தலிபான்களின் ஆட்சி அதிகாரமும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலமும்! | தினகரன் வாரமஞ்சரி

தலிபான்களின் ஆட்சி அதிகாரமும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலமும்!

ஆப்கானிஸ்தான் அரசியல் போக்கில் தொடர்ச்சியான நெருக்கடிகளை பிராந்திய சர்வதேச அரசுகளும் உள்நாட்டுச் சக்திகளும் ஏற்படுத்தி வருகின்றன. தலிபான்களின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஆப்கான் மக்கள் மட்டுமல்ல, உலகளாவிய நாடுகளும் அத்தகைய ஆட்சியை அதிகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரியவில்லை. ஒரு சில நாடுகளை தவிர்த்து நோக்கும் போது தலிபான்களது ஆட்சியை அனேகமான நாடுகள் எதிர்ப்பதாகவே தெரிகிறது. அவர்களது நகர்வானது மீளவும் தலிபான்களது முன்னைய இருப்பினை விலக்கிக் கொள்வதாக தெரிந்தாலும் அடிப்படையில் அதனையே முதன்மைப்படுத்துவதாக தெரிகிறது. இஸ்லாமியச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சியை தொடர திட்டமிடும் தலிபான் பிராந்திய ரீதியில் இஸ்லாமிய கட்டமைப்பினை நோக்கிய விஸ்தரிப்பினை செயல்படுத்தும் என்ற அச்சமும் பிராந்திய நாடுகளில் ஏற்பட்டு வருகிறது. இக்கட்டுரையும் தலிபான்களது ஆட்சியானது உறுதியான ஆப்கானிஸ்தானை கட்டமைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துமா என்ற தேடலை தொடர்வதாக அமையவுள்ளது.

முதலாவது ஆப்கானிஸ்தானின் அமைவிடம் வரலாற்றுக்காலம் முதல் ஆக்கிரமிப்பும் சுதந்திரமும் எனும் தொடர்கதையாகவே உள்ளது. அதில் தனித்து அமெரிக்கர்களின் படையெடுப்பும் படை விலக்கலும் மட்டுமல்ல கஜனி முகம்மது முதல் பல ஆக்கிரமிப்புவாதிகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தோல்வி கண்ட அரசியல் வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஆசியாவின் மைய நிலமாக விளங்கியுள்ளது. ஏறக்குறைய உலக வல்லரசுகளான பிரித்தானியா சோவியத் யூனியன் தற்போது அமெரிக்கா என அனைத்து தேசங்களும் தமது ஆதிக்கத்தின் முடிவை ஆப்கானிஸ்தானிலிருந்தே எழுதியுள்ளனர். அத்தகைய முடிவு ஒரு புறம் அமையும் போது ஆப்கானிஸ்தான் எனும் தேசம் தனது வரலாறு முழுவதும் அடிமைப்படுதலும் சுதந்திரத்திற்காக போராடுவதும் பின்பு அடிமைப்படுவதுமாகவே காணப்படுகிறது. உலக வல்லரசுகளை தோற்கடிக்கும் திறனுடைய ஆப்கானிஸ்தான் நிலப்பரப்பானது தமக்கான உறுதிமிக்க அரசியலை கட்டியெழுப்ப முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இரண்டாவது, ஆப்கானிஸ்தானில் வலிமையான வடக்கு ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் பகுதி தலிபான்களுக்கு எதிரான போரை தொடக்கி இருப்பதாக தெரிய வருகிறது. இப்பள்ளத்தாக்கும் ஆப்கானிஸ்தான் வரலாறு முழுவதும் வல்லரசுகளால் வெற்றி கொள்ள முடியாத நிலமாக இருந்ததோடு, தலிபான்களின் ஆக்கிரமிப்புக்கு உட்படாத பகுதியாக விளங்குகிறது. அங்கு எழுச்சி பெற்றுள்ள வடக்கு கூட்டணி நிலையான இராணுவ வலிமையை கொண்ட இயற்கை அரணால் கட்டமைக்கப்பட்ட ஆட்சிப்பிரதேசமாக விளங்குகிறது. எனவே இதனை வெற்றிகொள்வது தலிபான்களுக்கு மட்டுமல்ல ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் சோவியத் யூனியனுக்கும் சவாலாக இருந்தது. இதன்மீது தலிபான்கள் ஆரம்பித்துள்ள போர் என்பது (02.09.2021) தலிபான்களின் ஆட்சியையும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தையும் ஆபத்தான நிலைக்கு தள்ளுவதுடன், இம்மாகாணம் மீதான போர் முடிவற்றதொன்றாக காணப்படவும் வாய்ப்புள்ளது. எனவே தலிபான்கள் ஊடகங்களுக்கு முன் ஒப்புவிப்பது போல் ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் ஆளுகைக்குள் உட்படுமா என்பதிலேயே சந்தேகம் அதிகரித்துள்ளது.

மூன்றாவது, ஆப்கானிஸ்தானின் பஞ்சீர் மாகாணம் தஜகஸ்தானோடு தரைத்தொடர்புகளை கொண்டிருந்தாலும் அம்மக்கள் தங்களது தனித்துவத்தை பேணுவதுடன் இயற்கையாக அமைந்திருக்கின்ற பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பாங்கான பிரதேசம் அதுமட்டுமல்லாது நீர்நிலைகளை மையப்படுத்திய பிரதேசமாகவும் அமைவதோடு அம்மாகாணத்துக்கான நுழைவாயில் வடக்கு பகுதியில் அமைந்திருக்கின்ற பள்ளத்தாக்கு என்பதும் அதன் தனித்துவத்தை பேணுவதற்கான வாய்ப்புக்களை வழங்கி உள்ளது. தலிபான்களின் தாக்குதலை ஆப்கானிஸ்தானின் வடக்கு கூட்டணி முறியடித்திருப்பதாகவும், அதில் 350க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், 287 பேர் காயப்பட்டதாகவும் 35 பேரை கைது செய்திருப்பதாகவும் வடக்குக் கூட்டணிப் படைகள் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஞ்சீர் மாகாணம் மீதான தலிபான்களின் தாக்குதல் அவர்களின் நீண்டகால போரியல் உத்திகளை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருப்பதுடன் ஆட்சி அதிகாரத்தை ஆளுகை செய்வதற்கான புறச்சூழலை ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பிலிருந்தே பாதிப்புக்குட்படுத்தவதாக விளங்குகிறது. இது தலிபான்களின் ஆட்சியை சுமுகமான சூழலுக்குள் வைத்துக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நான்காவது, தலிபான்களின் புதிய அரசாங்கம் அமைக்கப்படுகின்ற சூழலானது, முன்பின் முரணான ஊடக வெளி உரையாடலை தொடக்கி உள்ளது. குறிப்பாக பெண்கள் பற்றியும் அவர்களின் அரசியல் பொருளாதார சமூக இருப்பு பற்றியும் தெளிவற்ற போக்கு ஒன்றினை தலிபான்களின் அரசியல் தலைமைகள் கொண்டிருப்பதை அவர்களது உரையாடல் வெளிப்படுத்துகின்றது. 1960களில் சுற்றுலாத்துறையின் செழிப்பினால் வளர்ச்சியடைந்திருந்த ஆப்கானிஸ்தான் பெண்களின் கல்விப்பாரம்பரியத்தை முதன்மையானதாக கருதியது. ஆனால் தற்போது எழுந்துள்ள இஸ்லாமிய சட்டங்களின் வரைபுகளும், அதன் நடைமுறை பற்றிய உரையாடல்களும் உலக நாடுகள் மத்தியில் ஆப்கானிஸ்தான் அதிக சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே தலிபான்களின் அதிகார அரசியல் என்பது அதன் ஆரம்ப பொறிமுறையிலேயே பலவீனமானதாக காணப்படுகிறது.

ஐந்தாவது, ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்றுள்ள தலிபான்கள் பல்வேறுபட்ட இஸ்லாமிய குழுக்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அத்தகைய இஸ்லாமிய குழுக்கள் பிரதேச மொழிக் கூறுகளாக பண்பாட்டு அடையாளங்களாக வேறுபட்டு இருப்பதோடு அவர்களுக்கிடையே அத்தகைய குழுவாதங்களின் ஆதிக்கம் தலிபான்களின் அமைப்புக்குள் ஏற்பட்டிருப்பதாகவும் பிரதேசங்களை மையப்படுத்தி அக்குழுக்கள் தமது வளங்களையும் வாய்ப்புக்களையும் முன்னிறுத்த போராடுவதாகவும் தெரிய வருகிறது. இதனால் அமைய இருக்கின்ற ஆட்சியானது அதிக நெருக்கடி மிக்கதாகவும் ஆபத்துக்களை அதிகம் விளைவிப்பதாகவும் அமைவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது. இத்தகைய போக்கானது தலிபான் அமைப்புக்குள் மோதலையும் குழுவாதங்களையும் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படும் அதேவேளை அதற்கு எதிராக தலிபான்கள் அத்தகைய குழுக்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளும் தற்போதைய சூழல் காணப்படுவதாக கருதுவதற்கான வாய்ப்பும் அதிகமுள்ளது.

ஆறாவது, ஆப்கானிஸ்தானின் பரப்பு எல்லையில் உள்ள மக்களில் கணிசமானவர் பழங்குடிகளின் வாழ்க்கை முறையை தற்காலத்திலும் பின்பற்றுபவர்களாக உள்ளனர். கடந்த 20ஆண்டுகளில் அமெரிக்காவின் மற்றும் மேற்கு நாடுகளின் நடவடிக்கைகள் நகரங்களை மையப்படுத்திய நடுத்தர மத்தியதர வர்க்கத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டதேயன்றி பழங்குடி மக்களை மீட்டெடுப்பதற்கான எத்தகைய திட்டங்களையும் முழுமையாக அமுல்படுத்த அதனால் முடியவில்லை. எனவே அத்தகைய பழங்குடிகள் தலிபான் இராணுவத்தில் அங்கம் பெறுவதோடு தலிபான்களின் இராணுவ நகர்வுகளிலும் அரசியல் செயற்பாடுகளிலும் அவர்களின் செல்வாக்கு தவிர்க்க முடியாததாக காணப்படுகிறது. எனவே நாகரீகமான உலகம் எதிர்பார்ப்பது போல் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களும் வேகமாக நவீன கட்டமைப்புக்குள்ளேயோ நாகரீகமான பொறிமுறையினுள்ளேயோ தமது செயற்பாடுகளை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இனங்காணப்பட முடியாது. அதனால் தலிபான்களின் ஆட்சியின் இருப்பு வேகமான மாற்றத்தையோ ஆரோக்கியமான அரசியல் உறவினையோ பிராந்திய சர்வதேச தரத்தில் கண்டுகொள்வது கடினம். இதனால் தலிபான்களுடைய ஆட்சி உலகம் எதிர்பார்ப்பது போல் சுமுக தன்மைக்கும் ஏனைய நாடுகள் போன்ற நாகரீகமான அரசியல் கலாசாரத்துக்கும் வாய்ப்பு ஏற்படுவதும் அல்லது எதிர்பார்ப்பதும் சாத்தியமற்றதாகவே தெரிகிறது.

ஏழாவது, அமெரிக்கர்களும் உலகமும் எதிர்பார்த்தது போல் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கக்கூடாதென்ற உத்தரவாதம் தலிபான்களிடமிருந்து பெறப்பட்ட போதிலும் அதன் நடைமுறை அதற்கெதிரானதாகவே காணப்படுகிறது. அல்கொய்தா அமைப்பு தலிபான்களை வாழ்த்தி இருப்பதோடு காஸ்மீர் விவகாரத்தை பாகிஸ்தானோடு இணைந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதுமட்டுமன்றி தலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் அல்கொய்தாவுக்கும் காஸ்மீருக்குமிடையிலான உறவு என்பது இஸ்லாமிய கருத்தியலோடு கட்டமைக்கப்பட்டிருக்கின்ற வடிவமாகவே காணப்படுகிறது. எனவே தலிபான்களின் மீளெழுச்சியானது இஸ்லாமிய அரசியல் நடைமுறையின் மீளெழுச்சியாகவே பார்க்கப்பட வேண்டியதொன்றாகும். இதனால் உலக நாடுகளோடும் அவற்றோடு மேற்கொள்ளும் அரசியல் பொருளாதார இராணுவ உதவிகளோடும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனையால் முரண்பட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். எனவே தலிபான்களின் எழுச்சி இஸ்லாமிய எழுச்சிக்கு வழிவகுத்துக்கொண்டு மேற்கு நாடுகளோடு கைகோர்த்து பயணிப்பது கடினமான அரசியலாகவே காணப்படும்.

எட்டாவது, ஆப்கானிஸ்தானின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள சீனா குவாட் நாடுகளோடும், ஐரோப்பிய நாடுகளோடும் பொருளாதார, வர்த்தக, இராணுவ நலன்களுக்குள்ளால் முரண்பாட்டை பின்பற்றுகிறது. இத்தகைய முரண்பாடு தலிபான்களுக்கும் சீனாவுக்குமிடையிலான உறவினால் சீனாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு அப்பால் தலிபான்களுக்கு அதிக விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் அமெரிக்க பொருளாதார உதவிகள் நிறுத்தப்பட்டிருப்பது தலிபான்களின் ஆட்சிக்கு நெருக்கடியை தரக்கூடியதாகும்.

எனவே அமைய இருக்கின்ற தலிபான்களின் ஆட்சி ஆப்கானிஸ்தானுடைய எதிர்காலத்தை மீளவும் ஆக்கிரமிப்பு க்குள் தள்ளுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இத்தகைய நெருக்கடிகளை தலிபான்கள் வெற்றி கொள்வார்களாயின் அவர்களது அரசியல் இருப்பும் ஆப்கானிஸ்தானின் எதிர்காலமும் சுபீட்சமாக அமைய வாய்ப்புள்ளது.

பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments