![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/30/a15.jpg?itok=OCwJNZ4h)
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்தரப்புகளின் மத்தியில் தற்பொழுது அதிகம்பேசப்படும் விடயமாக 13வது திருத்தச் சட்டம்அமைந்துள்ளது. அதாவது, 1978ஆம் ஆண்டுஅரசியலமைப்பில் இந்தியாவின் அழுத்தத்தின்காரணமாக உள்ளடக்கப்பட்ட மாகாண சபை முறையைவலியுறுத்தும் 13வது திருத்தம் பற்றியே தமிழ் அரசியல்கட்சிகள் அதிக கவனம் செலுத்தியுள்ளன.
1987ஆம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நோக்கில் அரசியலமைப்புக்கு 13வது திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் அழுத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு இலங்கையின் மத்திய அரசு தலையசைத்தாலும், முழுமையான அதிகாரங்கள் எதுவும் இதுவரை பகிரப்படவில்லை. குறிப்பாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் உள்ளிட்ட அதிகாரங்களை முழுமையாகப் பகிர்ந்தளிக்கவில்லை என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த விடயம்.
அதேநேரம், 13வது திருத்தம் தொடர்பில் ஆரம்பம் தொட்டு தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றிருந்த காலப் பகுதியில் எல்.ரி.ரி.ஈ உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் மாகாணசபை முறையில் பெரிதாக நாட்டம் கொண்டிருக்கவில்லை. ஆயுதக் குழுக்கள் மாத்திரமன்றி அப்போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளும் அதில் பெரிதாக அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை.
இருந்தபோதும் பின்னைய நாட்களில் 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதில் அவை ஆர்வம் காட்டியிருந்தன. இவ்வாறான பின்னணியில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பில் பேச்சுக்கள் எழுகின்றன ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 13வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டது போன்று மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற ஒரு விடயம் அவ்வப்போது தலைதூக்கிச் செல்லும். குறிப்பாக தமிழ்க் கட்சிகளின் ஆதரவை பிரதான கட்சிகள் கோருகின்ற அநேகமான சந்தர்ப்பங்களில், அதிகாரப்பகிர்வு பற்றிய ஏதாவது ஒரு விடயம் உள்ளடங்கியிருக்கும்.
இருந்தாலும் மற்றுமொரு தேர்தல் வரும் வரை இதுபற்றி எவருக்கும் அக்கறை இருக்காது. மறுபக்கத்தில் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற விடயத்தில் இந்தியா உறுதியாக இருந்து வந்துள்ளது. புதுடில்லியில் ஆட்சிக்கு வரும் இந்திய மத்திய அரசாங்கம் எதுவாக இருந்தாலும் இது விடயத்தில் மாற்றுக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி அவர்கள் 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு தொடர்ந்தும் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் அபிலாைஷகளைப் பூர்த்தி செய்ய 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரி சில தமிழ்க் கட்சிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ரெலோ என அழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முயற்சியால் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திலும், பின்னர் கொழும்பிலும் சந்தித்த தமிழ்க் கட்சிகள் நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் இது விடயத்தில் இந்தியப் பிரதமருக்கு கடிதமொன்றைத் தயாரித்து அனுப்பி வைத்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளே இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைக் கடிதம் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
'பதின்மூன்றாம் சட்டத் திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், 1987முதல் அரசாங்கத்தின் சகல தரப்புகளாலும் தெளிவாக மேற்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை அமுல்படுத்துதல். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை பயன்படுத்தும் வகையில் தம் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் கண்ணியத்துடனும், சுயகௌரவத்துடனும், அமைதியாகவும் பாதுகாப்பாகவும், ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத நாட்டிற்குள் ஏற்படுத்தப்படும் அமைப்பில் வாழ்வதற்கு வழி செய்ய வேண்டும்' என்ற கோரிக்கை இந்தக் கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளே அதிகமாகக் காணப்படுகின்றன. பொதுவான ஆவணமொன்று தயாரிக்கப்பட்டிருந்தாலும் கூட்டமைப்பினருக்கிடையில் இது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதை நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அழைக்கப்படவில்லை. அதேநேரம், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் முதல் கூட்டங்களில் பங்கெடுத்திருந்தனர். அதன் பின்னர் கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இருந்தபோதும் அவர்கள் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பும் ஆவணத்தில் கைச்சாத்திடுவதிலிருந்து விலகிக் கொண்டனர். இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையிலேேய மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான எம்.ஏ.சுமந்திரன் கூட இந்த முயற்சிகளை ஆரம்பத்தில் விமர்சித்திருந்தார். '13வது திருத்தத்துடன் நிற்பதாயின் அதன் பின்னர் ஏன் இதுவரை பல உயிர்களை இழந்துள்ளோம். இப்பொழுதுபோய் 13வது திருத்தத்தை அமுல்படுத்த இந்தியாவிடம் கோரி கூட்டம் வைக்கின்றனர். 13வது திருத்தம் அடிப்படையிலேயே பழுதுபட்டது, இதனைத் திருத்த முடியாது என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். இப்படியான சூழ்நிலையில் நாம் சென்று 13வது திருத்தத்தைத் தா என்று கேட்பதா? 13வது திருத்தத்தில் முக்கியமான நல்ல விடயங்கள் இருக்கின்றன. இல்லையென்று நான் கூறவில்லை. மாகாணம் ஒரு அலகாக வந்தது, வடக்கு,கிழக்கை ஒரு அலகாக இயக்கக் கூடிய சாத்தியம், பொலிஸ் அதிகாரங்கள் ஓரளவுக்குக் கொடுக்கப்பட்டது. 13இல் உள்ள நல்ல விடயங்களை வீசுமாறு கூறவில்லை. அதற்காக 13தான் எங்களது அபிலாசை என தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. இதற்கும் அப்பால் செல்லவேண்டும் என இந்த அரசாங்கமே கூறியிருக்கும் நிலையில், நாங்களாகவே போய் இந்தப் படுகுழிக்குள் விழவேண்டிய தேவை இல்லை' என சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும் போது கூறியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் இந்தியாவின் அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்த முயற்சிக்கு வித்திட்ட ரெலோ ஆரம்பத்தில் தயாரித்திருந்த பொது ஆவணத்துக்கு ஏனைய கட்சிகள் இணக்கம் தெரிவித்திருக்கவில்லை. இதனால் இந்த ஆவணத்தை முழுமையாக மாற்றும் நிலை ஏற்பட்டது. பின்னர் நடைபெற்ற நீண்ட கலந்துரையாடல்களையடுத்தே தற்பொழுது ஆவணமொன்று தயாரிக்கப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த விடயத்தில் ஆரம்பம் முதல் பங்கெடுக்காத கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இம்முயற்சியை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
அதாவது புலிகளே ஏற்றுக் கொள்ளாத 13வது திருத்தத்தை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் இவர்கள் எவ்வாறு முழுமையாக அமுல்படுத்துமாறு கோருவார்கள் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது. கேள்வியெழுப்பியது மாத்திரமன்றி இதற்கு எதிரான பிரசாரத்திலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை மீது சீனா கொண்டிருக்கும் ஆதிக்கத்தை சமாளிக்கும் இந்தியாவின் காய்நகர்த்தல்களில் ஒன்றாக இந்த முயற்சி அமைந்துள்ளது.
இதில் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருப்பதாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குகின்றோம் எனக் கூறி பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்யக் கூடிய சமாளிப்பொன்றை வழங்கும் திரைமறைவிலான சதி இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 13வது திருத்தத்தை தும்புத்தடியால் கூடத் தொட மாட்டோம் என இரா.சம்பந்தன் முன்னொரு தடவை கூறியிருந்தார். தற்பொழுது 13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவுக்கு கடிதம் அனுப்புகின்றனர். இதில் மக்களை ஏமாற்றும் சதி உள்ளது என கஜேந்திரகுமார் தலைமையிலான கட்சி விமர்சித்து வருகிறது.
மறுபக்கத்தில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதைக் கூட அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் விரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறியுள்ளது. மாகாணசபை முறைமைய அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் ஏன் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்? கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முதலமைச்சர் பதவிக்குக் கூடப் போட்டியிட்டவர். இவ்வாறான நிலையில் அவர்கள் தற்பொழுது இரட்டை வேடம் போடுகின்றனர் என அவர்கள் மீது ஏனைய கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அரசியல் கட்சிகள் தமது அரசியல் செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு அவ்வப்போது இவ்வாறான வித்தைகளைக் காண்பிப்பது சாதாரணமாகும்.
உண்மையில், பூகோள அமைவிடம் சார்ந்து எப்பொழுதும் வெளிநாடுகளின் கண்களை உறுத்தும் வகையில் இலங்கை காணப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது காணப்படும் பொருளாதார பின்னடைவு என்ற விடயம் ஏனைய நாடுகளை இலங்கை மீது மேலும் தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புக்களை வழங்கியுள்ளன. இலங்கையுடன் நட்புப் பாராட்டுவதற்கும் உதவிகளை மேற்கொள்வதற்கும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போட்டிநிலையொன்று காணப்படுகின்றது.
இதற்கிடையில் யுகதனவி அனல்மின்நிலைய விவகாரத்தில் அமெரிக்காவும் இணைந்து கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் 13வது திருத்தம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு திடீர் ஞானோதயம் ஏற்பட்டது ஏன் என்றதொரு கேள்வியும் இங்கு எழத்தான் செய்கிறது.
பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுவாகவே அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், மாகாணசபைத் தேர்தலொன்று வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கில் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்ற விடயம் முன்வைக்கப்பட்டிருக்கலாம். தமிழ்க் கட்சிகள் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து செயற்படுவதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லையென்றாலும் இந்த இணைவு உண்மையில் மக்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர வெறும் தேர்தலுக்கான கூட்டாகவோ அல்லது வாக்கு வங்கிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு உத்தியாகவோ இருக்க முடியாது.
சம்யுக்தன்