ஆபிரிக்காவின் சிங்கப்பூராக மாறவுள்ள ருவாண்டா | தினகரன் வாரமஞ்சரி

ஆபிரிக்காவின் சிங்கப்பூராக மாறவுள்ள ருவாண்டா

கொவிட்-19தாக்கத்தின் காரணமாக உலகிலுள்ள பல நாடுகள் பொருளாதார சரிவை நோக்கி நகர்ந்துள்ளன. அந்தவகையில் இலங்கை நாடானது கொவிட்-19தாக்கம் காரணமாக முழுமையாக முடக்கப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக கொவிட் தொற்றை கட்டுப்படுத்த முடிந்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் மோசமான அளவில் பாதிப்பை எதிர்கொண்டது.  

2019ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 1.1சதவீத நேரான வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2020ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 16.3சதவீத மறையான வளர்ச்சியென மதிப்பிடப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.3சதவீத வீழ்ச்சியை நோக்கி சரிவடைந்துள்ளதாக இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் (The Sri Lanka Development Update) என்பது உலக வங்கி வெளியீடாகும். இது தெற்காசிய பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் வாய்ப்புகளை ஆராய்ந்து நாடுகள் எதிர்கொள்ளும் கொள்கைச் சவால்களை பகுப்பாய்வு செய்யும், ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் உலகவங்கி அறிக்கையாகிய தெற்காசிய பொருளியல் நோக்கின் (South Asia Economic Focus) ஒரு துணைப் பகுதியாகும். 2021மார்ச் 31ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்ட 'தெற்காசியா தடுப்பூசியேற்றுகின்றது' (South Asia Vaccinates) என்ற தலைப்பிலான 2021வசந்தகால பதிப்பு தெற்காசியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் முன்னேறி வருகின்றது, ஆனால் வளர்ச்சி சீரற்றதாகவும், மீட்பு பலவீனமாகவும் உள்ளது, பொருளாதாரக் கண்ணோட்டம் நிலையற்றதாகவும் உள்ளதாகக் காட்டுகின்றது.  

இலங்கையைப் பொருத்தமட்டில் உள்நாட்டு போர் முடிந்து 12வருடங்கள் கடந்துவிட்டன. இருப்பினும் நல்லிணக்கம் என்பது பெயரளவிலேயே காணப்படுகின்றது. நாட்டின் வளர்ச்சி என்பது நாட்டு மக்களின் ஒற்றுமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்டது. நாட்டு மக்களிடம் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குமான ஓர் தீர்வை உருவாக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக அறிய முடிகிறது. இலங்கை நாட்டில் நல்லிணக்கத்தையும் நாட்டின் முன்னேற்றத்தையும் பற்றிய கலந்துரையாடலை ருவாண்டாவுடன் மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் உண்டு. இவ்விரு நாடுகளின் கடந்தகால வரலாற்றைப் பார்க்கும்போது ஒரு சமன்பாட்டை அவதானிக்க முடிகிறது.  

1994ஆம் ஆண்டு ஒரு நூறு நாள் காலப்பகுதியில் ருவாண்டாவில் எட்டு லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். இறந்தவர்கள் பெரும்பான்மையாக துத்ஸி இனத்தார். கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பான்மையாக ஹூட்டு இனத்தார். ருவாண்டாவின் அப்போதைய சனத்தொகையில் 85%சதவீதம் பேர் ஹூட்டு இனத்தார் என்றாலும், அங்கு சிறுபான்மையாக வாழ்ந்துவந்த துத்ஸி இனத்தாரின் கை மேலோங்கியிருந்தது. 1959ல் ருவாண்டாவின் துத்ஸி மன்னராட்சி முறையை ஒழித்துவிட்டு ஹூட்டூக்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தனர். துத்ஸி இனத்தார் உகாண்டாவுக்கும் பிற அண்டை நாடுகளுக்கும் வெளியேறினர். அவர்கள் ஆர் .பி .எஃப் அதாவது ருவாண்டா தேசப்பற்று முன்னணி என்ற கிளர்ச்சிக் குழு ஒன்றை அமைத்து ருவாண்டாவுடன் சண்டையிட்டு வந்தனர். 1990ல் அந்நாட்டின் மீது படையெடுத்தனர். 1993ல் ருவாண்டாவுக்கும் இவர்களுக்கிடையே சமாதான உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டிருந்தது. ஆனால் 1994ஏப்ரல் 6ஆம் திகதி ருவாண்டாவின் அதிபரான ஹூட்டு இனத்தைச் சேர்ந்த ஹப்யாரிமனா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட, ஹூட்டு கடும்போக்காளர்கள், துத்ஸி இனத்தாரை ஒட்டுமொத்தமாக அழித்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டு கொலைவெறியாட்டத்தில் இறங்கினர்.  

ருவாண்டா அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் யார் யார் என்று கவனமாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் திட்டமிட்டு குடும்பத்தோடு கொன்று குவிக்கப்பட்டனர். துத்ஸி இனத்தவரை அவரது அண்டை வீட்டில் வாழ்ந்த ஹூட்டு இனத்தவரே கொன்ற அவலமும் துத்ஸி மனைவியை அவருடைய ஹூட்டு கணவனே கொன்றது போன்ற கொடூரங்களும் அப்போது அரங்கேறின. கொலைகளைத் தாண்டி துத்ஸி இனப் பெண்கள் ஆயிரக்கணக்கானோர், பிடித்துச் செல்லப்பட்டு பாலியல் அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். அந்நேரத்தில் ஐ.நா அமைதிகாப்பு படைகளும் மற்றும் பெல்ஜியம் படைகளும் அவ்விடத்தில் இருந்தாலும், இந்த கொலைகளை தடுக்க வேண்டிய உத்தரவு அவர்களுக்கு சென்றிருக்கவில்லை. ஹூட்டு அரசாங்கத்துக்கு நெருக்கமாக இருந்த பிரஞ்சு அரசாங்கம் பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைத்தாலும் அதுவும் கொலைகளைத் தடுக்க போதிய முயற்சிகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பின்னர் துத்ஸி இன கிளர்ச்சிக் குழுவினர் வலுவாக அணிதிரண்டு ஹூட்டுக்களை ருவாண்டாவை விட்டு விரட்டி ஆட்சியைக் கைப்பற்றினர்.  

இத்தகைய கொடூரங்கள் இலங்கையில் நிகழாவிட்டாலும் இனக்கலவரங்களும் முப்பது ஆண்டுகால யுத்தச் சூழலும் கொடூரமான யுத்தமொன்றும் நிகழ்ந்தன. இவையனைத்தும் பொருளாதார அபிவிருத்திக்கு தடைக்கற்களாக அமைந்தன. இன்றைக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளின் உதவிகளைப் பெற முடியாதிருப்பதற்கான காரணம் இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணாதிருப்பதே.   

ருவாண்டாவின் கடந்த கால நிகழ்வுகளை கவனத்தில் எடுப்பதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் வன்முறைக் கும்பல்களின் 61தலைவர்களுக்கு குற்றத் தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருந்தன. பாலியல் வன்முறையை ஒரு இனப்படுகொலைச் செயலாகக் கருதும் மிக முக்கியமான தீர்மானமும் அந்த நீதிமன்றத்தின் முடிவுகளில் ஒன்றாக இருந்து சுமார் இருபது இலட்சம் வழக்குகள் தொடர்பான விசாரணைகள் உள்ளூர் 'ககாக்கா நீதிமன்றங்களில்' முன்னெடுக்கப்பட்டன. ருவாண்டாவில் ஹூட்டு மற்றும் துத்ஸி பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை அந்நாட்டின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.  

ருவாண்டாவின் பொருளாதாரம் 1994ஆம் ஆண்டு இனப்படுகொலையின்போது பெருமளவிலான உயிரிழப்புக்கள் நிகழ்ந்தமையால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இதன்போது உட்கட்டமைப்பு வசதிகள் சீர்குலைந்ததுடன், முக்கிய பணப்பயிர்கள் உதாசீனம் செய்யப்பட்டன. கொலைவெறியாட்டம் முடிந்து அமைதி திரும்பிய பின்னர் ருவாண்டாவில் ஆர்.பி.எஃப் கிளர்ச்சிப் படையின் தலைவர் பால் கிகாமே அதிபராக வந்து, பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்றியுள்ளார். வறுமையின் பிடியிலிருந்து இந்த குட்டி நாடு வேகமாக வெளிவந்துள்ளது.  

கடந்த இரண்டு தசாப்தங்களில் ருவாண்டாவின் பொருளாதாரம் சராசரியாக ஒன்பது புள்ளிகள் என்ற அளவில் வளர்ந்துள்ளது. இது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு நிகரான ஒரு வளர்ச்சி ஆகும். ருவாண்டாவில் தற்போது எவருமே இனம் பற்றி பேச சட்டரீதியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இனம் பற்றி பேசினால் அது நிஜமான நல்லிணக்கம் உருவாவதற்கு தடையாகவே இருப்பதாக அரசாங்கம் வாதிடுகிறது.  

ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலையின் பின்னர் முழுமையான நல்லிணக்கத்தை அடையவில்லை என்றாலும் நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நேரடியாக தெரியாவிட்டாலும் இன, மத, மொழி ரீதியில் வேறுபாடுகள் இலங்கையில் நிலவுகின்றன. இதனால் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு இந் நிலைப்பாடும் ஓர் காரணமாக அமைகின்றது. நல்லிணக்கத்தை மேம்படுத்த முயற்சிக்கும் நாடு என்ற ரீதியில் ருவாண்டாவின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கான ஆலோசனைகளை முன்வைத்து கலந்துரையாடல்களை​ மேற்கொண்டு வருவதாகவும் தெரிகிறது.  

சீர்கெட்டுப்போன ஒரு நாடு எவ்வாறு தன்னை சரி செய்து கொண்டு திட்டமிட்ட ரீதியான அபிவிருத்தியை நோக்கி நகர்கிறது என்பதை நாம் பாடமாகவும், முன்மாதிரியாகவும் எடுத்துக்​கொள்ள வேண்டும். முன்னர் தென்னாபிரிக்கா தன் அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கு முன்வந்தது. தென்னாபிரிக்காவில் சிறுபான்மை போயர்கள் பெரும்பான்மை கறுப்பர்களை அடக்கி ஆண்டு வந்தனர். இன ஒடுக்கல் கொள்கையை போயர் அரசுகள் கடைப்பிடித்து வந்தன. நெல்சன் மண்டேலா விடுதலையாகி கறுப்பர் வசம் ஆட்சி வந்தபோது அடக்கி வைக்கப்பட்ட ஆத்திரம் பீரிட்டெழும் என்றும் வெள்ளை இனத்தவரான போயர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. மண்டேலாவினால் புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அது பேயர்களுக்கு அநீதி இழைப்பதாக உருவாக்கப்படவில்லை. போயர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக பார்க்கப்படவில்லை. நீதிக்குப் புறம்பாக தம்மை அடக்கியாண்ட சிறுபான்மை போயர்களை வெறுக்காமல் அரவணைத்துக் கொண்டோம். இது எவ்வாறு சாத்தியமானது என்பதை இலங்கையுடன் பகிர்ந்துகொள்வதற்கு தென்னாபிரிக்கா முன்வந்தது. ஆனால் இலங்கை அரசியல்வாதிகள் அதை கவனத்தில் கொள்ளவில்லை.  

தற்போது ருவாண்டா தன் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறது. ருவாண்டா இன்னும் ஒரு பத்தாண்டுகளில் ஆபிரிக்காவின் சிங்கப்பூராக மாறலாம் என்ற ஒரு பொருளாதார கணிப்பு உள்ளது. அதன் அமைவிடம் வெளிநாடுகள் எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியதாக உள்ளது. சிங்கப்பூரை இலங்கை மாதிரி முன்னேற்றிக் காட்டுவேன் என்று கூறப்பட்ட காலமொன்றிருந்தது. ருவாண்டா சிங்கப்பூராக மிளிர்வதற்கான சாத்தியங்கள் அதிகம் என இப்போது பேசப்படுகின்றது. ஆனால் இலங்கை?   இலங்கை பொருளாதார வளர்ச்சியில் உச்சம் தொட வேண்டுமானால், முதல் காரியமாக இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இந்த இனப் பிரச்சினையிலிருந்து இந்நாடு கடந்து செல்ல வேண்டும். தமிழரும் சரி சிங்களவரும் சரி இனவாத அரசியலை கைவிட வேண்டும். 

போல்ராஜ் சந்திரமதி,
ஊடகக் கற்கைகள் துறை,  
யாழ்ப்பாண பல்கலைக்கழகம். 

Comments