இளையோரின் ஏற்றத்திற்கான கம்பன் கழகத்தின் புதிய திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

இளையோரின் ஏற்றத்திற்கான கம்பன் கழகத்தின் புதிய திட்டம்

உலகம் தழுவி நம் ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆளுமை வளர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக நாம் எடுக்கத் தொடங்கியிருக்கும் புதிய முயற்சி பற்றி விளக்கம் அளிப்பதற்காக இக்கட்டுரையை வரைகிறேன்.

மூன்று தசாப்தங்களாக போரின் இன்னல்களுக்கு இடையில் வளர்ந்த எமது இளைய தலைமுறை, அதனால் பல பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கிறது. அப்பாதிப்புகளில் முக்கியமானதாய் நாம் கருதுவது ‘ஆளுமை’ இழப்பினையேயாம். இத்தனைப் பெரிய இன்னல் பாதையைக் கடந்து வந்த பின்னும்கூட நம் இளையோர், தம் அறிவாற்றலில் யாருக்கும் சோடை போகவில்லை. ஆனால், நிகழ்ந்த ஆளுமை இழப்பு என்பது அவர்கள் அடைந்திருக்க வேண்டிய உயர் நிலைகளை அடையமுடியாமல் ஆக்கியிருக்கிறது.

இதுபற்றி நானும் எனது கழக நண்பர்களும் பல காலமாக சிந்தித்து வருகிறோம். அதிகூடிய பரீட்சை சித்திபெற்ற மாணவனும் கூட, நம் மண்ணைத்தாண்டி தெற்கிற்குள் நுழைந்தால், அங்குள்ள மாணவர்களின் ஆளுமைக்கும், நிமிர்விற்கும் முன்னால் நின்று பிடிக்க முடியாமல் தளர்ந்து போகிறான். அதனால் அவன் கஷ்டப்பட்டு தேடிய தகுதிகளெல்லாம் ‘விழலுக்கிறைத்த நீராய்’ஆகி விடுகின்றன.

நாம் கூடி ஆராய்ந்தபோது இதற்கான இரண்டு காரணங்களை இனங்கண்டோம்.  முதலாவது, இந்நாட்டில் பயிலப்படும் மொழிகளில், தமிழ்மொழி தவிர்ந்த மற்றைய மொழிகளில் நம் இளையோர்க்கு ஏற்பட்டிருக்கும் பயிற்சியின்மை. இரண்டாவது, உயர் ஆளுமையாளர்களை சந்திக்கக் கிடைக்காத வாய்ப்பிழப்பு.

நம் மண்ணில் ஆளுமையாளர்கள் இல்லையா? என உடன் கேட்பீர்கள்.  முற்றாய் இல்லை என நான் சொல்லமாட்டேன்.  ஆனால் ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த உயர் கல்வியாளர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என்பவர்களின் ஆளுமைத்திறனோடு ஒப்பிடும்போது இன்றைய நம் சமூகத்தின் ஆளுமைத்திறன், பூச்சியத்தை அண்மித்ததாகவே இருக்கிறது. அதனால், இன்று நம் இளையோர் பதவிகளையும் பட்டங்களையும் மட்டுமே ஆளுமையாய் நினைந்து, ஏமாந்து, உயர் ஆளுமைத் தரிசனம் இன்றிக் கிடக்கின்றார்கள். 

தெற்கில் வாழ்ந்த இளையோரோ, போர்க்காலத்திலும் தனிமைப்படாது உலகத் தொடர்பைப் பேணி வந்தார்கள். அதனால் அவர்களது மொழித்திறனும் ஆளுமைத்திறனும் மிகவும் விருத்தியாகி இருக்கிறது. அவர்கள் ஆளுமைத் திறனில் முப்பதாண்டு முன்னால் பயணிக்க, நம் பிள்ளைகள் பின்னால் பயணித்தார்கள். காலம் செய்த கொடுமை இது! இதனால் அவர்களுக்கும் நம் பிள்ளைகளுக்கும் இடையிலான ஆளுமை வேறுபாடு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.

இந்த இடைவெளியை நிரப்பி நம்மவர்களின் ஆளுமையை வளர்ச்சியுறச் செய்து, பழையபடி மற்றவர்கள் நம் பிள்ளைகளின் நிமிர்வு கண்டு, வியக்கும் நிலைக்கு நம் சமூகத்தையும் நிமிரச் செய்யவேண்டும் என்பதற்காகவே எமது இந்தப் புதிய முயற்சியை நாம் தொடங்கியிருக்கிறோம்.

இன்று இத்தகைய ஆளுமைப் பயிற்சிக் களங்கள் பலராலும் பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன.  ஆனால் அவற்றிலெல்லாம் வெறும் வகுப்பு எடுக்கும் முயற்சியே செய்யப்படுகிறது. அதனால் பெரும்பயன் கிடைக்காது என்பது எம் கருத்து. அதனாற்றான், மொழிப்பயிற்சியையும் ஆளுமைத் திறனையும் செயல்முறையூடாக நம் இளைஞர்கள் பெறவேண்டும் என நாம் நினைந்தோம்.

அதற்காக, இலங்கையின் பிறபகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஆற்றல்மிக்க மொழியியல் அறிஞர்கள், ஆளுமையாளர்கள் ஆகியோருடன் நம் இளையோர்க்கான சங்கமத்தை உண்டாக்க வேண்டும் என முடிவு செய்தோம். அச்சங்கமத்தால், இலங்கையளவில் தேவைப்படும் சிங்கள மொழிப்பயிற்சியையும், உலக அளவில் தேவைப்படும் ஆங்கில மொழிப்பயிற்சியையும் இயல்பாக உருவாக்கலாம் என்றும் உயர் ஆளுமையாளர்களின் சங்கமத்தால் நம் பிள்ளைகளின் ஆளுமையை வளர்ச்சியுறச் செய்யலாம் என்றும் நாம் கருதினோம்.

அதனால், இயல்பாகவே ஆளுமைத்திறன்கொண்ட இளையோர் சிலரை இனம்கண்டு, அவர்களை வேற்று மொழியாளர்களுடனும், ஆளுமையாளர்களுடனும் ஒன்றாகத் தங்க வைத்து, மொழித்திறன், ஆளுமைத்திறன் ஆகியவற்றை  பயிலச்செய்ய வேண்டும் என்பது எங்களது முதற் திட்டமாய் இருக்கிறது. ஆங்கிலத்தை ஆங்கிலய ஆசிரியர்களுடனும், சிங்களத்தை அம்மொழிசார்ந்த ஆசிரியர்களுடனும் நாள்முழுதும் உடன் இருந்து செயல்முறையால் அவர்களைப்  பயிலச் செய்ய  வேண்டும் என நினைத்திருக்கிறோம்.

மொழிப்பயிற்சியை ஏற்படுத்தியபின்பு, ஆளுமைமிக்கவர்களை சந்திக்கவும், அவர்களோடு உடன் இருக்கவும் செய்து, அவர்களின் ஆளுமைத்திறனை நம் இளையோர் உள்வாங்கும்படியாகச் செய்யவேண்டும் என்பது எமது அடுத்த திட்டமாய் இருக்கிறது.  அதற்காக ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள், நிறுவனத்தலைவர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்திக்கச் செய்து, அதன்மூலம் நம் இளையோரின் ஆளுமைத்திறனை வளர்க்கத்தெடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கிறோம்.

இராணுவ உயரதிகாரிகளைச் சந்திக்க வைப்பதன் நோக்கம், நம் இளையோர்கள் அவர்களோடு நம் பிரச்சினைகளைப் பற்றி சமநிலையில் நின்றுபேசி, தீர்வு காணும் துணிவைப் பெறுவதற்காகவும் இராணுவத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகவுமேயாம். யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற ஹாட்லி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளில் அதிபராய் இருந்த பூரணம்பிள்ளை அவர்களே முன்பு ஒருதரம், மாணவர்களது ஆளுமை வளர்ச்சிக்கான இத்தகைய ஒரு முறையை எமக்குச் சொல்லியிருந்தார்.

அதுமட்டுமன்றி, நம் இளையோர்க்கு இத்தேசத்தில் வாழும் பிற மொழிச் சமூகங்கள், பிற மதங்கள் என்பவற்றைப் பற்றியும் ஆழ்ந்த புரிந்துணர்வை உண்டாக வேண்டும் என்பதற்காக, அத்தகைய இடங்களில் நம் இளையோரை நேரடியாகத் தொடர்புபடுத்தி அனுபவம் பெறச் செய்யவேண்டும் என்பதும் எம் எண்ணமாய் இருக்கிறது.

ஒரு சிறு தேசத்திற்குள் வாழ்ந்தாலும், நம்மவர்க்கு அருகில் இருக்கும் மதங்கள் பற்றியோ, அம்மதத்தாரின்; வழிபாட்டு முறைகள் பற்றியோ பெரும்பாலும் தெரிவதில்லை. அதுபோலவே அருகிருக்கும் வேற்று இன மக்களின் வாழ்க்கை முறை, உணவுமுறை, கலாசாரம், பண்பாடு என்பவை பற்றியும் நம்மவர்கள் தெரிந்திருப்பதில்லை.  இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால் நம் இளையோரிடம் பரந்த சிந்தனையும் மற்றைய சமூகங்களுடன் சமப்பட்டு இணைந்து வாழும் திறனும் தாமாக உண்டாகும். அதனால் நம் இளையோரின் ஆளுமை மிக வேகமாக வளரும்.  அது மட்டுமல்லாமல் நம் இனத்தினதும், மொழியினதும், மதத்தினதும் பெருமைகளையும் மற்றவர்க்கு உணர்த்துகிற வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டும். அதனால்தான் இப்பயிற்சியில் ஈடுபடப்போகும் இளையோரை மற்றைய இன, மத, மொழி மாணவர்களுடன் கலாசாரப் பரிவர்த்தனம் செய்யவேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளோம்.

இவையெல்லாம் எமது கனவுகள்! ஒரு காலத்தில் இலங்கை முழுவதிலுமாக தமிழினத்தார் கொண்டிருந்த ஆளுமைமிக்கத் தலைமைத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இத்திட்டங்களை நாம் வகுத்திருக்கிறோம்.  நடந்து முடிந்த போரையும் அதன் பாதிப்புக்களையும் சொல்லிச் சொல்லி, எவ்வளவு காலத்திற்குத்தான் எம் வாழ்க்கையை நாம் ஓட்டுவது? நிகழ்கால முயற்சியால், இறந்தகாலப் பாதிப்புக்களை நீக்கி வருங்காலத்திலேனும், நம் கைவிட்டு நழுவிப்போன வீரியத்தை நாம் மீட்டெடுக்கவேண்டாமா?  அதற்காகவே இலக்கிய முயற்சி எனும் எம் எல்லையைக் கடந்து இத்தகைய ஒரு பாரிய சமூகப்பணியை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறோம்.

மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கிளிநொச்சியில் அரசினால் எமக்குத் தரப்பட்ட ஒரு ஏக்கர் காணியில் கட்டட வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம்.  கழகத்திற்கான அலுவலகம், நூறு பேருக்கு மேற்பட்ட மாணவர்கள் தங்கக்கூடிய இருப்பிட வசதிகள், கருத்தரங்க மண்டபம், பிரார்த்தனை மண்டபம், விருந்தினர்கள் தங்குவதற்கான விடுதிகள், சமையல் கூடங்கள் முதலிய விடயங்களை உள்ளடக்கியதாக அக் கட்டத் தொகுதிகள் அமைந்திருக்கும்.

எங்களின் இம்முயற்சிக்கு கைகொடுக்க முன்வரவேண்டுமென இனப்பற்றுள்ள அனைவரையும் வேண்டி  நிற்கின்றோம்.

கம்பவாரிதி இ. ஜெயராஜ்

Comments