![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/06/a18.jpg?itok=7CPjn6Q5)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் மார்ச் மாதக் கூட்டத் தொடர்இம்மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இராஜதந்திரரீதியிலான செயற்பாடுகளை இலங்கை வெளிவிவகாரஅமைச்சு அதிகப்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியமானதாக அமையவிருப்பதால், அங்கு எதிர்நோக்கக் கூடிய சவால்களை முறியடிப்பதில் இலங்கை அரசாங்கம் அதிக ஈடுபாட்டைக் காண்பிக்கத் தொடங்கியுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 'நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனிதாபிமானத்தை ஊக்குவித்தல்' என்ற பெயரில் கடுமையான நடவடிக்கை மற்றும் சர்வதேச தலையீட்டை முன்மொழிந்து தொடர்ச்சியாக எட்டுப் பிரேரணைகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இந்த வரிசையில் 46/1பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்தை எட்டவுள்ள தற்போதைய நிலையில், அடுத்த அமர்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. மார்ச் மாதக் கூட்டத் தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 01ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எல்.ரி.ரி.ஈ ஆதரவு கொண்ட புலம்பெயர்ந்த அமைப்புக்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் இலங்கைக்கு எதிராக சில மேலைத்தேய நாடுகள் அழுத்தம் கொடுப்பதும், மனித உரிமை விடயங்கள் மற்றும் சுட்டிக்காட்டப்படும் ஏனைய சில பிரச்சினைகள் குறித்த விசாரணைகள் மற்றும் உள்ளகப் பொறிமுறைகளை வேகப்படுத்த இலங்கையில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதும் மார்ச் மாதத்தில் சர்வதேசம் அடிக்கடி காணும் நிகழ்வுகளாக மாறியுள்ளன.
மார்ச் மாதத்தில் மாத்திரம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆண்டு முழுவதிலும் படிப்படியாக நடவடிக்கைகளை ஏன் முன்னெடுக்க முடியாமல் உள்ளது என்ற கேள்வி இங்கே எழுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கவனம் செலுத்தும் வகையில் நாட்டின் மனித உரிமை விவகாரம் குறித்த நடவடிக்கைகள் கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருந்தன. 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்தல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், சட்டத்தரணி ஹிஸ்புல்லா வழக்கில் பிணை வழங்குவது தொடர்பான சட்டமா அதிபரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டமை போன்றவை இதற்கு சிறந்த உதாரணங்களாகும்.
மேற்குறிப்பிட்ட இந்த விடயங்கள் குறித்து சர்வதேச சமூகம் கடந்த வருடங்களில் இலங்கை அரசாங்கத்தின் மீது கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. கடந்த வாரம் இராஜதந்திரிகளை கொழும்பில் சந்தித்திருந்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இந்த விடயங்கள் குறித்து ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை விபரித்திருந்ததுடன், உள்ளக விடயங்களுக்கு வெளிப்புற பொறிமுறையை அனுமதிப்பதை விட உள்ளகப் பொறிமுறை ஏன் நம்பப்பட வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் விரிவாக வழங்கியிருந்தார்.
மனித உரிமைகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் உள்நாட்டு நிறுவனங்களின் தலைவர்களை அழைத்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இராஜதந்திர சமூகத்தினருக்கு விளக்கமளிப்பதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
இதன்படி, இழப்பீடுகளுக்கான அலுவலகம், நிலைபேறான அபிவிருத்திக்கான கவுன்சில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமற் போன ஆட்களுக்கான அலுவலகம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிறுவனங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தவிர்ந்த ஏனைய நிறுவனங்கள் கடந்த வருடங்களில் பெரிதாக வெளிப்படுத்தப்பட்டவையாக இருக்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்துப் பேச விரும்பும் போது இவ்வாறான நிறுவனங்களைக் கொண்டு வருவது பாதிக்கப்பட்டவர்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு சிறந்த வழியாக அமையாது என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். அதேநேரம், சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெல்வதற்கு இது போதுமானதாக அமையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கான திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளது என இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் அரசாங்கம் அறிவித்தது. மனித உரிமைகள் மற்றும் மக்களின் சுதந்திரங்களைத் தடுக்கக் கூடிய விதிகள் கொண்ட சட்டத்தின் ஒரு பகுதியாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் விமர்சிக்கப்பட்டது.
இது ஒரு தற்காலிகச் சட்டமாகவே கருதப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இதனைப் பயன்படுத்தியிருந்ததுடன், இதற்குப் பொருத்தமான புதிய சட்டத்தை மாற்றுவதற்குத் தவறி விட்டன என்றே கூற வேண்டும்.
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட ஒரேயொரு நிபந்தனையாக, பங்கரவாதத் தடைச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையே அமைந்திருந்தது. கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது.
'43ஆண்டுகளுக்குப் பின்னர், சர்வதேச நெறிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப அதைக் கொண்டு வரும் நோக்கத்துடன் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் திருத்தப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் இறுதி ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை முன்வைப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது' என அமைச்சர் பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் போது கூறியிருந்தார்.
தடுப்புக்காவலுக்கான கட்டளை, கட்டுப்பாடுகளுக்கான ஆணை, நீதித்துறை மறுஆய்வுகளை அங்கீகரித்தல், நீண்ட காலத் தடுப்புக்களைத் தவிர்ப்பதற்கான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் விடயத்தை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்கள் இதில் உள்ளடங்குவதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கடந்த காலத்தில் அரசாங்கம் முன்னெடுத்த பல்வேறு செற்பாடுகளில் இது முன்னேற்றகரமானதாக இருக்கின்ற போதும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்துச் செய்யாமல், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்துள்ளார்.
இந்தச் சட்டத்தின் அடிப்படையே மாற்றப்பட வேண்டும். அதனை விடுத்து சில விடயங்களை மாத்திரும் திருத்துவதில் எந்தவித நன்மையும் இல்லையென அவர் கூறியிருந்தார்.
இதேவேளை, ‘நீதிக்கான அணுகல்’ என்ற தொனிப்பொருளில் வடக்கில் நடமாடும் நீதிச் சேவையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் அந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
கலாசார பன்முகத்தன்மை மற்றும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையின் ஊடாக நாட்டில் நீண்ட கால அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
அதற்கு இணையாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடாக 100மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினால் பாராட்டப்பட்டது.
ஆயினும் கூட, அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த நடவடிக்கைகள் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தமது தரப்பு செயற்பாடுகளை அழகுபடுத்திக் காட்டும் அரசாங்கத்தின் கடைசி நேர முயற்சிகளா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இருந்த போதும் சர்வதேசத்தின் கண்காணிப்புக்கள் அல்லது அவதானிப்புக்கள் இருக்கும் போது மாத்திரம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளாது நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டு தொடர்ச்சியான செயற்பாடுகளை இதயசுத்தியுடன் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சம்யுக்தன்