வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு பின்னிற்கப் போவதில்லை! | தினகரன் வாரமஞ்சரி

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு பின்னிற்கப் போவதில்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலானஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணிஅரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டுவருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், 2022ஆம்ஆண்டில் புதியதொரு பயணத்தை ஆரம்பித்துள்ளதுஎன்றே கூற வேண்டியுள்ளது.

கொவிட்-19சவால்களுக்கு உலக நாடுகள் அனைத்தும் முகம் கொடுத்திருக்கும் நிலையில், நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் குறிக்ேகாளுடன் அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும், அதன் பின்னரான பொதுத் தேர்தலின் போதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கத்தின் உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரை கடந்த செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இவ்வைபவம் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் நடத்தப்பட்டது.

அன்றைய தினம் முற்பகல் 10.00மணிக்கு பாராளுமன்றத்தின் அக்கிராசனத்தில் அமர்ந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றினார். ஏற்கனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் பற்றியே ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடன உரையில் அதிகம் பேசியிருந்தார்.

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளின் களயதார்த்தம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் தனது உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். நாட்டை அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற்றிச் செல்வதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பையும் அவர் கோரியிருந்தார்.

'இந்த உயர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றன. எனினும், நாங்கள் அனைவரும் நாட்டின் நன்மையையே பிரார்த்திக்கின்றோம். உலகளாவிய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படும் பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவருக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பினை நிறைவேற்ற எம்முடன் இணைந்து செயற்படுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்' என ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

பொருளாதாரப் பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, நாட்டின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கூறியிருந்த கருத்து ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருந்தது. எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லையென்ற அவருடைய கருத்தே இதற்குக் காரணமாக அமைந்தது.

ஜனாதிபதி தனது உரையில் 'நாங்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் என்பவற்றை மதிக்கும் ஓர் நாடாக விளங்குகின்றோம். கடந்த காலங்களில் எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்லப்பட்ட தவறான கருத்துகளை சீர்செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு விதத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு எமது அரசு உடந்தையாக இருக்கவில்லை. அதேபோன்று எதிர்காலத்திலும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் அங்கீகரிப்பதும் இல்லை' எனக் கூறியிருந்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறித்தும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

'யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளோம். யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக கையேற்கப்பட்டிருந்த காணிகளில் 90வீதமானவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது ஆரம்பித்திருந்தேன். அந்தப் பிரதேசங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, அமைதியான சூழலொன்றை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளதனால் எதிர்வரும் நாட்களில் மீதியாகவுள்ள காணிகளையும் விடுவிக்க எங்களால் இயலும்.

யுத்தத்தினால் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பொதுவானதல்ல. அனைவருக்கும் எம்மால் முடிந்தளவில் நீதி, நியாயம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். நாங்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றோம். நாட்டில் வாழும் அனைத்து பிரசைகளும் கௌரவத்துடன் வாழ்வதற்கும் அவர்களது அனைத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனால் குறுகிய அரசியல் நோக்கங்கள் அடிப்படையில் மக்களை ஒருவர் மீது ஒருவரை ஏவி விடுவதை தற்போதாவது நிறுத்துமாறு, அவ்வாறான அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுகின்றோம்' என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

"நாட்டின் எதிர்காலத்தையும், நோயற்ற எதிர்கால சந்ததியையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஆரம்பித்த சேதன உரக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்கள் எதிர்க் கட்சியினரால் வேண்டுமென்றே விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. இது பற்றி ஜனாதிபதி குறிப்பிடுகையில், 'நச்சுத்தன்மையற்ற பசுமை விவசாயத்திற்காக நாங்கள் எடுத்த கொள்கையை செயற்படுத்தும் போது, சில சிக்கல்களுக்கு முகம்கொடுக்க வேண்டியிருந்தது. எமது நோக்கம் மற்றும் திட்டம் தொடர்பாக சரியாக அறிவூட்டப்படாமையினாலும், திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் ஏற்பட்ட சில நடைமுறைச் சிக்கல்கள் அரசியல்மயமாக்கப்பட்டதாலும் இது தொடர்பாக தவறான புரிதல் ஏற்பட்டது. பசுமை விவசாயம் தொடர்பான பரந்த கருத்து பரப்பெல்லை சில நேரங்களில் சேதனப் பசளை என பொறுப்பானவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டமை தவறான கருத்துக்கள் மக்கள் மயமாகுவதற்கு வழிவகுத்தது. அதற்கேற்ப சில முடிவுகள் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால் அவற்றில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது.

ஆனால், பசுமை விவசாயம் தொடர்பான நமது அரசின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, குறைபாடுகளை நிவர்த்தி செய்து இக்கொள்கைகளை மிகவும் பயனுள்ள வகையில் முன்னோக்கி கொண்டு செல்ல நாம் எதிர்பார்க்கின்றோம். விவசாயத்தில் அதிக உற்பத்தித்திறனை அடைய நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதும், உயிரின பசளைப் பயன்பாட்டை ஊக்குவிப்பது மற்றும் நச்சுத்தன்மையற்ற விவசாய உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தையை உருவாக்குவதும் எங்கள் இறுதி இலக்காகும். அதனூடாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மற்றும் அதனை சார்ந்த சேவைகளை வழங்கும் மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும். இதன் மூலம் இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு வலுவான பங்களிப்பை பெற்றுக் கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார் ஜனாதிபதி.

இவ்விடயத்தில் முன்வைத்த காலைப் பின்வைப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லையென்பதை ஜனாதிபதி தனது உரையின் மூலம் தெளிவாகக் கூறியுள்ளார். நாட்டின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வையில் இதனை நோக்கினால் சேதன உரப் பயன்பாடு என்பது அனைவருக்கும் நன்மையளிக்கும் ஒரு விடயம் என்பது புரியும். இருந்த போதும் இரசாயன உரங்களின் பின்னணியில் உள்ள பெருநிறுவனங்கள் மற்றும் அவற்றின் பிடியில் சிக்கியுள்ள ஒரு சில சக்திகளே அரசாங்கத்தின் சேதன உரப் பயன்பாட்டைக் குழப்பியடித்து வருகின்றன. இருந்த போதும் அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.

கொவிட்-19தொற்றுநோய் சூழலினால் தோன்றியிருக்கும் புதிய வாழ்க்கை முறையுடன் ஒன்றிப் போயுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தி செய்வது பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அனைத்துத் தரப்பினருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் சென்றடையும் வகையில் இணைய வசதிவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் என்பதும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை எதிர்க் கட்சியினர் விமர்சிக்கின்ற போதும் தொலைநோக்குப் பார்வையில் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தித்து ஜனாதிபதி இந்த உரையை நிகழ்த்தியிருந்தார்.

சம்யுக்தன்

Comments