இரண்டாம் வருடத்தின் சவால்களை எதிர்கொள்ளும் அதிரடி மாற்றங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

இரண்டாம் வருடத்தின் சவால்களை எதிர்கொள்ளும் அதிரடி மாற்றங்கள்!

அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விடயமான அமைச்சரவை மாற்றம் கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது. ஆறு அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றங்களுடன் அமைச்சரவை மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

இன்றைய கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் அரசியல் களத்தில் முன்வைக்கப்படுகின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள தற்போதைய நிலையில், இரண்டாவது வருடத்தில் அரசின் பாதையை சரி செய்யும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மேற்கொண்ட இந்த அமைச்சரவை மாற்ற நடவடிக்கை அமைந்தது என அரசியல் அவதானிகள் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதற்கமைய சிரேஷ்ட அமைச்சர்கள் ஆறு பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட அமைச்சுக்களின் விடயதானங்கள் அந்த ஆறு பேருக்குள்ளேயே மாற்றப்பட்டிருப்பதுடன், அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு மேலதிக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் ஏற்கனவே மக்களுக்கு நன்கு பரிச்சயமான அமைச்சர்களுக்கிடையில் விடயதான மாற்றங்கள் மாத்திரம் இடம்பெற்றுள்ளன என்று கூறுவதே பொருத்தமாகும்.

நாடு கொவிட்-19 தொற்றுநோய் சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இன்றைய காலப் பகுதியில் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லவை ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து சுகாதாரத்துறை அமைச்சராக நியமித்தமை இந்த அமைச்சரவை மாற்றத்திலேயே அதிகம் பேசப்படும் விடயமாக மாறியது. இன்றைய காலப் பகுதியில் சுகாதாரத்துறை அமைச்சு என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சு ஆகும்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக் குறித்து சாதகமாகவும் நம்பிக்கையுடனும் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பதவி குறித்து பெருமைப்படுவதுடன், அனைத்து நாட்டு மக்களினதும் ஒத்துழைப்புடன் கொவிட்-19 தொற்றுநோயைத் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

அதிகரித்துள்ள கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் அதிகரித்துள்ள மரணங்களால் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் சுகாதாரத்துறைப் பணியாளர்களின் விடயங்கள் குறித்து அவர் தற்பொழுது கவனம் செலுத்தியுள்ளார். அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவைப் பொறுத்த வரையில் சுகாதாரத் துறை என்பது இதுவரை அவர் பொறுப்பேற்காத புதியதொரு விடயப் பொறுப்பாகும்.

சிரேஷ்ட அமைச்சர்கள் என்ற ரீதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் ஏற்று மக்களுக்கும், நாட்டுக்கும் சிறந்த சேவையை ஆற்றுவதே சிரேஷ்ட தலைவர்களின் பொறுப்பாகும் எனவும் தன் மீது நம்பிக்கை கொண்டு வழங்கப்படும் எந்தவொரு பொறுப்பையும் சிறப்புற மேற்கொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

சுகாதாரத்துறை குறித்து அவருக்கு முன் அனுபவம் இல்லாத போதும், பாதுகாப்புத் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டங்களில் தேசிய பாதுகாப்புக்கான நிலையத்தின் பேச்சாளராகவிருந்து நிலைமைகளை சரியான முறையில் உலகத்துக்கும், நாட்டுக்கும் தெரியப்படுத்திய அனுபவம் அவருக்கு உள்ளது.
அது மாத்திரமன்றி 10 வருடங்களாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சராகவும், பல வருடங்கள் அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளராகவும் கடமையாற்றி தனது தொடர்பாடல் திறனை வெளிப்படுத்தியவர் அவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

அதேநேரம், கொவிட் அச்சுறுத்தல் ஆரம்பமானதிலிருந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக கடுமையான முயற்சிகளை முன்னெடுத்திருந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடமிருந்து சுகாதார அமைச்சுப் பொறுப்பு மீளப் பெறப்பட்டு, அவருக்கு போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு பதவிக் குறைப்பு என அரசுக்கு சேறு பூசும் விதத்தில் அர்த்தப்படுத்தி எதிரணி தரப்பினரில் சிலர் கருத்து வெளியிட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறான சில செய்திகளை சில இணையத்தளங்களும் வெளியிட்டுள்ளதைக் காண முடிந்தது.

இருந்த போதும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மத்தியில் பிரியாவிடை உரையாற்றிய அவர், தனக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருந்தார். அதேநேரம், இவ்வாறானதொரு மாற்றத்தை தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆனாலும் இன்றைய இடர் காலத்தைப் பொறுத்தவரை அரசாங்கம் நாட்டின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டே உரிய முடிவுகளை எடுத்திருக்கும் என்பது பலரதும் நம்பிக்கையாக உள்ளது.
இதேசமயம், வெளிவிவகாரம் மற்றும் கல்வி அமைச்சு ஆகிய பொறுப்புக்கள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் பரிமாறப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தைப் பொறுத்த வரையில் இருவரும் பயணிப்பதற்கு கடினமான பாதைகளைக் கொண்டுள்ளனர் என்றே கூற வேண்டும். இவை இரண்டுமே இன்றைய நிலைமையில் மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சுகளாகும்.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 13ஆம் திகதி முதல் ஒக்டோபர் 08ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த மார்ச் கூட்டத் தொடரில் அறிக்கை சமர்ப்பித்திருந்ததுடன், இலங்கைக்கு எதிரான பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் சர்வதேசத்தில் இலங்கை விவகாரத்தைக் கையாளும் பொறுப்பு தற்பொழுது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸைப் பொறுத்த வரையில் இதற்கு முன்னரும் சர்வதேசத்தைக் கையாளுவதில் அவர் அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2010ஆம் ஆண்டு ஐந்து வருடங்களாக இவர் வெளிநாட்டு விவகார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார். அப்போதும் நாடு ஜெனீவா சவால்களை எதிர்கொண்டிருந்தமையால் தற்போதைய நிலைமைகள் ஜீ.எல்.பீரிஸுக்கு புதிய சவாலாக இருக்க மாட்டாது என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஜெனீவா விடயத்தை அவர் புதிய அணுகுமுறையில் கையாளக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கீழைத்தேய நாடுகளையும், மேலைத்தேய நாடுகளையும் எவ்வாறு இவர் கையாளப் போகின்றார் என்பதிலேயே சர்வதேச அரங்கில் இலங்கையின் வெற்றி தங்கியுள்ளது.

மறுபக்கத்தில், சம்பள உயர்வு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தற்போதைய நிலையில், கல்வி அமைச்சின் பொறுப்பு தினேஷ் குணவர்த்தனவிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்கு அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இப்பிரச்சினையைக் கையாளும் பொறுப்பு தற்பொழுது அமைச்சர் தினேஷிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது மாத்திரமன்றி உயர்கல்விக்கான விடயப்பொறுப்பும் இந்த அமைச்சின் கீழ் வருவதால், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்த சட்டமூலம் உள்ளிட்ட உயர்கல்வியில் காணப்படும் சவால்களையும் அவர் கையாள வேண்டியுள்ளது.
பல தசாப்த அரசியல் அனுபவத்தைக் கொண்ட தினேஷ் குணவர்த்தனவுக்கு நிலைமைகளை சூட்சுமமாகக் கையாளக் கூடிய தேர்ச்சி காணப்படுகிறது. இந்த அனுபவங்களைக் கொண்டு அவர் எதிர்காலத்தில் கல்வி அமைச்சை சிறப்புற முன்கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், கல்விச் சீர்திருத்தமொன்றுக்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதால் இந்த அமைச்சானது அவருக்கு ஒரு முக்கியமான பொறுப்பாக அமையப் பேகிறது.

சிரேஷ்ட அமைச்சரான காமினி லொக்குகே வகித்த போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பு பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டிருப்பதுடன், அமைச்சர் டலஸ் அழகப்பெரும வகித்த வலுசக்தி அமைச்சுப் பொறுப்பு காமினி லொக்குகேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பு முன்னர் ஊடகவியலாளராகவிருந்த டலஸ் அழகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டலஸ் அழகப்பெருமவைப் பொறுத்த வரையில் அவர் ஒருங்கிணைப்புகளை மேற்கொள்வதில் தேர்ச்சி பெற்றவர். குறிப்பாக 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்த பின்னர், மீண்டும் தமது ஆட்சியைக் கொண்டு வருவதற்கும், பொதுஜன பெரமுன கட்சி உருவாக்கத்திலும், அது தொடர்பான திரைமறைவு ஒருங்கிணைப்புப் பணிகளிலும் டலஸ் அழகப்பெருமவின் பங்கு அளப்பரியதாகும்.

அமைச்சுப் பதவிகளை வகித்து அவர் கொண்டிருந்த அனுபவம் ஊடகத்துறை விடயத்திலும் அவருக்கு நிச்சயமாகக் கைகொடுக்கும் என்பதே ஊடகத்துறையினரின் கருத்தாக உள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வரும் இன்றைய நிலையில், இது அவருக்கு சவாலானதொரு விடயமாக அமையக் கூடும்.
இந்த அமைச்சரவை மாற்றத்தில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு தற்பொழுது இருக்கும் விடயதானங்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இளம் அமைச்சர் ஒருவருக்கு பொறுப்பான பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறித்து அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

நாடு எதிர்கொண்டுள்ள கொரோனா சவால் உள்ளிட்ட பல விடயங்களுக்கு மத்தியில் அரசாங்கம் தனது ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்து அடுத்த வருடத்தில் காலடியெடுத்து வைத்துள்ளது. இதற்கு புதிய அமைச்சரவை மாற்றம் எந்தளவுக்கு உறுதுணையாக அமையப் போகிறது என்பது எதிர்வரும் நாட்களில் புலப்படும்.

 

Comments