![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/06/27/a17.jpg?itok=Ewusoltr)
மேற்காசியாவில் குவிந்துள்ள எண்ணெய் வளத்தினால் அந்நாடுகள் மீது வல்லரசுகளது பார்வை எப்போதும் தீவிரமாகவே இருக்கும். அரசியல் மற்றும் இராணுவ நோக்கில் கொதிநிலையை கொண்ட பிரதேசமாக மேற்காசியா உள்ளது. அதன் மையம் தற்போது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 1979 ஈரானிய கலாசாரப் புரட்சியிலிருந்து தொடங்கி அமெரிக்க வல்லரசுக்கும் மேற்குலகத்திற்கும் நெருக்கடியான நாடாகவும் விளங்குகிறது. அதன்வரிசையில் மீண்டும் மேற்குலகத்திற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி விளங்குவார் என்பதில் அதிக சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஒரு வகையில் ஈரானுக்கு அப்படிப்பட்ட தலைவர் தேவை என்ற கருத்துநிலையும் உள்ளது. இக்கட்டுரையும் அவரது வருகை ஏற்படுத்தக் கூடிய அரசியலை தேடுவதாக அமையவுள்ளது.
புதிய ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஒரு கடும் கோட்பாட்டுவாதி எனவும் பழமைவாதி எனவும் குற்றச்சாட்டு நிலவுவதுடன் கடந்த காலத்தில் நீதித்துறையில் பணிபுரியும் போது அரசியல் கைதிகளுக்கு மரணதண்டனை வழங்கியவர் என்றும் மனித உரிமைகளை மதிக்காதவர் எனவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உண்டு. அத்தகைய குற்றச்சாட்டினை உள்ளூர் மக்கள் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளும் முன்வைக்கின்றன. அது மட்டுமல்ல அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமெரிக்காவுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துவதில் அதிக கரிசனை கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு தெஹ்ரானில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது தான் அமெரிக்காவுடன் பேசத் தயாராக இல்லை எனவும் முழுமையாக ஈரான் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கிய பின்பே பேசுவதற்கான வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஈரானின் செய்தி சேவைகள் பொய்யான பரப்புரை செய்வதாகவும் செய்திகளை திரிபுபடுத்துவதாகவும் கூறி அவற்றின் மீது (24.06.2021) தடைவிதித்துள்ளது. ஏற்கனவே இப்ராஹிம் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேநேரம் இப்ராஹிம் ரைசியை ஈரானின் ஜனாதிபதியாக தேர்தெடுத்தமைக்கு சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என்றும் அவர் அணுத் திட்டங்களை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார் இஸ்ரேலிய வெளியுறவு செய்தி தொடர்பாளர் லியோ ஹையட். அதேநேரம் இஸ்ரேலிய புலனாய்வுத் துறையான மொஸாட் அமைப்பின் முன்னாள் தலைவர் அண்மையில் வெளியிட்ட தகவல் கவனத்தில் கொள்ள வேண்டியது.
அவரது அத்தகைய கருத்து முன்னாள் பிரதமர் நெதன்யாகுவை காப்பாற்றுவதற்கானதாக அமைந்த போதும் உண்மையான தகவலை வெளிப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளார் யொசிகொஹென. அவரது கருத்தின் சாரம்சத்தை நோக்குவோம்.
ஈரானின் அணு உலை அமைந்துள்ள நடான்ஜில் நிலத்திற்கு அடியில் அமைந்திருந்த சென்ரிபியுஜ்களை இஸ்ரேல் குண்டுவைத்து தகர்த்தது. தெஹ்ரானிலுள்ள அணுக்களஞ்சியத்திலிருந்த ஆவணங்களை அகற்றி மொசாட் இஸ்ரேலுக்கு கொண்டுவந்துள்ளது. ஈரானின் அணுவாயுதத்திற்கு பொறுப்பாக இருந்த அணுவிஞ்ஞானி பக்ரிசாதேவை 2020 நவம்பரில் மொஸாட் படுகொலை செய்தது என ஒரு நாட்டின் மீதான நடவடிக்கையை சாதாரணமாக தெரிவித்தார் மொஸாட் தலைவர்.
எனவே இத்தகைய நிலையிலேயே ஈரானிய மதபீடமும் பழமைவாதிகளும் இப்ராஹிம் ரைசின் தெரிவை ஆதரித்துள்ளனர். அவரது வருகை உள்ளாட்டு அரசியலிலும் பிராந்திய அரசியலிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கணிப்பீடுகள் அதிகரித்துச் செல்கின்றன. அவற்றை சற்று விரிவாக நோக்குவது அவசியமானது.
முதலாவது, ரைசி தனது தேர்தல் பரப்புரையில் பிரதான விடயமாக பொருளாதார அபிவிருத்திக்கும் உள்நாட்டு பொருளாதார திட்டங்களுக்கும் நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். சர்வதேச வர்த்தகத்தில் வாய்ப்புக்களை உருவாக்க அவரது அரசாங்கம் முன்னுரிமை கொடுத்து செயல்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பிராந்தியப் பொருளாதாரத் திட்டமிடல் ஈரானுக்கு முக்கியமானதென அவர் தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். அவரது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அமெரிக்கா பொருளாதாத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளமை அவர் ஈரானின் பொருளாதார அபிவிருத்தியில் அதிக கவனம் கொள்ள திட்டமிடுகிறார் என்பது தெளிவாகிறது. இது ஈரானிய மக்களைப் பொறுத்தவரை மிகப்பிரதான ஆரம்பமாகவே அமையும்.
ஏற்கனவே சீனா ரஷ்யாவுடனான பொருளாதார ஒத்துழைப்பில் செயல்படும் ஈரான் பலமான பொருளாதாரக் கூட்டை உருவாக்க இப்ராஹிம் முயலக்கூடும். அத்தகைய கூட்டு தெளிவான ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை ஏற்படுத்துமாக அமைந்தால் அது அமெரிக்கா உட்பட்ட மேற்குக்கு எதிரான பொருளாதார அணியாக அமையும். அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் ஈரானைப் பாதுகாக்க ரஷ்யாவும் சீனாவும் எடுத்த நகர்வு பொருளாதாரத்திலும் நிகழுமாயின் மேற்கு அதிக விலைகொடுக்க வேண்டி ஏற்படும்.
இரண்டாவது, பொருளாதாரக் கொள்கையானது ஈரானின் வெளியுறவுக் கொள்கையிலும் தங்கியுள்ளது. ஈரான் அமெரிக்காவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருந்தாலும் ஐரோப்பாவுடன் நெருக்கத்தினை பின்பற்ற முயலுகிறது. அதனுடன் சீனா, ரஷ்யா மட்டுமன்றி வடகொரியா, சிரியா போன்ற நாடுகளுடனும் இந்தியாவுடனும் நெருக்கமான வெளியுறவுக் கொள்கையை கொண்ட நாடாக உள்ளது. அதனால் இப்ராஹிம் அதனை பேணுவதுடன் மேலும் அதனை ஒரு பொருளாதாரத் தளத்தில் நகர்த்தக் கூடும் என்ற எதிர்பார்க்கை உண்டு. அயல் நாடுகளில் அதிகம் தங்கியிருக்கும் போக்கொன்றுக்கான நகர்வை அவர் முன்னெடுக்க வாய்ப்புள்ளது. ஈராக், சிரியா, லெபனான் யேமன் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அயல் நாடுகளை பகைக்காமலும் நெருக்கத்தினை அதிகரித்துக் கொண்டும் பிரதான எதிரியை கூட்டுப்பலத்தில் எதிர்க்க ஈரான் தயாராக வேண்டும். ஐரோப்பிய ஒத்துழைப்பினை அதிகரிப்பதுடன் பிராந்திய நட்புறவை தக்கவைத்துக் கொள்ளும் நகர்வுகளை புதிய ஜனாதிபதி பேணவேண்டும்.
மூன்றாவது ஈரானின் புலனாய்வுத் துறையை கட்டிவளர்க்க வேண்டிய பொறுப்புடையவராக இப்ராஹிம் காணப்படுகின்றார்.
ஏற்கனவே அணு விஞ்ஞானியையும் இராணுவத் தளபதியையும் இழந்துள்ள ஈரான் மேலும் அத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடாது என்பதில் கரிசனை செலுத்த வேண்டிய நிலைக்குள் புதிய ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார். இஸ்ரேல் தானே அத்தகைய தாக்குதலை நிகழ்த்தியதாக வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதனால் எஞ்சியுள்ள இராணுவ தளபதிகளையும் விஞ்ஞானிகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது இப்ராஹிமை உள்நாட்டில் ஒரு கடும் போக்காளராக வைத்துக் கொள்ள வழிவகுக்கும். இராணுவத்திலும் புலனாய்விலும் புரட்சிகரமான மாற்றம் ஈரானுக்கு அவசியமானது. அதே நேரம் ஆயுத தளபாடத்திலும் நவீன தொழில் நுட்ப ஆயுதங்கள் ஈரானுக்கு அவசியமானதாக அமைகிறது. அதனை நோக்கி புதிய ஜனாதிபதி நகர வேண்டும்.
நான்காவது ஆணுவாயுதத்தை உருவாக்கும் முயற்சியில் புதிய ஜனாதிபதி அதிக அக்கறை காட்டக் கூடும் என இஸ்ரேலே எச்சரிகிறது. அதனால் அணுவாயுத பரிசோதனைக்கான அணுகுமுறைகளை புதிய ஜனாதிபதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஈரானின் இருப்பும் பாதுகாப்பும் அணுவாயுதத்திலேயே உள்ளதென்பது தெளிவான செய்தியாக இருப்பதனால் அதற்கான போட்டியும் நடவடிக்கையும் பிரதான இராணுவ அரசியலாக அமைய வாய்ப்புள்ளது. இஸ்லாமிய பண்பாட்டையும் நாகரீகத்தையும் பாதுகாக்க அணுவாயுதம் அவசியம் என்பதை இஸ்ரேலின் நடவடிக்கைகள் உணர்த்தியுள்ளது. அதனால் ஈரான் அதற்காக அதிக விலை கொடுக்க முயலும்
ஐந்தாவது, இஸ்ரேலை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை ஈரான் மேற்காசியாவில் வளர்த்துவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஈரான் ஆதரவுள்ள போராளிகள் அமைப்புக்கள் அதிலும் ஹமாஸ் போன்ற அமைப்புக்கள் அதிக முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படும். பலஸ்தீனம் மீதான போர் ஒன்றுக்கு இஸ்ரேல் முனையுமாக அமைந்தால் பாரிய நெருக்கடியை ஈரான் எதிர்காலத்தில் ஏற்படுத்தும். ஆனால் இஸ்ரேல் தற்போதைய அமைதிக் காலத்தை போருக்கு தயாராக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
எனவே ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசின் வருகை மேற்காசியா அரசியலில் அதிக முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படும். போருக்கான வாய்ப்பு காலம் தாழ்த்தினாலும் அமைதிக்காலத்தில் நிலவும் படுகொலைகளும் அழிவுகளும் தவிர்க்க முடியாததாகும்.
ரஷ்யா சீனாவுடனான நெருக்கம் அதிகரிப்பதுடன் இராணுவ ரீதியில் அதிக முக்கியத்துவம் பெறும் காலமாக அமையும். ஈரான்- இஸ்ரேல் முரண்பாட்டின் உச்சக் காலமாகவும் அமெரிக்க எதிர் ஈரான் நிலையும் தவிர்க்க முடியாத அரசியலாக அமையவுள்ளது. அமெரிக்காவின் அணுகுமுறையால் ஈரான், ரஷ்யா, சீனா அணி பலமடையும் வாய்ப்புள்ள காலமாக அமையவுள்ளது.இப்ராஹிமினது கடும் போக்கு பெரும் போரைத் தோற்றுவித்துவிடுமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்