![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/06/18/b6.jpg?itok=UGypAMu2)
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஐரோப்பிய விஜயம் சுவிட்ஸர்லாந்தின் தலைநகரமான ஜெனிவாவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினைச் சந்தித்ததோடு நிறைவுக்கு வந்தது. மிக நீண்ட முதல் வெளிநாட்டு பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி தனது மூதாதையர்களின் கண்டமாகிய ஐரோப்பா நோக்கி மேற்கொண்டிருந்ததோடு மேற்குலக ஏகாதிபத்தியத்தின் சரிவிலிருந்து மீட்பதற்கான விஜயமாகவே அவரது ஐரோப்பிய பயணம் அமைந்தது. குறிப்பாக ஜி-07, நேட்டோ, ஐரோப்பிய யூனியன் போன்ற ஏகாதிபத்தியங்களின் கூட்டுக்களுக்கான சந்திப்பு அமெரிக்காவின் தலைமையை நிலைநிறுத்துவதோடு ஐரோப்பிய- அமெரிக்க உறுதிப்பாட்டை கட்டமைக்கும் விதத்திலும் அவரது இராஜதந்திர விஜயம் அமைந்திருந்தது. ஆனால் ஜெனிவா மகாநாடும் அதில் ரஷ்ய ஜனாதிபதி புடினது உரையாடல்களின் வெளிப்பாடும் அமெரிக்காவிற்கும் அதன் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சவால்மிக்கது என்பதை உணர்த்துவதற்கான நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் புடின்-, பைடன் சந்திப்பு ஏற்படுத்திய விளைவுகளை தேடுவதாக உள்ளது.
ஜெனிவா மகாநாட்டின் இரு தலைவர்களதும் சந்திப்பின் ஆரம்பத்திலிருந்தே நிறைவுபகுதி வரை நிகழ்ந்த அனைத்து விடயங்களையும் அவதானிக்கும் போது நெருக்கமில்லாத இருநாட்டு தலைவர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அவர்களது உடல்மொழி காட்சிப்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி இருவரும் உரையாடுவதற்கு முன்னர் தமக்கிடையே கொண்டிருந்த கருத்துக்களை ஜெனிவா மாகாநாட்டில் பிரதிபலித்திருந்தனர். அதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனே அதிகம் சங்கடங்களை எதிர்கொண்டதாக அவதானிக்க முடிந்தது. அதாவது ஆட்சிக்கு வந்த பிற்பாடு அமெரிக்க ஜனாதிபதியாக ரஷ்ய ஜனாதிபதி தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள், ஜி-07 நேட்டோ ரஷ்யாவுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் எதிராக எழுப்பப்பட்ட விவாதங்களுக்கு பின்னால் அத்தலைவரை நேரடியாக சந்திக்கும் போது ஜோ பைடனின் சுயஅவமதிப்பின் பிரதிமை அவரது உரையாடலில் அவதானிக்க கூடியதாக இருந்தது. ரஷ்ய ஜனாதிபதியை கொலைகாரன் என்றும் ரஷ்யாவின் நடவடிக்கைகளை ஆக்கிரமிப்புக்கள் என்றும் எச்சரிக்கைகளை ரஷ்யாவிற்கு எதிராக வெளிப்படுத்திவிட்டு அவ்வகை தலைவரை பேச்சுவார்த்தை மேசையில் நேருக்கு நேர் சந்திப்பது என்பது ஜோ பைடன் உள்ளார்ந்த ரீதியில் பலவீனமான தலைவர் என்பதை அடையாளப்படுத்தும் காரணமாகியது. அதேநேரம் விளாடிமிர் புடின் அமெரிக்காவை பொதுவெளியில் விமர்சிக்கும் போது முதிர்ச்சியோடும் சரியான அளவுகோலோடும் செயற்பட்டது மட்டுமன்றி ஜோ பைடன் மீதான அவதூறான எந்த வார்த்தைப் பிரயோகத்தையும் மேற்கொள்ளாது தவிர்த்து வந்தமை ஜெனிவா சந்திப்பில் புடின் பலத்தை முதன்மைப்படுத்தி இருக்கிறது. ஊடக சந்திப்பிலும் அதே மாதிரியான அணுகுமுறை ஒன்றை புடின் வெளிப்படுத்தி இருந்தார். ஊடகவியலாளர்களோடு உரையாடும் போது கேள்விக்கான பதில் மட்டுமன்றி தனது உடல் மொழியையும் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியிருந்தார்.
அதேநேரம் ஜோ பைடன் ஜி-07 மகாநாட்டுக்கு பின்பும், நேட்டோ மாநாட்டுக்கு பின்பும், பிரித்தானிய மகாராணியின் சந்திப்பின் பின்பும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமை என்பதை வெளிக்காட்டும் ஆளுமையாக காட்டிக்கொள்ளவில்லை. அவரோடு ஒப்பிடுகின்ற போது பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஜி-07 மகாநாட்டை நடாத்திய நாடு என்பதை கடந்து அவரது ஆளுமை மேலோங்கி இருந்தது. தலைமை தாங்க வேண்டிய ஜோ பைடன் மகாநாடுகளிலும் சரி மகாநாடுகளுக்கு பின்பான ஊடக சந்திப்புக்களிலும் சரி ஒப்பீட்டடிப்படையில் பலவீனத்தையே பிரதிபலிப்பதை அவதானிக்க முடிகிறது. ஜோ பைடனோடு ஒப்பிடுகின்ற போது பொரிஸ் ஜோன்சன், ஜேர்மனிய சான்சலர் அஞ்சலோ மேர்கல் ஆகியோரது ஆளுமை மேலோங்கி இருந்தமையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எனவே ஜோ பைடனது ஐரோப்பிய விஜயம் ஏகாதிபத்தியத்தின் கூட்டின் தலைமைத்துவத்தை அமெரிக்கா கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனடிப்படையில் இரு தலைவர்களுக்குமிடையில் நடந்த உரையாடலின் தனித்துவமான விடயங்களை அவதானித்தல் அவசியமாகிறது.
முதலாவது, ரஷ்யா தொடர்பில் அமெரிக்க மிக நீண்ட குற்றச்சாட்டாக சைபர் தாக்குதலை முன்வைத்து வந்தது. ஜெனிவா உரையாடலிலும் இத்தகைய விடயம் அமெரிக்க தரப்பினால் முன்வைக்கப்பட்ட போதும் விளாடிமீர் புடினுடைய பதில் அவ்வகை தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டதெனில் அதற்குரிய ஆதாரங்களையும் முன்வையுங்கள் என தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களும் இதே கேள்வியை கேட்கும் போது அத்தகைய பதிலே முதன்மைப்பட்டிருந்தது. எனவே அமெரிக்காவின் நீண்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்றான சைபர் தாக்குதலை இலகுவான உபாயங்களாக ரஷ்ய ஜனாதிபதி எதிர்கொண்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்கா தான் வைத்திருந்த ரஷ்ய மீதான வலிமையான குற்றச்சாட்டு ஒன்று ஆதாரங்களை தேடுவதற்காக கைவிட வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. 21ஆம் நூற்றாண்டில் தகவல்யுகம் வளர்ந்த பிற்பாடு சைபர் தாக்குதலும் உயிரியல் போரும் வல்லரசுகளின் பிரதான ஆயுதமென ஹென்றி கீசிங்கர் குறிப்பிட்டுள்ளார். எனவே இத்தகைய உரையாடலை அமெரிக்கா வல்லரசு ரஷ்ய வல்லரசு மீது குற்றச்சாட்டாக முன்வைப்பது அதன் பலவீனத்தையே காட்டுகிறது.
இரண்டாவது, ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தொடர்பிலான உரையாடலும் புடின், -பிடன் உரையாடலில் முதன்மைப்படுத்தப்பட்டது. அதற்கான புடினின் பதில் ஜோ பைடனின் ஜனநாயகம் என்ற சொல்லாடலின் உச்சாடனத்தை அடியொற்றியதாக அமைந்திருந்தது. இது மேற்கு நாடுகள் அனைத்துக்கும் பொருத்தமான பதிலாகவே உள்ளது. அதாவது நவால்னி ரஷ்யாவின் சட்டங்களை மீறியுள்ளார். அவருக்கு ஆதரவாக 10சதவித மக்கள் கூட இல்லையென தெரிவித்திருந்தார். எனவே அமெரிக்கா முன்வைத்த மனித உரிமை மீறல் சார்ந்த குற்றச்சாட்டை புடின் இலாவகமாக எதிர்கொண்டிருந்தார். உண்மையிலேயே முன்னாள் சோவியத் யூனியனை அமெரிக்கா வீழ்த்திய முறையையும் அதன் பின்னர் பொரிஸ் ஜெல்சன் என்ற தலைவரை ஆட்சியில் அமர்த்த அமெரிக்க எவ்வாறு ரஷ்யாவை சிதைத்ததோ? அவ்வாறே நவால்னியை தயார்ப்படுத்துவதாக ரஷ்ய மக்களும் ரஷ்ய ஆட்சியாளர்களும் கருதுகின்றனர்.
மூன்றாவது, இரு தலைவர்களுக்குமிடையில் கைதிகள் பரிமாற்றம் பற்றிய உரையாடல் முதன்மைப்படுத்தப்பட்டிருந்த போதும் உடன்பாடு எட்டாத உரையாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக நேரடியாவே ஜோ பைடன் அமெரிக்க கடற்படையின் முக்கிய பதவியில் உள்ள ஒருவரையும், அதேபோன்று ரஷ்யாவின் இராணுவ சேவையில் உள்ள கைதிகளை பரிமாற்றுவது தொடர்பிலும் உரையாடல் முன்வைக்கப்பட்ட போது முடிவுகள் அறிவிக்கப்படாமலே அவ்விடயம் கையாளப்பட்டுள்ளது.
நான்காவது, இரு நாடுகளுக்குமிடையே ஆயுத உடன்படிக்கை பற்றி புதிய உடன்படிக்கைகளை உருவாக்குவது பற்றியும் உரையாடப்பட்டதோடு சிரியா, லிபியா, உக்ரைன், மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் கொதிநிலைக்கான நெருக்கடியை ரஷ்யா ஏற்படுத்துவதாக ஜெனிவா உரையாடலில் உரையாடப்பட்ட போதும் ரஷ்ய ஜனாதிபதி ரஷ்யா தனது சுயபாதுகாப்புக்கான இராணுவ நடவடிக்கைகளை மாத்திரமே மேற்கொள்கின்றதென குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாவது, இரு தலைவர்களும் நடாத்திய நீண்ட உரையாடலில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்ட விடயமாக இருநாட்டு இராஜதந்திரிகளையும் இராஜதந்திர பணிகளுக்காக இராஜதந்திர அலுவலகங்களில் அனுமதிப்பதென பரஸ்பரம் உடன்பாட்டுக்கு வந்துள்ளது. அதுமட்டுமன்றி இரு தலைவர்களும் கொவிட் தொற்று, காலநிலை மாற்றம், வடகொரிய, ஈரான் அணுவாயுத பரிசோதனை, ஆப்கானிஸ்தான் போர் என்பவற்றில் ஒன்றிணைந்து பணியாற்ற உடன்பட்டிருப்பதை பரஸ்பரம் அங்கீகரித்துள்ளனர்.
எனவே புடின், பைடன் ஜெனிவா சந்திப்பு இரு எகாதிபத்திய தலைவர்களுக்கான தோற்கடிக்கப்படாத உரையாடலாக முடிந்தது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த காலத்தில் முன்மொழிந்தது போல் புடின் தலைமையிலான ரஷ்ய ஏகாதிபத்தியத்தை இலகுவில் வெற்றிகொள்ள முடியாது என்பதை இவ்உரையாடல் உணர்த்தியுள்ளது. ரஷ்யாவை சுற்றிவளைக்கும் நோட்டோவின் உத்திகளை தகர்க்கும் நெட்டோவின் நடைமறை இராஜதந்திர ரீதியிலும் அரசியல் மற்றும் இராணுவ ரீதியிலும் முனைப்பாக உள்ளது. பைடனின் ஐரோப்பிய விஜயத்தின் போது சீனாவின் பட்டி மற்றும் பாதை முன்முயற்சிக்கு பதிலாக B3W எனும் உலகளாவிய நிகழ்ச்சித்திட்டமொன்றை மேற்குநாட்டு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர். இவ்வாறு முன்மொழிவுகளை மட்டுமே மேற்கு ஏகாதிபத்தியம் மேற்கொள்ள கிழக்கு ஏகாதிபத்தியமான சீனாவும் ரஷ்யாவும் உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் முன்னேறி செல்கிறது. ஜோ பைடன் ஐரோப்பிய விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியதும் தனது ருவிட்டரில் அமெரிக்க மீண்டும் உலக சவாலை எதிர்கொள்ள களத்துக்கு பிரவேசித்துள்ளது எனும் சாரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்