சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் தலிபான்கள் பேணுகின்ற நட்புறவு இந்தியாவுக்கு என்றுமே ஆபத்து! | தினகரன் வாரமஞ்சரி

சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் தலிபான்கள் பேணுகின்ற நட்புறவு இந்தியாவுக்கு என்றுமே ஆபத்து!

தலிபன்களை உலக நாடுகள் அங்கீகரிக்க மறுத்துவரும் நிலையில். தலிபன்களுடன் சீனாவும்பாகிஸ்தானும் திரைமறைவில் நட்புக் கொண்டிருப்பது இந்தியாவுக்குப் பாதகமாக அமைந்து விடுமென்பதே சர்வதேசஅரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

சீனா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இணங்கிப் போக முடியாத எதிரி நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளுமே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க, பல்வேறு வேலைகளை பல காலமாகச் செய்து வருகின்றன. இந்தியாவைச் சுற்றியுள்ள இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ஏதாவது ஒரு வகையில் சீனா தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் நாடாக சீனா உள்ளது. 

தற்போது ஆப்கானிஸ்தானிலும் தலிபான்களிடம் சீனா நட்புறவு பாராட்டுவது இந்தியாவுக்குத் தலைவலியாக மாறுவதற்கு வாய்ப்புண்டு. ஆப்கானில் 1996ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை தலிபான்களின் ஆட்சி நடைபெற்ற போது இந்தியாவின் காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல், பயங்கரவாதிகளின் நடவடிக்கை பெருமளவில் காணப்பட்டன. மீண்டும் அங்கு தற்போது தலிபன்கள் ஆதிக்கமடைந்திருப்பதால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற கருத்தே நிலவுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 23,000கோடி ரூபாவில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து கொடுத்திருக்கிறது இந்தியா. அந்த நாட்டுக்கு 1,000கோடி ரூபாவில் நாடாளுமன்றம் கட்டிக் கொடுத்ததோடு, அந்தக் கட்டடத்தை இந்தியப் பிரதமர் மோடி திறந்தும் வைத்திருந்தார். ஆப்கானில் வீதிகள் அமைத்தல், பாடசாலைகள் அமைத்தல், மருத்துவமனை கட்டுதல் என்று பல்வேறு நலத் திட்டங்களை இந்தியா செய்திருக்கிறது. இந்த நலத்திட்டங்களைச் செய்து கொடுக்கும் போதும், தலிபான்கள் இதை வரவேற்கவில்லை. எதிர்ப்பே தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்களின் ஆட்சியின் மீது உலகளவில் பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது. தற்போதும் அவர்கள் முன்னர் ஆட்சியிலிருந்த அதிகாரிகள், தன்னார்வலர்கள், பத்திரிகையாளர்களைத் தேடி வருவதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

`ஆட்சியில் கட்டுப்பாடுகள் இருக்காது. பெண்கள் வேலைகளுக்குச் செல்லலாம்' என்று தலிபான்கள் தரப்பில் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல. தலிபான்கள் மத்தியில் என்றுமே அடிப்படைவாதம் நீங்கப் போவதில்லை. ஆனால் உலக நாடுகளிடம் நல்ல பெயரை வாங்க தலிபான்கள் முயற்சிக்கிறார்கள்.

மற்ற நாடுகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் யாரையும் ஆப்கானில் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் தோஹா உடன்படிக்கையை முறையாகப் பின்பற்றுவோம்’ என்று தலிபான்கள் கூறியுள்ளனர். என்னதான் அவர்கள் தரப்பில் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அங்கு நடப்பது வேறு ஒன்றாக இருப்பதாகவே சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

Comments