![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/16/a14.jpg?itok=skYE3xra)
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவதுகூட்டத்தொடர் எதிர்வரும் 18ஆம் திகதிசெவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவினால் முற்பகல் 10மணிக்கு வைபவரீதியாகஆரம்பித்து வைக்கப்படும்.
அரசியலமைப்பின் 70 (1) ஆம் பிரிவின்படி பாராளுமன்றக் கூட்டத் தொடரை இடைநிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த டிசம்பர் 12ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார்.
ஜனவரி 18ஆம் திகதி புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் முற்பகல் 9மணிக்கு விசேட அதிதிகளின் வருகையுடன் ஆரம்பமாகின்றன. வழமையாக இடம்பெறும் ஆடம்பரமான நிகழ்வுகள் இன்றி மிகவும் எளிமையான முறையில் ஜனாதிபதிக்குப் பாராளுமன்றத்தில் வரவேற்பு வழங்கப்படும். கூட்டத்தொடர் ஆரம்பத்தில் முதலாவது அமர்வில் முற்பகல் 10மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார். அரசியலமைப்பின் 33 (2) ஆவது பிரிவானது, பாராளுமன்றத்தின் அமர்வு ஒவ்வொன்றினதும் ஆரம்பத்திலும் அரசாங்கக் கொள்கைக் கூற்றை வாசிப்பதற்கும், பாராளுமன்றத்தின் சடங்குமுறையான இருக்கைகளில் தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.
1947ஆம் ஆண்டு முதல் 50இற்கும் மேற்பட்ட தடவை பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1978ஆம் ஆண்டின் பின்னர் மாத்திரம் 26தடவைக்கு மேல் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆளுநர் சேர். கென்றி மொங் மாசொன் மூர் தலைமையில் முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரானது வைபவரீதியாக 1947ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஆளுநர் அவர்களின் சிம்மாசன உரை இடம்பெற்றது.
இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வில் இரண்டாவது எலிசபெத் மகாராணி அவர்களினால் 1954ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்து. இங்கு மகாராணியின் சிம்மாசன உரை அரசாங்கத்தினால் சபையில் வாசிக்கப்பட்டது. அதன் பின்னரான காலப் பகுதியில் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் வைபவ ரீதியாகவும், வைபவ ரீதியற்ற முறையிலும் ஆரம்பிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.
1978ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7ஆம் திகதி புதிய அரசியல் யாப்பு பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் ஜனாதிபதியின் சிம்மாசன உரைக்குப் பதிலாக அரசின் கொள்கைப் பிரகடன அறிக்கை வாசிக்கப்படும். தற்பொழுது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையாகவே தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் முடிவுக்குக் கொண்டு வந்த இரண்டாவது பாராளுமன்றக் கூட்டத் தொடராக இது காணப்படுகிறது. இதற்கு முன்னர் எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை அவர் முடிவுக்குக் கொண்டு வந்து நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் புதியதொரு எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகவுள்ளது. கொவிட்-19சவால்களை ஒட்டியதாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவு உள்ளிட்ட அனைத்து சவால்களையும் சமாளிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் ஜனாதிபதியின் இந்தக் கொள்கைப் பிரகடன உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து கூட்டத்தொடரை ஜனாதிபதி முடிவுக்குக் கொண்டு வந்திருந்தார். திடீரென பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வந்தன.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய கூட்டத்தொடர் ஒன்று முடிவுக்குக் கொண்டு வரப்படும் பட்சத்தில் கோப், கோபா, அரசாங்க நிதி பற்றிய குழு போன்ற பல்வேறு குழுக்களும் கலைக்கப்படும். கோப், கோபா குழுக்களின் விசாரணைகளினால் அரசாங்கத்துக்குப் பல அசௌகரியங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், எனவே குறித்த குழுக்களின் தலைவர்களை மாற்றுவதை நோக்காகக் கொண்டே கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இருந்தபோதும் ஆளும் தரப்பின் அமைச்சர்கள் பலரும் இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளனர். அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டங்கள் குறித்து தேவையற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருப்பதால் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையை பாராளுமன்றத்தில் முன்னெடுப்பார் என அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக பொருளாதார ரீதியில் நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு மத்தியில் சரியான பாதையில் பொருளாதாரத்தை முன்கொண்டு செல்ல 2022ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டம் கடந்த டிசம்பர் மாதம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. வரவுசெலவுத் திட்டத்துக்கு அப்பால் மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியில் அரசாங்கத்தின் எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்கள் குறிப்பாக தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள செயற்பாடுகளை ஜனாதிபதி மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெளிவாக விளக்கமளிப்பார்.
டொலருக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டின் காரணமாக உருவாகியுள்ள விலைவாசி அதிகரிப்பு போன்ற விடயங்களால் மக்கள் அதிருப்தியடைந்திருக்கும் சூழலில், அரசாங்கத்தின் அனைத்து வேலைத் திட்டங்களையும் விமர்சிக்கும் முயற்சிகளே எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் அரசின் கொள்கைத் திட்டங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்கள் நிலவுகின்றன. இவ்வாறான குழப்பங்களைத் தீர்த்து, அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் முன்னேறிச் செல்லவிருக்கும் பாதை தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை மக்களுக்கு முன்வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.
புதியதொரு ஆண்டில் தமது கொள்கைத் திட்டங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்திக் கொடுத்து, மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பையும் பெற்று தற்போதைய சவால்களை வெற்றி கொள்வதற்கான யோசனைகளை ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையின் மூலம் முன்வைப்பார் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நாட்டின் எதிர்காலத்தை நோக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேதனப் பசளைப் பயன்பாடு உள்ளிட்ட அரசாங்கத்தின் தொலைநோக்கிலான வேலைத் திட்டங்கள் பல எதிர்க்கட்சியினரால் பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், கொவிட்-19தொற்றுநோயிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத் திட்டங்களுக்கு எதிர்க் கட்சியிலிருந்து எவ்விதமான ஆதரவுகளும் வழங்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து முன்வைக்கவுள்ள கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவார்.
அதேநேரம், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்க் கட்சிகள் கோரியுள்ளன. இதற்காக எதிர்வரும் 19ஆம், 20ஆம் திகதிகளில் நேரத்தை ஒதுக்குவதற்கு சபாநாயகர் தலைமையில் கூடிய விசேட கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் விவாதத்தைக் கோரும் சம்பிரதாயம் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையிலேயே 18ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பிலும் விவாதம் கோரப்பட்டுள்ளது.
சம்யுக்தன்