பிலும் இத்தகைய கூட்டு ரோந்து நகர்வுகளை அமெரிக்கா தனது தலைமையில் மேற்கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கதாகும்.

மூன்றாவது, அமெரிக்கா ஒரே நேரத்தில் சீனாவுடனான பேச்சுவார்த்தையை நிகழ்த்திக் கொண்டு மறுபக்கத்தில் சீனாவுக்கு எதிரான அணியை பலப்படுத்திவருகின்றது.

வர்த்தக ரீதியான உறவை மீளமைக்க்கப் போவதாக கூறிக்கொள்ளும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசியல் ரீதியில் பதிவு செய்துவருகிறது. குறிப்பாக தைவான் ஹொங்கொங் மற்றும் எக்ஸ்சின்ஜாங் மாகாண முஸ்லிம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து பேச்சுக்களை நடாத்திவருகிறது. பதிலுக்கு சீனாவும் அமெரிக்க கறுப்பர்களது உரிமை பற்றிய விடங்களை அமெரிக்காவுக்கு எதிராக பேச்சுக்களில் முதன்மைப்படுத்தி வருகிறது.

நான்காவது சீனாவை நெருக்கடிக்குள்ளாக்குவது போல் அமெரிக்கா ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீதும் அதிக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. ஜோ பைடன் புட்டினை கொலைகாரன் என்று குறிப்பிடும் அளவுக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அதாவது ரஷ்யா ஜோ பைடனுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிவருகிறது. அமெரிக்கா தனது புலனாய்வுத் துறையின் பலவீனத்தை மறைப்பதற்கும் போலியான ஜனநாயகப் பண்புகளால் விரக்கியிலுள்ள மக்களது எண்ணங்களை கண்டு கொள்ளாது இருப்பதற்காகவும் பிற நாடுகள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது. இதுவே அமெரிக்க வல்லரசின் இயல்பாகவுள்ளது. உலகம் முழுவதும் இத்தகைய செய்முறையையே அமெரிக்கா கொண்டிருகிறது.

எனவே குவாட் நாடுகளது அரசியல் பொருளாதார இராணுவ உத்திகளை வெளிப்படுத்தும் காணொளி மகாநாடு சீனாவுக்கு எதிரானதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் இருந்து சீனாவை வெளியேற்றுவதை இலக்காகக் கொண்டே குவாட் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சீனாவும் குவாட் அமைப்பின் நகர்வுகளை கண்காணிப்பதாக குறிப்பிட்டுள்ளது.ஜோ பைடனின் வருகை சீனாவுக்கு எதிரான அணியினரை பலப்படுத்திவருகிறது.

கலாநிதி 
கே.ரீ.கணேசலிங்கம் 
யாழ். பல்கலைக்கழகம்

Comments