புதிய COVID விகார மாற்றமும் அதிக ஆபத்தான சந்தர்ப்பங்களும்..!!! | தினகரன் வாரமஞ்சரி

புதிய COVID விகார மாற்றமும் அதிக ஆபத்தான சந்தர்ப்பங்களும்..!!!

வைரஸ் தொற்று நோய்களின் சிறப்பம்சம் யாதெனில்,  காலத்திற்குக்காலம்  அதன் தோற்றத்தில் ஏற்படும் மாற்றமாகும். வைரஸின் ஒரு புரதத்தில் ஏற்படும்  மாற்றம் கூட அதன் செயற்பாட்டில்  குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.  இம்மாற்றத்தினால்   வைரஸ் பரவும் வேகம்  துரிதப்படுத்தப்படக்கூடும்.   அத்துடன் இது வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் நோயின் தீவிரத்தையும்  அதிகரிக்கவும் கூடும்.

தற்போது இலங்கையில் காணப்படும் COVID19 வைரஸ்களில் B.1.1.7 உட்பட பல்வேறு  வகையான புதிய விகாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால், தொற்று  வழக்கத்தை விட வேகமாக பரவவும்,  கடுமையான நோய்  அறிகுறிகளையும்   ஏற்படுத்தவும் கூடும்.  உலகெங்கிலும் சில காலமாக நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, கோவிட் வைரஸ், குறித்த  இடத்தில்  விரைவாக பரவுவதற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளன.  புதிய  கோவிட் வகைகளுக்கும் இக்காரணி பொதுவானவை.

வைரசின் மாற்ற வகைகள் எவ்வாறிருப்பினும் அவற்றைப்  பொருட்படுத்தாமல்,  உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வாபத்துக்   காரணிகளைக் கொண்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்ப்பதேயாகும்.  இந்த கோவிட் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் யாவை?

1. கூட்டம் அதிகமாக சேரும் இடமாயிருத்தல் -    எவ்விடத்தில் சனநெரிசல்  அதிகரிக்கின்றதோ அவ்விடத்தில் , ​​COVID தொற்றாளர்  இருக்கக்கூடிய  வாய்ப்பு  அதிகரிக்கிறது, இதனால் COVID தொற்று  ஏற்படும்  அபாயமும்  அதிகரிக்கிறது.
2. மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கும் சந்தர்ப்பங்கள்  -  குறிப்பாக ஒருவருக்கொருவர் அருகருகே  நெருக்கமாக இருக்கும்போது, ​கதைக்கும்  போது ,  உண்ணும் போது, பருகும்போது.
3. போதிய காற்றோட்டமற்ற  மூடப்பட்ட இடத்தில் இருப்பது - மூடப்பட்ட  இடங்களில் கோவிட் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு  விகிதம் வெளிப்புற  காற்றோட்டமான  இடங்களை விட அதிகம் என்பது தெளிவு. இது தொடர்ந்தேட்சியாக   கதைக்கப்படவில்லை எனினும், இது கோவிட் பரவலில் செல்வாக்கான  மற்றொரு மிக  முக்கியமான பிரபலமான காரணியாகும்.

இந்த மூன்று காரணிகளில் ஒன்றாவது நீங்கள் இருக்கும் இடத்தில்  இருந்தால்  அங்கு, வேறு எங்கும் இல்லாததை விட  COVID தொற்று உருவாக அதிக  வாய்ப்புள்ளது.
இந்த காரணிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரு இடத்தில் காணப்படின், அத்தகைய இடங்களில் COVID பரவுவது இன்னும் விரைவாக நிகழும்.
 
எனவே, இதுபோன்ற இடங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டியது அவசியம். சில அவசர  காரணங்களுக்காக நீங்கள் அத்தகைய இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தால்,  அங்கு செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் ஆபத்தை ஓரளவிற்கு  குறைக்கலாம். குறிப்பாக இது போன்ற அதிக ஆபத்து நிலவும் காலங்களில்,  இக்காரணிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை இருக்கும் இடங்களை  இயலுமானவரை  தவிர்ப்பது அவசியமாகும்.
 
அவ்வாறே, உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருப்பது மற்றும் முகக் கவசங்களை  தவறாமல் அணிவது COVID பரவும் அபாயத்தை வெகுவாகக் குறைக்கும். இருப்பினும்,  இச் செயல்பாடுகள் மேலே உள்ள காரணிகளுள்ள இடங்களில்  அதிக நேரத்திற்கு  தரித்து இருந்தால் தொற்றின்  அபாயத்தை முற்றிலுமாக இல்லாமற் செய்யாது.
  நாடு முழுவதும் கொவிற் நோய் வேகமாக பரவி வரும் இந்த  நேரத்தில்,  உங்களினதும் உங்கள் அன்புக்கு உரியோரினதும் பாதுகாப்பைக் கருதி  மேற்கண்ட  ஆபத்துக் காரணிகளைக் கொண்ட இடங்களை  முடிந்தவரை தவிர்க்க மறக்காதீர்கள்.  மேலும், உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்புக் கருதி  ஆபத்துக்  காரணிகளைப் பற்றிய அறிவை முடிந்தவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.

சோ. வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம்,
யாழ்.பல்கலைக்கழகம்.

Comments