![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/11/07/a19.jpg?itok=szQnN3QZ)
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்பெறும் என்பது ஆன்றோர் வாக்கு. கல்வி, செல்வம், பதவி எனும் உயர்ச்சிகள் எல்லாம் ஒழுக்கத்துக்கு ஈடாக முடியாது. பணம் படைத்த செல்வந்தர் பலர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காததால் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு நிம்மதி இழந்து வாடுகின்றனர். உயர்கல்வி கற்றவர்களும், உயர் பதவி வகிப்பவர்களும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காததால் விரைவிலேயே சமூகத்தில் தாழ்நிலையை அடைந்து விடுகிறார்கள். மாறாக செல்வத்திலும் அந்தஸ்திலும் குறைந்த நிலையிலுள்ளவர்கள் தங்கள் ஒழுக்கமான வாழ்க்கையினால் உயர் நிலையை அடைகிறார்கள்.
ஒழுக்கம் என்பது ஒரு செயலால் குறிக்கப்படும் மனித நடத்தையல்ல. அது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல நற்பண்புகளின் சேர்க்கையாகும். தனது சொந்தக் கடமைகளிலிருந்து பெற்றோருக்கு, சமூகத்துக்கு, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய அத்தனை கடமைகளும், சேவைகளும் ஒழுக்கத்தினுள் அடங்கும். ஒழுக்கமானது சிறுவயதிலிருந்து கடைப்பிடிக்கப்பட்ட பயிற்சியாக அமைய வேண்டும். ஒழுக்கத்தை வளர்ப்பதில் பெற்றோர், ஆசிரியர் சமூகத்தின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடந்து ஒழுக்கத்தைப் பேண வேண்டும்.
அன்றாடம் தமது சொந்தக் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து பெற்றோரைக் கனம் பண்ணுதல், பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்லுதல், ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்தல், அவர் கொடுக்கும் பணிகளைத் தவறாமல் செய்தல் வரை, ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோர் பிள்ளைகளை சுயநலமற்றவர்களாகவும் பிறருக்கு உதவும் சிந்தனை உள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டும்.
போதுமான அளவு விளையாட்டு, மகிழ்ச்சியான பயனுள்ள பொழுதுபோக்குகள் ஒழுக்கத்தைப் பேணுவதில் உதவியாக இருக்க முடியும். தர்மத்தை, நீதியை, ஒழுக்கத்தைப் போதிக்கும் கதைகளை வாசித்தல் இனிமையான சங்கீதம், இசை நிகழ்ச்சிகளைக் கேட்டல், சித்திரம் வரைதல், நாட்டியப் பயிற்சி ஆகியன சிறுவர்களிடையே ஒழுக்கமுள்ள மனப்பான்மையை வளர்ச்சும் பயிற்சிகளாகும். சீரிய முறையில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து, உலக உத்தமர்களாக உயர்ந்தவர்களின் வாழ்க்கை வரலாறுகளை சிறுவர்களும் இளைஞர்களும், வாசிப்பது, ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கு அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்"
எனும் குறள் மூலம் வள்ளுவரும் ஒழுக்கம் மேன்மையைத் தருவதனால் அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகக் காக்கப்படும் என்கின்றார்.
என். வினோ மதிவதனி
லுனுகலை.