திருக்கோவில் பொலிஸ் நிலைய கொலைகள்; நடந்தது என்ன? | தினகரன் வாரமஞ்சரி

திருக்கோவில் பொலிஸ் நிலைய கொலைகள்; நடந்தது என்ன?

அம்பாறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பொலிஸ் நிலையமானது தற்போது 43பொலிஸார் கடமையில் ஈடுபட்டு வரும் ஒரு பொலிஸ் நிலையமாகும். கடந்த 24ம் திகதி  நத்தார் பண்டிகை உதயமாவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் இருந்த போது திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், இந்நாட்டு பொலிஸ் வரலாற்றில் என்றுமே இடம்பெற்றிருக்காத ஒரு சோக நிகழ்வு இடம்பெற்றது.  பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலேயே நான்கு  பொலிஸ் உத்தியோகத்தர்கள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட சோக நிகழ்வுதான் அது. சிலர் விடுமுறையில் சென்றிருந்ததால் அச்சமயம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் சுமார் 35பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் குறைவானவர்களே பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுள் அனேகமானோர் அன்றைய தினம் இரவு நத்தார் ஆராதனை நிகழ்வில் கலந்து கொள்ளும் மக்களுக்கான பாதுகாப்புக்காக தேவாலயங்களுக்கு அருகில் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்தது 10பேருக்கும் குறைவானவர்களே. 

40685இலக்க பொலிஸ் சார்ஜன் ரவீந்திர தினேஸ் குமாரவும் அச்சமயம் பொலிஸ் நிலையத்தினுள் இருந்துள்ளார். “ஒரு வித்தியாசமான நபரான” தினேஸ் கடந்த மார்ச் 21ம் திகதி வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு வந்தவராகும். அவர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் வாகன போக்குவரத்து பிரிவில் ஆவணங்களுக்குப் பொறுப்பாகச் செயற்பட்ட சார்ஜனாகும்.

கடந்த 24ம் திகதி இரவு 10.10மணிளயவில் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வாசலில் கடமையில் ஈடுபட்டிருந்த 44386இலக்க பொலிஸ் சார்ஜன் வைரமுத்து கந்தசாமிக்கு அருகில் சென்ற தினேஸ், திடீரென அவரது கையிலிருந்த டி56ரக துப்பாக்கியைப் பறித்தெடுத்துக் கொண்டு ஆங்கிலப் படங்களில் வரும் காட்சிகளைப் போன்று நாலாபுறமும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தவாறு மீண்டும் பொலிஸ் நிலையத்தை நோக்கி ஓடி வந்துள்ளார். வைரமுத்து கந்தசாமி எதிர்த்திசையில் ஓடிச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டாலும் அவரும் துப்பாக்கி  சூட்டுக் காயங்களுக்கு உள்ளானார். துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தை நோக்கி வந்தார் தினேஸ்.  அந்நேரம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இரவு நேரக் கடமைக்குப் பொறுப்பாக இருந்த 44132இலக்க பொலிஸ் சார்ஜன் அப்துல் காதர் மற்றும் உப சேவை பொறுப்பாளராக இருந்த 8861இலக்க பொலிஸ் கான்ஸ்டபில் அழகரத்தினம் நவீனன் ஆகிய இருவர் மீதும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளார். இதில் நவீனன் அவ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 நவீனனின் காற்சட்டைப் பையிலிருந்த பாதுகாப்பு பெட்டியின் திறப்பை எடுத்து பாதுகாப்பு பெட்டியிலிருந்து டி56துப்பாக்கி மற்றும் 526ரவைகளுடனான 19மெகசின்களை தினேஷ் எடுத்ததோடு, பாதுகாப்பு பெட்டியின் சாவியையும் மறைத்து வைத்துக் கொண்டார். துப்பாக்கியால் சுட்டவாறே வெளியேறிய தினேஸ், பொலிஸ் நிலைய கேட்டினை நோக்கி ஓடத் தொடங்கினார். இதனிடையே சில பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்  கடமை நிமித்தம்   வெளியே  சென்றிருந்த திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அருண ஜகத் பண்டார தெஹிகம பயணித்த ஜீப் வண்டி பொலிஸ் நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளது.

அந்நேரம் எதனையும் பொருட்படுத்தாத தினேஸ், பொலிஸ் நிலையத்தினுள் பிரவேசித்த பொலிஸ் ஜீப்பின் மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துள்ளார். அந்நேரம் அந்த ஜீப்பில் இருந்தது சாரதியான ஹேமந்த புஷ்பகுமார மற்றும் பின்புற ஆசனத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பிரபுத்த குணசேகர ஆகியோரேயாகும்.  அவர்கள் இருவரும் ஜீப் வண்டியினுள்ளேயே உயிரிழந்தனர்.

ஜீப் வண்டியில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் சென்றிருந்தாலும் சார்ஜன் ரவீந்திர தினேஸ் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து “பேயாட்டம்” ஆடிக் கொண்டிருப்பதாக விசேட செயலணியின் திசாநாயக்கா என்ற உத்தியோகத்தரால் பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொறுப்பதிகாரி,  பிரியந்த குணவர்தன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபில் சாரதி சத்தியராஜ் குமார் ஆகியோருடன் ஜீப்பை விட்டு இறங்கி மோட்டார் சைக்கிள்களில் பொலிஸ் நிலையத்தை நோக்கிச் சென்றுள்ளார்.

ஜீப் வண்டியின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட கொலையாளி தினேஸ், பொலிஸ் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் மீதும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த துப்பாக்கிப் பிரயோகம் பொறுப்பதிகாரி தெஹிகம மற்றும் பிரியந்த ஆகியோர் மீதும் பட்டுள்ளது. சத்தியராஜ் குமாரவும் கண்ணாடித் துண்டுகள் பட்டதால் காயங்களுக்கு உள்ளானார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொறுப்பதிகாரி தெஹிகம, உடனடியாக பொலிஸ் நிலையத்த்தின்  மின்சார இணைப்பைத் துண்டிக்குமாறு சத்தியராஜ் குமாரவுக்கு உத்தரவிட்டார். ரவீந்திர தினேஸ் தனது பேயாட்டத்தை நிறுத்தாமல்  பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தேடியவாறு நாலாபுறமும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் பொலிஸ் நிலையத்தினுள் மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். அத்துடன் காயங்களுக்கு உள்ளான ஐவரும் அங்கிருந்தனர்.

பின்னர் சிறிய காயங்களுக்கு உள்ளான குமாரவும் கைத்துப்பாக்கி மற்றும் ரிவோல்வர்களுடன்  கொலைவெறியாடிய ரவீந்திர தினேஸ் மீது எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள ஆயத்தமானார். அதனைத்  தொடர்ந்து ரவீந்திர தினேஸ், பொலிஸ் நிலையத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த தனது போல்ரோ வகை ஜீப் வண்டியில் ஏறி பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இக்கொலைகளின் பின்னர் 37வயதுடைய ரவீந்திர தினேஸ் தப்பிச் சென்றது எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமுனுபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுக்காகும். ரவீந்திர தினேஸ், மூத்த இரண்டு சகோதரர்கள் மற்றும் மூத்த சகோதரி ஆகிய நால்வரைக் கொண்ட குடும்பத்தின் இளையவராகும். அவரது தந்தையும் படுத்த படுக்கையாக உள்ளார். மூத்த சகோதரன் பானம பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

அவருக்கு  ரவீந்திர தினேஸால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் நண்பர் ஒருவரால் தகவல்  வழங்கப்பட்டது. “உங்கள் தம்பி பொலிஸ் நிலையத்தினுள் பேயாட்டம் ஆடி பெரிய அழிவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்...... முடியுமானால் தொலைபேசி அழைப்பை எடுத்து அவரை அமைதிப்படுத்தப் பாருங்கள்.....”

இந்த அழைப்பையடுத்து ரவீந்திரவின் சகோதரனால் ரவீந்திரவைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. பின்னர் சகோதரர் உடனடியாக தனது தாயைத் தொடர்பு கொண்டு தாயிடம் விடயத்தைக் கூறியுள்ளார். தாய் விடயத்தை அறிந்து கொண்ட ஒரு மணி நேரத்தினுள் ரவீந்திர வீட்டுக்கு வந்துள்ளதோடு, தாயின் காலில் வீழ்ந்து வணங்கி விட்டு தான் செய்த குற்றச் செயல் பற்றி கூறியுள்ளார்.

வீட்டுக்கு வந்த ரவீந்திரவை அருகில் உள்ள எத்திமலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடையுமாறு அவரது தாயார் கூறியுள்ளார். தாயின் சொல்லை என்றுமே மறுக்காத ரவீந்திர அன்றிரவு 12.30மணியளவில் எத்திமலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சரணடைந்ததோடு, திருக்கோவில் பொலிஸ் நிலையத்திலிருந்து எடுத்து வந்த துப்பாக்கி மற்றும் பொலிஸ் நிலைய பாதுகாப்பு பெட்டியின் சாவி என்பவற்றையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

ரவீந்திர தினேஸ் சில காலங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்வதற்கு ஆயத்தமான போதும் அதுவும் இடைநடுவில் தடைபட்டுப் போனது. 2006ம் ஆண்டில் பொலிஸ் கான்ஸ்டபிளாக  பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட அவர், மொரட்டுவை, அத்துருகிரிய, சம்மாந்துறை, புளியங்குளம் மற்றும் ஓமந்தை போன்ற பொலிஸ் நிலையங்களில் பணியாற்றியவராகும். 2012ம் ஆண்டில் பொரலந்தையில் வாகனப் போக்குவரத்துப் பாடநெறியினைக் கற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரது கால் ஒன்றில் அட்டை கடித்து அவ்விடத்தில் கிருமி உடம்பில் பரவியதால் அவரது காலில் சதை பழுதடைய ஆரம்பித்திருந்தது. பின்னர் வைத்திய ஆலோசனைக்கு அமைய ரவீந்திர தினேஸ் சிவில் உடையில் இலகுவான பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டார்.

அவர் 2020ஜனவரி 01ம் திகதி சார்ஜன் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டார். ஓமந்தை பொலிஸ் நிலையத்திலிருந்து 2021ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று வந்த அவர், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தின் வாகனப் போக்குவரத்துப் பிரிவில் ஆவணங்களுக்குப் பொறுப்பான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தினேஸ் ரவீந்திர களியாட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஒருவரல்ல.

பொலிஸ் நிலையத்தினுள் இடம்பெறும் சிறு சம்பவமாக இருந்தாலும் தினேஸ் ரவீந்திர அதனை உடனடியாகவே தனது தாயிடம் கூறுவார். விடுமுறை கிடைத்த உடன் அவர் தனது தாயைப் பார்க்கச் செல்வதை அனைவரும் அறிந்திருந்தனர்.

இக்கொலைகளுக்கு விடுமுறை வழங்கப்படாமையே காரணம் எனப்  பேசப்பட்டாலும் அவரது வாக்குமூலத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். “ரவீந்திர ஓமந்தையிலிருந்து திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கு வந்த கடந்த மார்ச் 21ம் திகதியிலிருந்து கடந்த டிசம்பவர் 18ம் திகதி வரையில் 54நாட்கள் விடுமுறை பெற்றிருக்கின்றார். கடந்த 17ம் திகதி அம்பாறையில் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட உடனே அவர் சென்றது எத்திமலையில் அமைந்துள்ள வீட்டுக்காகும். மறுநாளே கடமைக்குத் திரும்பியிருந்தார்.

ரவீந்திரவுக்கு வீடு செல்வதற்கான தேவை இருந்தாலும் அவர் “லீவு விண்ணப்ப படிவம்” கூட சமர்ப்பித்திருக்கவில்லை. எனினும் வாகன போக்குவரத்துப் பிரிவின் சார்ஜன் ஒருவருடன் விடுமுறை தொடர்பில் பேசியுள்ளார். அப்போது, விடுமுறையில் சென்றவர் கடமைக்குத் திரும்பிய பின்னர் விடுமுறை பெறுமாறு அந்த சார்ஜன் கூறியுள்ளார். அதனால் மன வேதனைக்கு உள்ளான போதிலும் ரவீந்திர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் அது தொடர்பில் எதுவுமே பேசவோ, முரண்பட்டுக் கொள்ளவோ இல்லை.

இது  உட்சபட்ச கோபத்தின் அடிப்படையில்  இடம்பெற்ற சோக நிகழ்வு என்பது விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றது. எனினும் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரவீந்திர பொலிஸ் நிலையங்களில் பிரபலமாகயிருப்பது “லாரா” என்ற பெயரிலாகும். என்றாலும் ரவீந்திரவின் தாயாருக்கு அவர் “சூட்டி புதா” வாகும் கடந்த புதன்கிழமை விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளால் ரவீந்திரவின் தாயான 62வயதுடைய ஏ. எம். தயாவதியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதன் போது அவர் கூறியதாவது,

“சூட்டி புதா (எனது இளைய மகன்) சிறு வயதிலிருந்தே கோழி இறைச்சி சாப்பிடுவான் சேர்..... சின்ன விடயத்திற்கும் அழுது கத்துவான்.... நிறைய தடவைகள் நஞ்சு அருந்தவும் போனான்.... உண்மையிலேயே எனது மகனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பின்னர்  பொலிஸ் நிலையங்களில் அனேக பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தான்....” என கூறினார்.

ரவீந்திர தினேஸ் குமார எவ்வித மனநோயால் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவ்வாறான நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவரே அல்ல. எனினும் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அக்கரைப்பற்று நீதவான் முஹம்மது ஹம்சாவினால் இம்மாதம் 06ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரவீந்திர தினேஸ் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதன் போது அவர் கடுமையான மன நோய்க்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் சிறைச்சாலையினால் ரவீந்திர சிகிச்சைக்காக அக்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகின்றது.

பொலிஸ் நிலையத்தினுள்ளேயே மூவர் கொல்லப்பட்டதன் பின்னர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரவு நேரக் கடமைக்குப் பொறுப்பான சார்ஜன் காதரும் மறுநாள், அதாவது நத்தார் தினத்தன்று அதிகாலை 6.20மணியளவில் உயிரிழந்தார். அந்த உயிரிழப்புடன் இச்சம்பவத்தினால் இடம்பெற்ற உயிரிழப்புக்களின் எண்ணிக்கை நான்கானது.

இப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா மற்றும் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ். எம். வை. செனவிரத்ன ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய அம்பாறை பிரிவுக்குப்பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த ரத்நாயக்காவின் நேரடி கண்காணிப்பில், அம்பாறை மாவட்ட  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. ஏ. வாஹிட்டின் நடவடிக்கையில் உகன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எல். டி. என். கருணாரத்ன தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் நிமல் ஜயலத் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமில மலவிசூரிய
தமிழில்: எம். எஸ். முஸப்பிர்
(புத்தளம் விசேட  நிருபர்) 

Comments