சர்வதேச அரசியலில் ரஷ்ய - உக்ரைன் விவகாரமே முதன்மையானதாக காணப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுச் செயலாளரான அந்தோனியோ பிளிங்டனின் உக்ரைனுக்கான விஜயம் அதிக இராணுவமுக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யத் துருப்புக்கள் உக்ரையின்எல்லையில் குவிக்கப்பட்டதிலிருந்துஆரம்பித்த நெருக்கடி நேட்டோ அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எனவிரிவடைந்து செல்கிறது.
நேட்டோவின் விஸ்தரிப்பு மத்திய ஆசிய நாடுகளையும் ஈரோசிய பிராந்தியத்தையும் நோக்கியதாக நகரும் நிலையை தடுக்கும் நோக்குடனேயே ரஷ்யாவின் இராணுவ நகர்வுகள் முக்கியமானதாக மாறியுள்ளன. அது மட்டுமன்றி அமெரிக்க ஆட்சித்துறையில் ஏற்பட்ட மாற்றமும் அந்த அணியின் இந்தோ - பசுபிக்கை நோக்கிய நகர்வுகளையும் கருத்தில் கொண்டு ரஷ்யா இராணுவ நடவடிக்கையை உபாயமாக கையாள ஆரம்பித்துள்ளது. இக்கட்டுரையும் ரஷ்ய - உக்ரைன் போரை அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகள் தூண்டுகின்றனவா என்பதை தேடுவதாக அமையவுள்ளது.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளரது உக்ரையின் விஜயம் அரசியல் பொருளாதார இராணுவ ரீதியில் அதிக முக்கியத்துவம் உடையதாக உள்ளது. குறிப்பாக கடந்த 18.01.2022உக்ரைன் விஜயத்திற்கு முன்பாக ஜேர்மனி பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஐரோப்பிய வல்லரசு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பெர்லினில் உரையாடினார். அவரது உக்ரைன் விஜயத்தைப்பற்றி அமெரிக்க வெளியுறவு துறையின் பேச்சாளர் நீட் பிறின்ஸ் குறிப்பிடும் போது, உக்ரையின் இறைமையினையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது என்றும் நான்கு வழி உரையாடலை ஐரோப்பிய வல்லரசுகளுடன் அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நீட் குறிப்பிடும் போது, மேற்படி நான்கு வல்லரசுகளும் ரஷ்யா மீது பாரிய விளைவுகளையும் பொருளாதார தாக்கங்களையும் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடப் போவதாகவும் அதற்கான உரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிற்றோ குலிபா ஊடகங்களை சந்தித்து உரையாடிய போது இரு நாட்டுக்குமான நெருக்கத்தை உணர முடிந்தது. அது மட்டுமன்றி இரு நாட்டு வெளியுறவு தரப்பினரது உரையாடலும் நான்கு வழி பேச்சுக்களும் அதிக இராஜதந்திர நகர்வாக அமைந்தாலும் அடிப்படையில் ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிப்பதாகவும் போருக்கான தூண்டலை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ள இதனை விரிவாக நோக்குவது அவசியமானது.
உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் தெரிவிக்கும்போது அமெரிக்காவுடனான உறவென்பது வெறும் இராஜதந்திர உறவு மட்டும் கிடையாது அதனையும் கடந்த நட்புறவின் அடிப்படையோடு பாதுகாப்பு விடயங்களில் அதிக நெருக்கத்தைக் கொண்டது எனத் தெரிவித்தார். அது மட்டுமன்றி இரு தரப்பும் உரையாடிய முக்கிய விடயமாக பாதுகாப்பு நிலைமையுடன் உக்ரைனின் எல்லைப்பகுதியான டொன்பாஸ்ஸை (Donbas) தற்காலிகமாக ரஷ்யா கைப்பற்றியுள்ளதை பற்றியதாகவே அமைந்துள்ளது என்றார்.
ரஷ்யா 2014ஆண்டு முதலே உக்ரைனுக்கு எதிரான போரை ஆரம்பித்துவிட்டது. ரஷ்யாவின் பிரதான நோக்கம் ரஷ்யக் கூட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். அவ்வாறாயின் உக்ரைன் என்றொரு நாடு இனி இருப்பதற்கான வாய்ப்பில்லை என்றார். ஆனால் உக்ரைன் 2014காலத்தைப் போன்றல்ல தற்போது உக்ரைன் வலுவாக உள்ளது. உக்ரைனிடம் வலுவான இராணுவம் உள்ளது. உக்ரைனிடம் வலுவான இராஜதந்திரமும் உள்ளது. வலுவான பங்காளிகள் உள்ளனர். அனைத்து அபாயங்களையும் புரிந்துள்ள போதிலும் இத்தகைய இக்கட்டான காலத்தை கடந்து செல்ல உக்ரைனால் முடியும் என்றார்.
அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் குறிப்பிடும் போது இரு நாட்டுக்குமான பாதுகாப்பு உறவினை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்காவும் நேட்டோவும் ஈடுபட்டுள்ளன என்கிறார். உக்ரைனின் இறைமையும் ஒருமைப்பாடும் பாதுகாக்கப்படுவதோடு ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை பெரியளவில் அமுல்படுத்தும் உத்தியை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஐரோப்பிய யூனியன் ஜி-7நாடுகள் மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை அமுல்படுத்தப் போவதாகவும் அதற்கான தயார்படுத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் பிளிங்டன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடன் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.
மூன்றாவது உக்ரைனுக்குள் ரஷ்யா நுழையும் என தாம் கருதுவதாக அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார். புட்டின் தொடர்ந்து கருத்துக் கூறும்போது அவர் உள்ளே நுழைவார் என்பது என் கணிப்பு அவர் ஏதாவது செய்தாக வேண்டியுள்ளது என்றார். அதே கருத்தை கடந்த 15.01.2022ஜெனீவாவில் ரஷ்யத் தரப்புடனான இராஜதந்திர உரையாடலின் பின்னர் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் பிளிங்டன் 'ரஷ்யா மிகக் குறுகிய அறிவித்தலில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தக் கூடும்" எனத் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஊடகங்களும் புலனாய்வாளர்களும் அரசியல் தலைமைகளும் அதிகாரிகளும் கருதுகின்றனர். ஆனால் ரஷ்ய ஜனாதிபதி பற்றிய மதிப்பீட்டை அமெரிக்கா சரியாக செய்துள்ளதா என்ற கேள்வியும் அத்தகைய தாக்குதலை மறைமுகமாக அமெரிக்கா விரும்புகிறதா என்பதையும் ஜோபைடனின் கருத்து உறுதிப்படுத்துகிறது. பைடனும் பிளிங்டனும் உக்ரைனின் இராணுவத்தை வலுவாக்குவதுடன் ரஷ்யாவுக்கான நெருக்கடியை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளை தூண்டுவதையும் காணமுடிகிறது.
அது மட்டுமல்ல; ஐரோப்பாவின் நடவடிக்கையை பிளிங்டன் நோர்மண்டித தரையிறக்கத்துடன் ஒப்பிட்டுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏறக்குறைய ஐரோப்பாவை ஒரு உலகளாவிய யுத்தத்திற்கு தயாராக்குவது போலவே அமெரிக்கத் தரப்பின் நடவடிக்கைகள் காணப்படுகிறது.
நான்காவதாக ரஷ்யாவைப் பொறுத்தவரை உக்ரைனுக்கு எதிரான போரை ஆரம்பித்துள்ளதாகவே தெரிகிறது. அதாவது அதன் நகர்வுகளும் படையிறக்கமும் எல்லையில் குவிக்கப்படும் ஆயுததளபாடங்களது திறனையும் அவதானிக்கும் போது முழு நீளப் போருக்கு ரஷ்யா தயாராகிவிட்டதை காட்டுகிறது. அதே நேரம் கிழக்கு ஐரோப்பாவுக்குள்ளும் மத்திய ஆசியக் குடியரக்குள்ளும் பால்கன் நாடுகளுக்குள்ளும் அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோவின தலையீடு அதிகரித்துள்ளதென்பதை உணர்கிறது.
அது மட்டுமல்ல, பைடன் போன்ற தலைமைகளதும் குடியரசுக் கட்சி அல்லாத சூழலிலும் ஒரு போரை மேற்கொள்ளலாம் என்றே ரஷ்யாவின் ஆளும் தரப்பு கருதுகிறது. அவ்வகைப் போரைத் தொடக்கினால் பாரிய இழப்பின்றி நிகழ்த்தி முடிக்க முடியும் என கருதும் ரஷ்ய மறுபக்கத்தில் படையையும் ஆயுத தளபாடங்களையும் எல்லையில் குவித்துவிட்டு இலகுவாக நேட்டோவையும் ஐரோப்பாவையும் கையாளலாம் எனக் கணக்குப் போட்டு செயல்படுவதாகவும் தெரிகிறது. ரஷ்யாவைப் பொறுத்தவரை போருக்கு போவதை விடுத்து போருக்கான கொதிநிலையை வைத்துக்கொண்டு அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள முடியுமொன கருதுகிறது. இயலாத சூழலில் போரை தெரிவாகக் கொள்ள புட்டின் திட்டமிடுவதனைக் காணமுடிகிறது.
ஐந்தாவது, மேற்குலகத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவை முழு நீள போருக்குள் இழுப்பதன் மூலம் அதன் பொருளாதாரத்தை சிதைத்து ரஷ்யாவின் உலகளாவிய அணுகுமுறையை கையாளலாம் என்றொரு கருத்து ஐரோப்பிய அரசியலில் உண்டு. அத்துடன் சீனாவுடனான கூட்டை தகர்ப்பதன் மூலம் சீனாவை தனிமைப்படுத்த முடியுமொனவும் கருதுகின்றது. ரஷ்யாவின் உலகளாவிய கூட்டுக்களையும் அவற்றின் பலத்தையும் முடிவுக்கு கொண்டுவர மேற்குலகம் முனைகிறது. அதாவது ஈரான், வடகொரியா, சிரியா, துருக்கி போன்ற நாடுகளின் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பினை முடிவுக்கு கொண்டுவருவதுடன் அந்த நாடுகள் மீதான ஆதிக்கத்தை செலுத்த முடியுமென மேற்குலகம் கருதுகிறது.
எனவே அமெரிக்கா உட்பட்ட நேட்டோ தரப்புக்கு ரஷ்ய - உக்ரைன் போர் அவசியமானதாக உள்ளது. அத்தகைய போர் ஏற்படுவதன் மூலம் ரஷ்யாவை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாது சீனாவையும் மேற்குக்கு எதிரான அணியையும் முடிவுக்கு கொண்டுவர முடியும். அதே நேரம், இப்போரை இரு நாட்டுக்குமான போராக கையாள்வதைக் கடந்து நேட்டோவின் விஸ்தரிப்பினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் ரஷ்யா நகர்கின்றது. ரஷ்யாவுக்கு இப்போர் அவசியமானதாக காணப்பட்டாலும் அதன் விளைவு நேட்டோ விஸ்தரிப்பினை முடிவிக்கு கொண்டுவருவதுடன் ரஷ்யாவின் விஸ்தரிப்பையும் அதன் விளிம்பு மற்றும் மைய நிலங்களைப் பாதுகாப்பதாக அமைய வேண்டும். அதற்கான நகர்வாகவே போரை ரஷ்ய தெரிவாகக் கொள்ளும். ஆனால் அதற்கு முன்பே போரை நிகழ்த்தி அதில் ரஷ்யாவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே மேற்குலகத்தின் திட்மிடலாக அமைந்துள்ளது.
கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்