![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2022/02/06/a16.jpg?itok=8LXDdhW4)
எமது நாடு இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்சந்தர்ப்பங்கள் அனைத்திலும் தோள் கொடுப்பதற்கு உடனடியாகஓடிவரும் அயல்நாடாக இந்தியா விளங்குகிறது. இலங்கையில்உள்நாட்டுக் கிளர்ச்சிகள் கட்டுமீறிப் போய் அரசு நெருக்கடியைச் சந்தித்தவேளைகள் பலவற்றில் இந்தியா உதவிக்கரம் நீட்டியிருக்கிறது.
ஜே.வி.பி கிளர்ச்சி மற்றும் புலிகளின் ஆயுதப் போராட்டம் போன்றவற்றை ஒடுக்குவதில் இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கிய ஆதரவுகள் மாத்திரமன்றி, எமது நாட்டின் பொருளாதார நெருக்கடி வேளைகளிலும் இந்தியா எமக்கு கைகொடுத்துள்ளது.
‘இலங்கையின் நலன் மீது நாம் எப்பொழுதும் அக்கறையுடன் இருக்கின்றோம்’ என்பதை இந்திய நாடு இப்போது மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாக இலங்கையின் பல்வேறு துறைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக எரிபொருள் துறையில் பல்வேறு பின்னடைவுகளுக்கு நாடு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார உற்பத்திக்கு நீர்மின் மூலங்களை விட அனல்மின் மூலங்களிலேயே நாடு அதிகம் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் டொலர் பற்றாக்குறையால் போதிய எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாத சூழல் நாட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இதுவிடயத்தில் இலங்கைக்கு உடனடியாகக் கைகொடுப்பதற்கு இந்தியா இன்று முன்வத்துள்ளது.
இந்தியாவிடமிருந்து பெற்றோலிய உற்பத்திகளைக் கொள்வனவு செய்ய 500மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இந்தக் கடன் வழங்கப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரசன்னத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை அரசாங்கம் சார்பில் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும், இந்தியா சார்பில் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் பிரதான பொது முகாமையாளர் கௌரவ் பண்டாரியும் கைச்சாத்திட்டனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்க இந்தியாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய 500மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்திருந்தது.
கடந்த 15ஆம் திகதி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டது. கொவிட்-19தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பொருளாதார சவால்களுக்கு மத்தியில் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குப் போதிய டொலர் இல்லாமையால் எரிபொருளை இறக்குமதி செய்வதில் அரசாங்கம் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது இந்தியாவிடமிருந்து பல்வேறு உதவிகளுக்கான கோரிக்கைகளை அவர் முன்வைத்திருந்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைப் பெற வேண்டும் அல்லது இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் அரசை வலியுறுத்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே இலங்கையும் இந்தியாவின் உதவியை நாடியிருந்தது. இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்ட கால நட்புறவைக் கருத்தில் கொண்டு 900மில்லியன் டொலர் பெறுமதியிலான அந்நிய செலாவணி பரிமாற்றத்துக்கு இந்தியா உதவியுள்ளது. இந்த அண்மைய உதவியுடன் இந்தியா ஏறத்தாழ 4பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக வழங்கியுள்ளது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ‘பிக் பிரதர்’ அல்லது ‘பெரியண்ணன்’ என அழைக்கப்படும் இந்தியா எப்பொழுதும் இலங்கைக்கு அவசர உதவிக்கரம் நீட்டும் நட்புநாடாகவே விளங்கியுள்ளது. ஏறத்தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் புரையோடிப் போயிருந்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியது.
அது மாத்திரமன்றி 2020ஆம் ஆண்டு கொவிட்-19தொற்றுநோய் பரவலுக்கு இலங்கை முகங்கொடுத்த போது, அதற்கான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முதலாவது தொகுதி தடுப்பூசியை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியதும் இந்தியாவாகும்.
இலங்கைக்கு சீனா வழங்கி வருகின்ற ஒத்துழைப்புகள் குறித்து இந்தியா அதிருப்தியைக் கொண்டிருந்தாலும், இக்கட்டான சூழ்நிலைகளில் எப்பொழுதும் இலங்கையைக் கைவிடாத நட்புக் கொண்ட அயல்நாடாக காணப்படுகிறது என்பதை நாம் மறுக்க முடியாது.
இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்ட கப்பல் தீவிபத்து சம்பவங்களில் கூட உடனடியான ஓடிவந்து உதவியது இந்தியா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வரிசையில் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்தியா மீண்டும் ஒருமுறை உதவிக்கரம் நீட்டியுள்ளது.
இது இவ்விதமிருக்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், அரசாங்கத்தில் உள்ள சிலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட வேண்டிய தேவை இல்லையென அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கூறியிருந்தனர். இவ்வாறு பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்களுக்கு மத்தியில் நாடு எதிர்கொண்டுள்ள சூழல் குறித்து நிபுணர்களின் ஆலோசனையை வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து ஆராய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபுணர்கள் குழு இலங்கைக்கு வரும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது தொடர்பில் அமைச்சரவையில் இதற்கு முன்னர் கலந்துரையாடப்பட்டிருந்த போதும் இது விடயத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் உதவியைப் பெறுவதாயின் அந்நிதியத்தினால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு இலங்கை கட்டுப்பட வேண்டிய தேவை ஏற்படும் என்று ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சிலர் கூறி வருகின்றனர். இருந்தபோதும் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு காணப்படும் சிறந்த வழி இது என்று எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் அரசாங்கம் நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிறந்ததொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளதென்பதே உண்மை.
பி.ஹர்ஷன்