ஜேர்மனியின் போக்கு ரஷ்யாவின் கனவை சாத்தியமாக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

ஜேர்மனியின் போக்கு ரஷ்யாவின் கனவை சாத்தியமாக்குமா?

உக்ரைன் விடயம் அமெரிக்க ரஷ்யாவுக்கிடையே இராஜதந்திரபோரை நிகழ்த்தி வருகிறது. இன்றைய சர்வதேச அரசியல் பரப்பினை இராஜதந்திர போரும் ஆயதப் போருக்கான தயாரிப்பும் முழுமையாக நிரப்பியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்நகர்வுகள் அமெரிக்கா தலைமையிலானமேற்கு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக உக்ரைனை மையப்படுத்தி இராணுவ குவிப்புக்களையும், பயிற்சிகளையும் திட்டமிட்டு நகர்த்திவருகின்றார். அதற்கு போட்டியாகஅமெரிக்கா ஐரோப்பிய நாடுகளைபலப்படுத்துவதற்கான இராஜதந்திரநடவடிக்கைகளையும் இராணுவ ஆயுததளபாடக் குவிப்புகளையும் அதிகப்படுத்திவருகின்றது. அமெரிக்க ஜனாதிபதி பைடன்புட்டினுக்கு எதிரான தனிப்பட்ட தடைகள்பற்றியும் ரஷ்யாவிற்கு எதிரானபொருளாதார தடைகள் பற்றியும்உரையாடல்களையும் முன்னெடுத்துவருகிறார். இக்கட்டுரை அமெரிக்க-ரஷ்ய மோதல் போக்கினையும் ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில் ஐரோப்பியநாடுகளுக்குள் ஏற்பட்டுவரும் அண்மையபோக்குகளையும்; தேடுவதாகஉருவாக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்றாக உக்ரைன்  -ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புவிசார் அரசியல் பிரதேசமாகக் காணப்படுகிறது. மொழி கலாசார அடையாளத்தில் ருசியப் பண்பாட்டை அதிகம் கொண்டதாக உக்ரையின் பிரதேசம் விளங்குவதனால் ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகின்றது. 2014ஆம் ஆண்டில் உக்ரைனின் கிரிமியா பகுதியை ஆக்கிரமித்தபோதும் தன்னுடைய அங்கமாகவே மக்களின் பண்பாட்டு மற்றும் நிலத்தொடர்ச்சி அடையாளங்களை முன்னிறுத்தியது ரஷ்யா அதேநேரம் உக்ரைனின் மற்றொரு சிறப்பியல்பாக அந்த நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் மேற்கு ஐரோப்பிய கலாசாரத்தோடு இணைந்தவர்களாய் காணப்படுகின்றனர்;. அத்துடன் உக்ரைன் மக்கள் தடையற்ற பொருளாதாரம் அதிக ஜனநாயக உரிமைகள் மேற்கத்தேய நாடுகளின் நுகர்வுக்கலாசாரம் பொழுதுபோக்குகளால் ஈர்க்கப்பட்டவர்களாய் உள்ளனர். அம்மக்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாடான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்ட மேற்குசார் தாராள ஜனநாயக முறைமைக்குள் வாழ அதிக நாட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே உக்ரைன் அரசாங்கமும் நேட்டோவுடன் இணைவதற்கான தனது விருப்பை வெளிப்படுத்தியது. ஆனால் அதன் புவிசார் அரசியலானது ரஷ்யாவை அதிகம் மையப்படுத்தியதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அரணாகவும் காணப்படுகிறது.

ரஷ்யா தனது நிலமாக கருதும் உக்ரைன் அமெரிக்கா தலையிலான நேட்டோ பாதுகாப்பு கூட்டினுள் இணைந்து கொள்வதனை முழுமையாக நிராகரித்து வருகின்றது. இதனை மையப்படுத்தியே கடந்த ஆண்டு(2021) இறுதியிலிருந்து ரஷ்ய-உக்ரைன் எல்லைப்பகுதியில் ரஷ்ய இராணுவ பிரசன்னத்தை அதிகரித்;து வருகிறது.  ரஷ்ய -உக்ரைன் பதட்டமானது நேட்டோவை மையப்படுத்தியே அமெரிக்க- ரஷ்ய மோதலாக சர்வதேச அரசியல் மாறுகிறது. குறிப்பாக ரஷ்யா முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்த  அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் அந்தோனி பிளிங்கன் ரஷ்யாவுக்காக நேட்டோவின் கொள்கைகளில் ஒருபோதும் மாற்றம் செய்யப்படாது. உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் குறித்தும் அந்த நாட்டுடன் சமரம் பேச முடியாது” எனக்குறிப்பிட்டது. அவ்வாறே நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டால்டன்பர்க் “உக்ரைன் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைப்பதற்காக ரஷ்யாவிற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கைக் கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது”; எனத்தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா நேட்டோ கூட்டை பலப்படுத்தும் வகையில் இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதனடிப்படையிலேயே அந்தோனி பிளிங்கன் கடந்த வாரம் உக்ரைன் சுவிஸர்லாந்து ஜேர்மனிக்கான இராஜதந்திர விஜயங்களை மேற்கொண்டு நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அரசியல் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐரோப்பா மற்;றும் நேட்டோவின் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் ஜனவரி-24(2022)அன்று இணையவழி சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். சந்திப்பின் நிறைவில் “நான் ஒரு மிக நல்ல சந்திப்பை மேற்கொண்டுள்ளேன். அனைத்து ஐரோப்பிய தலைவர்களுடனும் ஒருமித்த கருத்து காணப்படுகிறது.” என செய்தியாளர்களிடம் பைடன் தெரிவித்துள்ளார்.

எனினும் ஐரோப்பா நாடுகளுடனான அமெரிக்காவின் இராஜதந்திர நகர்வுகளில் சந்தேகப் பார்வைகளே சர்வதேச அரசியல் பரப்பில் நிலவுகிறது. வர்த்தகத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டுவரும் புதிய உலக ஒழுங்கில் ஐரோப்பா நாடுகளுடன் ரஷ்யா கொண்டுள்ள பொருளாதார உறவுகள் ஐரோப்பா நாடுகளை ஒன்றிணைத்து பலமான அணியைக் கட்டமைக்க முனையும் அமெரிக்கா அதிக நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனை விரிவாக நோக்குதல் அவசியமாகிறது.

முதலாவது பிரான்ஸ் ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே அமெரிக்கா தலைமையிலான நேட்டோவை தவிர்த்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கென தனித்துவமான பாதுகாப்பு கூட்டை உருவாக்க வேண்டுமென்ற உரையாடல் சமீப காலமாக முதன்மை பெறுகிறது. குறிப்பாக அமெரிக்கா-இங்கிலாந்து-அவுஸ்ரேலியா இணைந்து மேற்கொண்ட ஆக்கஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரான்ஸிற்கு அமெரிக்கா துரோகமிழைத்ததாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கடுமையாக சாடியிருந்தன. அதுமட்டுமன்றி ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு (2021) ஆகஸ்டில் முழுமையாக வெளியேறியமை தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் அதிருப்தி காணப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கடந்த ஆண்டு செப்டெம்பர் ஐரோப்பிய பாராளுமன்ற உரையில் “பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் அதன் இராணுவத் திறனை அதிகரிக்க முற்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய இராணுவப் படைகள் தீர்வின் ஒரு பகுதியாக இருக்கும்” என்று தான் நம்புவதாக கூறியுள்ளார். பிரான்ஸ் நடப்பாண்டில் (2022) ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்தும்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இரண்டு ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பில் அமெரிக்கா தலைமையில் நேட்டோவின் நகர்வுகளுக்கு புறம்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் தனித்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனும் ரஷ்யாவும் ஜனவரி- 26 (2022) பாரிஸில் உள்ள எலிஸி அரண்மனையில் ஜேர்மனி மற்றும் பிரான்சின் பிரதிநிதிகளுடன் நோர்மண்டி வடிவத்தின் கீழ் பேச்சுவார்த்தை நடத்தினர். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். உக்ரைனின் எல்லையில் மாஸ்கோவின் சமீபத்திய இராணுவக் கட்டமைவு தொடங்கியதிலிருந்து இதுவே முதல் முறையாகும். பாரிசில் எட்டு மணிநேர பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் ரஷ்யா உக்ரைன் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் நிபந்தனையற்ற போர்நிறுத்த உடன்படிக்கையை ஆதரித்தனர். செப்டம்பர்-2014இல் கையெழுத்திடப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தமும் கிழக்கு உக்ரைனில் சண்டையை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் தோல்வியடைந்தது. எவ்வாறாயினும் பிரான்ஸ் ஜேர்மனி அமெரிக்காவை தவிர்த்து ரஷ்யா -உக்ரைன் விவகாரத்தை கையாள எத்தனிக்கின்றது என்பது உறுதியாகிறது.

மூன்றாவது ஜேர்மனியின் புதிய அரசாங்கம் ஜேர்மனி சுதேச தயாரிப்பான ஹோவிட்சர் பீரங்கிகளை உக்ரேனுக்கு மாற்ற நேட்டோ நட்பு நாடான எஸ்டோனியாவை தடுத்துள்ளது. அதே நேரத்தில் ஜேர்மனியின் கடற்படைத் தலைவர் கே-அச்சிம் ஷான்பாக் கிரிமியா உக்ரைனுக்குத் திரும்பாது என்றும் ரஷ்யா  ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியாதைக்குரியவர் என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல அவர் தனது பதவியையே இராஜினாமா செய்துள்ளார். எனவே இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஜேர்மனி ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே முன்னெடுத்துவருகிறது. ஐரோப்பாவுடன் நெருக்கமான உறவை உருவாக்கத் திட்டமிடும் ரஷ்யா அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து அகற்றுவதற்கு முன்னர் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றும் உபாயத்தை முன்நிறுத்தியுள்ளது.

எனவே இரு தரப்புக்குமான போரை அதிகம் நோக்கிய நகர்வு காணப்படுவதுடன் இராஜதந்திர ரீதியான நடவடிக்கையும் நிகழ்ந்துவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி தொடர்ச்சியாக உக்ரையின் ஆளும் தரப்புடன் போரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரஷ்யா மீது மிரட்டலை விடு;க்கவும் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பதிலுக்கு முன்னாள் சோவியத் யூனியன் கனவுடன் தனது உத்திகளை வகைப்படுத்திவரும் ரஷ்யா ஜனாதிபதி ஏறக்குறை ஒரு போருக்கு தனது படைகளை தயாராக்கிவிட்டார். ஐரோப்பாவின் ஒத்துழைப்பு இல்லாத நிலை அமெரிக்காவுக்கு ஏற்படுமாயின் இந்த போரில் அதிக நெருக்கடியை அமெரிக்கா சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அதே நேரம் அமெரிக்காவின் கூட்டுபாதுகாப்பு இராணுவ பலவியூகம் ரஷ்யாவுக்கு அதிக பாதிப்பினை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ரஷ்யாவுக்குரிய புவிசார் அரசியல் பலமும் அமெரிக்க தலைமையிலான நோட்டோவுக்குரிய கூட்டுப் பாதுகாப்புப்பலமும் மோதலுக்கான இருப்பினை தீர்மானிக்க கூடியதாக உள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments