ரஷ்ய உக்ரைன் விவகாரமும் புட்டினது தந்திரோபாயமும் | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்ய உக்ரைன் விவகாரமும் புட்டினது தந்திரோபாயமும்

உலக அரசியல் யுரேசிய பக்கம் திரும்பியுள்ளதாகவே தெரிகிறது.  அதிலும் குறிப்பாக அமெரிக்க தலைமையிலான நேட்டோ அரசுகளுக்கும்  ரஷ்யாவுக்குமான முறுகல் மற்றும் ரஷ்ய -உக்ரைன் விவகாரம் அதிக அரசியல்  முக்கியத்துவத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்ய ஜனாதிபதி புட்டினது  நடவடிக்கைகள் உக்ரைனினுக்கு எதிரான போரை நோக்கியதாக உள்ளது எனவும் அதற்கான  விலையை ரஷ்யா கொடுக்க வேண்டிவரும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி பைடனது  எச்சரிக்கையையும் கடந்து அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேட்டோ  தலைவர்கள் மேற்கொண்டுள்ள இராஜதந்திர நகர்வுகள் எல்லாவற்றையும் கடந்து ரஷ்ய  ஜனாதிபதியின் தந்திரோபாய நடவடிக்கைகள் உலகளாவிய அரசியலில் தனித்துவமானதாக  அமைந்துள்ளன. இக்கட்டுரையும் ரஷ்ய-, உக்ரைன் அரசியலில் புட்டினது  தந்திரோபாயங்களையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது. 

ரஷ்யா கடந்த பல ஆண்டுகளாக உக்ரைனின் விடயத்தில் தனது  பிராந்திய அரசியல் பலத்தை உறுதிப்படுத்த அதிகம் பிரயத்தனம் எடுப்பதனைக்  காணமுடிகிறது. புட்டின் ரஷ்யாவின் இராணுவ பலத்தை ரஷ்யாவின் எல்லைகளையும்  யுரேசியாவின் எல்லைகளையும் நோக்கியதாக வடிவமைக்கத் திட்டமிடுவதனை அவதானிக்க  முடிகிறது. ஏறக்குறைய உக்ரைனின் எல்லை நோக்கி ஒரு இலட்சத்திற்கு மேலான  படைகளை நகர்த்தியிருப்பதுடன் ஏவுகணைகளையும் விமான படைகளையும் மற்றும் ஆயுத  தளபாடங்களையும் அவ்எல்லை நெடுகிலும் குவித்துள்ளதாக நேட்டோ நாடுகள்  செய்மதிப் படங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளன. இத்தகைய படைக்குவிப்பை  அடுத்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் இராஜதந்திர உரையாடலை  ரஷ்யாவுடன் நடத்த திட்டமிட்டதுடன், முதல் கட்டமாக அமெரிக்க ஜனாதிபதி  காணொளி மூலமாக உரையாடலை நிகழ்த்தியுள்ளார். அதேகாலப்பகுதியில் நேட்டோ  நாடுகளும் உக்ரைனும் இராணுவ ஒத்திகையை மேற்கொண்டதுடன் நேட்டோவின் இராணுவம்  உக்ரைனுடன் இணைந்து போர் புரிய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக  நேட்டோவின் வரைபிலுள்ள சரத்தொன்றின் பிரகாரம் நேட்டோ நாடொன்றின் மீது  வேறு ஒரு நாட்டினால் தாக்குதல் நிகழ்த்தப்பட்டாலோ அல்லது பாரிய இயற்கை  அழிவு ஏற்பட்டாலோ அந்த நாட்டினை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து நேட்டோ  நாடுகளுக்கும் உரித்தானது என வரையறுத்துள்ளது. அந்த சரத்தின் அடிப்படையில்  உக்ரைனின் மீதான தாக்குதல் எதிர்த்து ரஷ்யா மீது போர் செய்ய அனைத்து நேட்டோ  நாடுகளுக்கும் உரிமையுண்டு. இவற்றை கையாளும் நகர்வையே ரஷ்ய தரப்பு  ஆரம்பித்துள்ளது. 

முதலாவது, இத்தகைய நெருக்கடியை கையாளும் விதத்தில் ரஷ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான வெளியுறவு அமைச்சு வெளியிட்ட  எட்டு அம்ச வரைபில் மூன்று பிரதான கோரிக்கையை அதிகம் முதன்மைப்படுத்தி  உக்ரைனின் நெருக்கடியை தவிர்க்க வேண்டுமாயின் அத்தகைய கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட வேண்டுமென 17- டிசம்பர் (2021) அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளது. அத்தகைய கோரிக்கைகளாக ஒன்று, நேட்டோவின்  உறுப்புரிமையிலிருந்து உக்ரைனின் விலக்கப்பட வேண்டும். இரண்டு, கிழக்கு  ஐரோப்பாவிலிருந்து நேட்டோவின் படைகளும் ஆயுத தளபாடங்களும் விலக்கிக்கொள்ள  வேண்டும். மூன்று, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் நேட்டோவுக்குமான போர்ப்  பயிற்சிகள் மற்றும் ஒத்திகைகள் முற்றாக கைவிடப்பட வேண்டுமென ரஷ்ய தரப்பு  தெரிவித்துள்ளது.  

இரண்டாவது, உக்ரைன் விடயத்தைப் பொறுத்து, டிசம்பர் -21 (2021)  அன்று ஜேர்மன் சான்சிலர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி  மக்ரோனுடன் விளாடிமிர் புட்டின் உரையாடலை நிகழ்த்தியதாக கிரெம்ளின் ஒரு  அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின் படி  புடின், 'யூரேசிய விண்வெளி முழுவதும் சமமான மற்றும் பிரிக்க முடியாத  பாதுகாப்பை' எதிர்பார்க்கிறது என்பதை உறுதிப்படுத்த முயன்றுள்ளது. அந்த  உரையாடலில் அமெரிக்கா மீதான அவநம்பிக்கையை வெளிப்படுத்தி ஐரோப்பாவை  நம்பிக்கைக்குரிய நாடுகளாக அடையாளப்படுத்தியதை காணமுடிந்தது. அதாவது  அமெரிக்காவுடன் நீண்ட கால சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட உத்தரவாதங்களை கூட  நம்ப முடியாது. காரணம் அமெரிக்கா அனைத்து சர்வதேச ஒப்பந்தங்களிலிருந்தும்  எளிதாக விலகுகிறது. மற்றொன்று அவர்களுக்கு ஆர்வமற்றதாகின்றது என  அமெரிக்காவின் போக்கை கடுமையாக சாடியுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதே நேரம்  யூரேசியா பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை கோடிகாட்டியதுடன் ஐரோப்பிய  நாடுகளின் முக்கியத்துவத்தையும் முதன்மைப்படுத்தியிருந்ததை அவ்வறிக்கையில்  காணமுடிகிறது. இது ஐரோப்பிய நாடுகளினை தனித்துவமாக கையாளும் பொறிமுறையை  பின்பற்றுவதாகவே தெரிகிறது. அதே நேரம் அமெரிக்காவை நேட்டோ கூட்டிலிருந்து  பிளவுபடுத்தி தனித்து கையாள முனையும் போக்காகவே தெரிகிறது. 

மூன்றாவது, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உத்திகளில் பிரதான  அம்சமாக யுரேசியாவின் நிலப்பரப்பையும் அதன் அண்டவெளியையும் கிழக்கு  ஐரோப்பிய நிலப்பரப்பின் மூலம் பாதுகாப்பதற்கான முனைப்புக்களை தனது  உரையாடலில் முதன்மைப்படுத்தி வருகிறது. அத்தகைய முனைப்பு நேட்டோ தரப்பு  குறிப்பிடுவது போல் முன்னாள் சோவியத் யூனியனின் விஸ்தரிப்பை நோக்கிய  அரசியலை புட்டின் முன்னெடுக்க முனைகின்றார் என்ற குற்றச்சாட்டுக்கு  ஒப்பானதாக அமைந்தாலும் யுரேசியா பாதுகாப்பான வலயமாக இருத்தலை உறுதிப்படுத்த  முயலுகிறது. காரணம், யுரேசியாவின் பாதுகாப்பே ரஷ்யாவின் பாதுகாப்பு ஆகும்.  அதனாலேயே கிழக்கு ஐரோப்பா சார்ந்து தடுப்பு அரணை நேட்டோவின்  பிடியிலிருந்து விலக்கிக்கொள்ள முயலுகிறது.  

நான்காவது, ரஷ்ய ஆட்சியாளர்கள் யுரேசியா பொருளாதாரத்தையும்,  யுரேசிய இராணுவத்தையும் கையாளும் உத்தியோடு உக்ரைனை நோக்குகின்ற நிலை  வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள யுரேசியா  கட்டமைப்பு ஆப்கானிஸ்தான் எல்லை வரை விரிவடைந்துள்ளது. இதில் உக்ரைன்  ரஷ்யாவுடன் ஒரு போரை எதிர்கொள்ளுமாயின் யுரேசியாவின் இருப்பு மட்டுமன்றி  ரஷ்யாவின் யுரேசிய உறவும் நெருக்கடிக்குள்ளாகும். எனவே தான் யுரேசியாவின்  இருப்பை பேணுவது என்பது உக்ரைனுடனான போரை வெற்றி கொள்வது அல்லது தவிர்ப்பது  என்ற எடுகோளுடன் விளாடிமிர் புட்டின் நகருகின்றார். இதனால் ஏற்படக்கூடிய  நெருக்கடியில் உக்ரைனை மட்டுமன்றி நேட்டோவையும் அதன் விஸ்தரிப்பையும்  தடுத்து நிறுத்துவதற்கான ஓர் இலக்காகவே உக்ரைன் விவகாரத்தை புடின்  கருதுகின்றார்.  

ஆறாவது, ஏறக்குறைய 12நாடுகளுடன் ஆரம்பித்த நேட்டோ அமைப்பானது  52நாடுகளை உள்ளடக்கிய மிகப்பலமான ஓர் இராணுவ கூட்டாக விளங்குகின்றது.  யுரேசியாவையும், கிழக்கு ஐரோப்பாவையும் நோக்கி நேட்டோவின் விஸ்தரிப்பு  கிரெம்ளின் குறிப்பிடுவது போல் முன்னாள் சோவியத் யூனியன் கால ஆக்கிரமிப்பு  போன்றே அமைந்துள்ளது. இதில் ரஷ்யாவின் இருப்பு மட்டுமன்றி நேட்டோவின்  விஸ்தரிப்பின் முடிவையும் புட்டினது நடவடிக்கை உருவாக்க முனைகின்றது.  முழுமையாக நேட்டோவின் விஸ்தரிப்பு மத்திய ஆசிய குடியரசுகளை நோக்கி  நிகழுமாயின் ரஷ்யாவின் பொருளாதாரம் குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தகம்  மற்றும் மேற்கு ஆசியா நாடுகளுடனான உறவிலும் பாதிப்பை ஏற்படுத்துமென ரஷ்யா  கருதுகின்றது. அதானாலேயே நேட்டோவின் விஸ்தரிப்புக்களை முடிவுக்கு  கொண்டுவரும் நோக்குடன் கோரிக்கைகளை கிரெம்ளின் முன்வைத்துள்ளது. நேட்டோவின்  விஸ்தரிப்பை தடுத்து நிறுத்த இயலாத சூழல் ஏற்படின் ரஷ்யா யுரேசியாவிலும்  மத்திய ஆசியாவிலும் கொண்டிருக்கும் புவிசார் அரசியல் உறவு  காலாவதியாகிவிடும். 

எனவே, ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட  படைகளையும் ஆயுத தளபாடங்களையும் ரஷ்ய- உக்ரைன் எல்லையோரம் நகர்த்திவிட்டு  நேட்டோவுடன் வலுவான இராஜதந்திர போரை நிகழ்த்துகிறார்.. கிரெம்ளின்  குறிப்பிடுவது போல் ரஷ்யா முன்வைத்துள்ள எட்டு அம்சக்கோரிக்கைகளின்  நலன்களைப் புறக்கணிப்பது 1962கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்ற ஒரு  இராணுவ பதிலுக்கு வழிவகுக்கும் என்பதற்கு அமைவாக விளாடிமிர் புட்டினது  நடவடிக்கைகள் அமைகின்றன.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments