மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவதில் அரசு தீவிர அக்கறை | தினகரன் வாரமஞ்சரி

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்துவதில் அரசு தீவிர அக்கறை

இலங்கையின் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்து விட்ட போதிலும், அதற்கான தேர்தல் இன்னுமே நடத்தப்படாமல் உள்ளது.

மைத்திரி- ரணில் தலைமையிலான கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் பல்வேறு காரணங்களால் பிற்போடப்பட்டு வந்தன. இந்நிலையில் கொவிட்-19 தொற்று காரணமாக தற்போதைய அரசாங்கத்தினாலும் உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களை நடத்த முடியாமல் போய் விட்டது.

பௌதீக ரீதியான காரணங்கள் எதுவாக இருந்தாலும், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டரீதியான சிக்கல் நிலையொன்று காணப்படுவதையும் மறுப்பதற்கில்லை. இந்த சட்டச் சிக்கலை நீக்கி உடனடியாக மாகாணசபைத் தேர்தல்களுக்குச் செல்லுமாறு அரசாங்கத்தின் சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் இதுவிடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த விசேட குழுவின் உறுப்பினரான நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்திலேயே இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு மேலாக மாகாண சபைகள் செயற்படாமல் இருப்பதால், இதுவரை நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மாகாண சபைகள் தற்பொழுது ஒருவரின் அதிகாரத்தினால் (ஆளுநர்) நிர்வகிக்கப்படுவது நியாயமானது அல்ல. தற்பொழுது உள்ளூராட்சி மன்றங்களும் பாராளுமன்றமும் செயற்படுகின்றன. ஆனால் மாகாண சபைகள் மாத்திரமே செயற்படாத நிலையில் காணப்படுகின்றன.

இதனால் மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியிருந்தார். மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்குக் காணப்படும் சட்டரீதியான தடையை நிவர்த்தி செய்து, தேர்தலைத் துரிதப்படுத்துவதற்கு பாராளுமன்ற விசேட குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

தேர்தல் முறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு தொடர்ச்சியாகக் கூடி ஆராய்ந்து வரும் நிலையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி இவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கலப்புமுறையில் பொதுவான தேர்தல் முறையொன்றுக்குச் செல்ல வேண்டும் என்பது இந்தக் குழுவில் உள்ள பெரும்பாலானவர்களின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை துரிதப்படுத்தவதற்கு சட்டரீதியான தடையை நீக்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையே சட்டரீதியான தடையாக மாறியுள்ளது.

அதாவது, கடந்த நல்லாட்சி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வந்தது. தற்பொழுது காணப்படும் விகிதாசார பிரதிநிதித்துவத்துக்குப் பதிலாக வட்டாரம் மற்றும் விகிதாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய கலப்புமுறையான தேர்தல் முறையொன்றை கொண்டு வரும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தனர்.

சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அப்போதிருந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாத காரணத்தால், சிறுபான்மைக் கட்சிகள் குறிப்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் முன்வைத்த நிபந்தனையொன்றுக்கு இணங்க குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றியிருந்தது.

அதாவது வட்டாரங்கள் தொடர்பான எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள எல்லை நிர்ணய சபையின் அறிக்கை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டாலே மாகாணசபைத் தேர்தல் குறித்த சட்டமூலம் பூர்த்தியடையும் என்ற நிபந்தனை இதில் சேர்க்கப்பட்டது. எல்லை நிர்ணய அறிக்கை இன்னமும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் தற்பொழுதுள்ள மாகாணசபைச் சட்டத்துக்கு அமைய தேர்தலுக்குச் செல்வது சிக்கலாக மாறியுள்ளது.

எவ்வாறாயினும், மாகாணசபைத் தேர்தல்கள் குறித்த புதிய சட்டத்தை நிறைவேற்றாமல் அவற்றுக்கான தேர்தல்களை நடத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருப்பதாக தேர்தல் முறைமைகள் குறித்த பரிந்துரைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சட்டச் சிக்கல்கள் நிறைந்த பின்னணியில் தற்போதைய அரசுக்குப் பாராளுமன்றத்தில் காணப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அமைய மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான புதிய சட்டத்தை நிறைவேற்றுவது சிக்கலான விடயமாக அமையப் போவதில்லை. விகிதாசார முறையின் அடிப்படையிலேயே மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என பாராளுமன்ற விசேட குழுவின் உறுப்பினர் மனோ கணேசன் எம்.பி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் பார்க்கும் போது அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதத்துக்குள் மாகாணசபைத் தேர்தலுக்கு அரசாங்கம் செல்லக் கூடிய சாத்தியக் கூறுகளே அதிகமாகவுள்ளன.

மாகாணசபைகளினால் செலவினங்கள் அதிகம் என்ற கருத்து நிலவுகின்ற போதும் பிராந்திய மட்டத்தில் மக்களுக்குச் சேவையாற்றுவதற்கும், அரசின் பணிகள் அடிமட்டத்தில் மக்களைச் சென்றடைவதற்கும் மாகாணசபை முறைமை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாகவே தெரிகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போதும், அதன் பின்னரான பொதுத் தேர்தல் பிரசாரங்களின் போதும் மாகாணசபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதாக உறுதியளித்திருந்தார். இருந்த போதும், 2019ஆம் ஆண்டு டிசம்பர் பகுதியில் உலகில் ஏற்பட்ட கொவிட்-19 தொற்று இலங்கையையும் பாதித்தமையால் தேர்தலை நடத்துவதற்கான பௌதீகச் சூழல் அற்றுப் போனது. இருந்த போதும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் கைவிட்டிருக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் காலப் பகுதியில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் அடிப்படையிலேயே மாகாணசபை முறைமை இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரை மாகாணசபை முறை இலங்கையில் நடைமுறையில் இருக்கின்ற போதும், 13வது திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை.

குறிப்பாக காணி மற்றும் பொலிஸ் போன்ற அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு முற்றுமுழுதாக வழங்கப்படவில்லை. எனினும், 13வது திருத்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாரங்கள் மாகாண சபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என எமது அயல் நாடான இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவின் மத்திய அரசாங்கத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்த விடயத்தை வலியுறுத்துவது வாடிக்கையாகிப் போயுள்ளது. இந்த வரிசையில் நரேந்திர மோடி அரசாங்கமும் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்தபடி வருகிறது. மோடி கடந்த காலத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த காலப் பகுதியிலும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்ததுடன், 13வது திருத்தம் பற்றியும் பிரஸ்தாபித்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

தன்னைச் சந்தித்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் முக்கிய தலைவர்களிடம் அவர் இவ்விடயத்தைப் பற்றிக் கூறியிருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், இந்திய வெளியுறவுச் செயலாளர் மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து அரசாங்கத்துக்கு எவ்விதமான அழுத்தமும் கொடுக்கவில்லை என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார். தேர்தல் குறித்து முடிவுகளை எடுப்பதற்கான அழுத்தங்களை வழங்க அவர் இலங்கை வரவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நாட்டின் எந்தவொரு பகுதியில் உள்ள பிரஜையும் தமது பிரச்சினைகளுக்காக மாகாணசபையின் பிரதிநிதி ஒருவரைச் சந்திக்கவில்லை. இந்த நிலைமையை மாற்றி விரைவில் தேர்தலை நடத்த அரசு தீர்மானித்துள்ளது எனவும் பேராசிரியர் பீரிஸ் சுட்டிக் காட்டினார்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் எந்தவொரு வெளிநாட்டின் அழுத்தத்துக்காகவும் அரசு இவ்வாறான முடிவுக்குச் செல்லவில்லை. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார். இருந்தபோதும், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத்தில் விரைவில் திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Comments