![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2021/12/19/a29.jpg?itok=QlTQToLY)
தமிழ் தலைமைகளின் அண்மைக்கால, நவம்பர் (02) டிசம்பர் (12) மற்றும் எதிர்வரும் (21) சந்திப்புக்களின் குறிக்கோள்கள் வெற்றியடையப் பிரார்த்திக்கும் தேவைப்பாடுகள் யாருக்கும் இல்லாதிருக்காது. குறிப்பாக, சிறுபான்மைச் சமூகங்களின் உரிமை விரும்பிகள் இதன் வெற்றிக்காகவே காத்துக் கிடக்கின்றனர்தான். ஆனாலும் களையப்பட வேண்டிய சந்தேகங்களை, யார் களைவதென்ற கேள்விகளையும் இந்தச் சந்திப்புக்கள் ஏற்படுத்தியே வருகின்றன. புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்கில், இந்த அரசாங்கம் நகர்கையில், இதுபோன்ற சந்திப்புக்கள்தான் தமிழ்மொழிச் சமூகங்களைப் பலப்படுத்தவும் செய்யும். துரதிஷ்டவசமாக, இந்தச் சமூகங்களுக்குள் ஏக தலைமைகள் இல்லாதுள்ள நிலையில், எந்த அடிப்படையில் கருத்துக்கள் உள்வாங்கப்படுகின்றன என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்பில், முஸ்லிம் தலைமைகளில் ஒன்றே பங்கேற்றிருக்கிறது. இன்னும், தமிழ் தலைவர்கள் சிலரது பிரசன்னமின்றியும் இச்சந்திப்பு நடந்துள்ளது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு அழுத்தம் கொடுப்பதென்ற தொனியில்தான், இங்கு தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறானால், இதில் பங்கேற்காத தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகள் என்ன? எதுவானாலும் 13இல் இரட்டை நிலைப்பாடுள்ள கட்சிகள்தான் இந்தச் சந்திப்பில் தவிர்க்கப்பட்டிருக்கிறதோ தெரியாது. கிழக்குப் பிரிந்தேயிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடுள்ள முஸ்லிம் தலைமைகள் இதில் பங்கேற்காததும், இணைந்த வடக்கிற்குள் தனி முஸ்லிம் அலகை விரும்பாத தமிழ் தலைமைகளும்தான் இந்தச் சந்திப்பைத் தவிர்த்திருக்கின்றன. ஏன்? தவிர்த்ததா? தவிர்க்கப்பட்டதா? என்ற சந்தேகங்களுக்கும் இதன் ஏற்பாட்டாளர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.
வடக்கையும், கிழக்கையும் இணைக்கும் பாணியிலான இந்தச் சந்திப்புக் கருத்தாடல்களில், கலந்துகொண்ட முஸ்லிம் கட்சியொன்றை, ஒட்டுமொத்த முஸ்லிம்களின் குரலாகக் காட்டுவதற்கு, இதன் ஏற்பாட்டாளர்கள் விரும்புவது ஏன்? பறவாயில்லை, அவ்வாறு காட்டுவதானாலும் குறித்த அந்த தலைமை, கட்சி முக்கியஸ்தர்களை அழைத்து, ஆலோசனையை அறிந்ததா? அல்லது அனுமதியைப் பெற்றதா? கணிசமான முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற புவியியல் பின்னணியில்லாத ஒருவர் மட்டும் இவ்வளவு பெரிய விடயத்தை கையாளலாமா?
இதுபோன்றுதான், தமிழர் தரப்பிலும் ஆதங்கங்கள் எழும்பியலைகின்றன. உரிமையரசியலில் உறுதியான நிலைப்பாடுகளற்றுப்போன தரப்புக்களுடன் சமஅளவான அரசியல் பங்கீடுகள் பற்றி என்ன பேச்சு? போராடிய சமூகத்தின் பிரச்சினைகளே கிடப்பில் கிடக்கையில், நிலைமாறும் அரசியல் கோட்பாட்டாளர்களுடன் எதைப் பேச? 13க்கு அப்பால் சென்று காரியமாற்ற வேண்டிய களப்பணிகள்தான் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதும் சிலரது கோரிக்கை. இதனால்தான், உரிமை விரும்பிகளிடையே இந்தச் சந்தேகங்கள். எனவே, ஏற்பாட்டாளர்களுக்கு முன் நிறையச் சவால்கள் குவிந்து கிடக்கின்றன. வடக்கு, கிழக்கு அரசியலுடன் தொடர்புறும் சகல கட்சிகளையும் ஒரே மேசையில் சந்திக்கச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படுதல் அவசியம். இதில், இன்னுமொன்றும் உள்ளது. பிரிதல், சமஷ்டியென, நிலைமாறாத கோட்பாடுகளுடனுள்ள தேசிய காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் வகிபாகங்களுடன் எதிர்காலச் சந்திப்புக்கள் இடம்பெறுவதுதான் இழுத்தடிப்புக்களை இல்லாமலாக்கும். இல்லாவிடின், ஏற்கனவே பங்கேற்ற கட்சிகள்தான், சிறுபான்மைச் சமூகங்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை நிரூபிக்க வேண்டும். தேர்தல் வரும்வரை இதற்காகக் காத்திருப்பதா? என்ற நியாயங்கள் நிலைமைகளைச் சீரழிக்கக் கூடாதே!
இந்திய, இலங்கை ஒப்பந்தம் என்பது, முஸ்லிம்களைப் பொறுத்த வரைக்கும் அதிர்ச்சி நிலநடுக்கம்தான். அன்று தொட்டு இன்று வரைக்கும் இந்த நடுக்கம் நீங்கியதாக இல்லை. ஒருமொழிச் சமூகங்களின் பலத்துக்காக இணைக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் பின்னர், ஒரு இனத்தை ஒடுக்கப்புறப்பட்டதால் வந்ததே இந்த நடுக்கம். இம் மாகாணங்கள் இணைக்கப்பட்ட சூழலில் இருந்த புரிந்துணர்வுகள் இன்று இல்லாதிருப்பதை இந்தியா அறியாமலா இருக்கும்? இதன்பின்னர், எந்தச் சந்திப்புக்களையும் முஸ்லிம் தலைமைகளுடன் இந்தியா நடத்தாதிருப்பதுதான், முஸ்லிம்கள் மத்தியில் இந்நடுக்கங்களை நிலைப்பட வைத்திருக்கிறது. எனவே, ஏக தலைமையாக அடையாளப்படப்போகும் கட்சி அல்லது ஏற்கனவே இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற முஸ்லிம் தலைமை, இவ்விடயத்தில் எதைச் செய்யப் போகிறது என்பதைத் தெளிவுபடுத்துவதுதான் அவசியம்.
இத்தனைக்கும், இந்தியாவின் இன்றைய நகர்வுகள் இலங்கை அரசாங்கத்தை சாந்தப்படுத்தும் திசைகளில் செல்வதையே காண முடிகிறது. பூகோள அரசியலின் பொறிக்குள் சிக்காமல் இவ்விரு அரசுகளும் தப்ப முயற்சிக்கும் தருணங்கள் கடந்தகால தப்புக்களையே மீட்டச்செய்கின்றன. இது சிறுபான்மை சமூகங்களின் குறிப்பாக, தமிழர்களின் எதிர்பார்ப்புக்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதோ தெரியாது? இணைத்துக் கொடுத்த தாய்மண்ணையே காப்பாற்றத் தெரியாதோருக்கு இன்னும் எதைச் செய்ய? ஊர் இரண்டுபட்டால் உள்ளதும் கைநழுவும் என்பார்களே! அதுதான் இன்று நடந்துள்ளது. இதை உணர்ந்துதான், இந்த ஒன்றுபடல் சந்திப்புக்களோ! அதுவும் தெரியாது. "ஏதோ நினைவுகள் களத்திலே மலருதே"
சுஐப் எம்.காசிம்