உக்ரைனுடனான போரை தவிர்க்கும் வகையிலான அமெரிக்க - ரஷ்ய இராஜதந்திர நகர்வுகள் | தினகரன் வாரமஞ்சரி

உக்ரைனுடனான போரை தவிர்க்கும் வகையிலான அமெரிக்க - ரஷ்ய இராஜதந்திர நகர்வுகள்

உக்ரைனை மையப்படுத்தி மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்குமான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது. அத்தகைய தீவிரத்தை தணிக்கும் உத்திகளை மேற்கும் நேட்டோவும் முதன்மைப்படுத்தி ஜெனிவாவில் நீண்ட சந்திப்புக்களை ரஷ்யாவுடன் கடந்த 10ஆம் திகதியிலிருந்து மேற்கொண்டு வருகிறது. இத்தகைய உயர்மட்ட பேச்சுக்கள் நிகழும் ஒரே சந்தர்ப்பத்தில் ரஷ்ய துருப்புக்கள் முன்னாள் சோவியத்குடியரசுகளில் ஒன்றான கஸகஸ்தானின் அழைப்பின் பேரில் தரையிறக்கப்பட்டுள்ளது. தென் ஐரோப்பிய நாடான அல்பேனியாவுக்குள் அமெரிக்கா இராணுவ முகாம் அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அல்பேனியா, உக்ரைன், கஸகஸ்தான் போன்ற நாடுகள் அமைந்துள்ள இப்பிரதேசம், முன்னாள் சோவியத் யூனியனின் செல்வாக்கு மிக்க பிராந்தியமாகவும் சோசலிச கொள்கையை இறுக்கமாக பின்பற்றுதல்களை கொண்ட பிராந்தியமாகவும் காணப்பட்டது. மேற்குறித்த அனைத்து நாடுகளும் சோவியத் யூனியனின் சோசலிச வீழ்ச்சிக்கு பின்னர் தனியரசுகளாக மாறின.

அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளின் நலன்களுக்கு இசைவான நாடுகளாக காணப்படுகின்றன. ரஷ்யாவின் ஜனாதிபதியாக விளாடிமீர் புட்டின் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்நாடுகள் மீதான மேற்குலக ஏகாதிபத்திய அணுகுமுறை நெருக்கடிக்குள்ளாகியதுடன் அந்நாடுகளை நோக்கிய நேட்டோவின் விஸ்தரிப்பு படிப்படியாக குறைவடைகின்ற நிலையும் ரஷ்யாவின் மேலாதிக்கமும் வளர்ச்சியுற்று வருகின்றதை அவதானிக்க முடிகிறது.

கோவிட் தொற்றுக்கு பின்னர் இப்பிராந்திய நாடுகளில் இராணுவ மேலாதிக்கமும், சர்வாதிகார ஆட்சிமுறைகளும் மீளவும் கட்டமைக்கப்படும் சூழல் ஒன்றை காணமுடிகிறது. அதன் வரிசையில் பைலோரஷ்யா (பெலாரஷ்) முதன்மை உதாரணமாக அமைந்திருந்தது. எனவே இத்தகைய சூழலிலே நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்குமான மோதல் கிரிமியா கைப்பற்றப்பட்டதிலிருந்து அதீத நெருக்கடியை ஏற்படுத்த வழிவகுத்திருக்கிறது. அதுமட்டுமன்றி உக்ரைன், கஸகஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் ரஷ்ய துருப்புக்களின் அணுகுமுறை ரஷ்யா மீளவும் முன்னாள் சோவியத் யூனியனின் கட்டமைப்பை நோக்கி நகர்வதற்கான திட்டமிடல்களை வெளிப்படுத்துவதாகவே ஊகிக்கப்படுகின்றது. புவிசார் அரசியல் கோட்பாட்டாளர் மக்கின்டர் குறிப்பிடுவது போல் ரஷ்யா உலகத்தின் இருதய நிலமாக தொடர்ந்தும் தன்னைப்பேணி கொள்ள முயல்வதாகவே தெரிகிறது. அதற்கான அடிப்படை ரஷ்யாவின் புவிசார் அமைவிடமேயாகும்.

இதேநேரம் அல்பேனியாவுக்குள் இராணுவ தளம் அமைத்திருக்கும் அமெரிக்கா ஐரோப்பாவின் தென்பகுதியை தனது செல்வாக்கிற்குள் கொண்டு வருவதற்கான பிரதிபலிப்பாகவே அல்பேனியா விடயத்தை நோக்க வேண்டியுள்ளது. எனவே இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகளும் அவற்றின் இராணுவ கட்டமைப்பான நேட்டோவும் 1990களுக்கு பின்னரான காலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றத்தின் தொடர்ச்சியை பேணுவதற்காக போராடுகின்ற அதே சமயம், 1990களுக்கு முன்னரான தனது இருப்பை தக்கவைத்து கொள்வதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

இதேநேரம் ரஷ்யாவின் எல்லையோரத்தில் உக்ரைனை அண்டிய பகுதியில் ரஷ்யா குவித்துள்ள ஒரு இலட்சம் வரையிலான படைவீரர்கள் நேட்டோவுக்கும் அதன் அணிசார் நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனை தடுத்து நிறுத்தும் விதத்திலேயே ரஷ்யாவுடனான இராஜதந்திர உரையாடல்களை மேற்கொண்டு வருகிறது. ஜெனிவாவில் ரஷ்ய - அமெரிக்க தரப்பிடையே உக்ரைன்  விவகாரம் தொடர்பில் நிகழ்ந்த உரையாடலில் உக்ரைன் மீது தாக்குதல் நடாத்துவதற்கு எவ்வித எண்ணமுமில்லையென ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்கே ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.

இவ்வுரையாடலில் அமெரிக்க தரப்பில் துணை வெளிவிவகார அமைச்சர் பெண்டிமர் கலந்து கொண்டுள்ளார். சுமார் 7மணிநேரம் நீடித்த இச்சந்திப்பில் இருதரப்பினரும் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளை தொடர்வதாக ஒப்புக்கொண்டனர். இருநாட்டின் துணை வெளியுறவு அமைச்சர்களும் ஊடகங்களின் முன் கருத்து தெரிவிக்கையில், ரஷ்யா தரப்பு உக்ரைனை தாக்கும் திட்டமோ அல்லது நோக்கமோ தங்களிடம் இல்லை என்றும் இதை தங்களது சக ஊழியர்களுக்கு விளக்கியிருப்பதாகவும் ரஷ்யர்கள் தங்கள் அமெரிக்க சகாக்களிடம் தெரிவித்திருப்பதோடு துருப்புக்கள் மற்றும் போர்ப்பயிற்சிக்கான அனைத்து நடவடிக்கைகளும் ரஷ்ய எல்லைக்குள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது என்றும் கூறியுள்ளது.

எனவே இது தொடர்பாக எந்தவொரு தீவிரமான சூழ்நிலையும் எழாதெனவும் அதற்கு பயப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச்செயலளார் குறிப்பிடும் போது ஒவ்வொரு தரப்பின் பாதுகாப்பு கவலைகளையும் நன்கு புரிந்து கொள்வதை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட வெளிப்படையான மற்றும் நேரடியான விவாதங்களே இவை என தெரிவித்தார்.

இதேநேரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் எல்லைக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது. இது ஊடுருவல் மற்றும் மேற்கு நாடுகளின் எச்சரிக்கைகள் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடாத்தினால் பொருளாதார தடை விதிக்கப்படுமென அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவுடன் மேற்கு நாடுகள் மோதலில் ஈடுபடுமானால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைத்து மதிப்பிட வேண்டாமெனவும் ரஷ்யா அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளது. எனவே இப் பேச்சுவார்த்தை ஒரு ஆரோக்கியமான தீர்வை எட்டாத போதும் இருதரப்பும் பேசுவதற்கானதொரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா போர் நிலைமைகளுக்கு அப்பால் உரையாடல் தந்திரோபாயத்தையும் மேற்குடன் மேற்கொண்டு வருகிறது. கடந்த காலத்தில் எட்டு கோரிக்கைகளை முன்வைத்து மேற்குடன் உரையாடுவதற்கான களத்தை திறந்த ரஷ்யா, அதனை ஆரோக்கியமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. இராஜதந்திரம் பற்றிய உரையாடலை முன்வைத்த பிஷ்மார்க் குறிப்பிடுவது போல் வாய்ப்புக்களை பயன்படுத்துவதில் புடின் சிறப்பாக செயலாற்றுகிறார்.

மேற்குலக மற்றும் நெட்டோ ரஷ்யாவுடன் மோதுவதும் முரண்பாடுகளை எதிர்கொள்வதும் சீனாவின் நகர்வுகளுக்கு வாய்ப்பான களத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தைவான் விடயத்திலும் தென் சீனக்கடல் பகுதியிலும் இந்துசமுத்திர நாடுகள் மத்தியிலும் மேற்கிற்கும் சீனாவிற்குமான இழுபறி அண்மைக்கால கட்டங்களில் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியிருந்தது. இதில் நேரடியான எச்சரிக்கைகளும் பதில் நடவடிக்கைகளும் மேற்கும் சீனாவும் எதிர்கொண்டு வந்தன. ஆனால் ரஷ்யாவினுடைய நகர்வு அல்லது ரஷ்ய-சீன கூட்டமைப்பு தமது பிராந்தியங்களையும் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்களையும் மேற்குக்கு எதிராக திசை திருப்பப்படுகின்றபோது மேற்கு நெருக்கடிக்குள் தள்ளப்படும் சூழலை எதிர்கொள்ளலாம். மேற்கின் மீதான இருமுனைத் தாக்குதல் திறன் கொண்ட நாடுகளாக ரஷ்யாவும் சீனாவும் காணப்படுகின்றன. எனவே இப்போக்கு மாறிமாறி நிகழ்கின்ற போது ரஷ்யாவும் சீனாவும் ஆரோக்கியமான வளர்ச்சியை அடைவதனை அவதானிக்க முடிகின்றது. அதேநேரம் சீனாவின் பட்டி மற்றும் சாலை முன்முயற்சியின் விஷ்தரிப்புக்கள் பலப்படுதையும் இந்த பசுபிக் நாடுகளை மேற்கு நாடுகளால் முழுமையாக ஏற்றுக்கொள்ள இயலாத நிலையும் காணப்படுகிறது.

எனவே, கோவிட்டிற்கு பின்பான உலகம் மேற்கு எதிர் சீனா-ரஷ்யா என்ற பரிமாணம் வலுவான சூழலை ஏற்படுத்தி வருகிறது. இதில் ரஷ்யா இராணுவ ரீதியிலும் அரசியல் இராஜதந்திர உத்திகளிலும் தந்திரோபாயமான நகர்வுகளை செய்வதிலும் வெற்றிகரமாக விளங்குகின்றது. அதேநேரம் ரஷ்யா ஒரு யுரேசியன் நாடாக காணப்படுவதாக ஐரோப்பாவின் செல்வாக்கும் அனுசரணையும் ரஷ்யாவிற்கு அவசியமானவை. ரஷ்யாவின் புவிசார் அமைவிடம் மையநாடுகளாலும் விளிம்பு நாடுகளாலும் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதனால் அந்நாடுகளை அரவணைப்பதுவும் ஒத்து இயங்குவதும் தவிர்க்க முடியாத அம்சமாக விளங்குகின்றன. இதனால்தான் இராணுவ நகர்வுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அரசியல் இராஜதந்திர பாய்ச்சல்களுக்கு ரஷ்யா அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் அமெரிக்காவும் அல்லது அமெரிக்கா தலைமையிலான அணியை அங்கீகரிப்பதும் ரஷ்யாவுக்கான நெருக்கடியாகும்.

கஸகஸ்தானில் ஏற்பட்டுள்ள ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகின்ற வகையில் ரஷ்யா எடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கையானது பிராந்திய நாடுகள் மத்தியில் பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவின் எழுச்சி என்பது தவிர்க்க முடியாதது மட்டுமன்றி முன்னாள் சோவியத் யூனியனின் வாய்ப்புக்களை நோக்கி ரஷ்யா மட்டுமல்ல அதன் குடியரசுகளும் கிழக்கு ஐரோப்பிய ஆட்சியாளர்களும் சிந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மேற்குலகு ரஷ்யாவுடன் மோதிக்கொள்ளும் சந்தர்ப்பமானது சீன நலன்களை ஏனைய பிராந்தியங்களில் விரிவாக்கம் செய்வதற்கான சூழலாகவே தெரிகிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments