![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/30/a25.jpg?itok=O67Gl1CI)
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஒரு தனிநாடாகப் பிரிந்தபோது பஞ்சாப் இரண்டாகப் பிரிந்தது. அதேபோல வங்காளமும் இரண்டானது. இச் சந்தர்ப்பத்தில் இந்திய பிரதேசம் மற்றும் பாகிஸ்தான் பகுதி என இரு பக்கத்திலும் மிக மோசமானதும் கொடூரமானதுமான மத ரீதியான வன்முறைகள் அரங்கேறின. பிசாசுத்தனமான மதவெறி. முஸ்லிம்களுக்கு இந்துக்களை கண்டந் துண்டமாக வெட்டிச் சாய்க்க வேண்டுமென்றால் இந்துக்கள் இஸ்லாமியர்களைத் தேடி வீடுவீடாக வேட்டையாடினார்கள். வரலாற்றின் இந்த அசிங்கமான பக்கங்களைப் பற்றி நூல்கள், கதைகள், நாவல்கள் வெளிவந்துள்ளன. பிரபல ஆங்கில பத்திரிகையாளர் குஷ்வந்த் சிங் TRAIN TO PAKISTAN என்ற நாவலை, இந்த இனக்கலவரத்தை மையப்படுத்தியதாக எழுதினார்.
மனிதன் சக மனிதனை சாதி, மத, மொழி அடிப்படையில் பார்ப்பதும், வெறுப்பதும் அவனை அழித்து விட நினைப்பதும் தொன்றுதொட்டு நடைபெற்றுவந்த ஒன்றுதான். மன்னர் காலத்தில் இருந்து உலகெங்கும் நிகழ்ந்து வந்திருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முந்தைய உதாரணமாக அடோல்ஃப் ஹிட்லரைச் சொல்லலாம். யூதர் என்ற இனத்தையே பூண்டோடு ஒழித்துக் கட்டிவிட வேண்டும் எனச் செயல்பட்டவர் அவர். அவர்தான் இறுதியில் மறைந்தாரே தவிர யூதர்கள் மறையாமல் தழைத்தோங்கவே செய்தார்கள்.
இந்தியா – பாகிஸ்தானுக்கு வருவோமானால் இந்துக்களுக்கு இஸ்லாமியர் மேல் இருக்கும் கோபம் அல்லது வெறுப்பு, 500ஆண்டுகளாக தம்மை. அடிமைப்படுத்தி ஆண்டதோடு தம்மை தலையெடுக்க விடவில்லை என்பதாகவே இருக்கிறது. இது அடிப்படையான விஷயம். இந்த வெறுப்பின் மீது பல்வேறு வெறுப்புகளும், சம்பவங்களும் கட்டமைக்கப்பட்டன. பாகிஸ்தான் என்ற தனி இஸ்லாமிய நாட்டை இந்திய முஸ்லிம்கள் கோரியபோது இஸ்லாமிய வெறுப்புணர்வு வெடித்துக் கிளம்பியது. சுதந்திரம் பெற்றதும் வெள்ளைக்காரர்கள் திரும்பிப் போய் விடுவார்கள். அவர்கள் போனபின் இந்துக்களே இந்தியாவை ஆள்வார்கள். அவர்களின் அதிகாரத்தின் கீழ் இஸ்லாமியர்களால் சுதந்திரமாக வாழ முடியாது. எனவே இந்தியா சுதந்திரம் பெறும் போது இந்தியாவில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேறிச் சென்று புதிய நாடொன்றை தமக்கென கட்டி எழுப்பிக்கொள்ள வேண்டும் என இந்திய முஸ்லிம்களின் தலைவரான முகம்மதலி ஜின்னா கருதினார். இதை எதிர்த்த காந்தியிடமும் நேருஜியிடமும் அவர் ஒன்றைச் சொன்னார். உங்கள் இருவரையும் நான் நம்புகிறேன். ஆனால் உங்கள் காலத்தின் பின்னர் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர் நிலை என்னவாகும்? என்ற அவரது கேள்வி மகாத்மாவுக்கும் நேருஜிக்கும் சரியாகவே பட்டது.
இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து செல்ல வேண்டியதற்கான காரணங்கள் இவ்வாறு முன்வைக்கப்பட்டன. பாகிஸ்தானும் பிரிந்தது. ஜின்னாவின் தலைமையில் ஒரு ஜனநாயக நாடாக அது மலர்ந்தது உண்மையானாலும் ஜின்னாவின் மரணத்தின் பின்னர் அங்கே ஜனநாயகம் தொலைந்து போனது. அவ்வப்போது ஜனநாயக ஆட்சி தூசுதட்டி எடுக்கப்படுவதும் விரைவிலேயே தொலைந்து போவதும் பாகிஸ்தானில் வாடிக்கையான விஷயம்.
பாகிஸ்தான் பிரிந்த போது இந்தியர்களிமும் பாகிஸ்தானியர்களிடமும் கிளர்ந்தெழுந்த வன்மமும் வன்முறையும் படிப்படியாகக் குறைந்து போயின. எனினும், இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே ஒரு அவநம்பிக்கையை தொடர்ந்து புகைய விடுவதில் அரசியல்வாதிகள் குறியாக இருப்பது போலவே பாகிஸ்தானிலும் ஒரு இந்திய வெறுப்பை அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் தொடர்ச்சியாக புகைய விட்டு வருகின்றன. அவர்களுக்கு அதில் ஒரு இலாபம் இருக்கிறது. இந்தியாவை காட்டிக் காட்டியே பாகிஸ்தானியர்களை கொம்புசீவி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்பது ஒரு பிரதான காரணம். பாகிஸ்தான் பிரிந்து சென்றபின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நான்கு யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் நட்பு நாடுகளாகவே தொடரலாம் என ஜின்னா கருதினாலும் அதற்கு வாய்ப்பு இல்லாமலேயே எதிர்ப்பு அரசியல் இரு நாடுகளிலும் வளர்க்கப்பட்டுவிட்டது.
பாகிஸ்தான் அரசியலானது இந்தியாவுக்கு எதிராக இரண்டு விஷயங்களை எடுத்துக் கொள்கிறது. முதலாவது, இந்தியா பாகிஸ்தானை எப்போது வேண்டுமானாலும் ஆக்கிரமிக்கலாம் என்ற பய உணர்வை மக்கள் மத்தியில் விதைப்பது. இரண்டாவது, இந்தியாவில் காணப்படும் மதங்களை விட இஸ்லாம் மிக உயர்வானது என்ற மனப்பான்மையை விதைப்பது. மூன்று முழு அளவிலான யுத்தங்கள் இரு நாடுகளுக்கு இடையே நடந்திருப்பதால் வெறுப்புணர்வை சுலபமாக விதைந்துவிடலாம் அல்லவா!
எனவே இந்தியாவுடனான நல்லுறவு என்பது பாகிஸ்தானுக்கு மேலோட்டமாக மட்டுமே சாத்தியமே தவிர உண்மையாக அல்ல. இந்திய எதிர்ப்பு அரசியல்தான் அங்கே விற்கப்பட முடியும். இந்தியாவைக் காட்டித்தான் மக்களை உசுப்பேற்றி வைக்க முடியும்.
இந்தியாவிலும் இஸ்லாமிய வெறுப்புணர்வு, குறிப்பாக வட இந்தியாவில், விரவிக் கிடக்கத்தான் செய்கிறது. குஜராத் கலவரத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் தொடர்ச்சியாக முஸ்லிம்களை குறிவைத்து தாக்குவது, வாழ்வதற்கான வாய்ப்புகளை மறித்து வைப்பது, இம்சைப்படுத்துவது போன்றவை இந்தியாவில் திட்டமிட்ட ரீதியாக இல்லை. ஆர்.எம்.எஸ். இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தை முன்வைத்து வந்தாலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இந்தியாவில் சகோதரர்கள்போல பழகி வருகின்றனர். மேலும் ஜனநாயக நாடு என்ற வகையில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக சட்ட சபைகளிலும், பாராளுமன்றத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் குரல் எழுப்ப இந்தியாவில் வாய்ப்புகள் உள்ளன. இஸ்லாமியர் அல்லாதோரே அங்கே இஸ்லாமியருக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இராணுவ ஆட்சியும் சில சமயம் இராணுவ கண்காணிப்புடனான ஜனநாயக ஆட்சியும் நிலவும் பாகிஸ்தானில் மக்கள் சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது.
கடந்த டிசம்பர் 20ஆம் திகதி கராச்சி பழைய நகரில் அமைந்திருக்கும் நாராயன் மந்திர் ஆலயத்தில் புகுந்த ஒருவர் சுத்தியலால் விக்கிரங்களுக்கு சேதம் விளைவித்தார். அங்கிருந்து இந்து பக்கதர்கள் அவரை சுற்றி வளைத்து பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் குறை வருமானம் பெறும் ஏழைகள் என்று சொல்லப்படுகிறது.
பஞ்சாப்பின் ரஹீம் யார்க்கான் மாவட்டத்தில் உள்ள போஸ் என்ற கிராமத்தில் உள்ள கணேசர் ஆலயத்தில் சுமார் 200குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த ஆலயம் நூறு வருடம் பழையது. இச் சம்பவத்தின் பின்னர் இந்து குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டனராம்.
கைபர் பிரதேச தேரி கிராமத்தில் நூறு வருடங்கள் பழைமையான ஸ்ரீபரமான்ஜி மஹாராஜா கோவிலில் 2020ஆம் வருடம் உட்பகுந்த ஒரு கூட்டம் ஆலயத்தை சேதப்படுத்திச் சென்றது. பின்னர் இவ்வாலயம் மீளவும் புதுப்பிக்கப்பட்டது.
வங்கதேசம் டாக்காவில் 600வருடங்கள் பழைமையான காளிகோவில் உள்ளது.
1971இந்தியா – பாகிஸ்தான் யுத்தத்தின்போது கிழக்கு பாகிஸ்தானாக அறியப்பட்ட அம்மண்ணில் இருந்த பாகிஸ்தான் இராணுவம் அக்கோவிலை இடித்தது. சமீபத்தில் வங்கதேச அரசாங்கம் அக்கோவிலை மீளவும் அமைத்தது. 2020ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் ஏழு இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடைபெற்றிருந்தது. இவை தவிர, பாகிஸ்தானில் மத நிந்தனைச் சட்டம் அமுலில் உள்ளது. மத நிந்தனையில் ஈடுபட்டதாக எவர் மீதாவது குற்றச்சாட்டு எழுந்தால் அவர் மீது மரண தண்டனை விதிக்கப்படலாம். இச்சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக பாகிஸ்தானில் ஒரு பரவலான குற்றச்சாட்டு உண்டு. மத நிந்தனை குற்றச்சாட்டில் ஒருவர் சிக்கி பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் மீதான அக்கறை நீங்குவதில்லை. அவரைத் தொடர்ந்தும் அதே கண்ணோட்டத்திலேயே சமூகம் பார்க்கத் தொடங்கும். பலர் அவ்வூரை விட்டே விலகி தூர இடங்களுக்குச் சென்றுவிடுவதுண்டு.
ஜனநாயக நாடு என்ற வகையிலும் சுதந்திரமாக இயங்குவது உறுதிசெய்யப்பட்டிருப்பதாலும் இந்தியாவில் இன, மத வெறுப்பூட்டல்கள் பெரிய அளவில் இல்லை. ஊடகங்களுக்கு உள்ள சுதந்திரமும் ஒரு காரணம் எனலாம். இன, மத மோதல்களில் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால் அதை எதிர்க்க பத்துப்பேர் இருப்பார்கள். இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்பது கவனிக்கத் தக்கது. ஆனால் பாகிஸ்தான் மதம் சார்ந்த ஒரு நாடு. அரசியலும் அங்கே மதம் சார்ந்ததாகவே காணப்படுகிறது. அங்கு கிறிஸ்தவர்கள் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
நாம் இங்கே குறிப்பிட்ட விரும்புவது, மதம் அல்லது மதம் சார்ந்த அழுத்தங்கள் கொண்ட நாடுகள் தொடர்ந்து பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைத்தான். அதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு நல்ல உதாரணம். இன, மத முரண்பாடுகள் தீர்க்கப்பட்ட எல்லா நாடுகளுமே பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றுள்ளன என்பதை மறக்கக் கூடாது.
காளிங்கன்