வடக்கு, கிழக்குத் தமிழர்களின் அரசியலுக்கும்புலம்பெயர்ந்து மேற்குலகில் வாழ்ந்துவருகின்ற தமிழர்களுக்கும் இடையில்தவிர்க்க முடியாத வகையில் தொடர்ச்சியான உறவுகள்தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நீண்ட காலயுத்தம் நிலவிய அசாதாரண சூழல் காரணமாகநாட்டை விட்டு வெளியேறும் நிலைமைக்குத்தள்ளப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேச தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.
அந்நாடுகளில் அவர்கள் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பெரும் பலமுள்ளவர்களாகத் திகழ்கின்றனர். கனடா போன்ற நாடுகளில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாகவிருப்பதுடன், அந்நாட்டின் அரசியலிலும் அவர்களின் பங்களிப்பும் செல்வாக்கும் அதிகமாகக் காணப்படுகிறது.
புலம்பெயர்துவாழ் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் அரசியல் விடயங்களில் எப்பொழுதும் தமது அக்கறையைக் காண்பித்து வருபவர்களாகக் காணப்படும் அதேநேரம், வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் தமக்கான ஆதரவையும் அனுசரணைகளையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளும் நிலைமையும் காணப்படுகிறது.
இவ்வாறான பின்னணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் கனடாவில் கலந்து கொண்ட நிகழ்வில் புலம்பெயர்ந்துவாழ் தமிழர்கள் குழப்பம் விளைவித்த விடயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர் அரசியலில் மாத்திரமன்றி, பெரும்பான்மை அரசியலிலும் இந்த விடயம் முக்கியமாகப் பேசப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளிநாட்டில் கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம் விளைவிக்கப்பட்ட சம்பவம் இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலும் இவ்வாறான சம்பவம் அவருக்கு எதிராக இடம்பெற்றுள்ளது.
அவ்வாறானதொரு சம்பவம்தான் கனடாவிலும் நடந்துள்ளது. அமெரிக்காவின் அழைப்பையேற்று உயர்மட்ட சந்திப்புக்களை நடத்துவதற்காகச் சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கனடாவிலும் சில கூட்டங்களில் கலந்து கொண்டார். கனேடியக் கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொண்டிருந்தார்.
கனடாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் சுமந்திரன் உரைநிகழ்த்திக் கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்த சிலர் அவர் மீது சரிமாரியான கேள்விகளைக் கேட்டு குழப்பம் விளைவித்தனர். சுமந்திரன் மற்றும் சாணக்கியம் நிலைகுலைந்து தடுமாறும்படியாக வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களை நோக்கி பிரயோகிக்கப்பட்டன.
அவர்கள் மோசமான வார்த்தைகளைக் கூறி சுமந்திரனையும், சாணக்கியனையும் வெளியேறுமாறு கோஷம் எழுப்பினர். இதனால் அவர்கள் இருவரையும் வெளியேற்ற வேண்டிய நிலைமைக்கு ஏற்பாட்டாளர்கள் தள்ளப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஒருசிலர் தங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்றும் பரவலாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. புலம்பெயர் தமிழர்களில் ஒரு தரப்பினர் தமிழர்களின் அரசியலை கொதிநிலையில் தொடர்ந்தும் வைத்திருக்கவே விரும்புவதாக அத்தரப்பினர் கூறுகின்றனர்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும் சுமந்திரனுக்கு எதிரான விமர்சனங்கள் அதிகமாக முன்வைக்கப்பட்டிருந்தன. அவர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்தாரென்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்பொழுதும் மக்களின் உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்து உசுப்பேற்றும் அரசியலில் ஈடுபடும் தரப்பினர் சுமந்திரன் என்ற தனிப்பட்ட ஒரு நபருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர். இதற்கு புலம்பெயர்ந்துவாழ் சமூகத்தின் ஆதரவும் வெகுவாக இருந்தது.
இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகவே கனடாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களில் ஒரு குழுவினர் அவருக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். புலம்பெயர்ந்துவாழ் இலங்கைத் தமிழர் சமூகத்தைப் பொறுத்த வரையில் அவர்களுக்கிடையில் எந்த விடயத்திலும் எப்போதும் ஒற்றுமை இருந்ததில்லை. எப்பொழுதும் குழுக்களாகப் பிரிந்து நின்றே செயற்பட்டுள்ளனர். இலங்கையின் வடக்கு கிழக்கு அரசியல் விடயத்திலும் அவர்களிடம் ஒற்றுமை இல்லை.
இலங்கையின் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியில் புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் பங்களிப்பு கணிசமானதாக இல்லாவிட்டாலும் ஒரு பகுதியினர் இங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர். இருந்தபோதும், இலங்கையில் எப்பொழுதும் குறிப்பாக தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தாலேயே தமக்கான இருப்பை உறுதிப்படுத்த முடியும் என்பது அங்குள்ள பலருடைய நிலைப்பாடு ஆகும்.
இதனால் இலங்கை அரசாங்கத்துடன் பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய தரப்பினர் இலங்கை அரசியலில் இருப்பதையே அவர்கள் விரும்புகின்றனர். எந்தவொரு விடயத்தையும் முற்போக்கு சிந்தனையுடன் அணுகக் கூடியவர்களை துரோகிகளாக்குவது அவர்களுக்கு சித்தாந்தமாக உள்ளது. தமது தேவைக்காக இலங்கையில் உள்ள மக்களை தூண்டி விடுவதையும் கடந்த காலங்களில் காண முடிந்தது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய வகையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் காணப்படும் சந்தர்ப்பங்களை புலம்பெயர்ந்துவாழ் தமிழ் சமூகத்தினர் எந்தளவுக்குப் பயன்படுத்தினார்கள் என்ற கேள்வி காணப்படுகிறது.
தமது மக்களுக்காக உதவும் உள்ளம் படைத்த புலம்பெயர்ந்துவாழ் சமூகத்தினர் தனிப்பட்ட ரீதியில் உதவிகளை மேற்கொண்டு வந்தாலும், பாரிய முதலீடுகள் எதுவும் அவர்களால் இதுவரை கொண்டு வரப்படவில்லை என்பதே உண்மை. வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் முன்னேற்றம் குறித்து இலங்கை அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை என அவர்கள் கருதுவார்களாயின், அரசியல்வாதிகளை பார்த்துக் கொண்டிருக்காமல் அவர்களே நேரடியான உதவிகளை வழங்க முடியும்.
அதனை விடுத்து முற்போக்காகக் சிந்திக்கக் கூடிய அரசியல்வாதிகளை தமது காழ்ப்புணர்ச்சிக்காக விமர்சித்து துரோகிப் பட்டம் கட்டுவதன் ஊடாக புலம்பெயர்ந்துவாழ் சமூகத்தினர் எதனை சாதிக்கப் பார்க்கின்றனர். என்பது முக்கிய வினா ஆகும்.
மறுபக்கத்தில் தமிழ் சமூகத்துக்கிடையில் ஏற்படக் கூடிய இவ்வாறான முரண்பாடுகள் மற்றும் முட்டிமோதும் சம்பவங்கள் ஆட்சியாளர்களுக்கு ஒட்டுமொத்த சமூகம் குறித்து தவறான செய்தியை வழங்குவதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடுவதற்கு இடமுண்டு. இந்த முரண்பாடுகளைப் பயன்படுத்தி தென்னிலங்களை அரசியல் சக்திகள் தமது அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதற்கு வழிவகுத்து விடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
வெளிநாடுகளிலிருந்து கூக்குரல் இடுபவர்களுக்கு இதனால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் புரியாவிட்டாலும், கள நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் தமிழ் சமூகம் இது விடயத்தில் அக்கறையுடன் இருக்க வேண்டும்.
அதேநேரம், தற்பொழுது நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்பதிலேயே அதிக அக்கறை காண்பிக்கின்றனர். எனினும், சுயாட்சி, தனிநாடு போன்ற வார்த்தைகளால் உசுப்பேற்றும் சில அரசியல்வாதிகளின் உசுப்பேற்றல்களுக்கு எடுபடும் நிலையில் மக்கள் இல்லை என்பதே உண்மையாகும். இதுபோன்ற சில அரசியல்வாதிகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் புலம்பெயர்ந்துவாழ் சமூகத்தினர் சிந்திப்பதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது இவ்விதமிருக்க, புலம்பெயர்ந்து வாழ் சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, ஐ.நா பொதுச் செயலாளரிடம் கூறியிருந்தார். பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அரசாங்கமாக இருக்கின்ற போதும் தமிழர்களின் பிரச்சினை குறித்து புலம்பெயர்ந்துவாழ் சமூகத்துடன் கலந்துரையாடத் தயார் என்ற ஜனாதிபதியின் செய்தி வரவேற்கும் விதமாக இருந்தது. புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் மற்றும் அமைப்புக்கள் பல தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான அழைப்பு எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமாக இருக்கும் என்பது விவாதத்துக்கு உரியதாக இருந்தாலும், சில புலம்பெயர் அமைப்புக்கள் இந்த அழைப்பை சாதகமாகப் பார்த்துள்ளன. தடைகளை நீக்கும் பட்சத்தில் பேச்சுக்களுக்குத் தயார் என்றும் அந்த அமைப்புக்கள் கூறியுள்ளன.
இதுபோன்ற பின்னணியில் நாட்டில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்ளாது நீண்ட கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு சாதகமான ஒத்துழைப்புக்களை வழங்குவதே காலத்தின் தேவையாகும்.
சம்யுக்தன்