![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/11/14/a15.jpg?itok=iWBE9w31)
சுதந்திர இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷ தலைமையிலானஅரசாங்கத்தின் சார்பில் நிதி அமைச்சர்பசில் ராஜபக்ஷ நேற்றுமுன்தினம்வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
76வது வரவுசெலவுத் திட்டமானது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கன்னி வரவுசெலவுத் திட்டமாக அமைகின்றது. அதேநேரம், பாராளுமன்ற வரலாற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருக்கின்றனர். அவ்வாறான முதலாவது சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது.
இதற்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்னர் நிதியமைச்சராகவும் பதவி வகித்திருந்த போது வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றுமுன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டமானது பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தது எனலாம். கொவிட் நெருக்கடியினால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதாரப் பின்னடைவு போன்ற பின்புலத்தில் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெரிதும் காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிதி அமைச்சர் அரசின் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.
நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.00மணிக்கு ஆரம்பமான வரவுசெலவுத் திட்ட உரை 4.30மணிவரை இடம்பெற்றதுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பாராளுமன்றத்துக்குச் சென்று சபையில் அமர்ந்து வரவுசெலவுத் திட்ட உரையை செவிமடுத்திருந்தார்.
அரசாங்கத்தின் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் தொலைநோக்குப் பார்வையைக் கொண்ட வரவுசெலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது எனக் கூறலாம். குறிப்பாக அரசாங்கத் துறையில் காணப்படும் செலவினங்களைக் குறைப்பதற்கான முன்மொழிவுகள் பல இதில் உள்ளடங்கியுள்ளன.
இது தவிரவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு 30,000மில்லியன் ரூபாவை சேர்ப்பதற்கும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. இது ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளம் தொடர்பாக தற்பொழுது செலவிடப்படுகின்ற 109,000மில்லியன் ரூபாவுக்கு அதிகமான தொகையை விட மேலதிகமான ஒதுக்கீடாகும்.
அரசாங்க நிர்வாகத்தில் பெரும் பங்காற்றும் அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கும், அரசாங்க ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு புதிய சம்பள முறையொன்றை அறிமுகப்படுத்துவது, எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு அரசாங்க நிறுவனங்களில் எந்தவொரு புதிய கட்டடங்களுக்கும் அனுமதி வழங்குவதில்லை என்பன போன்ற அரச துறையின் செலவினங்களைக் குறைத்து அவற்றை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது.
இது தவிரவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு 5வருடங்களுக்கு தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவது தற்பொழுது போதுமானதாகவுள்ளது. ஆனால் குறித்த ஐந்து வருடங்களை 10வருடங்களாக நீடிப்பதற்கு வரவுசெலவுத் திட்டத்தில் யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
திரட்டு நிதியத்தின் கீழ் சம்பளங்கள் கொடுப்பனவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி உள்ளடங்கலாக அனைத்துப் பதவிகளுக்கும் இது செல்லுபடியாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவைக் குறைப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொவிட் உலகத் தொற்றுநோயினால் நலிவடைந்த துறைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கும், அவர்களின் வாழ்வாதாரங்களை அதிகரிக்கச் செய்வதற்குமான யோசனைகள் அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் காணப்படுகின்றன. கடந்த மாதங்களின் போது பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையினால் தமது வருமான மூலத்தை இழந்த பாடசாலை சேவை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு ரூபா 400மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 600மில்லியன் ரூபாவும், வருமானங்களை இழந்த தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ரூபா 1,500மில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. தடுப்பு மருந்தேற்றல் போன்ற வசதிகளுக்கு ஊக்கமளிப்பதற்காக 500மில்லியன் ரூபாவும் நிதி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொருட்கள் பற்றாக்குறை, இறக்குமதி வரையறைகளை விதித்தல், இறக்குமதிகள் மீது முற்றாகத் தங்கியிருத்தல், ரூபா மதிப்பிழத்தல் அத்துடன் தயாரிப்பாளர்களை போதியளவு ஊக்குவிக்கத் தவறியமை என்பன விலை அதிகரிப்பிற்கான காரணங்கள் என்பதனையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
எனவே, பொருட்கள் மற்றும் சேவைகள் சந்தைகளின் போக்கினைக் கட்டுப்படுத்துவதற்கு கிடைக்கப் பெறுகின்ற தீர்வுகள் நீண்ட காலத்திற்காக இருக்க வேண்டும் என்பதனை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்தை மையப்படுத்தியதாக பல்வேறு திட்டங்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகளைக் காணக் கூடியதாகவுள்ளது. அரசாங்கம் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்துக்கு தொடர்ந்தும் வலுவூட்டவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படக் கூடிய மேலதிக செலவினங்களுக்காக நிதி ஒதுக்குவதற்கும் அரசாங்கம் தவறவில்லை.
அதிக நச்சுத்தன்மையுடைய இரசாயனப் பாவனையினைத் தவிர்த்தலும் மாற்றுக் களைநாசினியை முறையாகப் பயன்படுத்தலும் பின்பற்ற வேண்டிய சிறந்த விவசாய நடைமுறைகளாகும். எனவே, மாற்று களைநாசினிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ரூபா 4,000மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. இந்த வகையில், விவசாய நிலங்களை தயார்படுத்தும் போது களைகளையும் களைநாசினிகளின் பாவனையைக் குறைப்பதற்கும், ஆகக் கூடியது 2ஹெக்ரேயர்களுக்கு, ஹெக்ரேயர் ஒன்றுக்கு ரூபா 5,000நிதி உதவி வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
கொவிட் நெருக்கடி போன்றவற்றினால் அரசாங்கத்தின் வருமானத்திலும் பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதை நாம் அறிவோம். இவ்வாறான நிலையில் அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கான யோசனைகள் பலவும் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடாகப் பெறப்படும் வருமானத்தை அதிகரிப்பதற்காக ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கணினிக் கட்டமைப்பான ரமிஸ் கட்டமைப்பை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், சம்பந்தப்பட்ட ஏனைய அரசாங்க நிறுவனங்களை இதனுடன் இணைந்து வினைத்திறனான முறையில் வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இது தவிரவும் ஜனவரி மாதம் முதல் பொருட்கள் மற்றும் சேவைக்கான வரியையும் அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது.
நாடு எதிர்கொண்டுள்ள கொவிட் பிரச்சினையிலிருந்து மீள்வதற்கும் நாட்டை மீண்டும் சரியான பாதையில் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேநேரம், விலைவாசி அதிகரிப்புப் போன்று மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பற்றி எந்த விடயங்களையும் வரவுசெலவுத் திட்டம் உள்ளடக்கியிருக்கவில்லையென எதிர்க் கட்சியினர் விமர்சித்துள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு நிவாரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லையென்பது அவர்களின் கருத்தாகவுள்ளது.
இருந்த போதும் உடனடிப் பிரச்சினைகளுக்கு அப்பால் தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்கும் தொலைநோக்குப் பார்வையே இந்த வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் என அமைச்சர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழிகாட்டியாக இந்த வரவுசெலவுத் திட்டம் அமையும் என்பது அவரக்ளின் நிலைப்பாடாகவுள்ளது.
சம்யுக்தன்