![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/08/22/Kasappu2.jpg?itok=vOAlCoV2)
கசப்பு
கடந்த வாரத்திற்கு முன்வாரம் ஞாயிறு (08-.08-.2021) இந்த வயோதிபத் தலையில் பலத்த ஒரு குட்டு! பாவமே என்று பார்க்கவில்லை அந்தக் குடும்பத் தலைவி!
எனறாலும் அவர் இட்டது இலக்கியம் சார் குட்டே! வலிக்கவில்லை. என் சுபாவப்படி வாய்விட்டுச் சிரித்து, இந்தப் பத்தி எழுத்துக்களில் என் பக்க நியாயம் பதியப் போகிறேன்.
முதலில், வாசிக்கத் தவறியவர்களுக்காக இந்தத் தகவல்கள்.
25 அகவை வாலிபத் ‘தினக்குர’லில் 25/04/2021, 25 ஆம் பக்கத்தில், படுதுணிவோடு கவிதைக்காரர்கள் பற்றி, விசேடமாகப் பெண் கவிஞர்கள் பற்றி, அந்த இலக்கியத்துறை குடும்பத் தலைவி நேர்காணல் ஒன்றை, கிழக்கிலங்கை ஷல்மானுல் ஹரிஸ் ஆளுமைக்கு வழங்கியிருந்தார்.
அவர் கருத்துக்களில் நூறு விழுக்காடு நான் உடன்பட்டதால், சுடச்சுட அடுத்தவாரமே, 02-/05-/2021, ‘கசப்பும் இனிப்பும்’ பகுதியில் “வரவேற்கின்றேன், பாராட்டுகின்றேன்” எனப் பதித்து, “இந்தத் திருமதிக்கு காய்தல், உவத்தல் இன்றி கவிதைத்துறை சார்ந்தோரின் இன்றைய இழிவுகளை இடித்துக்கட்ட பூரண உரிமை உண்டு” என்றும் வக்காலத்து வாங்கியிருந்தேன். இந்தப் பாராட்டையும், இந்த வக்காலத்தையும் கணக்கில் எடுக்காமல், காசுக்கு சமமாக மதித்து ஒரு மூச்சும் விடாமல் இருந்துவிட்டார் திருமதி!
நானும் மறந்தேன். ஆனால் சில கிழமைக்குப்பின் இவரது இரண்டாவது நேர்காணல் ஒரு மங்கையர் இதழில் வர கண்ணில்பட்டது.
இது, 75 விழுக்காடு முதலாவது வந்த நேர்காணலின் மறு பிரதியாகவும், 25 விழுக்காடு மட்டுமே புதியனவாகவும் இருக்கக் கண்டேன்.
ஆனால் அதிர்ச்சித் தரத்தக்கதாக முக்கிய தகவல்கள் சில இல்லாதிருப்பதை அவதானித்தேன். அவை, பிரபல ஆய்வுத் தொகுப்பான “மின்னும் தாரகைகள்” நூலின் 353, 354ஆம் பக்கத்தில் பார்த்தவை. (இங்கே உங்கள பார்வைக்கும்)
தொகுப்பாசிரியர் திருமதி நூருல் அய்ன் நஷ்முல் ஹுசைன் “கொழும்பு ஃபாத்திமா நளீரா” என மகுடமிட்டு, குறிப்பிட்ட 354 ஆம் பக்கத்தின் பத்தி ஒன்றில் இவ்வாறு வெளிச்சமிட்டுள்ளார்.
* “இவரை இலக்கிய உலகில் முதன் முதலில் அறிமுகம் செய்தவர் பிரபல இலக்கியவாதியும் சத்திய எழுத்தாளருமான எஸ். ஐ. நாகூர்ஹனி ஆவார்”
மற்றுமொரு, பந்தியில்
* இவரது எழுத்துத் துறைக்குத் துணைபுரிந்த பெற்றோர்கள், கணவர் ஏ. எச். சித்தீக் காரியப்பர் (மெட்ரோ நியூஸ்), மகன் முகம்மத் ஷிபான் (சோசியல் மீடியா) போன்றோருக்கு இவர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்.
இவ்வாறு ஒரு வரலாற்றுப் பொக்கிசத்தில் காணப்படுபவற்றின் தகவல்கள் (தந்தையார் பற்றிய குறிப்புகள் தவிர்த்து) ஏனையவை இரு நேர்காணல்களிலும் சொல்லப்படவில்லையே எனும் பொழுது எவருக்கும் நெருடல் உண்டாவாது இயற்கையே!
என்னைப் பொறுத்தவரையில், நாகரிகம் கருதியே இவரிடமே விளக்கமும் தெளிவும் பெறுவதை தவிர்த்து நேர்காணல் செய்த நங்கையிடம் நாசூக்காக வினவினேன். அவர் பெயரையும் என் வாசக அபிமானிகளுக்குத் தெரிவித்தேன். எதற்கு ஒளிவு மறைவு? (ஊடகத்துறையினைத் திரை மறைவில் வைத்திருந்தது திருமதியின் பாடசாலை காலத்தில்! இப்பொழுது இரண்டு வரிச் செய்திக்கும் பெயர் போடுவது வழக்கத்தில்)
மேலும் நேர்கண்டவர் பெயரை மறைப்பதற்கு அவர் என்ன கொலைக் குற்றமா புரிந்து விட்டார்?
உண்மையில், மூன்று நேர்காணல்களை மூன்று இதழ்களில் ஒரு சிறு இடைவெளியில் பிரசுரிக்க அனுமதித்த திருமதி, “மின்னும் தாரகைகள்” ஆய்வு நூலின் தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், ஏதாவதொன்றிலாவது நேர் செய்திருக்க வேண்டாமா? எங்களைப் போன்ற மூப்பான பத்தி எழுத்தாளர்களுக்கு நெருடல் ‘கிருடல்’ உண்டாக வாய்ப்பில்லையே!
அதைவிட்டு விட்டு மங்கையர் மலர் ஊடக நங்கையின் பெயரை வெளிச்சமிட்டு விளக்கம் கேட்டேன் என்று என தலையில் பலமான குட்டு! அத்தோடு விட்டாரா ‘செந்தூரம்’ நேர்காணலில்.....?
நான் அந்த ஊடகப் பெண்மணியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றும் கட்டளை!
மூப்பையும் மூத்த எழுத்து அனுபவங்களையும் உதாசீனப்படுத்தி இந்த உத்தரவு!
மேலும் இவரிடமிருந்து இன்னுமொரு ஆலோசனையும்!
‘பத்திரிகைத் துறையின் தர்மத்தைத் தாண்டிய மனித நேயம் உங்களுக்கு வேண்டும்”
கழுதை உதை உதைக்கிறது இந்த ஆலோசனை!
“பத்திரிகைத் துறையின் தர்மத்தைத் தாண்டியா? அடி அம்மாடி.
தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும், திருத்துவதும் உண்மைகளை நிலை நாட்டுவதும் தானே பத்திரிகை தர்மம்? அதில் அரை நூற்றாண்டுக்கும் மேலே எதிர் நீச்சல் அடித்தவனாயிற்றே....! தர்மம் தவறி பேனா தடம் புரண்டதாக சரித்திரமே இல்லையே சீதேவி?
அத்தோடு ஊடக நங்கையிடம் மன்னிப்புக் கேட்பதற்கு எந்தவிதக் காரணமும் நியாயமும் இல்லையே...?
நல்லது. தொடர்ந்தும் இந்தக் கசப்பையே கொடுத்து அபிமான வாசகப் பெருமக்களை வதைப்படுத்தக் கூடாது.
கடைசியாக அறிவுரை ஒன்று திருமதிக்கு.
மூன்று இதழ்களில் அடுத்தடுத்து சிறு இடைவெளியில் நேர்காணல் வழங்கிய நீங்கள், ஏதாவது ஒன்றிலாவது இந்த உலகளாவிய புகழ் பெற்ற ஆய்வு நூலில் (மின்னும் தாரகைகள்) இடம்பெற்ற (நீங்கள் சொல்லத் தவறிய தகவல்களை) எடுத்துக் கூறியிருந்தால் அல்லது சரி பிழைகளைத் திருத்தி இருந்தால்-
துரும்பிலும் தூணிலும் புகழ்ந்து கசப்பும் இனிப்பும் வில்லைகளைத் தேடி வழங்கும் இந்த மூத்த பத்தி எழுத்தாளன் உஙகளிடம் குட்டுப்படவோ, உங்கள் கோரிக்கைக்கு செவிசாய்த்து எவரிடமும் அநாவசிய மன்னிப்போ கேட்க வேண்டியதில்லை அல்லவா.
என் வாசக அபிமானிகளின் தீர்ப்பு என்ன?
அவர்களை கட்டளைப்படி நடக்க சித்தம், சித்தம்!
இனிப்பு
ஒரு சிறுபான்மைச் சமூகத்தவர், சத்தம் எதுவுமின்றி உயர்ந்த நோக்கத்தில், உன்னத இலட்சியத்தில் ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறார்.
அது, கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் 300 மில்லியன செலவில், மூன்று மாடிக்கட்டடம்!
இதில் 13 கட்டில்களும் விசேடமாக உள்ளன.
எதற்கு இவை? சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை பெற!
தீவிர சிகிச்சைப் பிரிவையும் உள்ளடக்கியதாக, அமைந்துள்ள கட்டடத்திற்கு, “சிறு நீரக சத்திரசிகிச்சை இயல் மற்றும் சிறு நீரகவியல் நிறுவனம்” என நீண்ட பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெயர் நீளமோ சுருக்கமோ ஒரு நல்ல காரியத்தை, பணத்தைப் பணம் என்று பார்க்காமல் “இல்யாஸ் கரீம்” என்ற, மனிதர் செய்து முடித்துள்ளார்.
அவரது பிள்ளைகளும் அவருக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.
யாரால் இந்தக் கட்டடம் திறக்கப்பட வேண்டுமோ அவராலேயே, கடந்த மாதம் 29ல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமர், கலை நெஞ்சினர், மஹிந்த ராஜபக்ஷ நாடா வெட்டி நல்ல சேவையைத் தொடக்கியுள்ளார்.
கொரோனா களேபரத்தில் இதுவும் நடந்திருப்பது தான் அதிசயம்!
இந்த நிகழ்வை பெரும்பாலான மக்கள் கண்டு கொள்ளவில்லையே என்பதுதான் என் ஆதங்கம்.
தமிழ் நாளேடுகள் கூட, மூத்த ‘தினகரன்’ செய்த பங்களிப்பில் கால்பங்கு கூடச் செய்யவில்லை.
ஒரு தமிழ் நாளேடு 03ஆம் பக்கத்தில் இரண்டே இரண்டு பந்தி (டபிள் கொலம்) மட்டும் ஒதுக்கி, பிரதமர் நினைவுப் பலகை திரை நீக்கம் செய்யும்.
படம் மட்டும் போட்டு “பிரதமர் திறந்து வைத்தார்” என்பதுடன் இரு வரிகளுடன் நிறுத்தி முடித்துக்கொண்டது. முழு முயற்சிக்கும், பணச் செலவுக்கும் காரணகர்த்தாவாகிய மனிதர் இல்யாஸ் கரீம் இடம்பெறாது போனார்.
இந்த இலட்சிய மனிதர் சாமான்யர் என நினைத்த கோலமோ என்னவோ!
அன்னவர், பிரபல ஈ. ஏ. எம். மெலிபன் டெக்ஸ்டைல் தனியார் நிறுவனத் தலைவர்!
தன்னை அடையாளப்படுத்தாத மனிதராக ஆரவாரம் எதுவுமின்றி பொது மக்களுக்கு நற்பணி செய்திருக்கிறார்.
ஒரு சிறுபான்மைக்காரர் கட்டிக்கொடுத்த கட்டடம் என்பதற்காக தங்கள் சமூக நோயாளிகள் எவரையும் எந்தத் துவேசவாதியும் தடுக்காமல் இருந்தால் அதுவும் ஒரு பெரிய நல்ல காரியமே. எதிர்பார்ப்போம்.