![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/01/30/a24.jpg?itok=AQHJ64Mv)
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்தசில ஆண்டுகளாகவே எல்லையில் தொடர்ந்துமோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டுவீரர்களும் எல்லையில் வீரர்களைக் குவித்துவருகின்றனர். அதிலும் கல்வான் பள்ளத்தாக்கில்கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நிலைமைமேலும் மோசமடைந்தது. இதனால் எல்லையில்பதற்றமான சூழல் தொடர்கின்றது.
ஆனாலும் மற்றொரு புறத்தில், எல்லையில் மீண்டும் அமைதியான சூழலை உருவாக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும், அமைதியான சூழல் திரும்பவில்லை. இந்தப் பேச்சுவார்த்தைகளில் எந்தவொரு சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை.
எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட அக்சாய் சின் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானங்கள், ஸ்ரீஜாப் வளாகத்தின் கிழக்கே பாங்கோங் த்சோவின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் குறித்து இந்திய இராணுவம் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியது. இருப்பினும் இதில் சீனா தரப்பில் இருந்து எந்தவொரு முறையான பதிலும் கிடைக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானங்களை ஏற்படுத்தி வருவதாகவும், சில பகுதிகளில் ஒட்டுமொத்த கிராமத்தையே உருவாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பாக எதிர்க் கட்சிகளும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தன. இருப்பினும், சீனா மேற்கொண்டு வரும் கட்டுமானங்கள் என்பது இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிகளை இந்தோ_ சீனா போர் சமயத்தில் சீனா ஆக்கிரமித்தவை ஆகும். இது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுறமிருக்க, இமயமலை பகுதியில் சர்ச்சைக்குரிய தங்கள் எல்லைப் பகுதியில் ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்குவதில் இந்தியாவும் சீனாவும் போட்டியிட்டுக் கொண்டுள்ளன. இந்தியாவின் அதிக உயரமான இடத்தில் உள்ள விமானத் தளத்திற்குச் செல்ல புதிய வீதி அமைக்கப்பட்டதுதான், கடந்த வருடம் ஜூன் மாதம் சீன இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலுக்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது. அந்த மோதலில் இந்திய வீரர்கள் குறைந்தது 20பேர் கொல்லப்பட்டனர்.
டார்புக்- ஷியோக்- தௌலத் பெக் ஓல்டி (DSDBO) வீதி 255கிலோ மீற்றர் (140மைல்) நீளம் கொண்டது. மலைப் பகுதிகள் வழியாக அமைந்துள்ள இந்த வீதி கடல்மட்டத்தில் இருந்து 5000மீற்றர் உயரத்தில் லடாக் பகுதியில் உள்ளது. சுமார் இரண்டு தசாப்த கால பணிகளுக்குப் பிறகு கடந்த ஆண்டில் இந்தப் பணி நிறைவு பெற்றது. இந்த வீதி மூலம் மோதல் ஏற்படும் காலத்தில் இராணுவத்தினரையும், அவர்களுக்குத் தேவையான சாதனங்கள், தளவாடங்களையும் அங்கு விரைவாகக் கொண்டு போய் சேர்க்க முடியும்.
தங்களுக்கு இடையிலான 3,500கிலோமீற்றர் நீளமான எல்லை குறித்து இரு நாடுகளுக்கு இடையில் ஒருபோதும் ஒருமித்த கருத்து இருந்தது கிடையாது. கரடுமுரடான, வாழத் தகுதியற்ற பகுதிகளில் பல இடங்களில், உலகின் மிகப் பெரிய இந்த இரு நாடுகளின் இராணுவத்தினரும் நேருக்கு நேர் எதிர்கொண்டு நிற்கிறார்கள்.
இரு நாடுகளையும் பிரிக்கும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை (எல்.ஏ.சி) ஒட்டி வீதிகள், ரயில் பாதைகள், விமானத் தளங்களை உருவாக்குவதில் இந்தியாவும், சீனாவும் நிறைய செலவு செய்திருக்கின்றன. அந்தப் பகுதியில் நவீன இராணுவத் தளவாட வசதிகளையும் அவை ஏற்படுத்தியுள்ளன.
DSDBO சாலை உள்பட இந்தியாவின் சமீபத்திய கட்டமைப்புப் பணிகள் சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் பல ஆண்டுகளாக சீனா தனது எல்லையில் கட்டமைப்புப் பணிகளை செய்து வருகிறது. தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, திட்டமிடப்பட்டு இந்த கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக இரு தரப்புகளுமே கருதுகின்றன. ஒரு பக்கத்தில் பெரிய ஒரு உள்கட்டமைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டால், மறு பக்கத்தில் கோபம் எழும் காரணத்தால் பதற்றம் உருவாகி வருகிறது.
தௌலத் பெக் ஓல்டியில் நீண்ட காலமாகவே இந்திய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. விமானத் தளம் மறு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, வீதிப் பணிகளை முடிப்பதற்கு முன்பு வரையில், அங்கிருக்கும் வீரர்களுக்கு ஹெலிெகாப்டர் மூலமாக, விண்ணில் இருந்து கீழே இறக்குவதன் மூலம் மட்டுமே அத்தியாவசிய தேவைகள் அளிக்கப்பட்டு வந்தன. அங்கிருந்து எதையும் அகற்ற முடியாது என்பதால்,'தளவாடங்களின் கல்லறையாக' அந்த விமானத் தளம் இருந்து வந்தது.
எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளை, எல்லைக்கு உள்புறத்தில் உள்ள இராணுவத்தினருக்கான விநியோக நிலையங்களுடன் இணைப்பதற்கான கூடுதல் வீதிகள் மற்றும் பாலங்கள் இப்போது உருவாக்கப்படுகின்றன. எனவே, ரோந்துப் பணியில் இருக்கும் இந்திய இராணுவத்தினர் இன்னும் முன்னேறிச் சென்று பணியில் ஈடுபட முடியும். சாதனங்களை முன்னே கொண்டு செல்ல முடியும்.
உலகின் மிக உயரமான தௌலத் பெக் ஓல்டி விமானதளத்தில் பெரிய விமானங்களை இந்தியா தரையிறக்கி வைத்துள்ளது. மோதல்கள் நடந்தபோதிலும், தன்னுடைய கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருப்போம் என இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் பகுதியில் சீன எல்லையை ஒட்டி பகுதிகளில் வீதிகளை உருவாக்க, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்துச் செல்கிறது இந்தியா.
பல ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், சீனாவுக்குச் சாதகமாக உள்ள வசதிகளுக்கு இணையாக தன்னுடைய வசதிகளையும் பெருக்கிக் கொள்வதற்கு இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்தப் பிராந்தியத்தில் பெருமளவில் வீதி மற்றும் ரயில்வே கட்டமைப்பு பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது.
உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த 73வீதிகள் மற்றும் 125பாலங்கள் உருவாக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் வேகமாக நடைபெறவில்லை. இதுவரையில் 35வீதிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டிபகர் - லிபுலேக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் டாம்ப்பிங் - யாங்க்ட்ஜே வீதிகள் அவற்றில் முக்கியமானவையாக உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் இன்னும் 11வீதிகளின் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் எல்லையை ஒட்டி அமையும் இந்தப் பாதைகள், கனரக இராணுவத் தளவாடங்களை அங்கு கொண்டு செல்ல இந்திய இராணுவத்துக்கு உதவிகரமாக இருக்கும்.
விமானப் போக்குவரத்து வசதிகளைப் பொறுத்த வரையில், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதிகளில் இந்தியாவுக்கு 25விமான தளங்கள் உள்ளன. இப்போது நவீன தரையிறங்கல் தளங்களை விரிவுபடுத்துவதில் அண்மைக் காலமாக இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.
விமானப் படை பலத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவுக்கு ஓரளவுக்கு சாதகமான நிலைமை இருப்பதாக இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் தங்களுடைய சிறந்த போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி, இந்திய எல்லைப் பகுதிக்கு அருகே எவ்வளவு விரைவாக தங்கள் இராணுவத்தினரை குவிக்க முடிந்தது என்பதை சீன அரசு ஊடகம் மேன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டிருந்தது.
எல்லையின் இருபுறங்களிலும் பெருமளவில் புதிய வீதிகள், ரயில் வழித் தடங்கள், பாலங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. எனவே எதிர்காலத்தில் இந்தியா மற்றும் சீன இராணுவத்தினருக்கு இடையில் நிறைய மோதல்கள் உருவாகும் ஆபத்து இருக்கிறது.