உலகளாவிய அரசியலில் மீளவும் வடகொரிய விடயம் முதன்மை பெற ஆரம்பித்துள்ளது. அதிலும் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்பு அமெரிக்க-, வடகொரிய அரசியல் அதிக முக்கியத்துவம் பெறுகின்ற தொன்றாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும் போது வடகொரியாவுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை முறிவடைந்த போதும் இரு நாட்டுக்குமான புரிந்துணர்வு நிலவியது. அமெரிக்க ஆட்சி மாற்றம் வரையும் இரு நாட்டுக்குமான உறவு சுமூகமானதாகக் காணப்பட்டது. இத்தகைய சுமூக நிலைக்கு அமெரிக்க நிர்வாகத்தின் அணுகுமுறையே பிரதான காரணம் எனக் கூறப்படுகிறது. அதிலிருந்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடகொரிய, -அமெரிக்க அரசியல் நகர்வுகள் அமைந்துள்ளன. இக்கட்டுரையும் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்பான அமெரிக்க, வடகொரிய உறவினை தேடுவதாக அமையவுள்ளது.
கடந்த 25.03.2021 அன்று வடகொரியா ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையா என்பதில் குழப்பம் நிலவுவதாக ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின. அதே நேரம் இத்தகைய பரிசோதானைக்கு முன்பு இரு குறுந்தூர ஏவுகணைகளை வட கொரியா பரிசோதித்ததாக தெரியவருகிறது. கப்பலில் இருந்து ஏவப்படும் குறுந்தூர ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது. இவை எதுவும் ஐக்கிய நாடுகள் சபையின் தடைக்கு உட்படாதவை என்பதனால் அதிக நெருக்கடியை வடகொரியாவுக்கோ அயல் நாடுகளுக்கோ ஏற்படுத்தவில்லை. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் பிரகாரம் வடகொரியா அச்சுறுத்தல் விடுக்கக் கூடியதாக கருதப்படும் தடைசெய்யப்பட்ட ஏவுகணையை பரிசோதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதனை தென் கொரியாவும் ஜப்பானும் உறுதிப்படுத்தியிருப்பதுடன் அமெரிக்க புலனாய்வுத் துறையும் தெளிவுபடுத்தியுள்ளது. ஜப்பானியக் கடலில் இவ்விரு ஏவுகணைகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவும் ஜப்பானும் தெரிவித்துள்ளன. ஜப்பானும் தென்கொரியாவும் இத்தகைய வடகொரியாவின் நடவடிக்கையைக் கண்டித்ததுடன் பாதுகாப்புச் சபை நாடுகளுடன் உரையாடிவருகின்றன.
ஆசிய-பசுபிக் பிராந்திய படைகளை கண்காணிக்கும் இராணுவக் கட்டளைப்பிரிவானது வடகொரியாவின் சட்டவிரோத ஆயுத நிகழ்ச்சித் திட்டமானது பிராந்திய நாடுகளை அச்சுறுத்துவதுடன் சர்வதேசத்தின் அமைதியைக் குலைப்பதாக தெரிவித்துள்ளன. குறுந்தூர ஏவுகணையை பரிசோதித்த நான்கு நாட்களில் இத்தகைய நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா பரிசோதித்துள்ளது கவனிக்கத்தக்கதாகும். குறுந்தூர ஏவுகணைப் பரிசோதனை ஒரு அச்சுறுத்தல் இல்லை என ஜோ பைடன் கருத்து வெளியிட்ட குறுகிய காலத்தில் வடகொரியா அடுத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வட கொரியா செயல்பட்டமைக்கு தெளிவான நோக்கம் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
ஒன்று தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து இப்பிராந்தியக் கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளவுள்ள கடல்பயிற்சியை எச்சரிக்கும் விதத்தில் வடகொரியாவின் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக ட்ரம்ப் நிர்வாகம் கைவிட்ட இரு நாட்டுக்குமான கடற்படைப் பயிற்சியை மீளவும் ஜோ பைடன் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளமை கவனத்திற்குரியதாகும். அத்தகைய நடவடிக்கையை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதும் வடகொரியா, அதனை எதிர்கொள்வதற்கு தயாராகின்றது. ஜப்பான் தென்கொரியா அமெரிக்காவுடன் இணைந்து வடகொரியா மீது தாக்குதல் நிகழ்த்தலாம் என்ற அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. அத்தகைய தாக்குதல்கள் பல வட, தென் கொரியார்களுக்கிடையில் பல தடவை நிகழ்ந்துள்ளது. அதனால் வடகொரியா எப்போதும் தனது பாதுகாப்பினை முதன்மைப்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. அதன் அணுவாயுத பலமும் அத்தகைய எச்சரிக்கை யுடனேயே உருவானது. அதுவே வடகொரியாவின் பாதுகாப்பாக தற்போதுள்ளது என்பதை நிராகரித்துவிட முடியாது.
இரண்டு தென் சீனக்கடல் பகுதியில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன. அதனை திசைதிருப்பவும் அதற்கு பதில் நெருக்கடி கொடுக்கவும் வடகொரியா முயல்வதைக் காணமுடிகிறது. ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்பு தென் மற்றும் கிழக்கு சீனக்கடல் பகுதிகளில் அமெரிக்க கப்பல்களது நடமாட்டம் அதிகரித்துவருகிறதை அவதானிக்க முடிகிறது. அதன் மூலம் சீனா மட்டுமல்ல வடகொரியாவும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. அத்தகைய முயற்சியை மட்டுப்படுத்தவும் பதில் வழங்கவும் வடகொரியா நீண்ட தூர இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை பரிசோதித்திருக்க வாய்ப்புள்ளது.
மூன்று இந்தோ-,பசுபிக் நாடுகளது பிராந்தியத்தை நோக்கி சீனாவும் அமெரிக்காவும் அதிக பிரயத்தனம் கொண்டுள்ளன. அதில் அமெரிக்கா தனியான படைப்பிரிவை அமர்த்தி இப்பிராந்தியத்தை கண்காணித்து வருகிறது. அத்தகைய படைப்பிரிவின் ரோந்து நடவடிக்கையும் நகர்வுகளும் வடகொரியாவின் இருப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதுடன் குவாட் நாடுகளது ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகிறது. அதிலும் ஜோ பைடன் பதவியேற்ற பின்பு அத்தகைய நடவடிக்கை அதிகரித்துள்ளது. அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய நிலைக்குள் வடகொரியாவும் சீனாவும் தள்ளப்பட்டுள்ளன. சீனாவின் நெருக்கமான நட்பு நாடான வடகொரியா அமெரிக்காவின் நகர்வுகளை தகர்க்கும் உத்திகளை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனை இப்பிராந்தியத்தில் பலதடவை அவதானிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. சீனா, வடகொரியாவையும் வடகொரியா, சீனாவையும் பாதுகாக்கும் பொறிமுறையைக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது. அதனுடைய நீட்சியே தற்போதைய நகர்வுமாகும். அமெரிக்கா எப்படி தென்கொரியாவையும் ஜப்பானையும் கையாளுகிறதோ அதே போன்றே சீனாவும் செயல்படுகின்றது. இத்தகைய அரசியல் உபாயம் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருப்பதை காணலாம்.
நான்கு அமெரிக்காவின் இன்னொரு சவால் வடகொரியாவுக்கு ஜோ பைடன் காலத்தில் ஏற்பட்டுள்ளது. கடந்த காலத்திலும் போர் கொதிநிலையுடன் தொடங்கிய அமெரிக்க -வடகொரிய அரசியல் சமாதானம் மூலம் முடிபுக்கு வந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் வடகொரியாவின் அணுவாயுத பலமேயாகும். அத்தகைய அணுவாயுதத்தை நீண்ட தூர ஏவுகணையில் பரிசோதித்து வெற்றி கொள்வதே வடகொரியாவின் பாதுகாப்புக்கு சாதகமானது என்பதை கிம்-ஜோங்-உன் உணராமலில்லை. அதனை நோக்கியே வடகொரியாவின் நகர்வு காணப்படுகிறது. தற்போது பரிசோதித்த ஏவுகணை தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் உண்டு. அது குறுந்தூர ஏவுகணை அல்லது ஆட்லரி செல் போன்ற ஏதோவெரு ஆயுதம் என ஆரம்பத்தில் அமெரிக்கத் தரப்பு அறிவித்திருந்தது. பின்பே ஜப்பான் தென்கொரியா எச்சரித்த பின்பே அது நீண்ட தூர ஏவுகணை என அமெரிக்கா அறிவித்துள்ளது. அவ்வாறு பார்க்கும் போது வடகொரியாவிடம் உள்ள ஆயுதங்கள் தொடர்பில் தெளிவான தகவல் அமெரிக்க புலனாய்வுத் துறையிடமே கிடையாது. காரணம் வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தொடர்பில் ஜோ பைடனிடம் பத்திரிகையாளர் கேட்ட போது வேடிக்கையாக சிரித்திருந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஐந்து ஜப்பானும் தென்கொரியாவும் இராணுவ ரீதியில் வலுவடைகின்றதைக் காணமுடிகிறது. இது வடகொரியாவின் பாதுகாப்புக்கு அதிக ஆபத்தானதாகவே அமைய வாய்ப்புள்ளது. அதனால் வடகொரியாவும் அந்த நாடுகளுக்கு ஏற்ப ஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயல்படுகின்ற போக்கே ஏவுகணைப் பரிசோதனையாகும். குறிப்பாக ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவீனத்தை வேகமாக அதிகரித்து செல்வதுடன் இராணுவத்தினை பெருக்கவோ ஆயுதங்களை கொள்வனவு செய்து பெருக்கவோ முடியாது என்ற அரசியலமைப்பு விதிகளை ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் போதே நீக்கிவிட்டது. இதனால் அதிக அச்சுறுத்தல் வடகொரியாவுக்கு ஏற்பட்டுள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தடுப்பு அரணாக ஜப்பான் மாறிவருகிறது. ஒக்கினாவா மட்டுமல்ல ஜப்பானே பெரும் இராணுவ வலிமையுடைய நாடாக விளங்குகிறது.
எனவே வடகொரியாவின் ஏவுகணை பரிசோனை மூலம் இப்பிராந்திய நாடுகளை மட்டுமல்ல அமெரிக்கா உட்பட்ட மேற்குலக நாடுகளையும் எச்சரித்துள்ளது. அதில் குறிப்பான செய்தி அமெரிக்காவின் நகர்வுகளுக்கு எதிரானதாகும். அமெரிக்கா தென்கொரியாவையும் ஜப்பானையும் பலப்படுத்துவதே வடகொரியாவின் உடனடி நெருக்கடியாகும். ஜோ பைடன் காலம் மீளவும் வடகொரிய அமெரிக்க முறுகலுக்கான காலமாகவே தெரிகிறது. எந்தவித இராஜதந்திர நகர்வுகளும் இன்றி இராணுவ முனைப்புகளை கொண்டிருப்பதோடு போர் முனைகளைத் திறக்கும் உத்தியை அமெரிக்கா மீளவும் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தென் சீனக்கடல் தைவான் ஈரான் சிரியா போன்ற பகுதிகளில் அமெரிக்க போர் உத்திகளே அதிகம் பிரதிபலிகிறது. இது ஆபத்தான தருணத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. வடகொரியாவைப் பொறுத்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை அடுத்துவரும் வாரங்களில் ஜோ பைடனால் அறிவிக்கப்படும் போதே முழுமை நிலை தெரியவரும். ஆனாலும் அதிகம் இராஜதந்திர நகர்வை விட இராணுவ நகர்வே அதிகமாகக் காணப்பட வாய்ப்புள்ளது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்