வட-, தென்கொரிய கொதிநிலை அரசியல் தொடர்ச்சியாக பேணுகின்ற வகையில் வடகொரியா ஆயுத பரிசோதனைகளையும் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிட்டும் வருகின்றது. இவ்வாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் அணுவாயுத பரிசோதனைகளை விட உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனக் கூறிய வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கடந்த 05.01.2021அன்று கிழக்கு கடற்கரை நோக்கி ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டதாக தென்கொரியாவும் ஜப்பானும் அறிவித்துள்ளன. இக்கட்டுரையும் வடகொரியாவின் சமகால போக்கினையும் அது மேற்கொண்டுள்ள ஏவுகணை பரிசோதனை வெளிப்படுத்தும் அரசியலையும் தேடுவதாக அமைந்துள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை நோக்கி மேற்கொண்டுள்ள ஏவுகணை பரிசோதனை நடவடிக்கையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை என சந்தேகம் கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக வடகொரியா இவ்வகை பரிசோதனையை மேற்கொள்வதான ஜப்பானிய பிரதமர் பியூ நியோ கிசிடா தெரிவித்துள்ளார். இவ்ஏவுகணை சுமார் 500கி.மீ பறந்து ஜப்பானிய பிரத்தியோக பொருளாதார வலயத்துக்கு அப்பால் விடிந்து வெடித்துள்ளதாக ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நபுவோ கிஸிடா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது இவ்ஏவுகணை பலஸ்டிக் வகை என்று சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இவ்ஏவுகணை தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை எனவும், அணுவாயுதங்களை சுமந்து செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ய முடியாதென ஐக்கிய நாடுகள் சபை தடை விதித்துள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் மீறி வடகொரியா ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை இவ்ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியை அண்டி தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜோ இன் கிழக்கு கரையோர பகுதியில் வடகொரியாவின் எல்லையோரமாக புதிய ரயில் பாதையொன்றை ஆரம்பித்து வைக்கின்ற நிகழ்வுக்காக இரு கொரியாக்களையும் பிரிக்கின்ற பகுதியில் விஜயம் செய்ய தயாராக இருந்தாரெனவும் அச்சந்தர்ப்பத்திலேயே கிழக்கு கரையோரத்தை தாண்டி இவ் ஏவுகணை வீசப்பட்டதாகவும் தென்கொரிய தகவல்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, மூன் தென்கொரிய கிழக்கு கரையோர நகரமான கோஸிங் நகரத்தை நோக்கி பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இத்தாக்குதலுக்கும் அவரது பயணத்துக்கும் இடையில் மணித்தியால இடைவெளியே காணப்பட்டது. இதுபற்றி மூன் குறிப்பிடுகின்ற போது இருநாட்டுக்குமான பதற்றத்தை இவ்வாறான ஏவுகணை தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் வடகொரியா உரையாடலுக்கான உண்மையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டுமென்றும் இந்நிகழ்வு உரையாடலுக்கான அடிப்படை நியமங்களை மீறியுள்ளதென்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இரு கொரியாக்களும் ஒன்றுசேர்ந்து நம்பிக்கையையும் சமாதானத்தையும் என்றோவொரு நாள் கட்டியெழுப்ப வேண்டிய சூழல் ஏற்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கை திட்டமிடப்பட்ட தாக்குதல் முயற்சியாக இருக்குமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க மறுபக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை நிகழ்த்தப்பட்டதாகவும் அதனை உறுதிப்படுத்தாத சூழலிலும் அதன் இயல்புகள் உள்ளார்ந்த அரசியல் தாற்பரியங்களை கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் தன்மையை நுணுக்கமாக அவதானித்தல் வேண்டும்.
ஒன்று, வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கையானது, தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கான அச்சுறுத்தல் பொறியாகவே அமைகின்றது. வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கை பற்றிய செய்திக்குறிப்பேட்டில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுவது போன்று ஜப்பானின் பொருளாதார வலயத்திலிருந்து 500கி.மீ தூரத்தில் வெடித்துள்ளமையானது, நேரடியாக ஜப்பானுக்கான எச்சரிக்கையாகவே அமைகின்றது. மேலும் தென்கொரிய ஜனாதிபதி மூன் பயணம் செய்ய திட்டமிட்ட பிரதேசத்தினூடாக அவரது விஜயத்துக்கு மணித்தியால இடைவெளிக்கு முன்னர் ஏவுகணை நடவடிக்கையை வடகொரியா மேற்கொண்டுள்ளமையும் தென்கொரியாவுக்கும் சவால்விடும் நடவடிக்கையாகவே அமைகின்றது. வடகொரியா அரசாங்கம் தனது அணுவாயுத அரசியலூடாகவே கடந்த காலங்களிலும் தமது அரசியல் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறானதொரு மரபிலேயே இம்முறையும் ஒரு ஏவுகணை நடவடிக்கையூடாக தனது பிராந்திய முரண்பாட்டு தரப்புகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு எச்சரிக்கை அரசியலை வடகொரியா மேற்கொண்டுள்ளது என்பதையே விளங்கிக்கொள்ளக்கூடியதாக உள்ளது.
இரண்டு, சமகால சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் தலைமை உலக அதிகாரத்திற்கு சரியான தலைமையை வழங்கக்கூடிய ஆளுமையை கொண்டிருக்கவில்லை என்ற பார்வை காணப்படுகின்றது. இக்காலப்பகுதியை தனக்கு சாதகமான களமாக பயன்படுத்திக்கொள்ள வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் எத்தனித்துள்ளார் என்பதையே வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கை புலப்படுத்துகிறது. அதாவது, அமெரிக்காவின் ஜனாதிபதி பைடனது நடவடிக்கைகள் உலக அதிகாரத்திற்கு வலுச்சேர்ப்பதாக காணப்படவில்லை. குறிப்பாக ஆட்சிபீடமேறி ஒரு வருடத்தினுள் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றியமை ஐரோப்பாவுக்கு தலைமை தாங்க முடியாமை ஆக்காஸ் உடன்பாட்டில் பிரான்ஸ் ஜேர்மனி என்பனவற்றை அரவணைத்து செயல்படாமை தொடர்பில் எதிரான விமர்சனங்களை மாத்திரமே பெற்றுள்ளார். மறுதலையாய் வலுப்பெற்றுவரும் சீனா மற்றும் ரஷ்யாவின் சர்வதேச அரசியல் நெருக்கடிகளுக்கு சரியான பதில் வழங்காத ஆளுமையற்ற தலைமையாகவே உருவகப்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறான சூழ்நிலையினை கிம் ஜோங் உன் பயன்படுத்திக்கொள்ள முனைவதனையே சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
மூன்று, சர்வதேச அரசியலில் சமகாலத்தில் ரஷ்யா -உக்ரைன் விவகாரமும் மற்றும் சீனா-, தைவான் விவாகாரமுமே முதன்மையான விவகாரங்களாக உள்ளன. அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகள் இவ்விவகாரங்களிலேயே அதிக கவனத்தை குவித்து வருகின்றன. இச்சூழ்நிலையில் வடகொரியா தனது பிராந்திய முரண்பாட்டு அரசுகளுக்கு நெருக்கடியை உருவாக்குவதனூடாக தனது அதிகாரத்தை பிராந்தியத்தில் பலப்படுத்தி கொள்வதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வதனை இராணுவ பலத்தாலும் ஆயுத வலுவாலும் நடவடிக்கையூடாக அறிய முடிகிறது.
நான்கு, ரஷ்யா மற்றும் சீனாவுக்கான ஆதரவுத் தளமாகவும் வடகொரியாவின் ஏவுகணை நடவடிக்கைகளை விளங்கிக்கொள்ளக்கூடியதாகவும் உள்ளது. அதாவது, ரஷ்யா, -உக்ரைன் விவகாரத்தில் உக்ரைனுக்கு சார்பாகவும் மற்றும் சீனா-, தைவான் விவகாரத்தில் தைவானுக்கு சார்பாகவும் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், வடகொரியா மேற்கு சார்பான தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கு எதிரான செயற்பாடுகளை அதிகரிப்பது அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளுக்கு நெருக்கடியை அதிகப்படுத்துவதாக காணப்படும். இதனூடாக தனது நட்பு நாடுகள் மீது குவிந்துள்ள நகர்வுகளையும் எதிர் கூட்டுக்களின் உத்திகளையும் முறியடிக்க முயலுகின்றதைக் காணமுடிகிறது. இதன் மூலம் சீனா ரஷ்யா மீதான மேற்கின் உத்திகள் நெருக்கடிக்குள்ளாகும் நிலை தவிர்க்க முடியாததாகும்.
ஐந்து, வடகொரியாவின் ஏவுகணைத் தாக்குதல் தென்கொரிய ஜனாதிபதியை இலகுவாக இலக்கு வைத்திருக்க முடியும். ஆனால், வடகொரியாவை பொறுத்தவரை அப்பிராந்தியத்தில் தனது இராணுவ பலத்தை வலுப்படுத்துவதோடு எதிரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதுவும் அவர்களின் இலக்குகளை அடையவிடாது தடுப்பதுவும் மற்றும் புவிசார் பூகோள அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் அடிப்படை உத்தியாக தெரிகிறது. அதுவே வடகொரியாவின் இருப்பை உத்தரவாதப்படுத்தும். அதுமட்டுமன்றி தென்கொரிய ஜனாதிபதி கிழக்கு கடற்கரையை நோக்கி விஜயம் செய்கின்றார் என்ற செய்தி இரும்புத்திரையுள்ள வடகொரியாவிற்கு கிடைத்துள்ளதென்பதே முக்கியமான செய்தியாகும். ஏறக்குறைய தென்கொரிய, ஜப்பான் போன்ற நாடுகளின் அனைத்து நகர்வுகளையும் வடகொரியா கண்காணிக்கின்றது என்பதுவே இந்நடவடிக்கையின் சாரம்சமாகும்.
ஆறு, வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனையோ அல்லது ஏவுகணை தாக்குதலோ அதன் மீதான பொருளாதார தடைக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. அதனைப்பற்றிய உரையாடல்கள் ஐக்கிய நாடுகள் சபையில் ஜப்பான் தென்கொரியா நாடுகளாலும் மேற்கு நாடுகளாலும் உரையாடப்படுகிறது. அதன் விளைவுகள் வடகொரிய மக்களின் இருப்பிலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகின்ற சூழலை ஏற்படுத்தக்கூடியது. உணவுக்கான தட்டுப்பாடு என்பது கொவிட் தொற்றுக்கு பின்னால் உலகளாவிய ரீதியில் அதிகரித்துவரும் சூழலில் ஓர் அபாயமான கட்டத்தை வடகொரியா நெருங்குகின்றது.
எதுவாயினும், இராணுவ பலக்கோட்பாட்டை முன்னிறுத்தி செயற்படும் வடகொரியா உணவினையும் ஆயுத தளபாடங்களையும் ஒரே தளத்தில் வைத்து மதிப்பிடுவது ஆயுத தளபாடங்கள் இல்லாத போது உலகத்தால் கைப்பற்றப்படும் நாடாக மாறிவிடும் என்ற அச்சமும் காணப்படுகின்றது. அதேநேரம் உணவுக்கட்டுப்பாடு என்பது மக்கள் இல்லாத நாட்டை நோக்கி இட்டுச்செல்லும் என்ற அச்சமும் வடகொரியாவில் காணப்படுகிறது. எனவே, இவையிரண்டும் வடகொரிய என்ற தேசத்தின் இருப்புக்கு அத்தியவசியமானது. இவ்ஏவுகணை பரிசோதனை அல்லது தாக்குதல் வடகொரியாவிற்கு மட்டுமல்ல சீன-ர,ரஷ்ய நலன்களுக்கும் தந்திரோபாயமான நகர்வாகவே தெரிகின்றது.
பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்