ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா வெளியேறும் (Brexit) திட்டத்தை வலியுறுத்தி பெரும்பான்மை ஆதரவுடன் பிரதமராகிய ஐக்கிய இராச்சியத்தின் இன்றைய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தொடர் சர்ச்சையில் சிக்கி பதவி இழக்கும் பரிதாபத்தை எட்டியுள்ளார் என்பதே இன்றை உலகின் முக்கிய பேசுபொருள்.
Brexit தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவதில் எழுந்த சர்ச்சையால், இங்கிலாந்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான பழமைவாத கட்சியின், (Conservative Party) முன்னைய பிரதமரான திரேசா மே அம்மையார் பதவியிழக்க, கடந்த 2019டிசம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்ட பொரிஸ் ஜோன்சன் வெற்றியீட்டி பிரதமரானார்.
"ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியே தீருவோம்" (Get Brexit Done) என்கிற ஒற்றைக் கோசத்துடன் பிரதமராகிய இவர், இன்று "பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியே ஆக வேண்டும்" (Get Exit Done) என்கிற நாட்டு மக்களின் கோசம் பொது வெளியில் கிளம்பும் அளவுக்கு கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.
கோவிட் தொற்று முடக்கநிலை (Lock down) கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில் பொரிஸ் ஜோன்சனும் அவரது ஊழியர்களும் முடக்க நிலை விதிகளை மீறி பெருவிருந்தொன்றை பிரதமர் அலுவலகத்தில் நடாத்தினார்கள் என்கிற, வெளியாகாத உண்மை நாட்டின் முக்கிய உளவு ஊடகங்கள் சிலவற்றால் காட்சி வடிவில் வெளிக்கொணரப் பட்டதும், இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு விருந்தை நடாத்திய அவரது ஊழியர்கள் பதவி விலகியும் அவர் எதனையும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவர் மீதான மக்கள் வெறுப்பின் ஆரம்பமாக கருதப்படுகிறது.
கொவிட் நடைமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் நடந்த அந்த மதுபான விருந்தில் கலந்து கொண்டதை ஆரம்பத்தில் மறுத்த ஜோன்சன் அது தொடர்பான காணொளிகள் வெளியான பின்னர் அது ஒரு விருந்து அல்ல, அவசர அரச கலந்துரையாடல் என தெரிவித்து அது தொடர்பில் தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்தார்.
மன்னிப்பு கோரிய பிரதமர் அது தொடர்பில் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளாமல் வழமைபோல தனது கடமைகளில் கவனம் செலுத்தி வருவது பிரித்தானிய அரசியல் அரங்கில் அவர் மீதான வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மன்னிப்பு பயனற்றது என்று அதனை நிகாரித்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் (Keir Rodney Starmer),பலமாத ஏமாறறுக்குப் பின்னர் அதுவும் விருந்து தொடர்பான காணொளிகள் வெளிவந்த பின்னரான மன்னிப்பு வஞ்சம் நிறைந்தது என கேலி செய்தார்.
பொதுமக்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பது, இறுதிச் சடங்குகள் உட்பட சிறிய சமூக ஒன்றுகூடல்கள் போன்ற அனைத்தும் தடை செய்யப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. மேலும் அந்த நேரத்தில் விதிகளை மீறுபவர்களுக்கு பெரும் அபராதம் விதித்த போலீசார் விதிகளை மீறிய பலரை கைது செய்து நீதிமன்ற காவலிலும் அடைத்தனர்.
தற்போது லண்டனின் பெருநகர காவல்துறை இந்த மே 2020விருந்து, அதனை ஒட்டிய கூட்டங்கள் தொடர்பில் அமைச்சரவை அலுவலகத்துடன தொடர்பு கொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் தீவிரமான குற்றவியல் விசாரணைக்கான சாத்தியங்களை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கடுமையான சட்டங்களை அறிவித்து மக்களை வீட்டினுள் முடங்க வைத்துவிட்டு விதிமுறைகளை மீறி பொரிஸ் ஜோன்சன் நடாத்திய விருந்து, அதை ஒட்டிய மதுபான கேளிக்கைகள் தொடர்பில், அவர் மீதான பலத்த விமர்சனைங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவர் பிரதமர் பதவியில் தொடர்ந்து இருப்பது தவறு என்கிற அபிப்பிராயம் அவரது கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் மத்தியிலேயே பரபலாக பரவ ஆரம்பித்து அந்த எதிர்ப்பலையின் வேகம் படிப்படியாக அதிகரித்து இன்று உச்சம் அடைந்துள்ளது.
பிரதமரின் மாளிகையான டவுனிங் ஸ்ட்ரீட் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை பிரதமர் போரிஸ் ஜோன்சனின் உதவியாளர் வரவழைத்ததாகவும் 2020ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்த விருந்தில் பிரதமரும் அவரது துணைவியாரும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதே காலப்பகுதியில் அமரத்துவம் அடைந்த பிரித்தானிய மகாராணியார் எலிசபெத் அம்மையாரின் கணவர் இளவரசர் எடின்பரோ பிலிப்ஸ் கோகனின் இறுதிசடங்குகள் கூட உள்ளிருப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தனக்கு எதிரான கருத்துகளை முன்னிலைப்படுத்தும் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை பதவி விலகுமாறு வெளியான பொரிஸ் ஜோன்சனின் அறிவிப்பு, சர்ச்சையை மேலும் அதிகரித்து, அதன் வெளிப்பாடாக அவரது கட்சியைச் சேர்ந்த வட-இங்கிலாந்தின்
Bury South பகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் வேக்ஃபோர்ட்; (Christian Wakeford)அவர்கள், பிரதான எதிர்க்கட்சியான தொழில்கட்சியில் சேரப்போவதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 'நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத ஒரு பிரதமரைக் கொண்ட அரசாங்கத்தை என்னால் இனி ஆதரிக்க முடியாது' என்று அரசில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த கிறிஸ்டியன் வேக்ஃபோர்ட் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொரிஸ் ஜோன்சனுக்கு செக் மேட் (Checkmate) வைக்கப்பட்டுள்ளது என மற்றொரு கோன்சர்வேற்றிவ் உறுப்பினர் பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார்.
சர்ச்சைக்குரிய இந்த விருந்து நடாத்தப்பட்ட அப்போதைய உள்ளிருப்பு காலப்பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி டவுனிங் தெருவில் மேலும் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவை தொடர்பில் பொதுமக்களின் கோபம் அதிகரித்துள்ளதாகவும் இதனால் பிரதமருக்கு எதிரான நம்பிககை வாக்கெடுப்பு ஒன்று நடாத்தப்படவேண்டும் எனவும் சில கொன்சர்வேட்டிவ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
பழமைவாத (conservative) விதிகளின்படி, அத்தகைய வாக்கெடுப்பு ஒன்று நடைபெற வேண்டுமானால், 54நாடாளமன்ற உறுப்பினர்கள் தங்கள் குழுவின் தலைவருக்கு இது தொடர்பான வாக்குச் சீட்டு கோரி, விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பழமைவாத அரசியல்வாதிகள் சிலர் பொரிஸ் ஜோன்சன் மீதான இந்த வாக்கெடுப்பை விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பலர் இந்த விருந்து தொடர்பில் தீர விசாரித்து உண்மையை நிலையை வெளிக்கொணரவென பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரியான சூ கிரே அம்மையாரின் விசாரணை அறிக்கை வெளிவருவதற்காக காத்திருக்கிறார்கள் என தெரிவிக்கப் படுகிறது.
நம்பிக்கை வாக்கெடுப்பொன்று நடாத்தப்பட்டு அதில் ஜோன்சன் தோல்வியடைந்தால், அது நாட்டினதும், கட்சியினதும் தலைமைத்துவத்துக்கு சவாலாகவே அமையும்.
அவருக்குப் பதிலாக யார் பிரதமராக வருவார் என்பதில் பல பிணக்குகள் ஏற்பட்டாலும் இயல்பாகவே கட்சியின் முன்னணியாளர்களான கருவூலத்தின் ; (Treasury) அதிபர் ரிஷி சுனக், மற்றும் வெளியுறவுச் செயலர் லிஸ்ட்ரஸ் ஆகியோரின் பெயர்கள் முன்னணி பெறுகின்றன. பிரெக்சிட்டை நடைமுறைப்படுத்தியே தீருவேன் என்கிற உறுதிமொழியுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்த ஜோன்சனின் பதவியை கேள்விக்குறியாக்கும் இந்த நிலைமை ஐரோப்பிய ஒன்றிய வெளியற்றத்திற்கு ஆதரவான சக்திகளை பெரும் கவலையடைய வைத்துள்ளது. எது எப்படியோ உலகின் பல நாடுகளை கட்டி ஆண்ட பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் இன்றைய எதிர்காலம் கேள்விக்குறியுடனே தொடரப் போகிறதா...? பொரிஸ் ஜோன்சன் தனது தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று புதிய பிரதமருக்கு வழிவிடப்போகிறாரா...? மற்றொரு தேர்தலை எதிர்கொள்ளப் போகிறதா நாடு...? தொடரும் நாட்கள் பதில் சொல்லப் போகும் கேள்விகளே இவை.
கோவை நந்தன்