மீண்டுமொரு பனிப்போருக்கு தயாராகிறதா ரஷ்யா? | தினகரன் வாரமஞ்சரி

மீண்டுமொரு பனிப்போருக்கு தயாராகிறதா ரஷ்யா?

கடந்த ஆறு வாரங்களாக சர்வதேச அரசியலின் முழுக்கவனத்தையும் ஈர்த்ததாக  ரஷ்ய உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்தி எழுந்துள்ள கொதிநிலை அமைந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல ஆய்வாளர்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைனின் முழுமையாக அல்லது ஒரு பகுதியிலாயினும் ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வார் என்ற முடிவுக்குன் சிந்திக்கின்றார்கள். மறுமுனையில் மேலும் சிலர், உக்ரைன் மீதான படையெடுப்பு இப்போது எல்லைக்கு அருகே ரஷ்ய துருப்புக்களின் நகர்வுகளின் விளைவாகவே இருக்கலாமென உறுதியாக உள்ளனர். எனினும் ரஷ்ய இராணுவம் உக்ரேனில் ஒரு புதிய ஒழுங்கை நிறுவ முயற்சிக்கின்றது

என்பதில் பரவலாக அனைவரிடமும் ஒரேவிதமான நம்பிக்கை காணப்படுகிறது. இக்கட்டுரையும் ரஷ்ய- உக்ரைன் விவகாரத்தின் அண்மைய களநிலைமைகளின் தன்மைகளை தேடுவதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய- உக்ரைன் விவகாரத்தின் நேரடி பங்குதாரர்களாக ஐரோப்பிய நாடுகளே காணப்படுகின்றன. ரஷ்ய -உக்ரைன் விவகாரம் பெரும் மோதலாக பரிணமிக்குமாயின் அதன் உடனடி அபத்தங்களை எதிர்கொள்பவர்களாக ஐரோப்பியர்களே காணப்படுகிறார்கள். இதனடிப்படையிலேயே, பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்கள் களமிறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக டான்பாஸ் பிராந்தியத்தின் நிலையை முன்னேற்ற முயற்சிப்பதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ரஷ்ய மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் பெப்ரவரி -03அன்று தனித்தனியாக நிகழ்நிலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், விரைவில் மக்ரோன் மாஸ்கோ சென்று புடினை சந்தித்து உரையாட உள்ளதாகவும் செய்திப்பரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் ஜனவரி -31அன்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் புடினுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். குறித்த உரையாடலில், உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு எண்ணம் துயரமான தவறான கணக்கீடாக இருக்கும் என்று  புடினிடம் ஜோன்சன் கூறியுள்ளதாக பிரித்தானிய பிரதம அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், போலந்து ஜனாதிபதி டுடா குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள சீனா செல்வதுடன் அங்கு வருகை தரும் புடினுடன் சந்திப்பை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா -உக்ரைன் விவகாரத்தில் அதீக தலையீட்டை வழங்குகின்ற போதிலும் ஐரோப்பிய பரப்பில் இவ்விடயத்தின் ஈடுபாடு தொடர்பில் இருவேறுபட்ட எண்ணங்கள் காணப்படுகின்றமை அவர்களது உரையாடல்களூடாக புலப்படுகிறது. குறிப்பாக, பிரான்ஸ், ஜேர்மன் போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் இணக்கமாக செல்லும் வகையிலேயே தமது உரையாடல்களை முன்னகர்த்தி செல்கின்றார்கள். இதன் பின்னணியில் அந்நாடுகளுக்கும் ரஷ்யாவுக்குமிடையிலான பொருளாதார மற்றும் எரிவாயு கொள்முதல் தொடர்புகள் இறுக்கமான பிணைப்பை வழங்குகின்றது. எனினும் மறுதலையாய் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ள பிரித்தானியா அமெரிக்காவின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் ரஷ்யாவுடன் இறுக்கமான நிலைப்பாட்டில் உள்ளது. இவ்வாறான மாறுபட்ட எண்ணங்களின் பிரதிபலிப்பினுள் ஐரோப்பிய நாடுகள் காணப்படுவதனால், ரஷ்ய, -உக்ரைன் பதற்றத்தை தணிக்கும் ஐரோப்பாவின் திறன் கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

பதட்டங்களை தணிக்க மேற்கொள்ளும் முயற்சிகளின் தோல்வி ரஷ்ய-, உக்ரைன் விவகாரத்தின் கொதிநிலையே அதிகரித்து கொண்டு செல்கிறது. அதில் ரஷ்யாவின் பலம் ஓங்குவதனையே அவதானிக்கக்கூடியதாகவும் உள்ளது. இதனையே ரஷ்ய-, உக்ரைன் விவகாரத்தை மையப்படுத்திய அண்மைக்கால செய்திகளும் உறுதி செய்கின்றது. அதனை நுணுக்கமாக அவதானித்தல் அவசியமாகும்.

முதலாவது, ரஷ்யா மற்றும் நேட்டோ தொடர்ச்சியாக கிழக்கு ஐரோப்பிய பகுதியில் இராணுவ மேலாதிக்கத்தை அதிகப்படுத்தி வருகிறது. குறிப்பாக ரஷ்ய உக்ரேனிய எல்லை மற்றும் அண்டை நாடான பெலாரஸில் அதிக துருப்புக்கள் மற்றும் இராணுவ சாதனங்களை குவித்துள்ளது. மறுதளத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் பிரசன்னமும் கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் அதிகரிக்கப்படுகிறது. ரஷ்யா கடந்த பெப்ரவரி -03அன்று அமெரிக்காவை கிழக்கு ஐரோப்பாவில் கூடுதல் துருப்புக்களை அனுப்பியதற்காக கண்டனம் செய்தது. அதாவது, இந்த நடவடிக்கை 'பதற்றங்களைத் தூண்டும்' நோக்கம் கொண்டது என்று கூறியது. அமெரிக்க அதிகாரிகளும், செயற்கைக்கோள் படங்களும் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பு அச்சுறுத்தலை மேற்கொள்ளும் வகையிலான தனது பெரிய அளவிலான இராணுவப் படைகளை உருவாக்குவதை குறைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது. இருதரப்பும் ஆயுதப் பிரசன்னத்தை அதிகரித்தாலும் ரஷ்யாவின் புவிசார் அரசியல் பிராந்தியம் என்ற ரீதியில் ரஷ்யாவின் ஆதிக்கம் உயரளவிலேயே காணப்படுகிறது. டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் சுமார் 130,000துருப்புக்களை உள்ளடக்கிய சுமார் 80பட்டாலியன் தந்திரோபாயக் குழுக்களின் ரஷ்யாவின் உருவாக்கம் உக்ரேனுக்கு ஒரு ஆழமான அச்சுறுத்தலைப் பிரதிபலிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. வான்வழி இராணுவப் பிரிவுகளின் வெளிப்படையான இருப்பு மற்றும் நீரிலும் நிலத்திலும் பயன்படும் ஆயுத சொத்துக்கள் எந்தவொரு இராணுவத் தாக்குதலும் எவ்வளவு பன்முகத்தன்மை கொண்டதாக மாறும் என்பதைக் குறிக்கிறது. இது ரஷ்யா உக்ரைனின் ஒழுங்கை மீளக்கட்டமைப்பதில் உறுதியாக உள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது.

இரண்டாவது, கிழக்கு ஐரோப்பாவிலிருந்து நேட்டோவின் வெளியேற்றம் தொடர்பிலான புடினின் முடிவில் எவ்வித தளர்ச்சியையும் காண இயலாத சூழல் காணப்படுகிறது. எனவே, நேட்டோ விரிவாக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பிரச்சினைகளில் மேற்கு நாடுகளிடமிருந்து சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட உத்தரவாதங்களுக்கான ரஷ்யாவின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல், எவ்வித இராஜீக முயற்சிகளும் அச்சுறுத்தல்களும் ரஷ்சியாவைத் தடுக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேற்கத்திய நாடுகள் அனுமானமாக என்ன உத்தரவாதத்தை வழங்கினாலும், அது புடின் ஆட்சிக்கு போதுமானதாக இருக்காது. டிசம்பர்- 21, 2021அன்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக வாரியத்தின் ஒரு நீடிக்கப்பட்ட கூட்டத்தில், மேற்கத்திய நாடுகள் ஒப்பந்தங்களில் இருந்து எளிதில் விலகுவதால் எழுதப்பட்ட மேற்கத்திய உறுதிமொழிகள் கூட எதற்கும் உத்தரவாதம் அளிக்காது என்று புடின் கூறினார்.

மூன்றாவது, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு போரின் கடுமையான வாய்ப்பை எதிர்கொண்டுள்ள மேற்கத்திய ஊடகங்கள், புடின் உக்ரேனில் என்ன விரும்புகிறார் என்ற கேள்வியில் அவரது பகுத்தறிவை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்ற நிலையில் பிளவுபட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், புடினின் மற்றும் ரஷ்யாவின் தன்மை அதன் சுய உருவத்துடன் வெகுவாக மாறிவிட்டது. முந்தைய ஆண்டுகளில், புடின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் விரோதமான வீரர்களால் சூழப்பட்ட புவிசார் அரசியல் ரீதியாக பாதிக்கப்படக்கூடிய அரசின் தலைவராக செயல்பட்டார். புவிசார் அரசியல் நீதியைக் கோரும் பாதிக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட தேசத்தின் பங்கை ரஷ்யா வகித்தது. 2014இல் கிரிமியாவை இணைத்த போதும், மேற்கத்திய நாடுகள் அதன் விவகாரங்களில் இருந்து விலகி இருக்கும்போது அதன் நன்மையைப் பெறுவதற்கு அது எப்போதாவது துணியலாம். ஆனால் அது அதன் நகர்வுகளில் வெளிப்படையான தற்காப்பு தர்க்கத்தை நம்பியிருந்தது. 2018இல், எல்லாம் மாறியது. சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ வெற்றியின் புத்துணர்வால், மத்திய ஆசியாவில் அதன் தனித்துவமான பங்கு, ஆபிரிக்காவில் அதிகரித்த இருப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அதன் புதிதாக உருவாக்கப்பட்ட நவீனரக ஆயுதங்கள் புடின் ஒரு ஒடுக்கப்பட்ட வீரரைப் போன்ற உணர்விலிருந்து ரஷ்சியாவின் பாரம்பரிய செல்வாக்கு மண்டலத்திற்கு அப்பால் தாக்குதல் நடத்தக்கூடிய ஒருவராக மாறினார். ரஷ்யாவின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவின் வார்த்தைகளில், 'இரும்புத்தடுப்பு, நீர்ப்புகா, குண்டு துளைக்காத, சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட உத்தரவாதங்கள் இனி புவிசார் அரசியல் பாதிப்பிலிருந்து உருவாகவில்லை, மாறாக, விதிகளை மீண்டும் எழுதுவதற்கு ரஷ்யாவின் வரலாற்று ரீதியாக நியாயப்படுத்தப்பட்ட முழு அளவிலான உரிமையில் நம்பிக்கை இருந்து வருகிறது. அது மேற்குடன் இணைந்து அல்லது மேற்கு இல்லாமல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் எண்ணங்களுடனேயே உக்ரைன் எல்லைகளிலும் இராணுவ பிரசன்ன அதிகரிப்பை புடின் மேற்கொள்கின்றார்.

நான்காவது, ரஷ்யா, -உக்ரைன் பதற்றத்தில் சீனா ரஷ்யாவிற்கு தொடர்ச்சியாக பலமான ஆதரவை வழங்கி வருகிறது. புடினுக்கான பொருளாதார மற்றும் அரசியல் ஆதரவுக்கான வாக்குறுதியை சீனா வழங்கியுள்ளது. இது, இராணுவக் கட்டமைப்பிற்காக ரஷ்யத் தலைவரை ஒதுக்கி வைப்பதற்கான பைடனின் மூலோபாயத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடியதாகும். பெப்ரவரி -03அன்று புடின் சீன அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவாவுக்கு அளித்த நேர்காணலில், சீன ஜனாதிபதி உடன் வர்த்தக  ஒப்பந்தங்கள் மற்றும் ஒருதலைப்பட்ச தடைகளின் எதிர்மறை தாக்கத்தை ஈடுசெய்யும் உலகளாவிய நிதி வழிமுறைகளை உருவாக்குவதற்கான உத்திகள் பற்றி விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார். பெப்ரவரி- 04அன்று புடின் மற்றும் ஷி ஜின் பின் பெய்ஜிங்கில் சந்திப்பு மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் உக்ரைன் மீதான நடவடிக்கையைத் தடுக்க ரஷ்யாவுடன் சீனா இணைந்து செயற்பட்டிருந்தது.

எனவே, ரஷ்யா, -உக்ரைன் விவகாரத்தின் கொதிநிலை அதிகமாக ரஷ்யாவிற்கு சாதகமான சமிக்ஞையையே வெளிப்படுத்துவதனை உணர முடிகிறது. வரலாற்றில் ரஷ்யாவுடனான அமெரிக்காவின் நெருக்கடிகளை அமெரிக்காவிற்கு சாதகமாக்கியமையில் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பே அதிகமாக காணப்பட்டிருந்தது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள ரஷ்சிய, -உக்ரைன் நெருக்கடியில் ஐரோப்பிய நாடுகள் பிளவுபட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் பலமான நாடுகள் ரஷ்யாவை எதிர்க்க விரும்பாமை  அமெரிக்காவிற்கு பேரிடரான விடயமாகவே உள்ளது. மறுதலையாய் ரஷ்யாவின் பக்கம் புடினின் தலைமைத்துவ ஆளுமை, புவிசார் அரசியல் பலம் மற்றும் சீனா ஆதரவுத்தளம் என்பன வெற்றிக்கான அடையாளங்களை காட்டுவதாகவே புலப்படுகிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments