மனிதனால் விலங்குகளுக்கும், விலங்குகளினால் மனிதனுக்குமான போராட்டங்கள் கயிறிழுப்பு விளையாட்டு போலத்தான் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. வனவிலங்குகளின் வாழிடம் காடுகளே. ஆனால் அந்த காடுகளில் மனித பிரவேசம் அதிகமானதால், விலங்குகள் மனிதன் வாழும் பகுதிகளுக்கு வந்து வாழப் பழகிக் கொண்டுள்ளன.
ஆரம்ப காலங்களில் காட்டுப்பகுதிக்கு சென்றால்தான் வன விலங்குகள் மற்றும் வன ஜீவராசிகளை காணமுடியும். ஆனால் மனிதன் மிருகங்கள் வாழும் வனங்களுக்குச் சென்று அங்கே தமது தேவைகளுக்காக மரங்களை வெட்டுதல், காடுகளுக்கு தீ வைத்தல், விவசாயம் செய்தல் போன்றவற்றை மேற்கொண்டதால் காடுகள் அழிய ஆரம்பித்தன. இவ்வாறு மனிதன் விலங்குகளுக்கு பாதகம் விளைவிக்க முற்பட்டதால் விலங்குகளும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைய, மனித - விலங்கு மோதல்கள் நிகழ ஆரம்பித்தன.
அந்தவகையில்தான் தற்காலத்தில் பேசப்படுகின்ற யானை, குரங்கு, மலைப்பாம்பு, குளவி போன்ற உயிரினங்களால் மனிதனுக்கு உண்டாகும் பிரச்சினைகளை பார்க்க வேண்டும். இவற்றில் குரங்குகளால் மனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை பார்ப்போம்.
கடந்த முப்பது வருடங்களுக்கு முன் அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்துவந்த குரங்குகள் இன்று மனிதனோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தமைக்கு மனிதனே காரணம். காட்டுப் பகுதியில் உள்ள மரங்கள் அழிக்கப்பட்டதால் அவை உணவுக்காக மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள உயர்ந்த மரங்களில் குரங்குகள் இரவு நேரங்களைக் களிக்கத் தொடங்கின. காலைப் பொழுது விடிந்ததுமே மக்கள் எழுவதற்கு முன் எழுந்து வீட்டு வாசல் பகுதிகளில் உலாவத் தொடங்கி விடுகின்றன.
குரங்குகள் மக்களுக்கு விளைவிக்கும் அட்டகாசங்களை இலகுவாக கூறிவிட்டு செல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் காலை எட்டு, ஒன்பது மணிக்கு கூட்டம் கூட்டமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வரும் குரங்குகள் அங்கு காணப்படுகின்ற பழமரங்களில் ஏறி காய், பிஞ்சு, பழம் என பறித்து சாப்பிட்டு குதூகலிக்கின்றன.
குரங்குகளால் விவசாயிகள் படும் வேதனை எண்ணிலடங்காது. தக்காளி, போஞ்சி உட்பட மரக்கறிகள், கீரை வகைகள், பழங்கள், காய்கள் என எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்துவிடுகின்றன. அதுமட்டுமல்லாமல் கரட், பீட்ரூட் போன்ற மரக்கறிகளையும் பிடுங்கி நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயம் செய்யும் நுவரெலியா, பதுளை போன்ற ஊர் விவசாயிகள் பெரும் அசெளகரியங்களுக்கு காலங்காலமாக முகங்கொடுத்து வருவதாக விவசாயி நாதன் என்பவர் கூறுகின்றார்.
வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்து வீட்டுக்குள் புகுந்து பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, உணவுகளை எல்லாம் சாப்பிட்டு விட்டு செல்கின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம். ஒருநாள் வீட்டுக்குள் புகுந்து விட்டால் அதை வழமையாக கொள்கின்றன. வீட்டுக்கு வெளியில் உலர்வதற்காக போடப்பட்டிருக்கும் ஆடைகளையும் தூக்கிச்சென்று கிழித்தெறிந்து விளையாடுவதாக பாதிக்கப்பட்ட பெண் செல்லம்மாள் என்பவர் தெரிவிக்கின்றார். நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நகரம், கிலன்டில் தோட்டப் பகுதிகளில் பாடசாலை செல்லும்போதும், வேலைக்கு செல்லும் வழிகளிலும் சிறார்கள் மற்றும் பொதுமக்களை விரட்டி கண்டிப்பதோடு அவர்களின் கைகளில் வைத்திருக்கும் பைகளை பிடுங்கி இழுத்துச் செல்கின்றன. குறிப்பாக உணவுப் பொருட்களை கையில் வைத்திருப்பதை கண்டாலே கொஞ்சம் கூட பயப்படாமல் வந்து பிடுங்கிக் கொண்டு ஓடுகின்றன.
டயகம நகரில் கடைத்தெருக்களுக்கு குரங்குகள் வருவதும் வழமையாகிவிட்டது. அங்குள்ள உணவுப் பொருட்கள் மட்டுமன்றி ஏனைய பொருட்களையும் திருடிச் சென்று சேதப்படுத்துகின்றன. இந்த குரங்குகள் யாருக்கும், எதற்கும் பயப்படுவதில்லை. கல் மற்றும் கம்புகளைக் கொண்டு அடித்தாலும் பயப்படுவதைப் போல் நடிக்குமே தவிர ஒருபோதும் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை. எதிர்பாராவிதமாக அடிபட்டுவிட்டால் பொதுமக்களை விரட்டவும் செய்கின்றன. குரங்குகள் துரத்தியதால் ஓடி விழுந்து இறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. நோய்வாய்ப்பட்ட பெரியவர்களை குரங்குகள் துரத்தும்போது அவர்கள் பயத்தில் ஓடுவது வழமை. இதனால் பெண்ணொருவர் தடுக்கி விழுந்து இறந்தும் இருக்கிறார்.
வீதிகளில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமாகும்போது அங்கே சாரதிகளுக்கும் பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. பெரும்பாலும் சுற்றுலாப்பயணிகள் பிரவேசிக்கக்கூடிய கதிர்காமம், சீகிரியா போன்ற இடங்களில் அதிகளவிலான குரங்குகளை காணலாம். பயணிகள் உணவுப் பொருட்களை வழங்கி பழக்கியமையால் குரங்குகளும் அதிகளவில் இவ்விடங்களில் நடமாடத் தொடங்கிவிட்டன.
இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் மனிதனே. குரங்குகளின் வாழ்விடங்களை அழிக்கும்போது அவை உணவுக்காக என்ன செய்யும்? உணவு தேடி மக்கள் குடியிருப்புகளுக்கு வரும். எங்கேயாவது ஒரு இடத்தில் உணவு கிடைத்து விட்டால் தொடர்ந்து அந்த இடத்திற்கு ஒவ்வொரு நாளும் செல்லத்தான் செய்யும். இது மிருக இயல்பு.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக குரங்குகள் அதிகம் நடமாடும் விவசாய பகுதியிலுள்ள குரங்குகளை பிடித்து காடுகளில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி பலகைக் கூடுகளில் குரங்குகளை பிடித்து போட்டு அவற்றை அடர்ந்த காடுகளில் கொண்டு சென்று விட்டார்கள். என்றாலும் இந்த செயற்பாடு பயனளிக்கவில்லை.
காடுகளில் விடப்பட்ட குரங்குகள் மீண்டும் வழக்கமான இடங்களுக்கு வர ஆரம்பித்து விட்டன. சாப்பாடு வேண்டுமல்லவா!
இதைவிடுத்து கடந்த மூன்று வருடங்களாக குரங்குகளை விரட்டுவதற்காக குரங்கின் முகவடிவை ஒத்த முகமூடிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. குரங்குகள் வரும்போது இந்த முகமூடிகளை மக்கள் அணிந்து கொண்டு வெளியில் செல்லும்போது குரங்குகள் பயந்து ஓடின. ஆனால் காலம் செல்லச்செல்ல முகமூடிகள் மீது இருந்த பயமும் குரங்குகளுக்கு ஓடிவிட்டது. உயர்ந்த மரங்களில் ஏறி நின்று முகமூடிகளை அவிழ்ப்பதை நோட்டமிட்டு விட்டன. தற்போது முகமூடிக்கு அஞ்சுவதில்லை. அவ்வாறானால் என்ன தான் தீர்வு?
அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் குரங்குகளை துப்பாக்கியால் சுடுவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் காட்டு விலங்குகளை கொல்வது சாத்தியமானதல்ல. இந்நிலையில் மாத்தளையில் குரங்குகளுக்கு கருத்தடை செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவும் கூட நிரந்தரத் தீர்வாக அமையாது. சில நேரங்களில் எல்லா குரங்குகளுக்கும் கருத்தடை செய்வது சாதாரண விஷயமல்ல. அப்படியே கருத்தடை செய்யப்பட்டாலும் ஒரு காலத்தில் குரங்குகள் என்ற இனமே இல்லாமல் போய்விடலாம் என்ற அச்சமும் உண்டு .
இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களம் கட்டாயம் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை மேற்கொள்வது அவசியமாகும். அந்த வகையில் மீண்டும் குரங்குகளை விரட்ட வேண்டுமென்றால் காடுகளில் அவற்றுக்கான உணவுகளை பெறக்கூடிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு காடுகளில் பழமரங்களை வளர்த்தல் அவசியம். இதனால் மீண்டும் காடுகளுக்கு சென்று வாழும் பழைய சூழ்நிலையை குரங்குகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கலாம். காடுகளில் பழமரங்கள் இருக்குமானால் நாட்டுப்புறங்களுக்கு வரவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும். தனியார் நிறுவனங்களும், அரசும் திணைக்களத்துடன் இணைந்து பழமரங்களை வளர்க்கும் திட்டத்தை இப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தினால் குரங்கு தொல்லைக்கு முடிவு கட்டலாம்.
ந. திஸ்னாகுமாரி
நான்காம் வருடம்
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்