இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் மீண்டும் மேற்காசிய அரசியலில் கொதிநிலையை உருவாக்கியுள்ளது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சியில் இருந்த போது (2017) ஜெருசலம் நகரை யூதர்கள் தங்கள் தேசியத்தின் தலைநகரம் என்றும் புனித பூமி என்றும் பிரகடனப்படுத்தியதோடு அதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க ஜனாதிபதி வழங்கி இருந்தார்.
ஆனால் பலஸ்தீனர்களோ தமது மூதாதையர் நிலம் என்றும் அல் அஹ்சா மசூதி உள்ளடங்கிய ஜெருசல பகுதி தமக்கு உரியதெனவும் வாதங்களை முன்வைத்ததுடன் போராட்டங்களை முன்னெடுத்தனர். மிக நீண்டகாலமாக இரு பிரிவினருக்கும் இடையில் நிகழ்ந்து வந்த மோதலும் போராட்டங்களும் கடந்த மே-08ஆம் திகதி (2021) பெரும் யுத்தமான வெடிக்க காரணமாகியது. இக்கட்டுரையும் இஸ்ரேல் பலஸ்தீன மோதலின் விளைவுகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் அரசியலையும் தேடுவதாக உள்ளது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள ஜெருசலேமில் அமைந்திருக்கும் பலஸ்தீனரின் பள்ளிவாசலான அல் அஹ்சா வளாகத்தில் கூடியிருந்த ஒன்பதாயிரத்திற்கு மேற்பட்ட பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய படைகள் கடந்த சனிக்கிழமை மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடாத்தின. அதில் 300இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் காயப்பட்டனர்.
இத்தாக்குதலை தொடர்ந்து காசா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிய நகரங்களை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நிகழ்த்தியது. இதில் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டாலும், அநேகமான ஏவுகணைகள் இஸ்ரேலிய ஏவுகணைகளால் தடுத்து நிறுத்தப்பட்டாலும் சில ஏவுகணைகள் இஸ்ரேலிய பகுதிக்குள் கடும் சேதங்களை ஏற்படுத்தின. அதனை அடுத்து இஸ்ரேலிய விமானங்கள் காசா மற்றும் பலஸ்தீனர் வாழும் பகுதிகளில் பாரிய தாக்குதல்களை நடாத்தின. இதில் 21இற்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதேநேரம் மசூதியில் கூடியிருந்த பலஸ்தீனர் மீது தொடர்ந்து இஸ்ரேலிய பொலிஸார் தாக்குதல் நடாத்தியதாகவும் 9000இற்கு மேற்பட்ட பலஸ்தீனர் கூடி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இத்தாக்குதலை அடுத்து பலஸ்தீனர் அப்பகுதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து இஸ்ரேலின் லோட் நகரம் முழுவதும் வன்முறை வெடித்ததெனவும், பலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் ஏறக்குறைய சமஅளவில் இப்பகுதியில் வசிப்பதாகவும் இதனால் ஒரு உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இஸ்ரேலிய அரசாங்கம் லோட் நகரம் முழுவதும் அவசரகால நிலை பிரகடப்படுத்தியதோடு பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் - இஸ்ரேல் படைகளிடையிலே மோதல் நீடித்து வரும் சூழலில் காசா முனையில் அமைந்துள்ள காசா டவர் என்று அழைக்கப்படும் 13 மாடிக் கட்டடம் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. காசா டவர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமையகம் என்றும் தெரிய வந்துள்ளது.
தொடர்ச்சியாக ேமற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலில் 56 ஹமாஸ் போராளிகளும் 6 யூதர்களும் உயிரிழந்தள்ளதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இத்தாக்குதலின் பிரதிபலிப்பாக உலக நாடுகளிலிருந்து இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக கண்டனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் வெளிவிவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு செயலாளர்கள் இஸ்ரேலிய நடவடிக்கைகளை ஆரம்பத்தில் குற்றம் சாட்டினாலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்திட்டுள்ளமை கவனத்திற்குரியது. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் அன்ரனி பிளிங்ஹன் தொலைபேசியில் நெதன்யாகுவுடன் உரையாடும் போது இருதரப்பும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதோடு ஏற்பட்டிருக்கும் கொதிநிலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பலஸ்தீனர்களது பாதுகாப்பும் அமைதியும் அவசியமானதென கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் அமெரிக்காவின் வெளிவிவகார பிரதி செயலாளர் ஹன்றி ஆர்ம் என்பவரை நிலைமையை சுமுகமாக்கும் விதத்திலும் இருதரப்புடனும் உரையாடுவதற்கான ஏற்பாடு செய்யவும் பிராந்தியத்தை நோக்கி அனுப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஜனாதிபதி புடின் மக்கள் கொல்லப்படுவதையும் காயப்படுவதையும் அங்கீகரிக்க முடியாதெனவும் அதனை தடுத்து நிறுத்தவதற்கான நடவடிக்கைகளை இருதரப்பும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பலஸ்தீன குடியிருப்புக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமன்றி ஐ.நா.பாதுகாப்புச் சபையில் இப்பிணக்கினை முன்வைத்ததோடு இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றும் நகர்வை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. ஆனால் அதனை தடுத்து நிறுத்திய அமெரிக்கா அதற்கான தீர்வினை தாம் ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்துன்ளது. சீனாவும் ரஷ்யாவும் மேற்கொண்ட நகர்வை அமெரிக்கா தடுத்து நிறுத்தியுள்ளது. மேலும் துருக்கி இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ரஷ்யாவின் உதவியை கோரியுள்ளது கவனத்திற்குரியது.
இவ்வாறே பிரித்தானிய பிரதமர், பிரான்சின் ஜனாதிபதியும் ஐரோப்பிய தலைவர்களும் இரு தரப்பையும் அமைதி வழிக்கு திரும்புமாறு கோரியுள்ளனர். துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் குறிப்பிடும் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினையும் சர்வதேச சமூகத்தையும் இஸ்ரேலின் மூர்க்கத்தனமான செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இஸ்ரேலுக்கு மோசமான பாடமொன்று கற்பிக்க வேண்டும் எனவும் பலமான பதில் நடடிவடிக்கைகளுக்கு தயாராக வேண்டுமெனவும் ரஷ்ய ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் கோரிக்கை விடுத்துள்ளார். துருக்கி ஜனாதிபதி சர்வதேச சமூகம் பலஸ்தீனர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் தெளிவான செய்தியை வழங்க வேண்டும் எனவும் இஸ்ரேல் மீதான தலையீட்டை ஏற்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே பலஸ்தீன இஸ்ரேலிய தாக்குதல்கள் உலகளாவிய ரீதியில் கொவிட் தொற்றுக்கு மத்தியிலும் பாரிய தாக்குதல் ஒன்றுக்கான களத்தை உருவாக்கியுள்ளது. இதற்கான பின்னணியையும் பரிமாணத்தையும் முழுமையாக நோக்குதல் அவசியமாகும்.
ஒன்று இத்தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரான நெதன்யாகுவின் அரசியல் நலனுக்கானதா என்ற சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த நான்கு தடவையும் நடந்த பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியாது ஆட்சியை முழுமையாக மேற்கொள்ள முடியாது திணறுகின்றார். தற்போதும் எதிர்த் தரப்பிடம் ஆட்சி கைமாறும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. இதனால் தான் ஒரு யூதத் தேசியவாதியென நிறுவவும் மீளவும் ஆட்சியைத் தக்கவைக்கவும் யூதர்களுக்கு தான் தான் சிறந்த தலைவர் என்பதை நிறுவவும் முயலுகின்றதைக் காட்டுவதற்கான நகர்வாக இருக்கிறது. இத்தாக்குதல் மூலம் எதிர் த்தரப்புக்கான வாய்ப்பினை கொடுக்காது காலநீடிப்பினை செய்வது அல்லது பெரும்பான்மையை காட்ட முடியாத நிலையை உருவாக்குவது.
இரண்டு, இக்களம் அமெரிக்க இஸ்ரேல் புரிந்துணர்வுக்கான களமாக அமைகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம், இஸ்ரேலுக்கு எதிரான எண்ணப்பாங்கை கொண்டிருந்தவர் என்று கருதப்பட்ட ஜோ பைடன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செயலை நியாயப்படுத்தி இருப்பது அமெரிக்க இஸ்ரேல் கூட்டின் வலுவை மீளவும் உறுதிப்படுத்துகின்றது. இதனை அவதானிக்கின்ற போது மேற்காசியாவில் அமெரிக்காவின் நெருக்கடி நிலையும் இஸ்லாமியர் மீதான அமெரிக்காவின் கொள்கையும் ஜோ பைடன் காலத்தில் நிகழ்வுகளின் பதில்கள் அமெரிக்காவின் சுயரூபத்தை உணர்த்துகிறது. அமெரிக்காவின் மேற்காசிய பிராந்தியத்தின் நிரந்தர நண்பன் இஸ்ரேல் என்பதை ஜோ பைடன் மேலுமொரு சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். ஜோ பைடனின் ஜனநாயகம், மனித உரிமை, அமைதி, சமாதானம் இஸ்ரேலிய நலன்களுக்கு முன் காணாமல் போய்விட்டது. அல்லது ஜோ பைடனின் போலி முகம் அம்பலமாகியுள்ளது. ஈரான் விடயத்தில் இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட்டது போல் அமெரிக்க நடந்து கொண்ட போதும் பலஸ்தீனர் விடயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நடந்து கொண்டதன் மூலம் பைடன் -_-நெதன்யாகு உறவு மீளுருவாக்கம் பெற்றுள்ளமை புலனாகிறது.
மூன்று, இதேநேரம் ரஷ்ய மற்றும் துருக்கியின் நகர்வு சீனாவின் கோரிக்கை என்பன பூகோள அரசியலின் களமாக மாறுவதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. மேற்காசியாவிலிருந்து அமெரிக்காவை வெளியேற்றும் ரஷ்யாவின் நடவடிக்கை மீண்டுமொரு வாய்ப்புக்கான சூழலை சந்திக்க தயாராகிறது. இதனை அவதானிக்கின்ற போது நேட்டோவிலிருந்து கொண்டு முரண்பட்டுக் கொண்டிருக்கும் துருக்கி ரஷ்யாவுடன் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் மீதான நடவடிக்கையை அதிகரிப்பதோடு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பாதுகாப்பு சபை போன்றவற்றில் முதன்மைப்படுத்துவதோடு இதனை ஒரு பூகோள அரசியலாக மாற்றுவதில் ரஷ்யா முனைப்பு செலுத்துகிறது.
எனவே, அமெரிக்காவும் ரஷ்யாவும் இஸ்ரேல் - பலஸ்தீன முரண்பாட்டை மையமாக கொண்டு மேற்காசிய அரசியல் களத்தை தந்திரோபாய ரீதியில் கையாள தொடங்கி உள்ளன. இதில் இஸ்ரேல் எதிர் பலஸ்தீனம் என்பதை விட இஸ்ரேல் எதிர் துருக்கி என்பது முதன்மைப்பட்டுள்தோடு பூகோள ரீதியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இதற்கான நகர்வுகளை தீர்மானிக்கப் போகின்றன. இதில் யூதர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்தாலும் பலஸ்தீன மக்களின் இருப்பை பற்றிய மதிப்பிடும் மேற்காசியா மீதான ரஷ்யாவின் பலமும் மாற்றத்தை நோக்கிய களமாக மேற்காசியாவை ரஷ்யா கையாளுவதற்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளன.
ஆனால் நாடற்ற பலஸ்தீனரின் இருப்பும் அவர்களின் துயரமும் நிரந்தரமானாதா? என்ற கேள்வி கடந்த நூற்றாண்டில் மாத்திரமின்றி 21ஆம் நூற்றாண்டிலும் நீடிக்க போகிறது. எல்லாவற்றையும் கடந்து நெதன்யாகு தனது அரசியல் இருப்பினை தக்க வைப்பதோடு அமெரிக்காவுடனான நெருக்கத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். ஒபாமா கால நெருக்கடியிலிருந்து இஸ்ரேல் விடுபட்டுள்ளது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்