![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/09/26/a13.jpg?itok=9mzb0WcD)
தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலத்துக்கு முன்னதாகவே தேர்தலை எதிர்கொண்ட நாடாக கனடா உள்ளது. அந்நாட்டின் இப்போதைய தேர்தல் மீண்டும் ஒரு தடவை சிறுபான்மை அரசாங்கத்தின் ஆட்சிக்கு வழிவகுத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு தடவைகள் கனடாவின் பிரதமராக இருந்த லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது தடவையும் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். எனினும், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே தேர்தலை நடத்திய அவருடைய நோக்கம் நிறைவேறியதா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளத் தவறிய ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சிறுபான்மை அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பே கிடைத்திருந்தது. இதனால் அவருடைய அரசினால் முக்கிய சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது.
இவ்வாறான பின்புலத்தில் பெரும்பான்மையைப் பெறும் நோக்கத்துடன், நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடியும் முன்னரே அதாவது நாடாளுமன்றத்துக்கான பதவிக் காலம் இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையிலேயே தேர்தலுக்கு உத்தரவிட்டார் ஜஸ்டின் ட்ரூடோ.
முன்கூட்டியே தேர்தலுக்குச் செல்வது தொடர்பில் கனடாவின் எதிர்க் கட்சிகள் தமது கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருந்தன. எனினும், ட்ரூடோவின் அறிவிப்பினால், முன்னர் தேர்தல் நடத்தி இரண்டு வருடங்களுக்குள் மீண்டுமொரு (இரண்டாவது தடவை) பொதுத் தேர்தலை கனடா எதிர்கொண்டது.
நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 338 இடங்களில் பெரும்பான்மையைப் பெறுவதாயின் 170 இடங்கள் தேவைப்படும். 2019 இல் நடந்த தேர்தலில் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 155 இடங்களே கிடைத்தன. இம்முறை 157 ஆசனங்கள் அவருடைய கட்சிக்குக் கிடைத்துள்ளன.
எதிர்க் கட்சியான கன்சவேட்டிவ் கட்சிக்கு 121 ஆசனங்களும், க்யூபெக்வா கட்சிக்கு 32 ஆசனங்களும், புதிய ஜனநாயகக் கட்சிக்கு 24 ஆசனங்களும், எஞ்சிய ஆசனங்கள் ஏனைய சில கட்சிகளுக்கும் கிடைத்துள்ளன. நடைபெற்று முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாமையால் லிபரல் கட்சியே இம்முறையும் வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலமான அரசாங்கமாக அது அமையப் போவதில்லை.
கனடாவைப் பொறுத்த வரையில் ஆட்சியைத் தீர்மானிப்பதில் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பும் கணிசமானளவு காணப்படுகிறது. இலங்கைத் தமிழர்கள் கனடாவில் கணிசமான தொகையினர் வசிப்பதால் அவர்களின் வாக்குகளும் தேர்தலில் பங்களிப்புச் செலுத்துகின்றன.
இத்தேர்தலில் ஏழு தமிழர்கள் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி மூன்றாவது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார். Scarborough—Rouge Park தொகுதியில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 20,889 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தேர்தலில் போட்டியிருகின்றார். 2019 ஆம் ஆண்டு, அவர் 62.2 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.
ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று இம்முறை தேர்தல் முடிவுகள் ட்ரூடோவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளனவா என்று பார்த்தால் இல்லையென்றே கூற வேண்டும். முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்குப் பெரும்பான்மையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் அவர் முன்கூட்டியே தேர்தலை அறிவித்திருந்தாலும், களநிலைமையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன.
பொதுவாக தேர்தலொன்றை நடத்துவதற்கு 600 மில்லியன் டொலர் செலவாகும். ட்ரூடோவின் தவறான கணிப்பினால் கனடா வெறுமனே 600 மில்லியன் டொலரைச் செலவு செய்த போதும் பழைய நிலைமையே மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் போன்ற பாரிய நெருக்கடியான காலத்தில் முற்கூட்டியே தேர்தலுக்குச் செல்ல வேண்டாம் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தியிருந்த போதும் அது கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இதேநேரம், கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனிதாபிமானம் பல்வேறு நாடுகளால் குறிப்பாக இலங்கைத் தமிழர்களால் அதிகம் பாராட்டப்படும் விடயமாகும். குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் அதிக அக்கறை காட்டும் உலகத் தலைவர்களில் அவரும் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில், அவர் மூன்றாவது தடவையும் அந்நாட்டுப் பிரதமராகத் தெரிவாகியிருப்பது அங்கு வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் விடயமாகப் பார்க்கப்படுகிறது. இருந்த போதும் அவர்உள்நாட்டில் காணப்படும் பல்வேறு சவால்களையும் தாண்டி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் எந்தளவுக்கு அக்கறை காண்பிப்பார் என்பது இங்கு கேள்விக்குறியாகவே உள்ளது.
இதில் நோக்கப்பட வேண்டிய இன்னுமொரு விடயம் என்னவெனில், கனடாவில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழ் உறவுகளின் நிலைமையை எவ்வாறு தமது நாட்டு அரசுக்கு எடுத்துச் செல்கின்றார்கள் என்பதிலும் தங்கியுள்ளது.
கனேடிய தேர்தலைப் பொறுத்த வரையில் தமிழர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குரிமை உள்ள தமிழர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தாலும், தமிழர்கள் போட்டியிடாத தொகுதிகளில் அவர்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காண்பிப்பதில்லையென கனடாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதாவது தமிழர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும் நிச்சயமாக தமது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. இதற்குப் பிரதான காரணம் என்னவெனில், கடனாவைப் பொறுத்த வரையில் அங்குள்ள சமூகங்கள் வாக்குப் பலம் உள்ளவர்களா என்பது அவதானிக்கப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் தமிழர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்யாத சந்தர்ப்பத்தில் வாக்குகளின் பலம் எந்தவொரு அரசுக்கும் தெரியப்படுத்தப்படாது. எனவே தமிழர்கள் தமது வாக்குகளைப் பதிவு செய்து வாக்குப் பலத்தை காண்பிப்பது முக்கியமானது என்பதே அந்த அரசியல் ஆய்வாளரின் கருத்தாக இருந்தது.
இந்த நிலையில், இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை நாடும் விடயத்தில் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டிய நிலைமையும் காணப்படுகிறது.
அர்ஜுன்