‘இரண்டாவது உலக யுத்தத்தின்போது உலக ஆயுத களஞ்சியமாக அமெரிக்காவே திகழ்ந்தது. அதேபோல, உலக தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா விளங்கும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்திருப்பது, தடுப்பூசி பொருளாதார அரசியலில் சீனாவையும் ரஷ்யாவையும் பின்தள்ளிவிட்டு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்த முனைகின்றன. மேலும் தடுப்பூசி அரசியலைப் பயன்படுத்தி டொனால் ட்ரம்பின் காலத்தில் உலக நாடுகளுடன் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட விரிசல்களை சரி செய்யவும் ஜோபைடன் முயற்சிப்பதாகத் தெரிகிறது’
உலக நாடுகளை மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி வரும் கொவிட் 19 தொற்று, அரசியல் முக்கியத்துவம் பெறுவதோடு பொருளாதார பெறுமானங்களில் கொண்ட பதிவுகளை முதன்மைப்படுத்த முனைகின்றது . இந்தியாவில் ஏற்பட்டுள்ள அதீதமான தாக்கம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் அரசியல் இருப்பை நெருக்கடிக்கு தள்ளியிருக்கிறது. தொற்றும், மரணங்களும் ஒரு புறம் அதிகரிக்க , மறுபக்கத்தில் அதனை தடுப்பதற்கான வழிமுறைகளிலும் நெருக்கடி காணப்படுவதோடு உடல்களை தகனம் செய்யவோ அடக்கம் செய்யவோ முடியாது அந்த மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த அல்லது முடிவுக்கு கொண்டுவர தடுப்பூசியே சிறந்தது என்ற தெரிவு, சந்தைப்படுத்தலையும் அதற்கான அரசியலையும் தீவிரப்படுத்தியுள்ளது. இக்கட்டுரை அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், இரண்டாம் உலக யுத்தகாலப்பகுதியில் ஜனநாயகத்தின் களஞ்சியமாக அமெரிக்க விளங்கியது போன்று கொவிட் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசி களஞ்சியமாக அமெரிக்கா விளங்கும் என வெளிப்படுத்தியுள்ள செய்தியில் அரசியல் பொருளாதார பெறுமானத்தை அவதானிக்க முடிகிறது.
சீனாவின் நகரங்களில் ஒன்றான ஹூ_ஹானில் இருந்தே கொவிட் உலக நாடுகளுக்கு பரவியது என்பது சீனா மீதான அரசியலையும் பொருளாதார வாய்ப்புகளையும் பாதிப்புக்குள்ளாகும் விதத்தில் பேசப்பட்டது. அதனை தடுப்பதற்கான தடுப்பூசிக்கான கண்டுபபிடிப்பும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் சீனா ரஷ்யா உட்பட நாடுகளுக்கிடையே போட்டித் தன்மையை உருவாக்கியது. சீன ரஷ்யா நாடுகளில் தடுப்பூசிகளை அங்கிகரிப்பதில் உருவாக்கிது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிபந்தனைகளை விதித்ததோடு அதற்கான அங்கீகாரத்தை வழங்க மறுத்திருந்தன. இதனால் சீன (சினோபாம்) மற்றும் ரஷ்யாவினது (ஸ்புட்னிக்-5) ஆகிய கொவிட் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பரிசோதனைகளும் அதன் விற்பனையும் நெருக்கடிக்கு உள்ளாயின. ஆனால் சீனாவும் ரஷ்யாவும் தமது மக்களுக்கும் தமது நாட்டுக்குள் நுழையும் மக்களுக்கும் தமது நாட்டின் உற்பத்திகளையே எடுத்துக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்ததோடு அத்தகைய தடுப்பவூசிகளால் அந்தந்த நாடுகளை கொவிட் பரவலினுடைய அளவினை மட்டுப்படுத்தி இருக்கின்றன. அதேபோன்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தமது தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு விற்பபனை செய்வதோடு இலவசமாகவும் வழங்குகின்றன. அத்தகைய இலவசம் எதிர்காலத்தில் பொருளாதார சந்தையை நோக்கிய வாய்ப்புகளை ஏறபடுத்தும் என்ற நம்பிக்கை அந்த அரசாங்கங்களுக்கு உண்டு .
இதுமட்டுமன்றி, தென் பூகோள நாடுகளில் வறுமையாலும் பொருளாதார நெருக்கடிகளினாலும் அரசியல் முரண்பாடுகள் காரணமாகவும் பின் தங்கியுள்ள நாடுகள் தடுப்பூசியை கொள்வனவு செய்கின்ற அல்லது இறக்குமதி செய்கின்ற எத்தகைய கரிசனையும் இன்றி காணப்படுகின்றன. இதனால் இந்த நாடுகளின் மக்கள் பாரியளவில் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் உலக சுகாதார நிறுவனமும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்க ஜனாதிபதியினுடைய மேற்குறித்த செய்தி முக்கியத்துவம் பெறுவதாக பார்க்கப்படுகின்றது. அவ்வாறு தடுப்பூசிகளின் களஞ்சியமாக அமெரிக்கா விளங்குவதன் மூலம் எற்படக்கூடிய மாற்றங்கள் அதிக விளைவகளை ஏற்படுத்தக் கூடியது.
முதலாவதாக, ஏதோவொன்றின் அடிப்படையில் சீனாதான் இதற்கான மூலகாரணமாக கருதப்பட்டபோதும், அதனால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளை அல்லது பயன்களை அமெரிக்கா அனுபவிக்க முனைகின்றது என்பதை அமெரிக்க ஜனாதிபதியின் உரை உணர்த்துகின்றது. இத் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி என்பது ஒரு வர்த்தக பெறுமானத்தையும் ஒரு சந்தை பெறுமானத்தையும் உருவாக்க தயாராகின்றது. காரணம் நவதாராளவாதத்தின் கண்டுபிடிப்புக்கள் சந்தைக்கும் உலக பொருளாதார வாய்ப்ப்புக்களுக்கும் அதிக பங்கினையாற்றுகின்றது. அந்த வரிசையிலே தடுப்பூசி வர்த்தகம் உலகம் முழுவதுக்குமான பரிமாற்றத்தை அமெரிக்காவில் இருந்து மேற்கொள்ளுகின்ற போது அதனால் ஏற்படுகின்ற பொருளாதார வர்த்தக சந்தை உறவாடல் அதற்கான அரசியல் பெறுமானத்தை மேம்படுத்த உதவும்.
இரண்டு, கொவிட் பரவல் மூலம் சீனா ஒரு அரசியல் பெறுமானத்தையும் பொருளாதார பெறுமானத்தையும் எட்டுவதற்கு முயற்சித்தது. அத்தகைய பொருளாதார பலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அணுகுமுறை நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட்டது. உலக நாடுகள் மத்தியில் உலக சந்தையில் அமெரிக்க தயாரிப்பான Pfizer-BioNTech அதிக மாற்றத்தை அமெரிக்காவிற்குள்ளும் அதனை கொள்வனவு செய்த நாடுகளுக்குள்ளும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தடுப்பூசியுடன் சீனாவின் Sinovac போட்டியிட முடியாத சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி தொடர்பான உலக சந்தை அமெரிக்காவிடம் கைமாறியுள்ளது. எதிர்கால உலகத்தில் இத்தகைய பாரிய தொற்றுகள் ஏற்படுத்தகூடிய அரசியலையும் பொருளாதார இருப்பையும், ஐரோப்பாவும் அமெரிக்காவும் தமது கட்டுபாட்டில் வைத்திருக்கவே பிரயத்தனம் செய்கின்றன. அதனாலேயே அமெரிக்கா தடுப்பூசிகளின் களஞ்சியமாக விளங்கும் என்ற செய்தியை ஜோபைடன் முன்வைத்துள்ளார். எவ்வாறு ஜனநாயகத்தின் பெயரால் உலகத்தை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தவர்களோ, அதேபோல கொவிட்- 19க்கு எதிரான தடுப்பூசியின் மூலம் மீண்டும் உலகத்தை தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் என்பது உணர்த்துகொள்ள வேண்டும்.
மூன்று, மேற்குலகின் உற்பத்திகளை கீழைத் தேசங்களுக்கு நுகர்வுகாக கைமாற்றும் போது இலவசமாகவே பரிமாற்றப்படுவது வழமையானது. அதில் ஆங்கில கல்விக்கூட விதிவிலக்கல்ல . மதுபானங்களையும் தேயிலையையும் வெள்ளை சுருட்டையும் ஐரோப்பியர்கள் குடியேற்ற நாடுகளுக்கு இலவசமாகவே கைமாற்றினர். எனவே அவற்றில் இருந்து அந்த மக்கள் மீளமுடியாத நிலையினை அடையும் போது அப்பொருட்களை பணப்பெறுமான முடிவுப்பொருட்களாக மாற்றிகொண்டு சந்தைகளில் போட்டி போடவைத்தார்கள். உள்ளூர் உற்பத்திகளை முடிவுக்கு கொண்டுவந்து ஐரோப்பிய உற்பத்திகளே சிறந்தவை என்ற எண்ணத்தை உருவாக்கி, பொருளாதார இலாபங்களை தமதாக்கிக் கொண்டனர். இவ்வாறு கொவிட்- 19க்கு எதிரான தடுப்பூசி, வர்த்தகத்தையும் சந்தையையும் உலக அரசியலில் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் கைப்பற்ற முயற்சிப்பது தெளிவாகிறது.
நான்காவது, உலகளாவிய அரசு டொனால் ட்ரம்பின் காலப்பகுதியில் ஏற்பட்ட நெருக்கடி நிலையை சரி செய்வதற்கு ஜனாதிபதி ஜோபைடன் எடுக்கும் பிரதான நகர்வாக கொவிட்க்கு எதிரான தடுப்பூசி அமைந்துள்ளது. நாடுகளை இணைக்கவும் உறவு நிலைகளை பலப்படுத்தவும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் இரு துருவ, பலதுருவ உடன்பாடுகளை சாத்தியப்படுத்தவும் முனைவதனை காணலாம்.
இதில் பெரும்பாலும் தென் பூகோள நாடுகள் அகப்பட்டிருப்பதோடு அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துவதில் வல்லரசு நாடுகளுக்கிடையிலே போட்டித்தன்மை அதிகரிக்க வழிவகுத்திருக்கிறது.
ஐந்தாவது, அமெரிக்க சீன அரசியல் போட்டி அதிகமான இழப்புகளையும் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகளையும் தென்பூகோள நாடுகள் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய இந்தியத் துயரை தென் பூகோள நாடுகளும் அனுபவிப்பது என்பது தவிர்க்க முடியாததாகி விடலாம். அதனை எதிர்க்கொள்வதும் அதிலிருந்து வெளியேறுவதும் வல்லரசுகளிடமே தங்கியுள்ளது.
எனவே கொவிட் தொற்று எந்தளவிற்கு ஒரு அரசியல் பொருளாதார பெறுமானத்தை ஏற்படுத்தியியிருக்கிதோ அதேயளவிற்கு அதற்கெதிரான தடுப்பூசியும் ஏற்படுத்திவருகிறது.
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்