விடைபெறும் 2021; அரசாங்கம் கடந்து வந்துள்ள சவால்கள் நிறைந்த பாதை! | தினகரன் வாரமஞ்சரி

விடைபெறும் 2021; அரசாங்கம் கடந்து வந்துள்ள சவால்கள் நிறைந்த பாதை!

கொவிட்-19சவாலுடன் ஆரம்பமான 2021ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னமும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், இவ்வருடமானது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகின் பல நாடுகளுக்கும் சவால் மிக்க வருடமாகவே அமைந்தது.

பொருளாதாரம், நிதி மற்றும் சுகாதாரம் எனப் பல்வேறு துறைகளிலும் நாடு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதுடன், பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற ரீதியில் நிலைமைகளை சமாளிப்பதற்கு சாமர்த்தியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கொவிட்-19உலகத் தொற்றுநோயுடன் இணைந்ததாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் மற்றும் அந்நிய செலாவணியின் கையிருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன தற்பொழுது நிலைமைகளை சற்றுச் சிக்கலாக்கியிருக்கின்றன. இருந்த போதும் கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் ஏனைய பல நாடுகளுக்கு முன்னுதாரணமாகக் காணப்படுகிறது. நாட்டில் நிலவும் சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க் கட்சிகள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்ற போதும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற தனது கொள்கைத் திட்டத்தில் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசாங்கமும் உறுதியாக இருப்பது புலனாகிறது.

கொவிட் கட்டுப்பாட்டு விடயத்தில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு தெளிவாகியுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசியைப் பெற்றுக் கொடுப்பதே தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கும் நிலையில், அனைவருக்கும் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுக்க அரசு கடும் முயற்சி எடுத்துள்ளது. இலங்கையில் இதுவரையில் ஏறத்தாழ 15மில்லியன் 9இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் முதலாவது தடுப்பூசியையும், 13மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியையும், 30இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

பெருந்தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளிலிருந்து அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொவிட் கட்டுப்பாட்டு விடயத்தில் இலங்கை முன்னுதாரணமாக திகழ்வதையும் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

இதுதவிரவும், 2021ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கான சேதன உர விவகாரம் அரசியல் அரங்கங்களில் அதிகம் சேப்பட்ட விடயமாக அமைந்தது. இரசாயன உரப் பயன்பாட்டினால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைத் தவிர்க்கும் நோக்கில் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தின் ஊடாக சேதன உரப் பயன்பாட்டை ஊக்குவிப்பது குறித்த யோசனையை அரசாங்கம் முன்வைத்திருந்தது.

இலங்கையில் இரசாயன உரப் பயன்பாட்டை எடுத்துக் கொண்டால் 2018ஆம் ஆண்டில் 6இலட்சத்து 32ஆயிரம் மெற்றிக் தொன் இரசாயன உரம் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் 12இலட்சம் மெற்றிக் தொன் இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இரசாயன உரத்துக்கான கேள்வி அதிகரிக்கப்பட்டிருந்தாலும், அதனால் ஏற்படும் விளைச்சலில் எந்தளவு பாரிய மாற்றமும் தென்படவில்லையென்றே கூற வேண்டும். இரசாயன உரப் பயன்பாடு தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானம் படிப்படியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான இரசாயன உர விநியோகம் படிப்படியாகக் குறைப்பட்டு வந்தே இவ்வருடம் அந்த உரத்தின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் இந்தத் திட்டமானது குறுகிய காலத்தில் ஒரு சில தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும் நீண்டகாலத்துக்கும், நாட்டின் நிலைப்புத் தன்மைக்கும் நிச்சயம் பாரியதொரு பங்களிப்பை வழங்குவதாகவே அமையும். இருந்த போதும் நாட்டுக்குள் இரசாயன உரத்தை இறக்குமதி செய்யும் பல்தேசிய கம்பனிகள் விவசாயிகளைத் தூண்டி விட்டு போராட்டங்களுக்கு வித்திட்டிருந்தன.

சேதன உர விடயத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தாலும் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முற்போக்கான நடவடிக்கையாக அதனைப் பார்க்க முடியும். தேசன உரங்களை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இருந்தபோதும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் விவசாயிகளைக் குழப்பி விட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற உணவுத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்படும் உணவுத் தட்டுப்பாடு என்ற பிரசாரத்தில் எவ்வித உண்மையும் இல்லையென அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அதேநேரம், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் டொலர் தட்டுப்பாடு குறித்த விடயம் தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது. டொலருக்கான தட்டுப்பாடு நிலவுவதால் எரிபொருள் இறக்குமதி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்குக் கூட போதிய நிதி இல்லையெனக் கூறப்படுகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 7.6பில்லியனாக இருந்தது. தற்போது அது 1.6ஆக சரிவடைந்துள்ளமை நாடு எதிர்கொள்ள நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நாட்டின் இறக்குமதிக்கு மாதாந்தம் 1.5பில்லியன் டொலர் செலவிடப்படுவதுடன் நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள நிதி ஒரு மாதத்திற்கு மட்டுமே போதுமானது என்றும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியிருப்பதாக ஊடகங்கள் பல அறிக்கையிட்டுள்ளன. இருந்த போதும் அவ்வாறானதொரு நிலைமை இல்லையென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதற்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் நாட்டில் போதுமான நிதி கையிருப்பில் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதனால் நாட்டுக்கு பெரும் பாதிப்பே ஏற்படும். நாடு எதிர்கொண்டுள்ள  அந்நிய செலாவணி நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு டொலருக்கு சமமாக ரூபாவின் பெறுமதியை சுயாதீனமாக தீர்மானிப்பதற்கு இடமளிப்பது உள்ளிட்ட கடினமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதென பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அனைத்து நாடுகளும் சர்வதேச நிதித் தொகுதி உள்ளடங்கிய  அந்நிய செலாவணி கையிருப்பை முறையாக கொண்டிருப்பதோடு இறக்குமதி செலவை ஏற்றுக் கொள்ளல், வெளிநாட்டு கடன்களை செலுத்துதல், நாட்டின் நாணயப் பெறுமதியை நிலையான வகையில் வைத்திருத்தல் மற்றும் எதிர்கொள்ள நேரும் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவப்படுத்தல் ஆகியவை அவசியமாகின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் எனப் பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது விடயம் தொடர்பில் அமைச்சரவையில் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதுடன், இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனத் தெரியவருகிறது.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. இருந்த போதும் அரசாங்கம் பல்வேறு வாய்ப்புக்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. இதுவரை இறுதி முடிவுக்கு வராத நிலையில், எதிர்க்கட்சி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.

அதேநேரம், நாடு எதிர்கொண்டுள்ள சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு சர்வகட்சிக் கூட்டமொன்றைக் கூட்டுவது தொடர்பிலும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆளும் கட்சி மாத்திரமன்றி எதிர்க் கட்சித் தலைவர்கள் கூட சர்வகட்சிக் குழுக் கூட்டம் பற்றிப் பேசுகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல நாட்களுக்கு முன்னரே சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் தனது கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் கட்சிக்கட்சிக் கூட்டமொன்று கூட்டப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.

எதிர்க்கட்சியிலிருந்து முன்வைக்கப்படும் இவ்வாறான கருத்துக்கள் சாதகமான மாற்றத்துக்கு உதவியாக இருக்கும். நாடு தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் சவால் எமக்கு மாத்திரம் அன்றி உலகின் பல நாடுகளுக்குக் காணப்படும் பிரச்சினையாகும். உண்மையில் நமது நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை அரசாங்கத்தினால் மாத்திரம் முகங்கொடுக்கக் கூடியதல்ல. அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக இந்த சவாலிலிருந்து நாட்டை மீட்கக் கூடியதாகவிருக்கும்.

சம்யுக்தன்

Comments