தமிழ்க் கைதிகள் விடுதலையில் கனிந்து வரும் நம்பிக்கைகள்! | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்க் கைதிகள் விடுதலையில் கனிந்து வரும் நம்பிக்கைகள்!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் சாதகமானதொரு திசையை நோக்கி நகர்ந்து வருகின்றமை அண்மைக் கால நடவடிக்கைகளிலிருந்து புலனாகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வை வழங்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனக் கூறியிருப்பது அக்கைதிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் மாத்திரமன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுமே இந்த விடயத்தில் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் என்றுதான் கூற வேண்டியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நுழைந்து அங்கிருந்த தமிழ்க் கைதிகளை அச்சுறுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தனியான குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கும் நியலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி சிறைச்சாலைக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட கைதிகளைச் சந்தித்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாதகமானதொரு பதிலை வழங்கியிருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தற்போது சிறைச்சாலைக்கு நேரில் சென்று அக்கைதிகளின் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டமை கைதிகளுக்கு ஓரளவு ஆறுதலை அளித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையினால் அச்சுறுத்தப்பட்டதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில், கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, இச்சம்பவம் துரதிர்ஷ்டவசமான விடயம் என்றும், இது தொடர்பில் அரசாங்கம் வேதனை அடைவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். அது மாத்திரமன்றி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இதற்கு மேலதிகமாக சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும் என்று அறிவித்ததுடன், அன்றைய தினமே குழுவும் நியமிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த உடனடியாகப் பதவி விலகியிருந்த நிலையில், அரசாங்கம் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்த நிலையிலேயே நீதி அமைச்சர் அலி சப்ரி இவ்வார ஆரம்பத்தில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தார். அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் எவ்வித அழுத்தங்களும் இன்றி முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதே அவருடைய இந்த விஜயத்தின் நோக்கமாக இருந்தது.

அது மாத்திரமன்றி சிறைச்சாலைகளில் கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவர் கேட்டறிந்து கொண்டார். இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை வழங்குவதாகவும் அமைச்சர் அலி சப்ரி உறுதிமொழி வழங்கியுள்ளார். அத்துடன், கைதிகளின் பிரச்சினைகளை மனிதாபிமான ரீதியில் அணுகுவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கைதிகள் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக தமது குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இது அங்குள்ள தமிழ்க் கைதிகளுக்கு ஆறுதல் தரும் விடயமாக அமைந்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சென்றிருந்த போதே குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றது என்பதை எவரும் நிராகரிக்கவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவினர், தமிழ் அரசியல்வாதிகள், எதிர்க் கட்சியினர் போன்றோரும் அச்சிறைச்சாலைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தனர்.

சிறைச்சாலை அதிகாரிகள் அல்லது தனிநபர்கள் ஏதாவது அழுத்தங்களைக் கொடுத்தார்களா என்பது தொடர்பிலும் தான் தமிழ் அரசியல் கைதிகளிடம் வினவியதாகவும், அப்போது, தமக்கு எந்தவிதமான அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லையென கைதிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கான எந்தவித தேவையும் இல்லை. தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் மனிதாபிமான உள்ள முறையில் நோக்கப்படும் என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க, “சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில தினங்களாக நாம் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் சென்று அங்குள்ள குறை நிறைகளை கேட்டறிந்து வருகின்றோம். சிறைகளில் உள்ள எல்.ரி.ரி.ஈ சந்தேக நபர்கள் தொடர்பில் அண்மைக் காலமாக எதிர்க் கட்சி உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். சிறைக் கைதிகளுக்குப் போதிய பாதுகாப்பு இல்லையென்பதால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுமாறு அந்த அரசியல்வாதிகள் குறிப்பிடுகின்றனர். இது தொடர்பில் தமிழ்க் கைதிகளிடம் கலந்துரையாடிய போது அவ்வாறான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லையென்று உறுதிபடத் தன்னிடம் கூறியிருக்கின்றனர்” என்று அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இருந்தபோதும் தமது சொந்தப் பிரதேசங்களுக்குத் தம்மை அனுப்ப முடிந்தால் உறவினர்களைச் சந்திப்பதற்கும், அவர்கள் வழங்கும் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கும் வசதியாக இருக்கும் என்ற விடயம் தமிழ்க் கைதிகளால் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு இது விடயத்தை ஆராய வேண்டும் என அமைச்சர் அலி சப்ரி அக்கோரிக்கைக்குப் பதில் வழங்கியுள்ளார். குறிப்பாக வடபகுதியைச் சேர்ந்த தமிழ் சிறைக் கைதிகள் தமது குடும்பத்தினர் தமக்கு வழங்கும் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வவுனியா அல்லது யாழ்ப்பாணம் போன்ற சிறைச்சாலைகளில் அவற்றைக் கையளித்தால் உரிய கைதிகளிடம் கொண்டு சென்று ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அவர்களது உறவினர்களுடன் வீடியோ தொழில்நுட்பம் மூலம் கைதிகள் தொடர்பு கொள்ள முடியாத நிலை காணப்படுமானால் வவுனியா அல்லது யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்று அங்கிருந்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும் என்பதும் இங்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற விடயத்தைப் பொறுத்தவரை, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தற்போதைய அரசாங்கம் கடந்த நல்லாட்சி அரசை விட ஒப்பீட்டளவில் முன்னேற்றகரமான நடவடிக்கைகளையே முன்னெடுத்துள்ளது என்பதுதான் இங்கு குறிப்பிட வேண்டிய விடயம்.

வெசாக் தினத்தை முன்னிட்டு 16 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். இது தவிர, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் என்பது அண்மையில் புலப்பட்டிருந்தது.

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐ.நா செயலாளர் நாயகத்தைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது இவ்விடயத்தைப் பிரஸ்தாபித்திருந்தார். பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர்களில் பலரை, தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுவித்துள்ளதாகவும் அவ்வாறு விடுவிக்க முடியாத ஏனையோர் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

நீண்ட காலமாகத் தடுப்புக் காவலிலுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்டச் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர், நீண்ட காலம் தடுப்புக் காவலில் இருந்ததைக் கருத்திற் கொண்டு, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் அவர்களை விடுவிப்பதற்குத் தான் தயங்கப் போவதில்லை என்றும், ஐ.நா பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். அவருடைய இந்தக் கருத்து தமிழ்க் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்தின் சாதகமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

இது மாத்திரமன்றி, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் தொடர்ந்தும் சாதகமாகக் குரல் கொடுத்து வரும் அரசாங்கத்தின் பிரதிநிதியாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ காணப்படுகின்றார்.

நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என அவர் தொடர்ந்தும் கூறி வருகின்றார். அண்மையில் கூட அவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்குள்ள கைதிகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் தமிழ்க் கைதிகள் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்த அவர், சட்டத்தில் காணப்படும் ஏதோ காரணங்களால் குற்றச்சாட்டுக்கள் கூட சுமத்தப்படாது பலர் சிறைகளில் உள்ளனர் என்பதையும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அதனை விட கூடுதலான காலம் அவர்கள் சிறையில் கழித்து விட்டனர் என்பதையும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்க் கைதிகள் விடயத்தில் காணப்படும் பிரச்சினைகளை ஆளும் தரப்பில் உள்ளவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதையே இந்த நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.

மறுபக்கத்தில், தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகள் விவகாரத்தை தமது சொந்த அரசியல் நலன்களுக்குப் பயன்படுத்தி நிலைமைகளைச் சீர்குலைத்து விடக் கூடாது. அரசாங்கத்தின் சாதகமான செயற்பாடுகள், நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றைத் தோற்றுவித்திருக்கும் நிலையில், எதிர்ப்பு அரசியல் செய்கின்றோம் என்ற பெயரில் ஏற்கனவே காணப்படுகின்ற சாதகமான நிலைமையை குழப்பி விடுவது புத்திசாலித்தனமல்ல.

அதேநேரம், தமிழ்க் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்து வைத்திருக்கும் கால்களை தொடர்ந்தும் முன்னோக்கி எடுத்துச் சென்று, நீண்ட காலமாக சிறையில் வாடிக் கொண்டிருப்போரை விடுவித்து அவர்கள் தமது குடும்பங்களுடன் சமூகமயப்படுத்தப்பட உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாகும்.
 

Comments