![அடுத்த வாரம் ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பம்-UN Human Rights Council Sessions-Geneva](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/09/05/UN-Human-Rights-Council-Sessions-Geneva.jpg?itok=TM15IyYN)
எதிர்வரும் 12 ஆம் திகதி ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவிருப்பதால் இலங்கை தொடர்பான விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது என்றே கூற வேண்டும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட பிரேரணைக்கான அனுசரணையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் விலக்கிக் கொண்டிருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான பின்னணியிலேயே அடுத்த வாரம் செப்டெம்பர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது.
இதற்கான தயார்படுத்தல்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. முதற் கட்டமாக அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கான பொறுப்பு பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் வழங்கப்பட்டது. அமைச்சர் ஜி.எல். பீரிஸைப் பொறுத்த வரையில் சர்வதேச நாடுகளைக் கையாள்வதில் கைதேர்ந்தவர்.
கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும், எல்.ரி.ரி.ஈயினருக்கும் இடையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இவர் கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் யுத்தம் முடிவடைந்த காலப் பகுதியில் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலப் பகுதியில் பேராசிரியர் பீரிஸ் வெளிவிவகார அமைச்சுப் பதவியை வகித்திருந்ததுடன், அந்தக் காலகட்டத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் காணப்பட்ட சவால்களை முறியடிப்பதில் அவர் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார்.
உலக நாடுகள் யாவும் கொவிட் சவாலுக்கு முகங் கொடுத்திருக்கும் இன்றைய நிலையில் இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தங்களை சமாளிப்பதற்கு அமைச்சர் பீரிஸ் தயாராகி விட்டார் என்றே கூற வேண்டும்.
‘ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. எனவே இம்முறை ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும்’ என அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளதை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்.
இலங்கை அரசாங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளிக்கையில், 'கடந்த சில வாரங்களாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிக முக்கியம் மிகுந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவருகின்றன. எமது நிலைப்பாடு பற்றி நாம் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். அந்த நாடுகளிலுள்ள இலங்கையின் தூதுவர்களான மொஹான் பீரிஸ் மற்றும் சி.ஏ சந்திரபிரேம ஆகியோர் மூலமாக இந்தத் தெளிவுபடுத்தலை செய்துள்ளோம். இதற்கு மேலதிகமாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை தனித்தனியாக சந்தித்து ஜெனீவா கூட்டத்தொடருக்குத் தொடர்புடைய விடயங்களையும், தெளிவுபடுத்தலையும் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
‘செப்டம்பர் 12 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவை ஜெனீவா நகரில் கூடுகின்றது. செப்டம்பர் 21 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபை நியூயோர்க் நகரில் கூடுகின்றது. இவ்விரண்டு மாநாடுகளிலும் நாம் எமது நாட்டிற்கான அனைத்து பயனையும் பெற எதிர்பார்க்கின்றோம். இது குறித்து நாம் நிச்சயம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உள்ளன. இன்று உலகில், குறிப்பாக தெற்காசிய வலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இந்த நிலைமை ஊடாக உலக மக்களுக்கு மேலதிகமான பாரதூரப் பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. மனிதப் படுகொலைகள், குண்டு வெடிப்புகள், நிலையற்ற தன்மை, துப்பாக்கி, ஆயுதப் பிரச்சினைகள், அகதிகள், தீவிரவாதம் என பல்வேறு பிரச்சினைகளும் இந்த வலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களினால் ஏற்படுகின்றன.
இலங்கை அனைத்து நாடுகளுடனும் சிறந்த தொடர்பை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கின்ற நாடாகும். எமது நாட்டினால் ஏனைய நாடுகளுக்கோ, எவருக்குமோ எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. எனினும் ஒவ்வொரு வருடமும் ஜெனீவாவில் இலங்கை பற்றி விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையையிட்டு அதிர்ச்சியடைகின்றோம். இதற்கு உண்மையான காரணம் என்ன என்கின்ற பிரச்சினை எழுகின்றது. இதில் நீதி உள்ளதா? எடுகோள்கள் எவை? பேச்சு நடத்த பல பிரச்சினைகள் உள்ள நிலையிலும், இலங்கையை தெரிவு செய்து ஏன் இவ்வாறு பேச்சு நடத்துகின்றார்கள் என்கின்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். உண்மையில் இது மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதா? அல்லது அதற்கு அப்பாலான அரசியல் நிகழ்ச்சி நிரலா?' எனவும் கேள்வியெழுப்பினார் அமைச்சர் பீரிஸ்.
யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதும் சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகள் எந்தளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளன என்பதற்கான விடை இதுவரை தெளிவாக இல்லை. அதுமாத்திரமன்றி, சர்வதேச நாடுகள் தமக்கு சார்பான அரசாங்கமொன்று இலங்கையில் அமையும் போது தமது பிடியை தளர்த்துவதையும், தமக்கு சார்பான அரசாங்கமொன்று அமையாதவிடத்து அதன் மீது தமது பிடியை இறுக்குவதையும் நாம் இங்கு அவதானிக்க வேண்டும்.
பூகோள ரீதியாக இலங்கையின் அமைவிடம் மற்றும் ஆட்சிக்கு வரும் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் என்பனவும் இந்த விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றன. வெறுமனே தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைத்து விட வேண்டும் என்பதில் சர்வதேசம் அதீத அக்கறை கொண்டுதான் தனது காய்நகர்த்தல்களை மேற்கொள்கின்றது என்று கூறி விட முடியாது.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச உரிமை மீறல்கள் இலங்கையில் இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய்வதற்காக விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருந்தார். இந்தக் குழு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலதரப்பினரையும் அழைத்து சாட்சியங்களைப் பதிவு செய்து வருகிறது. அது போன்று பல்வேறு செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே ஜெனீவா கூட்டத் தொடருக்கு அரசாங்கம் இப்போது முகங்கொடுத்துள்ளது.
மறுபக்கத்தில், சர்வதேசத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்று விடலாம் என்ற தமது வழமையான பணியிலான அரசியலை முன்னெடுப்பதற்கு சில அரசியல் தரப்பினர் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களை அண்மித்ததாகவே அவர்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்குவது வழக்கம். பின்னர் அக்குரல்கள் மௌனமாகி விடும். மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றாது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் தமிழ் அரசியல் தரப்பினர் ஈடுபட வேண்டும். அதற்கான காலமே தற்பொழுது கனிந்துள்ளது.
செப்டெம்பர் மாதம் ஆகும் போது சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயர் பலமாக அடிபடுவது கடந்த சில வருடங்களாக வழமையாகிப் போய் விட்டது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் இலங்கை பற்றிய பேச்சுக்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளனன.