மேற்காசிய அரசியலில் அதிக மாற்றங்களை நோக்கிய போக்கினை அண்மைக்காலங்களில் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக ஈரான் விவகாரத்தில் வல்லரசுகளின் போக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் ஈரானின் அணுகுமுறையும் தனித்துவமானதாக அமைய இஸ்ரேல் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் போக்கினையும் காணமுடிகிறது. இஸ்ரேலிய அணுகுமுறை அனைத்தும் அரபு நாடுகளை அரவணைத்துக் கொள்வதுடன் ஈரானுக்கு எதிரான முகாம் ஒன்றுக்கான தயார்படுத்தலை மேற்கொண்டு வருகிறதை காணமுடிகிறது. அதிலும் தென் குவாட் என அழைக்கப்படும் குவாட்-2அமைப்பினை மையப்படுத்திய இஸ்ரேல் இராணுவ ரீதியான கட்டமைப்பினையும் ஒத்துழைப்பினையும் அமைப்பதில் அதிக கரிசனை கொண்டு இஸ்ரேல் நகர்ந்து வருகிறது. இக்கட்டுரையும் இஸ்ரேலிய பிரதமரது ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விஜயத்தை மையப்படுத்தி எழுந்துள்ள மேற்காசிய அரசியல் சூழலை தேடுவதாக அமையவுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் நப்ராலி பென்னட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு டிசம்பர்- 12 (2021)அன்று முதல்முறையாக விஜயம் செய்துள்ளார். குறித்த விஜயத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இளவசர் முகமட் பின் சையட்டை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலில், 2020ஆம் அண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முன்னாள் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் தொடர்பான ஒப்பந்தங்களின் நிகழ்கால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அவ்விஜயத்தின் முடிவில் கருத்துரைத்துள்ள பென்னட், இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான உறவுகள் எவ்வாறு சிறப்பாகவும் விரிவானதாகவும் இருந்தது என்பதை அவரது விஜயத்தினூடாக எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், 'நாங்கள் தொடர்ந்து அவர்களை வளர்த்து, பலப்படுத்த வேண்டும். மேலும் இரு நாட்டு மக்களுக்கும் இடையே அன்பான அமைதியை கட்டியெழுப்ப வேண்டும்.' எனவும் குறிப்பிட்டுள்ளார். இளவரசர் முகமதுவின் இஸ்ரேல், -பாலஸ்தீன மோதலுக்கு உடனடித் தீர்வை விட, அணுவாயுத ஈரானின் அச்சுறுத்தல் இப்போது அதிக கவலை அளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமன்றி இரு நாட்டுக்குமான இராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் அதிக உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் இஸ்ரேல் பாரிய பொருளாதார முதலீடுகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கான புரிந்துணர்வு இருதரப்பாலும் எட்டப்பட்டமை தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு இரு நாட்டுக்குமான உறவை பலப்படுத்துவதன் அடிப்படையில் மேற்காசிய அரசியல் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் நகர்வது மட்டுமன்றி தீவிர போக்குடைய இஸ்ரேலிய எதிர்ப்புவாத சக்திகளை முறியடிக்கும் விதத்திலும் இஸ்ரேலின் நகர்வு காணப்படுகிறது. இதனை விரிவாக நோக்குதல் அவசியமாகும்.
முதலாவது, அரபு நாடுகளோடு கூட்டொன்றை வலுப்படுத்துவதில் இஸ்ரேல் தொடர்ச்சியாக வெற்றிகண்டு வருகிறது. சவுதி அரேபியாவோடும் கட்டாரோடும் நெருக்கமான உறவை கொண்டுள்ள இஸ்ரேல் அமெரிக்காவின் அனுசரணையோடு குவாட்-02என்ற அமைப்பில் இந்தியா, அமெரிக்காவோடு இஸ்ரேலும் ஐக்கிய அரபு இராச்சியமும் இணைந்து கொண்டன. எனவே இக்கூட்டு வலுவான அத்தியாயத்தை மேற்காசிய பரப்பில் ஏற்படுத்த வழிவகுத்துள்ளது. அமெரிக்க,-ஈரானிய உறவை உடைத்த இஸ்ரேல் படிப்படியாக அமெரிக்காவை ஈரானின் அணுவாயுத உடன்பாடுகளுக்கு எதிராக தொழிற்பட வைத்ததோடு மேற்காசிய அரசியலில் புதிய கூட்டின் உருவாக்கத்தை பலப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. புவிசார் அரசியல் ரீதியில் விமான போக்குவரத்தையும், தரைத் தொடர்பையும், இராணுவ -பொருளாதார ஒத்துழைப்புக்களையும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பலப்படுத்தும் இஸ்ரேல் இந்திய -அமெரிக்க பின்புலத்துடன் அத்தகைய கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. எனவே மேற்காசியாவில் இஸ்ரேல் உருவாக்கி இருக்கும் புதிய கூட்டணிக்கு இஸ்ரேலே தலைமை தாங்கும் சக்தியாக காணப்படுகிறது.
இரண்டாவது, இஸ்ரேல் அரபு நாடுகளிடையே தனது நட்புறவை பலப்படுத்தம் விதத்தில் இராணுவ பொருளாதார உதவிகளை முன்னிறுத்தம் இராஜீக செய்முறைகளை முன்னகர்த்தி வருகிறது. மேற்காசியாவில் யூதர்களுக்கு எதிரான அரபுலக சிந்தனையில் ஆளும் தரப்புக்களை திசை திருப்புவதற்கும் கூட்டுறவை பலப்படுத்துவதிலும் தனது இராஜதந்திரத்தை பிரயோகப்படுத்தி வருகின்றது. இஸ்ரேலின் விட்டுக்கொடுப்புக்கள் அனைத்தும் இஸ்ரேலின் எதிர்கால இருப்பை நோக்கிய நகர்வாகவே தெரிகின்றது. பலஸ்தீனர்களின் ஏவுகணை தாக்குதலால் நிலைகுலைந்து போன இஸ்ரேல் குறிப்பாக முன்னாள் பிரதமர் நெதன்யாகு அரசாங்கத்தின் வீழ்ச்சி சமாதானபூர்வமான ஒத்துழைப்பை நோக்கி நகர்வதற்கான களத்தை முதன்மைப்படுத்தியுள்ளது. நெதன்யாகு அரசாங்கம் போரில் எதிர்கொண்ட தோல்வியே அதன் ஆட்சியதிகாரத்தின் தோல்வியாக அமைந்தது எனவேதான் இஸ்ரேல் பலஸ்தீனமல்லாத அல்லது தீவிரபோக்கு அல்லாத அரபு நாடுகளுடனான உறவின் மூலம் மேற்காசிய அரசியலில் தனது இருப்பை நிலைநிறுத்த முயலுகிறது.
மூன்றாவது, மாறிவரும் உலக ஒழுங்கில் இஸ்ரேல்- அமெரிக்க கூட்டுக்கு எதிரான அணிகளும் அவற்றின் பலமும் இஸ்ரேலை எதிர்கொள்ள முடியாதவொரு நிலைக்கு தள்ளியுள்ளது. அதனால் இஸ்ரேல் தனது சமாதானபூர்வமான முகத்தினூடாக அரபு உலகை வெல்வதற்கான உத்தியை மேற்கொள்கிறது. தற்போதைய பிரதமர் பென்னட் அமைத்துள்ள தேசிய அரசாங்கம் பலவீனமானதாக அமைந்தாலும், அரபுலகம் நோக்கிய அவரது வெளியுறவுக்கொள்கை ஆரோக்கியமானதாக உள்ளது. எனவேதான் புதிய மாற்றங்களையும், நெருக்கடிகளை கையாளும் விதத்தில் இஸ்ரேலின் இருப்பினை உத்தரவாதப்படுத்த அரபு நாடுகளோடு கூட்டுச்சேருகின்ற உறவை மீள ஆரம்பித்துள்ளது.
நான்காவது, ஈரானின் அணுவாயுத தயாரிப்பு வலிமை பெற்று வருவதாகவும் ஈரான் முழுமையாக தயாரித்து விடுமென்றும் பொதுவான எண்ணம் காணப்படுகின்றது. அதற்கான நகர்வையும் தந்திரத்தையும் ஈரானியர்கள் பின்பற்றி வருகிறார்கள். அவ்வாறு ஈரான் அணுவாயுதத்தை பரிசீலனை செய்து வெற்றி கொள்ளுமாயின் இஸ்ரேலின் இருப்பு நெருக்கடிக்குள்ளாகும் என்ற அடிப்படையில் இஸ்ரேலின் நகர்வுகள் முன்னெச்சரிக்கையோடு நகர ஆரம்பித்துள்ளன. ஆயினும் இஸ்ரேல் தொடர்ச்சியாக ஈரானின் அணுவாயுதத்தையும், அதன் பரிசோதனையையும் அழிப்பதற்கான முயற்சியை முன்னெடுத்து வருகிறது. சமகாலத்தில் கூட இஸ்ரேல் பிராந்திய ரீதியிலான எல்லைகளை தனது ஏவுகணைக்கூடாக கட்டுப்படுத்தும் பரிசோதனையில் வெற்றி கண்டுள்ளது. அவ்ஏவுகணையால் ஈரானின் அணுவாயுத பரிசோதனைக்கு நெருக்கடியை உருவாக்குமென்று இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஐந்தாவது, அரபுலகத்தின் கூட்டுக்கள் பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் பலவீனமானதாகவே காணப்படுகிறது. ஈரானுக்கு எதிரான அலை என்பது ஈரானின் அணுவாயுதத்திற்கு எதிரான அலையாகவும் அதனூடாக ஈரானின் மேலாதிக்கத்திற்கு எதிரான அலையாகவும் காணப்படுகிறது. அத்தகைய அலையை முதன்மைப்படுத்துவதனூடாக ஸ்பெயின் மேற்காசிய அரசியலில் அரபு நாடுகளுக்கு தலைமை தாங்க திட்டமிட்டு வருகிறது. அத்தகைய திட்டமிடலை வெற்றி கொள்ளும் விதத்திலேயே ஐக்கிய அரபு இராச்சியத்தோடு நெருக்கமான உறவை இஸ்ரேல் பலப்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஆறாவது, அமெரிக்கா இஸ்ரேலினூடாக தனது இருப்பை மேற்காசியாவில் மீள உறுதிப்படுத்த முனைகிறது. அதற்கான நகர்வுகளை டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்திலேயே அமெரிக்கா ஆரம்பித்தது. படிப்படியாக மேற்காசிய அரசியலில் ஈரான், சிரியா, ரஷ்யா, சீனா என்ற அணி அமெரிக்காவை வெளியேற்றிய சூழலை சுதாகரித்துக்கொண்டு இந்தியா மற்றும் இஸ்ரேலூடாக மீள ஸ்தாபிக்க முயலுகிறது. அதற்கான உத்திகளாகவே இஸ்ரேல், -சவுதி அரேபியா, இஸ்ரேல்-கட்டார் உறவுகள் போன்றே ஐக்கிய அரபு இராச்சியத்தோடும் இஸ்ரேலின் உறவை பலப்படுத்தி தனது கூட்டணிக்கூடாக மேற்காசியாவை கைப்பற்ற அமெரிக்க முயலுகிறது.
எனவே, இஸ்ரேலின் -ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான உறவானது இஸ்ரேலிய பிரதமரது விஜயத்தோடு பலமான கூட்டணி ஒன்றுக்கான கட்டமைப்பை மேற்காசியாவில் உருவாக்கி வருகிறது.
இக்கூட்டணி அமெரிக்க-−இஸ்ரேல்-, இந்திய நலன்களோடு ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதும் மேற்காசியாவுக்குள் இஸ்ரேல் தலைமை தாங்க முயலுவதும் தமது நெருக்கடிக்கான நிலைமாறுகாலமாக இஸ்ரேல் கருதுவதும் அவதானிக்கக்கூடிய அரசியலாக உள்ளது.
எனவே மேற்காசிய அரசியலை குவாட் கட்டமைப்பு புதிய முனைப்புக்களை ஏற்படுத்தி ஈரானுக்கு எதிரான அல்லது ஈரான் அணிக்கெதிரான பரந்துபட்ட நகர்வொன்றை செயற்படுத்த முனைகின்றது.
பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்