அமெரிக்க துணை ஜனாதிபதியின் ஆசிய -பசுபிக் நாடுகளுக்கான விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க துணை ஜனாதிபதியின் ஆசிய -பசுபிக் நாடுகளுக்கான விஜயம்

தீவிரமடையும் அமெரிக்க, சீன பனிப்போர்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைவிலகல் பிராந்திய அரசியலைக் கடந்து பூகோள அரசியலையும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அமெரிக்க வெளியேற்றம் தலிபான்களது வேகமான காபூல் நோக்கிய முன்னேற்றம் உலகம் எதிர்பாராததொன்றாக அமைந்துள்ளது. அமெரிக்க படைகளது முழுமையான வெளியேற்றத்திற்கான காலப்பகுதியை எதிர்வரும் 31.08.2021 என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அக்காலத்தை நீடிக்க திட்டமிட்ட போதும் தலிபான்கள் அதற்கான அனுமதியை வழங்க மறுத்துள்ளனர். அதே நேரம் ஜி-7 நாடுகளது சந்திப்பும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனது தீர்மானமும் தலிபான்களுக்கு எதிரானதாக அமைந்தாலும் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளது தலைவர்களது அறிவிப்புகளும் தலிபான்கள் தொடர்பில் அதிக குழப்பத்தினை உலகம் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இத்தகைய நெருக்கடிமிக்க சூழலில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஒருவார பயணமாக ஆசிய, பசுபிக் நாடுகளுக்கு சென்றுள்ளார். இக்கட்டுரையும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படை விலகல் சீனா-வுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பனிப் போரை தீவிரப்படுத்தியுள்ளதா என்பதை தேடுவதமாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்களிடம் வீழ்ந்த பின்னர் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆசிய-பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். முதலில் சிங்கப்பூர் சென்றிருந்த கமலா ஹரிஸ் சிங்கப்பூரில் உரையாற்றுகையில், ஆசிய -பசுபிக் நாடுகளுடன் நட்புறவை பலப்படுத்தும் நோக்குடன் இப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும். அனைத்து தேசங்களுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கின்றது. அமெரிக்க நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறினாலும் அப்பிராந்தியத்தை பாதுகாக்க வேண்டிய கடமை அமெரிக்காவிற்கு உண்டென தெரிவித்தார். அமெரிக்கா உலகத்திற்கு தலைமை தாங்குகிறது என்பதை அமெரிக்க உப ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்தளவுக்கு அமெரிக்காவின் சர்வதேச அதிகாரத்தை ஆப்கானிஸ்தான் வெளியேற்றம் ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் வல்லரசு அதிகாரம் வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அத்தகைய வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் நகர்விலேயே ஹரிஸ் அம்மையாரின் ஆசிய- பசுபிக் விஜயம் அiமைந்துள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு -அமெரிக்காவுக்குமான பனிப் போர் தீவிரம் அடைந்துள்ளது எனக்கருத வாய்ப்புள்ளது.

தென்சீனக்கடல் பிராந்தியத்திலிருந்து சீனா வெளியேற வேண்டுமெனவும் சர்வதேச கடல் சட்டங்களை சீனா மீறுவதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி சிங்கப்பூரில் தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அமெரிக்க பலதசாப்தங்களாக சீனா மீது தெரிவித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தென்கிழக்காசியாவுடனான வர்த்தகம் தென் சீனக்கடல் ஊடாக நிகழ்வதுடன் ஆசிய -பசுபிக் பிராந்தியத்தில் காணப்படும் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான விநியோகமும் தென் சீனக்கடல் பிராந்தியமூடாகவே நிகழ்வதாகவும் தெரிய வருகிறது. எனவே ஹரிஸின் விஜயத்தில் சீனாவுக்கு எதிரான அணிதிரட்டலையும் இழந்துள்ள செல்வாக்கினை சரிசெய்தலுமே பிரதான நோக்கமாகத் தெரிகிறது. அப்பிராந்தியத்தை நோக்கி சீனாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதுடன் தலிபான்களுடனான சீனாவின் நெருக்கம் பிராந்திய அரசியலை மட்டுமல்ல பூகோள அரசியலையும் மாற்றும் தன்மை பொருந்தியதாக காணப்படுகிறது என்ற வகையில் அமெரிக்காவின் நகர்வுகள் அமைந்துள்ளன.

அமெரிக்க துணை ஜனாதிபதி சிங்கப்பூரில் இன்னோர் விடயத்தையும் தெரிவித்திருந்தார். அதாவது அமெரிக்காவின் பிராந்திய ரீதியிலான தூரநோக்கு மனித உரிமைகளும் சர்வதேச சட்ட முறைமைகளும் என்றார். அது மட்டுமன்றி அவற்றை அமுல்படுத்துவதோடு ஆசியாவின் மையநாடு அமெரிக்கா என்பதையும் உறுதிப்படுத்துவதென குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் பிராந்திய கொள்கையானது பிராந்தியத்தின் கவனத்தையும் வளத்தையும் திசைதிருப்பும் ஒரு மையப்பொருளாக மாறியுள்ளதே அன்றி பழைய பாதுகாப்பு கொள்கையான படைக்குவிப்பு அல்ல என்றார். தற்போது அமெரிக்க நிர்வாகத்திற்கு எழுந்திருக்கும் பிரதான சவால் சீனாவின் புவிசார் அரசியல் போட்டியாகும். அதில் தென்கிழக்காசிய நாடுகள் பிரதானமானவை என்றும் குறிப்பிட்டார். எனவே கமலா ஹாரிஸின் இத்தகைய வெளிப்பாடு பிராந்திய ரீதியில் அமெரிக்கா மேற்கொண்டுவரும் கொள்கை மாற்றங்களை அடையாளப்படுத்தியிருப்பதுடன் சீனா மீதான பனிப் போரை அமெரிக்கா ஆரம்பித்துள்ளதென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் சிங்கப்பூருக்கு அடுத்ததாக வியட்நாமுக்கு தனது விஜயத்தை (25.08.2021) மேற்கொண்டுள்ளார். தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுடன் அதிகம் முரண்படும் நாடாக வியட்நாமே காணப்படுகிறது. அமெரிக்கா வியட்நாமை மையமாக கொண்டு பல்வேறு பொருளாதார இராணுவ உபாயங்களை நகர்த்தி வருகிறது. வியட்நாமும் சீனாவுக்கு எதிரான கடல்வளப் பங்கீட்டில் அதிகம் முரண்பாட்டைக் கொண்டிருப்பதனால் வியட்நாமை மையப்படுத்தி சீன எதிர்ப்புவாதத்தை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது. ஆனால் தலிபான்களிடம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்த பின்பு அமெரிக்கா மீதான அதிருப்திகளும் நம்பிக்கையீனங்களும் தென்கிழக்காசிய நாடுகள் மத்தியில் அதிகரித்திருப்பதுடன் அதில் சீனா அதிக செல்வாக்குச் செலுத்தும் என்ற நிலை ஏற்பட ஆரம்பித்துள்ளது. அதனை தடுத்து நிறுத்துவதுடன் வியட்நாம் மூலம் சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்ற கோணத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் தொடர்ச்சியாக காணப்படுகிறது. அதில் ஒரு நடவடிக்கையே கமலா ஹரிஸின் விஜயமாகவுள்ளது. அவர் வியட்நாமின் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போது தற்போதுள்ள தேவை தென் சீனக்கடல் பிராந்தியம் மீது சீனாவின் உரிமை கோரலுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிப்பதே என்றார். அத்தகைய அழுத்தங்களை அதிகரிப்பதற்கான பாதைகளை முதன்மைப்படுத்த வேண்டும் எனவும் சீனா ஐக்கிய நாடுகள் அமையத்தின் கடல் சட்டங்களை மீறுகின்றதென்பதையும் கடல் பிராந்தியத்தை உரிமை கோருவதனால் அதிகமான நெருக்கடியை பிராந்திய நாடுகளுக்கு ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமன்றி சீனா தென்சீனக்கடலில் தான் அமைத்துள்ள செயற்கைத் தீவுகளில் இராணுவ தொழிநுட்ப ஆயுதங்களை குவித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே ஹரிஸின் விஜயத்தின் மூலம் சீன எதிர்ப்புவாதத்தை வெளிப்படுத்தி இரு நாட்டுக்குமான பனிப் போரை தீவிரப்படுத்துகின்றார் என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதே நேரம் சீனாவுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான உறவு மேலும் விரிவடைவதுடன் ஆப்கானிஸ்தான் பலமான பூகோள அரசியல் மாற்றத்திற்கான மையமாக தெரிகிறது. 26.08.2021 அன்று தலிபான்களுடனான சந்திப்பினை மேற்கொண்ட சீனா உறவினை பலப்படுத்தும் விதத்தில் உரையாடியுள்ளதுடன் பிராந்திய ரீதியில் சீனாவின் பொருளாதார நலன்களை நோக்கியதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் தலிபான்களுக்கான அங்கீகாரத்தையும் சீனா உறுதிப்படுத்தியுள்ளது. எனவே ஆப்கானிஸ்தான் பூகோள அரசியல் மாற்றத்திற்கான மையமாக அமைந்துள்ளதுடன் அமெரிக்காவின் உலகளாவிய அதிகாரத்தில் நெருக்கடியை தந்துள்ளது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ்.பல்கலைக்கழகம்

Comments